Entertainment Serial Stories உள்ளத்தால் நெருங்குகிறேன்

உள்ளத்தால் நெருங்குகிறேன்-1

1

கிர்ர்ர்ர்….அழைப்பு மணி ஓசை.சை…இப்படியா காலிங் பெல் சத்தம் வைப்பாங்க குயில் கூவுது போல புல்லாங்குழல் இசைப்பது போல எவ்வளவு அழகான சப்தங்கள் இருக்கிறது.இதை போய் செலக்ட் செய்து மாட்டியிருக்கிறாரே, சலிப்புடன் புரண்டு படுத்தாள் சுபவாணி. மீண்டும் காலிங் பெல் சத்தம். வெடுக்கென எழுந்து அமர்ந்தாள். ஐயோ ரொம்ப நேரமாக பெல் அடிக்கிறாரே…திறக்கலைன்னா கோவிப்பாரே, ஒரு பதட்டத்துடன் வாசலுக்கு ஓடி கதவை திறந்தவள் வெளியே யாரையும் காணாமல் திகைத்தாள்.

 யார்… அவர் தானா? வேறு யாராவது…? மெல்லிய தயக்கத்துடன் வெளியே வந்து எட்டிப் பார்க்க…பரந்து விரிந்த அந்த ஆடம்பர அப்பார்ட்மென்டின் அவளிருந்த பதினெட்டாவது மாடியின் நீள் காரிடார் முழுவதும் மயான அமைதியாக கிடந்தது. எதிர் வரிசையில் வலது கோடி மூலையில் இருந்த வீட்டு வாசலில் லேசாக தலை தெரிந்தாற் போலிருக்க, நன்றாக திரும்பிப் பார்க்க அங்கே யாரும் இல்லை. அது ஒரு பேச்சிலர் வசிக்கும் வீடு. அதற்கு எதிர்ப்புற வீட்டிலிருப்பவர்கள் ஒரு வயதான தம்பதிகள். அங்கும் எந்த அரவமும் இல்லை.

பக்கத்திற்கு ஐந்தாக மொத்தம் பத்து வீடுகள் அந்த பத்தொன்பதாவது மாடியில்.எதிர்ப்படும் போது தங்களது அடுத்த பரபர வேலைக்குள் நுழையும் வேகத்துடன் சிறு தலையசைப்புடன் கடக்கும் எதிர்,பக்கத்து,அடுத்த வீட்டாட்கள். கடைசி வீட்டு பேச்சிலரையும்,அவனுக்கு எதிர் வீட்டு வயதான தாத்தா,பாட்டியையும்,புதிதாக திருமணமான அவளையும்  தவிர மற்ற அனைவரும் கணவன் மனைவி குழந்தைகளெனும் கச்சிதமான குடும்ப அமைப்பினர்.

இவர்களில் யாரும் மணியடித்து விட்டு ஓடும் வகையறாக்காரர்கள் இல்லையே! எண்ணியதும் தங்கள் ஊர் குடியிருப்பில் அப்படி விளையாண்டு அவளிடம் அகப்பட்டு தண்டனையாக அவளிடம் ஐம்பது தோப்புக்கரணங்கள் பெற்ற துறுதுறு சிறுவர்கள் நினைவிற்கு வர,தானாக புன்னகைத்த இதழ்களுடன் காரிடாரின் நடுவே வந்து நின்று இரு பக்கமும் பார்த்தாள்.

 எங்கும் யாரும் கண்ணுக்கு படவில்லை. “வாசலில் வாட்ச்மேன்,கேமெரா என்று பக்கா செக்யூரிட்டி இருந்தாலும், திருட்டு பசங்களுக்கு நம்மை விட மூளை  ஜாஸ்தி.எதற்கும் ஜாக்கிரதையாக இரு” ரகுநந்தன் எச்சரித்துவிட்டு அலுவலகம் போனது நினைவு வர வேகமாக உள்ளே நுழைந்து மீண்டும் கதவை பூட்டிக் கொள்ள முயன்ற போது கதவு அதிக பலத்துடன் வெளியிலிருந்து தள்ளப்பட்டது. 

முழு கறுப்பு உடையும் முகத்தை மறைத்த கறுப்பு முகமுடியுமாக ஒருவன் கதவைத் தள்ள ‘வீல்’ என்ற அலறலுடன் மீண்டும் இவள் மூட முயல, வென்றவன் அவனே.ஒரே தள்ளலில் கீழே விழுந்தவளை நோக்கி ஆணவத்துடன் அவன் நடந்து வர பயத்துடன் தரையில் தேய்த்து உடம்பை இழுத்து மெல்ல பின் வாங்கினாள்.




” என்னை விட்டுடு” கெஞ்சலாய் கேட்டாள். தரையில் படிந்து நகர்ந்த அவள் பாதத்தில் தனது ஷூ காலை வைத்து அழுத்தினான் அவன். ‘ஆ’ அவள் தீனமாய் அலற அப்படியே குனிந்து ஒற்றை கையால் அவள் இடைப்பற்றி தூக்கி நிறுத்தியவன் நொறுக்கி விடுவது போல் அணைத்தான்.

” யார் நீ? விடு.. விடு என்னை” அவன் முதுகில் இரண்டு கைகளாலும் தப் தப் என்று அறைய,வலி தாங்க முடியாமல் “ஏய்” அலறியபடி  அவளை பிரித்து உலுக்கியவன் முகமூடியை இறக்கிவிட்டு வெறியுடன் அவள் இதழ்களை கவ்வினான்.

 விரிந்த விழிகள் அவன் முகத்தில் நம்ப முடியாமல் நிலைத்திருக்க சோர்வுடன் கண்கள் சொருக மயக்கத்திற்கு போனாள் சுபவாணி.

————

“சுபா… சுபா” இரண்டு கன்னங்களும் பலமாக தட்டப்பட “ஹாங்” ஒரு பெரிய மூச்சுடன் வேகமாக எழுந்து படுக்கையில் உட்கார்ந்தாள் சுபவாணி. கண்களை மறைத்த கூந்தல் கற்றைகளை ஒதுக்கி விட்டு நிமிர்ந்து பார்க்க இரவு விளக்கின் மங்கலான ஒளியில் எதிரே கோபத்துடன் நின்றிருந்தாள் ஸ்வரூபா. அவளுடன் அந்த அறையை பகிர்ந்து கொண்டிருக்கும் தோழி. 

“எதற்காக இந்த கத்து கத்துகிறாய்? இரவில் தூங்க விட மாட்டாயா?” சுத்தமான இந்தியில் அவள் பேசியதை கஷ்டப்பட்டு உணர்ந்து கொண்டு “சாரி “என்றாள் குற்றவுணர்வுடன்.

 அதேநேரம் அறைக்கதவு தட்டப்பட “போச்சுடா இந்த ஆளுக்கு வேற பதில் சொல்லனுமா?” சலித்தபடி போய் கதவை திறந்தாள் ஸ்வரூபா.

அவளின் சலிப்பிற்கு கொஞ்சமும் குறைவற்ற கோபத்துடன் நின்றிருந்தான் அவன்.அறை வாசலின் மேல் நிலையை இடிக்கும் அபாயத்திலிருந்து தன் தலையை குனிய வைத்து உள்ளே எட்டிப் பார்த்தவன், “என்ன திரும்பவும் சத்தம்? நிம்மதியாக தூங்க விட மாட்டீர்களா?” சிடுசிடுத்தான் இந்தியில்.

“மன்னிச்சிடுங்க சார், என் தோழி ஏதோ கனவு கண்டு இப்படி உளறுகிறாள். நீங்கள் போங்க.இனி சத்தம் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” ஸ்வரூபா அவனை அனுப்ப முயல, அவன் கட்டிலில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவளை கூர்மையுடன்

 பார்த்தபடி மெல்ல பின்வாங்கி எதிரே இருந்த தன் அறைக்குள் போய் பூட்டிக் கொண்டான்.

 “அம்மா தாயே போதும்! இனியாவது கொஞ்சம் தூங்க விடு. பக்கத்து எதிர் அறைகாரர்களுக்கெல்லாம் நடு ராத்திரியில் பதில் சொல்ல என்னால் முடியாது” வெடு வெடுத்து விட்டு ஸ்வரூபா தன் கட்டிலில் படுத்து போர்வையை இழுத்து தலைக்கு மேல் மூடிக்கொண்டாள்.

உள்ளுக்குள் சுழன்ற நினைவுகளின் தாக்கம் தீராமல் சுபவாணி அமர்ந்தபடியே இருக்க, “இன்னமும் சத்தம் போடும் எண்ணத்தில் இருந்தாயானால் நான் கதவை திறந்து வைத்துவிட்டு லாபியில் போய் சோபாவில் படுத்துக்கொள்வேன். எதிர் அறைக்காரனுக்கு நீயே பதில் சொல்லிக்கொள்” என்றாள் ஸ்வரூபா.

 சுபவாணி சட்டென படுத்து கண்களை மூடிக்கொண்டாள். மூடிய கண்களுக்குள்

 மீண்டும் அந்த முகமூடி மனிதன். “ஒரு குடும்ப பொம்பளைக்கு, இந்த தொடு உணர்வு கூடவா இருக்காது? மூச்சுக்காற்றிலும், வியர்வை வாசத்திலும் கொண்டவனை தெரிந்து கொள்வார்களாம் பத்தினி பெண்கள்.உனக்கு ஏன் தெரியாமல் போனது? நீ பத்தினிதானே? ஒருவேளை இல்லையோ? ஆனால்…இனி உணர வைக்கிறேன் பார்”கட்டிலில் தள்ளி மேலே அழுந்தியவனின் பலத்திற்கு முன்னால் கட்டில் பஞ்சோடு பொதிந்து போனாள் சுபவாணி. 




அன்றைய அவனது வேகம் சுபவாணி அவனை உணர்ந்து கொள்ளாததற்கு மட்டுமல்ல, கதவை திறக்கும் போது அவளிதழ்களில் வந்த புன்னகைக்கும் சேர்த்துத்தான்.

சை..இப்போதும் உடல் முழுவதும் கம்பளிப்பூச்சி ஊறுகின்ற அவஸ்தையுடன் ரஜாயை இழுத்து தலைக்கு மேல் மூடிக்கொண்டு மரவட்டையாய் சுருண்டாள்.தன் மனதின் எண்ணங்களை வேறு பக்கம் திருப்ப எண்ணினாள்.அம்மா,அப்பா,அக்கா,அத்தான் என மனதில் தன் சொந்தங்களை வரிசைப்படுத்த, அவள் வாழ்வின் மிக முக்கியமான அந்த தினம் நினைவிற்கு வந்தது.




 

What’s your Reaction?
+1
38
+1
37
+1
4
+1
2
+1
1
+1
2
+1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!