Cinema Entertainment விமர்சனம்

கேப்டன் பிரபாகரன்: திரைப் பார்வை

மறைந்த நடிகர் விஜயகாந்தின் 100-வது திரைப்படமாக உருவாகி இருந்த கேப்டன் பிரபாகரன் வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் குறித்த சுவரஸ்ய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

கருப்பு தேகம், சிவந்த கண்களுடன் தனக்கான அங்கீகாரத்தை தேடிக்கொண்டிருந்த விஜயகாந்தின் கேரியரில் மிக முக்கியமான முதல் படமாக அமைந்தது என்றால்’சட்டம் ஒரு இருட்டறை’ தான். அதன்பின் வெளிவந்த ‘சிவப்பு மல்லி’ திரைப்படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திரையுலகில் வெற்றி தோல்வி என வலம் வந்த விஜயகாந்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது ‘கேப்டன் பிரபாகரன்’.




ஆர்.கே செல்வமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்துடன் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், எம்.என்.நம்பியார், மன்சூர் அலிகான், காந்திமதி, பொன்னம்பலம்,உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாவட்ட வன அதிகாரியாக விஜயகாந்த் நடித்து அசத்தியிருந்த இத்திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையைப் படைத்தது. விஜயகாந்தின் 100-வது படம், வெள்ளி விழா சாதனை கண்ட திரைப்படம் என்ற பல பெருமைகளையும் பெற்றிருந்தது.

இந்த படத்துக்குப் பின் விஜயகாந்தின் பெயரே கேப்டன் என மாறியது. இந்தப் படத்துக்காக விஜயகாந்த் சமரசம் இல்லாத உழைப்பைக் கொடுத்திருப்பார். ஹீரோவுக்கான ஓப்பனிங் சாங் இல்லாத வித்தியாசமான விஜயகாந்த் சினிமா. அதேநேரம், சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத பக்கா ஆக்‌ஷன் சினிமா கலந்து ரசிக்க வைத்திருப்பார் ஆர்.கே.செல்வமணி.

கேப்டன் பிரபாகரனில் தான் மன்சூர் அலிகான் முதன் முதலாக அறிமுகமானார். படம் ஆரம்பிச்சு அரை மணி நேரத்துக்குப் பிறகு தான் விஜயகாந்தோட என்ட்ரி சீன் இருக்கும். அதுவரைக்கும் சரத்குமார் சம்பந்தப்பட்ட காட்சிகளை வைச்சு அசுரத்தனமான வில்லனாக மன்சூர் அலிகானை அறிமுகப்படுத்தியிருப்பார் செல்வமணி. ‘வீரபத்திரன்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்த மன்சூர் அலிகான் , முதல் கதாபாத்திரத்திலேயே அசத்தலான நடிப்பையும் வெளிப்படுத்தியிருந்தார்.




கேப்டன் பிரபாகரன் படத்தின் முக்கிய தூண்களில் ஒன்றாக ரம்யா கிருஷ்ணனின் நடனமும், கதாபாத்திரமும் அமைந்திருந்தது. பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆக்‌ஷன் கதையில ‘பாசமுள்ள பாண்டியரே, ‘ஆட்டமா தேரோட்டமா’ என்று இரண்டு பாடல்களை வைத்து தெறிக்க விட்டிருப்பார் இளையராஜா. இன்று வரை பட்டி தொட்டி எங்கும் இப்பாடல்கள் ஒலிக்குது என்றால் அதற்கு இளையராஜாவின் நேர்த்தியான இசை தான் காரணம்.முதலில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடல் இந்த படத்தில் கிடையாது. இதற்கு பதிலாக இன்னொரு பாட்டை கொடுத்திருந்தார் இளையராஜா. ஆர்.கே. செல்வமணி தனக்கு இந்த பாடல் வேண்டாம். வேற பாடல் வேணும்னு இளையராஜாகிட்ட கேட்க, போனை வைனு சொல்லி இளையராஜா கட் பண்ணிட்டு இரவோடு இரவாக, ஆட்டமா தேரோட்டமா பாட்டை தயார் பண்ணி மறுநாளே ஸூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பியிருக்கிறார். இதைக் கேட்ட ஆர்.கே செல்வமணிக்கும் இந்த பாட்டு பிடிச்சுப்போக, அதை வெரைட்டியா படமாக்கியிருந்தார்.

தமிழ் சினிமாவில் பொதுவாக 100வது படம் வெற்றிப்படமாக அமைவது என்பது அரிதான ஒன்றாக பார்க்கப்பட்ட காலத்தில் இதற்கு ஒரே விதி விலக்கு விஜயகாந்த் மட்டுமே.’கேப்டன் பிரபாகரன்’ படமோ வேற லெவலில் ஹிட் அடித்தது. திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக 275 நாட்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது. மேலும், படத்தின் தலைப்பில் இடம் பெற்ற ‘கேப்டன்’ என்பது விஜயகாந்தின் அடையாளமாகவே மாறிப்போனது.

இன்றைக்கு கேப்டன் என ரசிகர்களாலும், மக்களாலும் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் நடித்த பல படங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கேப்டன் பிரபாகரனுக்கு என்று தனி இடம் உண்டு. விஜயகாந்தின் 100-வது படமான கேப்டன் பிரபாகரன் 1991 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 14-ஆம் நாள் தமிழ் புத்தாண்டு நாளில் வெளியானது. இப்படம் வெளியாகி இன்றோடு 33 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் விஜயகாந்த் என்ற மாமனிதன் இன்றைக்கு இல்லாவிட்டாலும் தமிழ் சினிமா இருக்கும் வரை கேப்டன் பிரபாகரன் தமிழ் சினிமாவின் ஒரு மைல்கல்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!