gowri panchangam Sprituality Uncategorized

108 திவ்ய தேச தலங்கள் – 104 | திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோயில்

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 104-வது திவ்ய தேசம் ஆகும். மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. இத்தலத்தை பெரியாழ்வார், திருமழிசை ஆழ்வார், திருமங்கையாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

தல வரலாறு:

பிரம்மதேவனிடம் வரம் பெற்ற இரணியன் என்ற அசுரன், தேவர்களுக்கு எப்போதும் இன்னல்கள் அளித்து வந்தான். தேவர்கள் இதுகுறித்து திருமாலிடம் முறையிட்டனர். இரணியனின் தொந்தரவு இல்லாத இடத்தில் இதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என்று திருமாலிடம் கூறினர்.

 




 

இந்நிலையில் இத்தலத்தில் கதம்ப மகரிஷி திருமாலை நோக்கி தவம் இருந்தார். தான் தவம் செய்யும் இடத்தில் யாரும் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவே தேவர்களுடன் ஆலோசனை செய்ய இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அப்போது இரணியனை அழிக்க, தான் நரசிம்ம அவதாரம் எடுக்கப்போவதாக தேவர்களிடம் கூறினார் திருமால். மகிழ்ந்த தேவர்களும் கதம்ப மகரிஷியும் அந்த அவதாரத்தைக் காண விரும்பினர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவதாரம் எடுப்பதற்கு முன்பே தன்னுடைய நரசிம்ம கோலத்தை காட்டி அருளினார் திருமால்.

இதனால் மகிழ்ந்த அவர்கள், திருமாலின் பிற அவதாரங்களையும் காண விரும்பினர். அதன்படி பெருமாளும் நின்ற, கிடந்த, இருந்த, நடந்த என்று நான்கு கோலங்களைக் காட்டி அருள்பாலித்தார், மேலும் இங்கேயே எழுந்தருளினார். தேவர்களின் திருக்கை (துன்பம்) ஓட்டிய தலம் என்பதால் ‘திருக்கோட்டியூர்’ என்று பெயர் பெற்றது.

அஷ்டாங்க விமானத்தின் வடப்பக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு, கேது இருப்பது வித்தியாசமான தரிசனம். பிரகாரத்தில் நரசிம்மர், இரணியனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோயில் முகப்பில் சுயம்பு லிங்கம் ஒன்று இருக்கிறது.




தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இத்தலத்தில் அஷ்டாங்க விமானம் அமைத்தனர். ‘ஓம்’, ‘நமோ’, ‘நாராயணாய’ எனும் மூன்று பதங்களை உணர்த்தும் விதமாக இந்த விமானம் மூன்று தளங்களாக அமைந்துள்ளது. விமானத்தின்கீழ் தளத்தில் நர்த்தன கிருஷ்ணர் (பூலோக பெருமாள்), முதல் தளத்தில் சயனகோலத்தில் சவுமியநாராயணர் (திருப்பாற்கடல் பெருமாள்), இரண்டாவது அடுக்கில் நின்றகோலத்தில் உபேந்திர நாராயணர் (தேவலோக பெருமாள்), மூன்றாம் அடுக்கில் அமர்ந்த கோலத்தில் பரமபதநாதர் (வைகுண்ட பெருமாள்) என சுவாமி நான்கு நிலைகளில் அருளுகிறார். திருமாமகள் தாயாருக்கு தனிசந்நிதி இருக்கிறது. இவளுக்கு நிலமாமகள், குலமாமகள் என்றும் பெயர்கள் உண்டு.

மாசி மாத தெப்பத் திருவிழா, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இருப்பிடம்: மதுரையிலிருந்து 65 கிமீ தொலைவிலும், சிவகங்கை – திருப்பத்தூர் சாலையில், திருப்பத்தூருக்கு தெற்கில் 8 கிமீ. தொலைவிலும், சிவகங்கைக்கு வடக்கில் 24 கிமீ. தொலைவில் உள்ளது.




 

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!