Serial Stories காதல் சகுனி

காதல் சகுனி-10

10

“ம்மா… ஆ…” என்ற முனகல் சத்தம் கேட்டு உறக்கம் களைந்தாள் கிருஷ்ணதுளசி. சுஜாதாதான் வலி தாங்காமல் முனகிக் கொண்டிருந்தார். சுஜாதாவிற்கு உதவியாக இருக்கட்டும் அவர் அருகிலேயே படுத்திருந்தாள்.

“ஆன்ட்டி என்னாச்சு?” 

“கால் வலி தாங்க முடியலைம்மா. தூக்கமே வரலை” படுக்கையில் புரண்டார். பெயின் கில்லர் கொடுத்துத்தான் படுக்க வைத்திருந்தனர். ஆனாலும் வலி என்றால் என்ன செய்வது?

மென்மையாக அவர் காலை வருடி விட்டாள். ஆனால் நேரம் செல்லச் செல்ல சுஜாதாவின் முனகல் அதிகமாக மாடியில் இருந்த அஸ்வத்திற்கு போன் செய்தாள். உடனே கீழே இறங்கி வந்தவன் டாக்டரை போனில் தொடர்பு கொண்டான்.

“வயதானவர்கள் என்பதால் பெயின் கில்லர் ஒரு அளவிற்குத்தான் கொடுக்க முடியுமாம். இன்று ஓர் இரவு வலியை தாங்கிக் கொள்ள சொல்கிறார்”

“இருவரும் சுஜாதா அருகில் அமர்ந்து வலி மறப்பதற்காக பேச்சுக் கொடுக்க… வருடி கொடுக்க என்று ஏதேதோ செய்தும் சுஜாதாவால் வலியை தாங்க முடியவில்லை.கண்களில் நீர் வழிய அனத்த தொடங்கினார்.

” இதோ வருகிறேன்” என்று மாடிக்குச் சென்ற அஸ்வத், கண்ணாடி டம்ளரில் செந்நிற திரவம் ஒன்றுடன் வந்தான்.”சுஜா இந்த டானிக்கை குடித்து விடு.வலி குறையும்”

அவளும் சுஜாதாவின் உதடுகளை பிரித்து ஊற்ற உதவி செய்தாள்.

முழு டம்ளரும் காலியான பிறகே அந்த சந்தேகம் வர கிளாஸை எடுத்து முகர்ந்து பார்த்தவள் கோபத்தில் கண்கள் சிவக்க அஸ்வத்தை முறைத்தாள். “என்ன இது?” கடித்த பற்களிடையே வார்த்தைகளை துப்பினாள்.

 சிறு முனங்கலுடன் சுஜாதா கண்களை மூடி தூங்க ஆரம்பித்திருக்க, அவருக்கு போர்வையை சரி செய்து விட்டபடி “ரெட் ஒயின்” என்றான் சாதாரணமாக.

” அடப்பாவி குடிகாரா! இப்படி வயதானவர்களுக்கு ஒயின் ஊற்றி கொடுத்திருக்கிறாயே! நீயெல்லாம் உருப்படுவாயா?” படபடத்தாள்.

அவள் கைப்பற்றி அறைக்கு வெளியே இழுத்து வந்தான் “மெல்ல பேசு, ஆன்ட்டி தூங்கட்டும்”

 “தூக்கமா! போதையில் அவர்களை தன்னிலை மறக்க வைத்து விட்டு, தூக்கம் என்கிறாயே!”

” எனக்கு வேறு வழி தெரியவில்லை கிருஷ்ணா! ரெட் ஒயின் நீ நினைப்பது போல் பெரிய அளவிற்கு உடம்பை பாதிக்காது. சொல்லப்போனால் அது அளவாக எடுத்துக் கொண்டால் உடம்பிற்கு நல்லதும் கூட”

” போடா நீயும் உன் விளக்கமும்,நீயே உன் சித்தி கூட படுத்துக்கோ, நான் என் ரூம் போகிறேன்” கோபித்துக் கொண்டு மாடி ஏறி தன் அறைக்கு வந்து விட்டாள். 

“எப்படி இருக்கிறீர்கள் ஆன்ட்டி?” மறுநாள் காலை இறங்கி வந்து விசாரித்த போது சுஜாதா மிக தெளிவான முகத்துடன் இருந்தார்.

” இப்பொழுது வலியே இல்லைம்மா. உடம்பும் ரொம்ப லேசாக இருக்கிறது” 

“எல்லாம் நான் கொடுத்த டானிக்கினாலாக்கும்” அஸ்வத் காலரை உயர்த்திக் கொள்ள அவனை முறைத்தாள்.

“ஆமாம்டா, அது ரொம்ப நல்லா கேட்டுச்சு. இன்னைக்கு நைட்டு கூட அதையே எனக்கு கொடேன்”  

“அதற்கென்ன டார்லிங்! கொடுத்துட்டா போச்சு!” அஸ்வத் சொல்லவும் பட்டென்று அவன் தோள்களில் அடித்தாள் 

கிருஷ்ணதுளசி. “என்ன பேசுகிறீர்கள்?”

“சுஜா டார்லிங் கேட்டால் நான் எப்படி மறுக்க முடியும் கிருஷ்ணா? உனக்கு வேண்டுமென்றால் நீயும் கேட்டு வாங்கிக்கொள். டார்லிங் மேல் பொறாமை படாதே”

” இவனை…” பெட்டில் கிடந்த தலையணையை எடுத்து அவன் முதலில் மொத்தினாள்.

சுஜாதா இவர்கள் செல்ல சண்டையை ரசித்துப் பார்த்தபடி இருந்தார்.குனிந்து அவள் அடிகளை வாங்கியவன் “போதும்,கை வலிக்குமே, வா சாப்பிடலாம்” என்றபடி அடுப்படிக்குள் சென்றான்.




 மினி இட்லிகளின் மேல் ஊற்றிய ரோட்டு கடை தண்ணீர் சட்னி. எப்படி இதுபோல் விதவிதமாக சமைக்கிறான்… கிருஷ்ணத்துளசி ஆச்சரியமாக பார்க்க “வாழ்க்கையை ருசித்து வாழ்பவர்கள் உணவையும் ருசிக்க ஆரம்பித்து விடுவார்கள். உணவில் ருசி எதிர்பார்ப்பவர்கள் அருமையாக சமைக்கவும் ஆரம்பித்து விடுவார்கள். உன்னை போல் எந்நேரமும் லேப்டாப்பிற்குள் தலையை நுழைத்துக் கொண்டிருந்தால் எதிலும் மனம் செல்லாது. வாழ்க்கையே மரத்து உணர்ச்சிகளின்றி போய்விடும்”

“ஆஹா உன் உணர்ச்சிதான் நீ எடுக்கும் படங்களில் தெரிகிறதே!” அஸ்வத் கொடுத்த விளக்கங்கள் பிடிக்காமல் குத்தினாள்.

“ஸ்… அப்பா உன்னோட சண்டை போட எனக்கு நேரம் இல்லை. கொஞ்சம் வேலைகள் இருக்கிறது. மதியம் மஸ்ரூம் ரைசும், சிக்கன் ரைத்தாவும் செய்து வைத்திருக்கிறேன்.இரண்டு பேரும் சூடு பண்ணி சாப்பிடுங்கள்.நான் வெளியே கிளம்புகிறேன்”

“எனக்கு ஆபீஸ் இருக்கிறதே…”

” உன் ஓட்டை ஆபீசுக்கு இன்னும் நான்கு நாட்கள் லீவு போடு.உன் ஆன்ட்டியை பார்த்துக் கொள்ள வேண்டுமல்லவா?” லேப்டாப் பேக்கை முதுகில் மாட்டிக் கொண்டவன் “உன்னுடைய ஸ்கூட்டி சாவி வேண்டுமே கிருஷ்ணா” என்றான்.

“ஏன் உங்கள் கார் என்னவாயிற்று?”

“பிரகாஷ் ஒரு லொகேஷன் சொல்லியிருக்கிறான். அங்கே காரெல்லாம் போகாதாம். அத்தோடு டூ வீலரென்றால் ஹெல்மெட்டால் முகத்தை மறைத்துக் கொள்ளலாம்”

“என் ஸ்கூட்டி பத்திரம்” சாவியை நீட்டியபடி எச்சரித்தாள்.

” முழுதாக கொண்டு வந்து விடுவேன்.பயப்படாதே…”

சொல்லிவிட்டு ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டு ஆக்சிலேட்டரை  திருகி அவன் கிளம்பிய வேகத்தில், தன் ஸ்கூட்டி மீது பெருங்கவலை வந்தது கிருஷ்ணதுளசிக்கு.

 “கடங்காரன்,ஒரு ஸ்கூட்டியை என்ன வேகத்தில் எடுக்கிறான் பார்” முணுமுணுத்தவளின் பின்னிருந்து குரல் கொடுத்தார் சுஜாதா.

 “அவன் சிறு வயதில் இருந்தே அப்படித்தான்மா. எல்லாவற்றிலும் வேகம்…எதிலும் துறுதுறுப்பு.ஒரு நிமிடம் எங்கேயும் உட்கார மாட்டான்,” பெருமையாக அறிவித்தார்.

சரியான ரவுடிப்பயல், இவனிடம் இப்படி பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது… தனக்குள் எண்ணிக் கொண்டவள் “ஏன் ஆன்ட்டி உங்கள் மகன் முதல் படத்தில் உங்கள் காதலை கதையை எடுத்தார். இரண்டாவது படத்தின் கதைக்கு என்ன செய்கிறார்? யாரிடமிருந்து திருடியிருக்கிறார்?”

” காதல் உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. அதை கதையாக எடுக்க திருட வேண்டிய அவசியம் இல்லை. அத்தோடு அவனுக்கு கற்பனை திறன் அதிகம். அப்படி ஒன்றும் எங்கள் காதல் கதையை மட்டுமே எடுக்கவில்லை. சின்ன சீன் மட்டும் தான் வைத்ததாக சொன்னான்.கிருஷ்ணா நாம் அந்த படத்தை பார்க்கலாமா?”

” எந்த படத்தை?” கலவரமாக கேட்டாள்.

“அஸ்வத்தின் காதல் சகுனி படத்தை”

” ஐயோ ஆன்ட்டி அதெல்லாம் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படமா?”

” ரொம்ப பேசுகிறாய்! சாதாரண லவ் ஸ்டோரி என்றுதானே கேள்விப்பட்டேன்.படத்தை போடேன் பார்க்கலாம்”சுஜாதா கட்டாயப்படுத்த வேறு வழியின்றி டிவியில் படத்தை போட்டுக் கொண்டு இருவரும் அமர்ந்தனர்.

 படத்தில் வரும் சில நெருக்கமான காட்சிகளை ஆன்ட்டியுடன் சேர்ந்து எப்படி பார்க்க போகிறோம் என்று யோசித்தபடி கிருஷ்ணதுளசி இருக்க,சுஜாதா எந்த தடங்கலும் இல்லாமல் படத்துக்குள் ஆழ்ந்து போனார்.அவரை ஆச்சரியமாக பார்த்தபடி தானும் கவனத்தை திரைப்படத்தில் செலுத்தினாள்.

 கொஞ்சம் கொஞ்சமாக படம் தன்னை உள்ளுக்குள் எடுத்துக் கொள்வதை உணர்ந்தாள். நிறைய ஜாலி,கொஞ்சம் சென்டிமென்ட், அழகான காதல்,திருப்தியான ரொமான்ஸ். படத்தை பற்றி இப்படித்தான் விமர்சனம் சொல்ல தோன்றியது அவளுக்கு.

 அன்று எப்படி இந்த படத்தை இவ்வளவு கவனிக்காமல் விட்டோம்? குழம்பினாள்.

” என்ன கிருஷ்ணா படம் பிடித்திருக்கிறதா?” சுஜாதா கேட்க தலையசைத்து ஆமோதித்தாள்.

” பொதுவாக இந்த மாதிரி காதல் படங்கள் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. காதல் பிடித்தவர்களுக்கும், காதலிப்பவர்களுக்கும் மட்டும்தான் பிடிக்கும்.அன்று நீ எந்த மனநிலையில் இருந்தாயோ… படம் பிடிக்காமல் போய்விட்டது”

 சுஜாதா புன்சிரிப்போடு சொல்ல கிருஷ்ணதுளசியின் குழப்பம் அதிகமானது.அன்று பிடிக்காத காதல் இன்று பிடிக்க ஆரம்பித்திருக்கிறதா எனக்கு?

“அன்று ஏதாவது ஆபீஸ் டென்ஷனில் இருந்திருப்பேன். இன்று ஓய்வோடு படம் பார்க்கும் மூடு இருந்தது போல, சாப்பிடலாம் வாங்க ஆன்ட்டி” உணவை சூடு செய்தவளின் மனதிற்குள் காதல் சகுனி அழுத்தமாக அமர்ந்திருந்தான்.




” இன்னமும் உன் ஸ்கூட்டி ஓடுகிறது. அதிசயம் பாரேன்”என்றபடி மாலை இவளிடம் சாவியை கொடுத்தவன் நிறைய களைப்புடன் இருந்தான்.

“உட்காரப்பா ரொம்ப அசந்து தெரிகிறாய்” சுஜாதா சொல்ல, “அந்த தலைமுடியையும் தாடியையும் உங்கள் மகனை குறைக்கச் சொல்லுங்கள். அப்பொழுதுதான் கண்ணைக் கொண்டு பார்க்க முடியும்”உதட்டை சுழித்து அவனுக்கு பழிப்பு காட்டியவள் “நான் என் பிரண்ட்ஸை பார்த்துவிட்டு வருகிறேன் ஆன்ட்டி” என்று வெளியேறினாள்.

அவளுக்கு ஏனோ காதல் சகுனி பார்த்து முடித்ததிலிருந்து அஸ்வத்தை நேருக்கு நேராக எதிர்கொள்ள தயக்கமாக இருந்தது. அவள் கிளம்பிப் போன ஐந்தாவது நிமிடம் வீட்டு கதவு தட்டப்பட கதவை திறந்த அஸ்வத் முகம் கறுத்தான். “நீயா இங்கே ஏன் வந்தாய்?” கோபத்துடன் கேட்டான்.

தோழிகளை பார்த்துவிட்டு திரும்பியவள், வாசலில் ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு தட் தட்டென படியேறி உள்ளே வந்து சோபாவில் அமர்ந்திருந்த அஸ்வத்தின் முன்னால் கோபமாக நின்றாள். “யோவ் உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கிறதா? ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டு போனாயே, பெட்ரோல் போட வேண்டும் என்று தெரியாதா? பாதியில் நின்று ஒரு கிலோமீட்டர் ஸ்கூட்டியை உருட்டியிருக்கிறேன்” கைகளை அவன் முகத்திற்கு நேராக வீசி கத்தினாள்.

“படித்தவள்தானே நீ? பெட்ரோல் இருக்கிறதா என்று பார்க்காமலேயே வண்டியை எடுத்துப் போவாயா?” அஸ்வத்தும் அவளிடம் சண்டை போடுவதற்கு தயாரானான்.

எதிரில் அமர்ந்திருந்தவன் இவர்களை விழி பிதுங்க பார்க்க, அஸ்வத் கொஞ்சம் தர்ம சங்கடத்துடன் விழித்தான். அவன் பார்வை போன திசையில் திரும்பிப் பார்த்த கிருஷ்ணதுளசி “ஆ” என உண்மையிலேயே வாயைப் பிளந்து அதிர்ந்தாள்.

எதிர் சோபாவில் அமர்ந்து இவர்களை விழி பிதுங்க பார்த்திருந்தவன் நிரஞ்சன்.




What’s your Reaction?
+1
35
+1
17
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!