gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/பிடாரி இளங்காளி அம்மன்!

பிடாரி அம்மன் வழிபாடு நம்முடைய பாரம்பர்ய வழிபாடுகளில் ஒன்று. பெரும்பாலும் எல்லை தெய்வமாக இருந்து வரும் பிடாரி அம்மன், துடியான ஒரு தெய்வம். நல்லவரை ஓடிவந்து காக்கும் இவளே, தவறு செய்தவர்களை நிற்க வைத்துக் கேட்கும் கண்டிப்பான அதிகாரியாகவும் விளங்குகிறாள். திக்கற்றவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு இந்தப் பிடாரி இளங்காளியே காவல் நிலையமாகவும், நீதிமன்றமாகவும் இருக்கிறாள். அருள்மிகு பிடாரி இளங்காளி அம்மன் புகழை இங்கே காணவிருக்கிறோம்.

ஸ்ரீ பிடாரி அம்மன் கம்மங்காடு மேலப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம் added a... - ஸ்ரீ பிடாரி அம்மன் கம்மங்காடு மேலப்பட்டி புதுக்கோட்டை மாவட்டம்

* எப்போது தோன்றினாள் என்று யாருமே கணித்துக் கூற முடியாத அருள்சக்தியான இளங்காளி அம்மன் சென்னை நகரின் இதயப்பகுதியான அண்ணா சாலையில் சைதாப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிரதானமான இடத்தில் அமர்ந்து அருளாட்சி செய்கிறாள்.




* ஒரு சுற்று மட்டுமே கொண்ட சிறிய கோயிலான இங்கு விநாயகர், முருகர், நவகிரக சந்நிதிகளும் அமைந்திருக்கின்றன. இளங்காளியின் சந்நிதியைச் சுற்றியுள்ள வெளிப் பகுதியில் பரிவார தேவதைகளாக சரஸ்வதி, லட்சுமி, துர்கை காணப்படுகிறார்கள்.

* துர்காதேவியின் சந்நிதி கதவில் பூட்டுகள் அதிகம் காணப்படுகிறது. இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறினால், பூட்டு போடுவதாக வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் வேண்டிக்கொண்டபடி பூட்டு போடுகிறார்கள். இது சிறப்பான ஒரு வேண்டுதல் என்று சொல்கிறார்கள்.

* அமாவாசை, பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னபூரணியின் அம்சமாகவும் இந்த இளங்காளியம்மன் போற்றப்படுகிறாள்.

* பால் அபிஷேகம், நெய்தீபம் ஏற்றுதல், வளையல் காணிக்கை, தொட்டில் கட்டுதல், பொங்கல் வைத்தல் எனப் பலவித வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டு ஆசி வழங்குகிறாள் இளங்காளி அம்மன்.

* இந்த ஆலயத்தில் உள்ள விநாயகர் சந்நிதியின் கோஷ்ட தெய்வமாக தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவரை வணங்கும் குழந்தைகள் படிப்பில் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். வியாழக்கிழமை வழிபாடு இங்கு சிறப்பானது.

* புன்முறுவல் தவழும் அன்பு முகமும், சகல வேண்டுதல்களையும் நிறைவேற்றும் அருள் விழியுமாக அன்னை பிடாரி இளங்காளி அம்மன் அமர்ந்த கோலத்தில் கர்ப்பகிரஹத்தில் ஆட்சி செய்து வருகிறாள். குங்குமக் கிண்ணமும், சூலமும், பாசமும், உடுக்கையும் ஏந்தியவாறு அன்னை தரிசனம் தருகிறாள். இவளை வணங்க எல்லா தீமைகளும் நீங்கி வேண்டுதல்கள் நிறைவேறுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.




* சென்னையின் காவல் தெய்வங்களில் முக்கியமான இந்த அன்னை சைதாப்பேட்டையின் எல்லைக்காளியாகவும் இருப்பவள் என்கிறார்கள்.

* பிள்ளை வரம் வேண்டுவோர், திருமண பாக்கியம் வேண்டுவோர், வம்பு வழக்குகளில் இருந்து மீள விரும்புவோர் எனப் பலராலும் வணங்கப்படுகிறாள். முக்கியமாக அநீதி இழைக்கப் பட்டவருக்கு இவளே ஆறுதலாக இருந்து வருகிறாள்.

* ஆடி மாதம், நவராத்திரி என எல்லா சிறப்பு நாள்களிலும் இளங்காளிக்குச் சிறப்பான பூஜைகளும், அலங்காரமும் நடைபெற்று வருகின்றன.

* ஆடித் திருவிழா நாள்களில் அகிலத்தில் உள்ளோரை எல்லாம் காக்கும் இந்த காளிக்கு இங்கு குங்குமக் காப்பு, சந்தனக் காப்பு, மஞ்சள் காப்பு, அன்னக் காப்பு என விதவிதமாக இங்கே காப்புகள் செய்து அலங்கரிக்கின்றனர்.

சிறப்புகள் பலவற்றைப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிடாரி இளங்காளி அம்மனை தமிழக பிரபலங்கள் பலரும் வந்து வணங்கிச் செல்கின்றனர். ஏழை எளிய மக்கள் தொடங்கி, ஆட்சியாளர்கள் வரை பலருக்கும் ஆறுதல் அளிக்கும் இந்த இனிய காளியை, இளங்காளியை ஒருமுறை நேரில் வந்து வணங்கிப் பாருங்கள். உங்களின் எல்லா பயமும், சோகமும் நீங்கி புத்துணர்ச்சியைப் பெறுவீர்கள். ஓம் சக்தி.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!