Serial Stories Uncategorized

நந்தனின் மீரா- 2

2

நமக்கென்று ஒதுக்கி வைத்த
நறுவிசான பொழுதுகளை
பிய்த்து தின்னும் மௌனம் போர்த்தி
நகங்கடித்து கடக்கிறேன் …
ஓடு சுமக்கும் நத்தையாய் ஊர்கிறதது,
கொத்தி பிடுங்கும் பார்வை தழைத்து
பேச ஆரம்பித்து விடேன் .

மாளவிகாவும் ,பிரவீணாவும் மணமக்களுக்கு ஆரத்தி எடுத்து திலகமிட , வலதுகால் என நினைவுபடுத்திய சுந்தரிக்கு பணிந்து வலதுகாலெடுத்து வைத்து உள்ளே தனது கணவன் வீட்டினுள் புகுந்தாள் .விளக்கி சொல்ல இயலாத விநோத உணர்வொன்று உடல் முழுவதும் பரவ , ஆதரவிற்காக கணவனை நோக்க அவன் அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தான் .

” செருப்பை இங்கே விடு …” அந்த வராண்டா மூலையை காட்டிவிட்டு சுந்தரி உள்ளே போய்விட்டாள். மனைவியை திரும்பியும் பாராமல் தாயின் பின்னாலேயே வீட்டினுள் சென்று விட்டிருந்தான் நந்தகுமார்.  மாளவிகா ஆரத்தியை தட்ட வாசலுக்கு போனாள் .பிரவீணாவும் தாயுடன் சென்று விட ,புதிதாக மணமான பெண் புகுந்த வீட்டினுள் நுழையும் உணர்வை அடையாமல் அழையாதோர் வீட்டு வாசலில் வேண்டாத விருந்தாளியாய் நிற்கும் உணர்வை அடைந்தாள் மீரா .

” எங்கள் வீட்டிற்கு இனிய வரவேற்பு அண்ணி ” உற்சாகமான குரலில் நிமிர்ந்து பார்த்தாள் .

சசிகுமார் …நந்தகுமாரின் தம்பி .தலையை குனிந்து கைகளை விரித்து வரவேற்பு போல் அழைத்தான் .தன் தம்பி விநோத்தின் நினைவில் தானே மிகம் மலர எட்டேடுத்து வைத்து உள்ளே நுழைந்தள் மீரா .

மெல்ல கண்களை சுழற்றி வீட்டை பார்த்தாள் .பழைய காலத்து வீடு .முன்னால் நீள வராண்டா .அதில் சிமெண்ட் கிராதி வைத்து காற்றும் , வெளிச்சமும் தாராளமாக உள்ளே வந்த்து .அதன் ஓரம் ஒரு அறை தட்டி கொண்டு மறைக்கப்பட்டிருந்த்து .அதனை யாரோ படுக்கை அறையாக பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் .

பின்பு நீளமாக , ஒடுக்கமாக ஒரு அறை .அதன் பின் இப்போது மீரா நிற்கும் ஹால் .சோபாக்கள் , ப்ளாஸ்டிக் சேர்களால் நிரம்பியிருந்தது .வலதுபுறம் இரண்டு அறையும் , இடது புறம் இரண்டு அறையும் …படுக்கை அறை , சமையல் , பூஜை அறை …இப்படி இருக்க வேண்டும் .வாசல் தொரிந்த்து .அதன் பின் முன்னால் போல் நீளமான அறை ஒன்று பின்னாலும் .அதிலிருந்து பின்வாசல் .




ஹால் சுவரில் வரிசையாக கறுப்பு , வெள்ளை புகைப்படங்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு மின்விசிறிகள் சுழன்றபடி இருந்தன. சோபா , சேர்கள் போக தரையிலும் ஜமுக்காளம் விரித்து ஆண்களும் , பெண்களும் ,குழந்தைகளுமாக விருந்தினர்கள் நிரம்பியிருந்தனர் .

கசகசப்பான பேச்சுக்களிடையேயும் அவர்கள் பார்வை மீராவிடமே குவிந்திருந்தது .புதுப்பெண்ணல்லா …???
குழந்தைகள் உட்கார்ந்திருந்த சோபாவை அவர்களை எழுப்பவிட்டு மீராவை அமர சொன்னாள் பிரவீணா .கண்களை சுழற்றி படபடப்போடு அங்குமிங்கும் தேடினாள் .

” என்ன தம்பியை தேடுறியாக்கும் …? புதுப்பொண்டாட்டியை விட்டுட்டு உள்ளே போய் உட்கார்ந்துட்டானா …? ஏய் நந்து …இங்கே வா …” கொஞ்சம் வயதான பெண் சத்தமாக கூப்பிட …

” கல்யாணம் முடிந்து இரண்டு மணி நேரம்தான் ஆகுது .அதுக்குள்ளே மாப்பிள்ளையை காணோம் …” கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள் ஒரு நடுத்தர வயது பெண் .

“பொண்ணை விட்டுட்டு …அண்ணன் எங்கே போனார் …? ” பரிதாபமாக மீராவை பார்த்தபடி மற்றொருத்தி சொல்ல …மீராவற்கு அவமானத்தில் கண்கள் கலங்க தொடங்கியது .

சுருங்கிய முகத்துடன் பிரவீணா ” நந்து ….” என அதட்ட ..

” இதோ வர்றேன் …” என்றபடி பக்கத்து அறையிலிருந்து வந்தான் நந்தகுமார் .

” முகம் கழுவலாம்னு போனேன் .அதுக்குள்ளே எதற்கு இவ்வளவு கலாட்டா…? ” அதட்டல் குரலில் எரிச்சலோடு கேட்டான் .

” புதுப்பொண்ணை தனியா விட்டுட்டு நீ பாட்டுக்கு உள்ளே போயிட்டா கேட்க மாட்டோமா …? அது சரி எதுக்கு இத்தனை யோசனை …? “

” என்ன யோசனை …? “

” இவள் உன் பொண்டாட்டிதான் .அதனால் பயப்படாமல் உட்காரலாம் ..” பேசிக்கொண்டிருக்கும் அந்த பெண் நந்தகுமாருக்கு பெரியம்மா முறை வருபவள் .தனது வயதை முன்னிறுத்தி அவனை அதட்டிக்கொண்டிருந்தாள் .

அவள் அதட்டல் உண்மையே போல் அறையை விட்டு வெளியே வந்தாலும் இன்னமும் மீராவின் அருகே அமர பிடிக்காமலோ என்னவோ நின்றபடிதான் பேசிக்கொண்டஇருந்தான் .

இனி தானும் எழுந்து நின்று கொள்ள வேண்டியதுதான் என மீரா நினைக்கும் போதே தடுமாறி அவளை உரசியபடி அமர்ந்தான் நந்தகுமார் .இல்லை அந்த பெரியம்மா அவனை உந்தி தள்ளி அமர வைத்திருந்தாள் .

புதுக்கணவனின் ஸ்பரிசம் …சுகமாக இல்லாமல் சுமையாக தோன்ற சட்டென தள்ளி அமர்ந்த மீரா இன்னமும் வேதனை அடைந்தாள் .ஏனெனில் அவளை ஸ்பரிசித்த அடுத்த நொடியே டக்கென அவளை முந்தி தானே வலகியிருந்தான் அவள் கணவன் .

” என்னடா உன் பொண்டாட்டி என்ன சொல்றா …? ” இருவருக்குமிடையே இருந்த கணிசமான இடைவெளியை பார்வையால் அளந்தபடி பெரியம்மா கேட்டாள் .

” இங்கேதானே இருக்கிறாள் பெரியம்மா .நீங்களே கேளுங்களேன் ….”




” அவளிடம் நான் கேட்டுக் கொள்வேனடா .உன்னிடம் என்ன சொல்கிறாள் …என்று கேட்டேன் …”

” சும்மா இருங்கள் பெரியம்மா .அண்ணனின் மனவேதனை தெரியாமல் .நீங்கள் வேறு எதையாவது கூறிக்கொண்டு …” இளம்பெண்ணொருத்தி சொல்ல …

மீராவின் இதயம் சிறிது நின்று பின் துடிக்க ஆரம்பித்தது .

அதற்குள் பிரவீணா பால் , பழ தட்டோடு வந்துவிட …உறவினர்களின் கிண்டலும் , கேலியிம் திசை மாறியது .

மிக ஜாக்கிரதையாக கை படாமல் தன் வாயில் கணவன் வைத்த பழத்திற்கு பதிலாக , நுனிவிரலும் தீண்டாமல் அவன் வாய்க்கிள் பழத்தை தள்ளினாள் மீரா .

” உன் பொண்டாட்டி வாயில் பழம் ஒட்டியிருக்குது பாரு …” பெரியம்மா சொன்னதும் துடைக்க எழுந்த மீராவின் கையை பிடித்து கொண்டவள் …

” நீயே துடைத்து விடுடா ….” அழுத்தமாக நந்தகுமாரிடம் சொல்ல ,   சுற்றியிருந்த இளையோர்கள் ஒரு காதல் காட்சிக்கு தயாராக …நந்தகுமார் முகம் இறுக கைகளை முஷ்டியாக்கி இறுக்கியபடி இருந்தான் .இரண்டு இளைஞர்கள் லேசாக கையை கூட தட்ட ஆரம்பிக்க …

” இங்கே என்ன சினிமா நடக்குதா …? இத்தனை பேர் சுற்றி உட்கார்ந்து கொண்டு என் மகனையும் , மருமகளையும் கிண்டாலா பண்றீங்க …? அவுங்களை என்ன வெட்கம் கெட்டவங்கன்னு நினைச்சீங்களா …? ” சுந்தரி சத்தமாக கத்த தொடங்கினாள் .அனைவரும் மௌனமானார்கள் .மீராவிற்கு உடனே அந்த இடத்தை விட்டு ஓடிவிட வேண்டும் போலிருந்தது .

” ஏய் எதுக்குடி இப்போ இப்படி கத்துற…? பிள்ளைங்களை அம்மாகிட்ட ஆசீர்வாதம் வாங்க கூட்டிட்டு போனியா …? ” குருநாதன் …நந்தகுமாரின தந்தை உள்ளே வந்து கத்த தொடங்க கத்திக் கொண்டிருந்த சுந்தரி மௌனமானாள் .

” இல்லை …இனிமேத்தான் ….” முணுமுணுத்தாள்  .

” ஏன்டி உனக்கு அறிவே கிடையாதா …? புதுக் கல்யாணம் முடிச்சவுங்களை முதல்ல பெரியவங்க கிட்ட ஆசீர்வாத்ததிற்கு அனுப்பாம …நடுவீட்டில் உட்கார வச்சு கூத்தடிச்சிட்டு இருக்கியே ..? “

” இல்லப்பா …பால் , பழம் கொடுக்கனுமில்ல …? ” பிரவீணா சமாதானமாக பேச …

” ஏன் அதை பாட்டியை பார்த்த பிறகு  கொடுத்தால் ஆகாதா …? “

” போதும்பா …இப்போது என்ன …பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் அவ்வளவுதானே …ஏய் எந்திரி …வா …” என்றபடி எழுந்த நந்தகுமார் வெடுக்கென மீராவின் கையை பிடித்து எழுப்பனான் .வேகநடையில் நன் பின்னோடு அவளை இழுத்து போனான் .

வீட்டின் பின்புறம் நான்கு அறைகளுடன் கூடிய சிறிய வீடொன்று இருந்தது .நந்தகுமாரின் பாட்டி …குருநாதனின் அம்மா அங்கே உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் இருந்தார் .அங்கேதான் மீராவை இழுத்து சென்றான் நந்தகுமார் .

இடைப்பட்ட வாசல்படியிலும் நிறுத்தாமல் அவளை இழுத்தபடியே சென்றவன் ,அங்கே கட்டிலில் படுத்திருந்த ஒரு மூதாட்டியின் அருகே அவளை கிட்டதட்ட தள்ளினான் .தடுமாறி பாட்டியின் மீதே விழப்போன மீரா கடைசி நிமிடம் சுதாரித்து நின்றாள் .




” டேய் …டேய் என்னடா பண்ற …? ” பாட்டி படுத்தபடியே பேரனை பார்த்து கத்தினார் .

” உங்கள் ஆணை நிறைவேறிவிட்டது பாட்டி .நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் …” கைகளை கட்டிக்கொண்டு நின்றான் .

” நீ தவறாக எடுத்துக்கொள்ளாதேம்மா இவன் கொஞ்சம் முரட்டு பயல் ..” பாட்டி மீராவை சமாதானப்படுத்த அவள் நடப்பதை நம்ப முடியாத அதிர்ச்சியில் நின்றாள் .

” இங்கே என் பக்கத்தில் உட்காரம்மா …” ஆதரவாய் கை நீட்டி அழைத்தார் .

பற்றுக்கோலாய் அவர் கையை பற்றிய மீராவிற்கு சற்று முன்னிருந்த ஆதரவற்ற உணர்வு மாறி அமைதி தோன்றியது .

ஒரு தலைமுறை முந்தியவர் .எத்தனையோ அனுபவங்களை வைத்திருப்பவர் .அவரது ஆசீர்வாதம் வரமல்லவா …? என தோன்ற கணவனையும் இணைத்துக் கொள்ளும் பாவனையல் அவனை பார்த்துவிட்டு பாட்டியின் பாதம் பணிந்தாள் .

” நல்லாயிரும்மா ..நூறு வருசம் புருசனும் ,பிள்ளைகளுமா தொங்க தொங்க தாலியோட வாழ்ந்து இந்தக் குடும்பத்தை காப்பாத்தனும் தாயே …”

பாட்டியின் இந்த ஆசீர்வாதம் நெகிழ வைக்க ஈரம் கசியும் கண்களுடன் நிமிர்ந்த போதுதான் கவனத்தாள் .நந்தகுமார் பாட்டியை வணங்கவேயில்லை .மேலே விட்டத்தில் ஓடும் பல்லியை பார்த்தபடியிருந்தான் அவன் .

அதாவது அவனுக்கி குருநாதன் சந்தேகப்பட்டது போல் பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கும் எண்ணமேயில்லை .ஏன் …? அப்படி என்ன வெறுப்பு …?

குருநாதனும் , சுந்தரியும் வர …

” புது மருமகளை முதலில் விளக்கேற்ற சொன்னாயா …? ” பாட்டி மாமியார் குரலில் சுந்தரியை கேட்டார் .

” இனிமேல்தான் ” அவள் தலையை குனிந்து முணுமுணுத்தாள் .

” ஐயோ …இதையும் நான்தான் சொல்ல வேண்டுமா …? மருமகள் வீட்டிற்கு வந்துவிட்டாள் .நீ இன்னமும் இப்படி எதற்கும் முழித்துக் கொண்டிருந்தால் எப்படி …? ” லேசாக தலையில் அடித்துக் கொண்டார் பாட்டி .

” உங்களிடம் ஆசீர்வாதம் வாங்கவே நான்தான் நினைவுபடுத்த வேண்டியிருந்தது அம்மா .என்னடா பாட்டியை வணங்கினீர்களா …? ” குருநாதன் அதட்ட …

” எல்லாம் ஆச்சு …” முணுமுணுத்தபடி வெளியேறினான் நந்தகுமார் .

” புள்ளையை கூட்டிட்டு போய் விளக்கேற்ற சொல்லு ” பாட்டி கட்டளையிட …

” வாம்மா …” என்றபடி சுந்தரி நடந்தாள் .

குருநாதன் அம்மாவிடம் அமர்ந்து விட …மீரா கிழம்பிய மனதுடன் வெளியேறினாள் .




What’s your Reaction?
+1
25
+1
19
+1
0
+1
0
+1
3
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!