Serial Stories விநாடி நேர விபரீதங்கள்

விநாடி நேர விபரீதங்கள்-11

வினாடி– 11

நகரமே திமிலோகப்பட்டுக் கொண்டிருந்தது.ஏகப்பட்ட ஹேஷ்யங்கள்! வாதப்பிரதிவாதங்கள். தொலைக்காட்சிகள் குறிப்பிட்ட சேனலில்  வந்த அந்தக் காட்சிகளை ரிபிட் மோடில் காட்டியே டிஆர்பியை ஏற்றிக் கொண்டிருக்க ஆளும்கட்சியை எதிர்க்கட்சிகள் துவம்சம் செய்தன. 

பின்னே தண்டவாளத் தகர்ப்பு என்றால் சாதாரணமா? ப்ளஸ் டூ சிறுவனொருவன் அல்லவா உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றியுள்ளான்.

“..அப்பாடா!  ஏன்யா சகாதேவா? ரெண்டு நாள்ளே அக்யூஸ்ட்டை  பிடிச்சுடுவே தானே?  உன்னை நம்பி மீடியாலே சொல்லிட்டேன். தவறுனா நார்நாராக் கிழிச்சுடுவாங்க. எங்கே அந்த சந்தானம் அரசு.அவங்களையும் கூட வச்சுக்கோ.   ரயிலை நிறுத்தினானே அவனை உன் கஸ்டடியிலேயே வை.”

கமிஷனர் சொல்ல வெளியே பவ்யமாகத் தலையாட்டிய 

சகாதேவன் உள்ளுர சிரித்துக் கொண்டான். 

ஜனாவை ஃபாலோ பண்ண மாட்டியது கண்ணன்.  அவனின்  உடல்மொழி சந்தேகத்தைத் தந்தது அந்தக் காவலதிகாரிக்கு.

தன் பேட்ச் மேட் சந்தானத்திடமும் அரசுவிடமும் கலந்தாலோசிக்க

சந்தானம் கண்ணனையும், அரசு ஜனாவையும் மற்ற மூவரை சகாதேவனும் கண்காணித்தனர். 

அதன் பின்னர் நடந்தவை சுவாரஸ்யமானவை.

“தம்பி! நில்லுப்பா! உங்கப்பா தானே  காய்கறிகாரர் சபாபதி .”

“ஆமாங்க”

” விசேஷத்துக்கு மொத்தமா வெஜிடபிள்ஸ் வேணும். அவரைப் பார்க்கணுமே”

“இருங்க ஸார்! கூப்பிட்டு வரேன். “

“தம்பி உன்னிடம் போன் இருந்தா குடேன். வீட்டுக்கு பேசி இன்னும் ஏதாவது லிஸ்ட்ல மிஸ்ஸாயிருக்கான்னு கேட்கிறேன். என்னோடதுல பாலன்ஸ் போயிடுச்சு.  “

கண்ணன் யோசிக்கவேயில்லை தன்னுடைய ஸ்மார்ட் போனைக் கொடுத்து விட்டு அப்பாவை அழைக்கப்போனான். 

சபாபதி வர எடுத்துக் கொண்ட சில நிமிடங்களில் அவர் அந்த அலைபேசியில் செய்ய வேண்டியதை செய்து விட்டு அவன் வந்ததுமே  “தேங்க்ஸ்ப்பா”

என்று கொடுத்து விட்டுப் போய்விட்டார். 

அதில் அவர் பொருத்திய அந்தச் சிறிய சாதனம் கண்ணன் யாருடன் பேசினாலும் அதை அலைக்கற்றைகளில் மாற்றியனுப்ப  இங்கே ஒலிக்கற்றைகளாய்  ஒலிபரப்பியது.  

 

கேட்கக்  கேட்க உயிருக்குள்ளே குளிரெடுத்தது மூவருக்கும். சாதாரண விடலைகளின் விளையாட்டுகள் என்றெண்ணியிருக்க 

ஜனாவின் பேச்சு பயமுறுத்தியது.

மூவரிடமும் குறிப்பிட்ட இடத்தில் தண்டவாளத்தில் சின்னதாய் சாதாரண குண்டு வைத்து விரிசல் விட வைக்க சொல்லி டெமோவும் காட்டினான். 




“வேண்டாம்ணா! ! எதனா தப்பாப் போச்சுன்னா நிறைய பேருக்கு ஆபத்துண்ணா “

கண்ணன் குரல் நடுங்கியது. 

 “டேய் வாய்ப்பேயில்லைடா. நீ..நீதான் காப்பாத்தப் போற ஹீரோவே! “

“என்னண்ணா சொல்றீங்க”

” ஆமாடா! எனக்கு மட்டும்  அக்கறையில்லையாடா. இந்த விரிசல் கூட வ்யூயர்ஸை நம்ப வச்சு பல்ஸ்ரேட்டை ஏத்தத்தான். இது சின்னதாத்தான் விரிசல் விடும் அவ்ளோதான். ட்ரெயின் வரும்போது கண்ணன் சிவப்புத்துணியோடு ஓடுவான், நீங்க ரெண்டு பேருமே ஒருத்தன் முன்னே பின்னேன்னு வீடியோ எடுங்க.  நானும் ஸ்பாட்லேதானிருப்பேன். வண்டி நின்னுடும். கண்ணன் மட்டும்  தற்செயலா விரிசலைப் பார்த்துட்டு ட்ரெயினை நிறுத்தியதா சொல்வான்.

என்னடா கண்ணா? இப்போ ஓக்கே தானே.”

“நான் மாட்டிக்குவேனா”

“நீ ஹீரோவாகிடுவேடா. ஒரே நாளுலே. ஆனா நம்ம சானலைப் பத்தி மூச்சு விடாதே.  சரியா  “

கண்ணன் சம்மதித்தான். எப்படியோ ட்ரெயின் கவிழ்ந்திடக் கூடாது. 

கண்ணனை மூவரும் பாராட்டியும் கலாய்த்தும் பிரிந்தனர்.

ஜனா குரூரமாக சிரித்துக் கொண்டான்.

சகா, அரசு, சந்தானம் யோசனையில் ஆழ்ந்தனர்.

கண்காணிப்பு தீவிரமானது. 

மூவரும் தண்டவாளத்தில் அந்த சின்ன எலுமிச்சைஅளவு உருண்டையை வைத்து தீ வைக்க 

அது “உஷ்க்! உய்க்! உஷ்க்” என்று மும்முறை விசிலடித்து புரண்டு புகையைக் கக்கியது.

“என்னடா இது? “

“இருங்கடா வெயிட் பண்ண்ணிப் பார்ப்போம். “

“த்தட்! த்தட்”டென்ற சப்தத்தோடு சின்னவிரிசல் கண்டது அந்த இரும்புத் தண்டவாளம். 

இன்னும் அரைமணி நேரம்தான் ரயில் வந்து விடும். நால்வருக்கும் வியர்த்தது.

கையில் சிவப்பு டிஷர்ட்டைப் பிடித்திருந்தான் கண்ணன். 

பார்த்தா போன் சிணுங்கியது.




“பார்த்தா”

“அண்ணா”

“எல்லாம் ரெடியா? ஒருமுறை கண்ணனை துணியை ஆட்டிக்கிட்டே ஓடி வரச் சொல்லி ரிகர்சல் பார்த்துட்டு எனக்கு அதை அனுப்புங்கடா. அதோடு விரிசல் விட்டதையும் நாலைஞ்சு விதமா வீடியோ எடுங்க. இப்ப  வந்திடுவேன் “

“சரீண்ணா”

கண்ணன் துணி ஆட்டிக் கொண்டே வருவது வீடியோ எடுக்கப்பட்டு ஜனாவுக்கு அனுப்பி வைக்கப் பட்டது.

ஜனா முகத்தில் கட்டியிருந்த துணியை ஒதுக்கி அழுந்தத்  துடைத்துக் கொண்டு திருப்தியாகப் பார்வையை ஓட்டினான்.  கண்ணுக்கெட்டிய தூரம் யாருமில்லை . சற்று தூரத்தில் வைத்திருந்த காமிராவை எடுத்து பின்னே ஓடவிட்டு காட்சிகளைப் பார்த்தான்.

கண்ணன் ஓடிவருவதை பின்னால் தள்ளிவிட்டு தான் தண்டவாளத்தை வெடிவைத்து தகர்க்கிற காட்சியை சரி பார்த்து தலையை ஆட்டிக் கொண்டான். நேற்றே வந்து இதே ரயிலை ஓடும் நிலையில் வீடியோ எடுத்திருந்தான்

ஜனாவின் முகம் விகாரமாயிருந்தது.

“சகாதேவா! எனக்கா குழிபறிக்கிறே! இதோ பாருடா உனக்கு ரெடியாயிட்டு ஆப்பு”

சொல்லிக் கொண்டே சிலபொருட்களை ஆங்காங்கே எறிந்தான். திருப்தியாயிருந்தது. 

 தன்னுடைய நிழலோடு கூடவே இன்னொரு நிழலாட திரும்ப முனைந்தவனின் இருகரங்களுமே பின்னால் வலிமையாய் இழுக்கப்பட்டு விலங்கு மாட்டப்பட்டது.

திமிறித் திரும்பினான் ஜனா. அதிர்ச்சியில் வாய் பிளந்தது எதிரே

சகாதேவன்! 

“என்னடா? என்னை எதிர்பார்க்கலையா? “

கீழே குனிந்து “ஹ்ம்! செம ப்ளான்தான் போ! என்னோட நேம் போர்டு. ஸ்டார்ஸ்!  என் காணாமப் போன செல்போன்!

அதாவது இந்த சதியிலே நானும் ஒரு அங்கம்ங்கிற மாதிரி செட்டப்பு ஹ்ம். “

 அரசு அவற்றை அதே நிலையில்  வீடியோவும் போட்டோவும் எடுத்துக் கொண்டு ஒரு நெகிழிப்பையில் சேகரித்தான். 

ஜனாவால் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட தண்டவாளத்தையும் போட்டோ எடுத்தான்.

“இதை வீடியோ எடுத்து என்னடா செய்வ. நான்தா செய்தேன்னு நிருபிக்க முடியுமா?”

ஜனாவின் கன்னத்தில்”தட்”என்று விழுந்தது அறை.

அவனை இழுத்துப் போய் ஜீப்போடு வைத்து விலங்கை பூட்டினார் அரசு. அங்குமிங்குமாய்ப் பார்த்தவர்  ஜீப் துடைக்கும் அழுக்குத் துணியை  அவன் வாயில் வைத்து அடைத்தார்.

சந்தானம், ஜனாவின் குரலில் பார்த்தாவுக்கு  அழைத்து இங்கே வரும்படிக் கூறினார். 

ஜனா  தகர்த்திருந்திருந்த இடம் நால்வர் கூட்டணியிருந்த இடத்திற்கு முன்னேயிருந்த ஒரு வளைவிலிருந்தது.

“ஏண்டா அண்ணன் முன்னாலே வரச் சொல்றார். “

“தெரியலையே! “

நால்வரும் நடந்து வளைவு தாண்டி வர தூரத்தே ரயில் வருவது காலடியில் அதிர்ந்த தண்டவாளம் சொன்னது.

“என்னடா யாரையுமே காணோம்”

“இங்கேதானே சொன்னாரு”

“அய்யோ என்னடாயிது ரெண்டாத் தெறிச்சுக்கிடக்கு தண்டவாளம். “

“பயமாயிருக்குடா”

“அதான் அண்ணன் வரச் சொன்னாரோ என்னவோ.  “

காலடிச்சத்தங்கள் கேட்க

நால்வரும் வெறித்தனர்.

கண்ணனை விடுத்து மூவரையும்  சந்தானம்  அறைந்ததில் அதிர்ந்தனர். கண்ணீரே வந்து விட்டது.




“என்னடா படிக்கிற வயசுலே ரயிலை கவுக்கப் பாக்கறீங்களா படிக்கிறதைத் தவிர எல்லா மொள்ளமாரித்தனமும் கத்து வச்சிருக்கிறிங்க. எங்கடா உங்க நொண்ணன். “

கன்னம் பால் பன் போல பொதபொதவென்று வீங்க ஆரம்பித்தது.

“அவன் தான் செய்தானா? நீங்க உடந்தையா”

“இதை நாங்க செய்யலை. அண்ணனும் இங்கே இல்லை ஸார். அவர் நல்லவர் ஸார். “

“ஆஹாங்! அப்போ நல்லவரோடு சேர்ந்து நீங்க என்ன செஞ்சீங்க”

“நாங்க வ ..வவ…வந்து சின்னதாத்தான் உடைச்சோம்.”

“இது யாரு செஞ்சது?”

” தெரியாதுங்க ஸார்.”

“அப்படியா! இதைப் பாருங்கடா தெரியும்”

அலைபேசியில் முகம்  மறைத்திருந்த மனிதனொருவன்  தண்டவாளத்தை  வெடிவைத்து தகர்ப்பதும் சிரிப்பதும் அந்தத் துணியையெடுத்து முகம் துடைக்க ஜனா முகம் தெரியவும்  

கண்ணன் மடிந்து உட்கார்ந்து அழத் துவங்க மற்றவர்களோ நம்பமுடியாமல்  பார்த்தனர்.

“ஜனா அண்ணாவா ” திகிலில் உறைந்தனர். 

கண்ணன் திடீரென்று சந்தானம் காலைப் பிடித்துக் கொண்டான். 

“ஸார்! ஸார்! எப்படியாவது ரயிலை நிறுத்துங்க ஸார். நீங்க போன் பண்ணுங்க ஸார். அய்யோ! வயசானவங்க குழந்தைங்க ..கடவுளே!”

 முகத்திலறைந்து கொண்டான். 

சகாதேவன் 

“அது உன்கையிலதானிருக்கு.”

“நீங்க போட்ட ப்ளான்படி சிவப்புத்துணியோடு ஓடு ரயிலுக்கு முன்னாலே “

கண்ணன் கண்ணைப் புறங்கையால் துடைத்துக் கொண்டான். 

“ஓடுறேன் ஸார் ஓடுறேன். என் உயிரைக் கொடுத்தாவது ரயிலை நிறுத்தறேன்”

குரலில் வைராக்கியம் இருந்தது.

 தள்ளி நின்று யாருடனோ பேசிய அரசு சகாதேவனுக்கு தம்ஸ்அப் காட்டினான்.

நெஞ்சை நீவிக்கொண்டான் சகாதேவன்.

“கமான் பாய் ரன்! ரன்” என்றதுமே தண்டவாளம் நடுவே கண்ணன் ஓடத் துவங்க 

கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த மூவரும் திரும்பி ஓடத் துவங்க சகாதேவன் வானத்தைப்பார்த்து சுட்டான்.

“திருந்தவே மாட்டீங்களாடா”

திரும்ப சந்தானம் கைவரிசையை காட்டி விட்டு அவர்களின் ஷர்ட்டையே கிழித்துக் கையைக் கட்டினார். 

கண்ணன் எதையுமே கவனிக்கவில்லை குண்டு சத்தத்துக்கும் திரும்பிப் பார்க்கவில்லை மதியிழந்த பைத்தியக்காரனைப் போல கால் தடுக்கி விழுந்து எழுந்து ஓடினான். 

அவனுக்கு சில அடி தொலைவிலேயே ரயில் மெது ஓட்டமாய் நின்றது.

ட்ரைவர் அவனைத் தூக்க  ரயிலிலிருந்து இறங்கிய கூட்டம் கொண்டாடியது. 

கண்ணன் அழுது கொண்டே சிரித்தான்.

யார் யாரோ செல்லில் படம் பிடிக்க வைரலாகியது.

அதற்கு முன்னே விவி சேனல் செய்தியை சுடச்சுட ஒளிபரப்பியது நண்பர்கள் மூவர் கைவண்ணத்தில். 

அனைவரும்  கண்கள் கட்டப்பட்டு சகாதேவனின் கஸ்டடிக்கு கொண்டு வரப்பட்டனர்.

கண்ணனை சகாதேவன் அடை காத்தான். 

நால்வரின் பெற்றோருக்கும் போன் பறந்தது.

(விபரீதங்கள் தொடரும்)




What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!