Serial Stories யுகம் யுகமாய்..! 

யுகம் யுகமாய்..! -4

4

விழுந்த சுவடியை எடுத்த திருமுருக பாண்டியன் சஞ்சலமாக உணர்ந்தார். இது என்ன நிமித்தமோ? மனக்கலக்கத்துடன் எழுந்தவரை அவரது செல்ஃபோன் அழைத்தது.

“என்ன வேலப்பன்?’

“ஐயா! வர்ற ஆடி கடைசி வெள்ளி சண்டி ஹோமம் செய்ய உத்தரவு கிடைச்சிடுச்சு.”

“ஏகௌரி அம்மையே! நீ தான் எங்குலம் காக்கணும் ‘

ஒருகணம் நெஞ்சில் கைவைத்து பிரார்த்தித்தவர்.

“அப்ப ஏற்பாடெல்லாம் சரியா செஞ்சிடுங்க ” என்றார்.

“நீங்க வருவீங்களா ஐயா?”

“என் கையில் என்ன இருக்கு?ஆத்தா அழைச்சா வருவேன்.அவ பார்த்துப்பா. நீங்க எதிலும் குறையில்லாம நிறைக்க செய்யுங்க.” என்றவர்

பூஜை இடத்தில் குலதெய்வப் பெட்டியைத் திறந்து அதன் முன் அமர்ந்தார்.

கடந்த இருபது வருடமாக அவர் குலதெய்வத்தை ஒரு சந்தனப் பேழையில் வைத்து போகுமிடமெல்லாம் கையோடு எடுத்துக் கொண்டுதான் அலைகிறார்.ஒவ்வொரு கணமும் அம்மையின் அருட்பார்வை வளையத்துக்குள் அவரையும் பேரன் ப்ருத்வியையும் இருத்திக் கொள்ள வேண்டுமென்பது அவர் எண்ணம்.

அவர் அப்பா சேதுபதியின் நாடி ஜோதிட மையம் பிரசித்தி பெற்றது.எத்தனையோ பேர் பொய்யும் புரட்டும் பேசி பிழைக்கையில் அவருடைய நேர்மையும் வாக்கும் இன்றளவும் பேசப்படுகிறது.  திருமுருகபாண்டியனும் சளைத்தவரில்லை .அப்பாவுக்கு உறுதுணையாக நாடி வாசகனாக அவர் சொல்வதை எழுதுவது விளக்கம் சொல்வது எனப் புகழின் உச்சியில் தான் இருந்தார். அவருடைய மகனுக்குத் தான் அதில் அத்தனை ஈடுபாடில்லை.சரி பேரன் பிறந்ததும் குலத்தொழிலை தொடரலாம் என்றால் அம்மை அதற்கு வழிவகுக்கவில்லை.

சேதுபதி மகனை அழைத்து,

 “இனி இத்தொழிலை நீ தொடர வேண்டாம்.உன் பேரனை கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டியது உன் பொறுப்பு.அவனால் இச்சமூகம் பயனுறப்போகிறது.அவனை நிழல் போல உடனிருந்து வழிநடத்து”

என்றதும் திருமுருகபாண்டியனுக்குச் சற்று மனவருத்தம்தான்.

“அப்ப நீங்க பாடுபட்டு காத்த இந்த மையம்? பொக்கிஷமாக பாதுகாத்த இந்த சுவடிகள்?”

“என் தம்பி பையன் கிட்ட ஒப்படைக்கிறேன் அவன் பார்த்துப் பான்.”

அதற்குமேல் பெற்றவரிடம் பேச முடியாமல் பேசும் தெய்வம் ஏகௌரி அம்மையிடம் ஓடினார்.

அங்கு அவருக்கு கிடைத்த செய்தி வேறு விதமாய் இருந்தது.

அவ்வளவு தான் தேவியின் திருவடிகளை இறுகப் பற்றிக் கொண்டார்.நெஞ்சில் தாயையும் தோளில் பேரனையும் சுமந்துகொண்டு இருபத்தைந்து வருஷமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.ப்ருத்வியும் அவர் மனமறிந்து நடந்து கொண்டான்.இதோ படித்து முன்னேறி அமெரிக்க சிலிக்கன் வேலியில் பேர் சொல்லும் பிரபல்யனாய் இருக்கிறான்.

காலை நேரக் குளியலை முடித்து 

மெலிதாய் சீட்டியடித்தபடி தாத்தாவை தேடிவந்த ப்ருத்வி தாத்தா பூஜையிடத்தில் நிஷ்டையில் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் மீண்டும் அவனறைக்கு நகர்ந்தான்.

“ப்ருத்வி ஏதாவது சொல்லணுமா?”

மனத்தில் எத்தனை கலக்கமும் கவலையும் இருந்தாலும் பேரனின் சிறு அசைவையும் கண்காணிப்பவர் ஆயிற்றே!




ப்ருத்வி அயர்ந்தான்.

“கிரேட் தாத்து! அருகில் போய் அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சியவன் 

“எங்காவது அவுட்டிங் போகலாமா?”

என்றான்.

அவருக்கும் எங்காவது வெளியில் செல்ல வேண்டுமென்றே தோன்றியது.

“ஓ…தாராளமாக!”

தாத்தாவின் அனுமதி கிடைத்ததும் பரவசமானான். 

“எனக்கும் என்னவோ டிஸ்டர்ப்டாக இருக்கு தாத்தா.டூ‌ டேஸ் எங்காவது போய்ட்டு வரலாம்”

என்றவன் மடிக்கணிணியைத் திறந்து தேடலானான்.

‘ஏன் பா நீ மேகமலை போகணுமா?”

தாத்தாவின் கேள்வியில் நிமிர்ந்தவன்

“ஆமாம் தாத்தா.அந்த ஊர் எப்படி? நல்லாயிருக்கு மா?அங்கே என்ன ஃபேமஸ்?”

கேள்விகளை அடுக்க…

“இருப்பா. கொஞ்சநாள் ப்ராஜெக்ட் தானே. அங்கேயே நிரந்தரமாக இருக்கப் போற மாதிரி கேள்வி கேட்குற?”

“சொல்ல முடியாது தாத்தா.அங்கேயே செட்டில் ஆனாலும் ஆச்சரியமில்லை.”

“ஓஹோ! அந்த செந்தமிழச்சியும் கூட வர்றாளோ?”

“ஓஹ்…என் செல்லத் தாத்து.கரெக்டா கண்டுபிடிச்சாச்சே.”

அவன் கைகொட்டி ரகளையாய் சிரிக்க..

திருமுருக பாண்டியன் உள்ளுக்குள் எழுந்த கலவரத்தை மறைத்து

“அரைலூசுக்கே இத்தனை அலப்பறை!”

எனப் பேச்சை மாற்றினார்.

“யார் லூசு?

தாத்து.. இந்த மன்மதனுக்கேற்ற ரதி அவள்.”

“அடேய்! நிஜமாவே பித்து பிடிச்சிடுச்சா?”

“சும்மா தாத்து! .இன்னும் ஐடியா இல்லை.நீங்க பேசிப்பேசி கொண்டு வந்திடாதீங்க.”

பேரனின் கலாட்டாவை ரசித்தாலும்  அவருக்குள் குறுகுறுப்பாய் இருந்தது.

அந்தப் பெண் எப்படி இருப்பாள்?

————————–




அகிலும் சந்தனமும் மணக்க வாசனைத் திரவியங்களின் நறுமணம் எங்கும் சூழ்ந்திருக்க சர்வாலங்கார பூஷிதையாய் நின்றிருக்கும் இளவரசியைப் பார்த்ததும் கண்ணேறு போக திருஷ்டி கழித்தாள் செவிலி கங்கம்மா.

சுற்றிலும் சேடிப்பெண்கள் அவளின் பேரழகை பேசிப்பேசி மாய்ந்து போக..

இளமையின் பூரிப்பில் மதர்த்த உடலும் மூங்கிலன்ன திரண்ட தோளும் நிமிர்ந்த மார்பும் அதன்மேல் அன்னப்பட்சி பதக்கம் வைத்த முத்துஹாரமும் கழுத்தைக் கவ்விப் பிடிக்கும் மரகத கண்டிகையும் அதற்கேற்ற மயிற்குழைகளும்…

“என்னடி யவனா இப்படிப் பார்க்கிறாய்?”

“இன்றென்ன விசேடம் இளவரசியாரே இத்தனை சிறப்பு அலங்காரம்?”

யௌவன காந்தி  கேட்க..

“நாகபஞ்சமியை மறந்துவிட்டாயா பெண்ணே! வர வர உனக்கு எதிலும் கவனம் இல்லை. இளவரசிக்கு சிவிகை தயாராய் இருக்கிறதா என்று பார்.அவரை எச்சரிக்கையாய் அழைத்துப் போய் வா!”

மெலிதாய் உறுமினாள் செவிலி.

“மகாராணியார் தயாராகட்டும் அம்மா.”

“அன்னையும் வருகிறாரா?”

முகம் சுணங்கியது இளவரசிக்கு.

“எபபோதும் அது தானே வழக்கம்.அதுவும் மகாராணியார் நாகபஞ்சமியன்று தேவிக்கு சிறப்பு பூஜையை தன் கைப்பட செய்வாரே”.

அப்படியானால் பூபாலர் குறித்த அருவிப்பாறைக்கு எப்படி போவது?

இளவரசியின் முகக்குறிப்பைப் பார்த்ததும் சிரிப்பாக வந்தது யவனாவுக்கு.அவள் நோக்கப்படி

எல்லாம் செய்துவிட்டு தான் வந்திருந்தாள்.

சூரியக்கதிர்கள் மெல்லிய வைர ஊசியாய் மலைமுகடெங்கும் இறங்கிக்கொண்டிருக்க புலர்ந்தும் புலராத அதிகாலையில் தன் ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் புரண்டபடி பூபாலரைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தாள் குழலி.என்ன ஒரு ஆகிருதி கம்பீரம்.அந்த விரல்கள்!! உடும்புப்பிடி தான்.மெல்ல மலர்ந்து மனதுக்குள் பூத்த காதல் கன்னக்கதுப்பில் சிவந்து நாண வைத்தது. யவனா ஏதுமறியாதவள் மாதிரி எத்தனை தந்திரம் செய்துவிட்டாள்.அவள் செய்த உதவிக்கு முத்து ஹாரமென்ன இந்நாட்டையே தத்தம் செய்யலாம்.நினைத்து நினைத்து மலர்ந்தவளை நோக்கி வேகமாய் வந்து கொண்டிருந்தது அந்த சர்ப்பம். கொடிய விடம் உள்ள ராஜநாகத்தின் அம்சமான அதன் கண்களில் கொடூரம் தெரிந்தது. கொத்திய மறு நிமிடம் ஆள் காலி. மெல்ல ஊர்ந்து அவளை நோக்கி நகர ஆரம்பிக்க, திரும்பியவள் 

‘யவனா’ என அலறினாள்.

சர்ப்பம் சட்டென எழுந்து படமெடுத்து கொஞ்சம் கொஞ்சமாய் விசுவரூபமெடுக்க…

“யவனா! “மீண்டும் கத்தினாள்.

——————————




உடல் தெப்பலாய் நனைந்திருக்க அச்சத்தில் அவளறியாமல் நடுங்கிக் கொண்டிருந்த கைகளை இயல்பாக்க சிரமப்பட்டாள் வர்ஷா.

இதென்ன திரும்பத் திரும்ப திரைப்படம் மாதிரி…

எனக்கு என்னதான் ஆச்சு? புது பிராஜெக்ட்டுக்கு கோடிங் எழுதி எழுதி மூளை குழம்பி விட்டதா?

ஏதோ கனவு என்றாலும் இப்படி தினம் தினம் தொடராகவா வரும்? நிச்சயம் ஆழ்மனக்குழப்பம் தான்.

டாக்டர் லைலா அன்சாரி

ஆமோதித்தார்.சான்பிரான்ஸிஸ்கோ வின் பிரபல மனநோய் நிபுணர்.

“ஏதாவது பழைய நினைவுகள் பொருட்கள் மனிதர்களோடு கனெக்ட் ஆகுதா?”

“நோ டாக்டர்.

நான் தெளிவா இருக்கேனே “

“யெஸ்.‌.அதீத தெளிவு.இதுவும் ஒரு மனநோய் தான்.”

“அப்ப கன்ஃபர்ம்டா?”

அருகில் வந்து தோளைத் தட்டியவர்

“யூ நீட் ரெஸ்ட்.

அட்லீஸ்ட் இரண்டு நாளைக்காவது நல்லா தூங்கி ரெஸ்ட் எடு.

வேறு ஏதாவது இடம் மனிதர் டிஸ்டர்ப் பண்ணுதா?”

ஒருநிமிடம் யோசித்தவளுக்கு ப்ருத்வி முகம் தொந்தரவு செய்தது.

டாக்டர் நமுட்டு சிரிப்போடு

“எனி லவ்?”

என்றார்.

சற்றே முகம் சிவந்து தலையசைத்தாள். 

“நத்திங் டு வொர்ரி..இந்த மெடிஸன் எடுத்துக்க.யூ வில் பி ஆல் ரைட் ..”

நினைவு தெரிந்து அவள் எதற்காகவும் மருத்துவரை நாடியதில்லை. முதல்முறையாக மனநல   மருத்துவரிடம்…

அப்பாவிடம் சொல்லலாமா? சற்று நிதானித்தவளை அழைத்தது மொபைல்.

மாம்..!

“எங்கேடா இருக்க? நீ எதுவும் பேசலையே சர்ப்ரைஸா வீக் எண்ட் வருவேனு எதிர்பார்த்தேன்.”

“ஸாரி மாம். அபார்ட்மென்ட் தேடணுமே.அதான் வரலை.”

“அப்புறம் மாம்..நாம் மேகமலை போயிருக்கோமா”

“இல்லையே.”

“சின்ன வயசில்?”

“இல்லை பேபி.ஏன் டா?”

“எனக்கு வேற ப்ராஜெக்ட் அஸைன் பண்ணியிருக்காங்க.அநேகமா இண்டியா போக வேண்டி வரலாம்.”

“ஹா…ஈஸ் இட்!

எனக்கும் அங்கே வேலை இருக்கு. கிராண்ட் மா வோட பூர்வீக வீடு விக்கணும்..எப்ப போகலாம்?”

“வெயிட் மாம் .சொல்வாங்க..”

“ஓகே பேபி.எனக்கும் டைம் ஆயிடுச்சு.மிஸஸ் துர்கா வீட்ல நாகபஞ்சமி பூஜை.”

“நாகபஞ்சமியா?”

உடலெங்கும் நடுங்க உச்சந்தலையில் ஏதோ செய்தது.தன்னையறியாமல் ஃபோனை கீழே போட்டவள் மயங்கி சரிந்தாள்.

விழித்தபோது முதன்முறையாக மனத்தில் அச்சம் உண்டானது.வேறு ஏதாவது ப்ராப்ளம் இருக்குமோ? ஏதேதோ கனெக்ட் ஆகிறது. மேகமலை க்கு போனதில்லை ஆனால் அது பரிச்சயமானதாய் இருக்கிறது. நாகபஞ்சமியன்று‌ சர்ப்பம் கனவில் வருகிறது. ஸம்திங்க் ராங்!!

மனதில் எச்சரிக்கை மணியடிக்கையில் மீண்டும் ஃபோன் அலறியது..

டாடி!

“மேகமலை பத்தி கேட்டியாமே. பேபி. உங்கம்மா ஒரு ஃபூல். நாம பக்கத்தில் சின்னமனூர் போயிருக்கோம் டா.அப்ப உனக்கு நாலைஞ்சு வயசிருக்கும்.என் கஸின் வீட்டுக்குப் போனோம். அவ பொண்ணு யவனிகா உன்னோட ப்ளேமேட். நீ அங்கேயிருந்து வரவே ப்ரியப்படலை..”

ராஜசேகர் கூறியதைக் கேட்டதும் பெரும்பாரம் இறங்கியது போலிருந்தது.  அப்ப இது ஆழ்மனக்குழப்பம் தான். டாக்டர் சொன்னது போல் எதையும் நினைக்காமல் தூங்கினால் சரியாகிவிடும்.

ஃபோன், லேப் எல்லாவற்றையும் 

ஆஃப் செய்துவிட்டு மெல்லிய  இசையை தவழவிட்டு படுக்கப் போனாள்.

எழுந்ததும் அவளுக்கு வேறொரு பிரச்சினை வரப்போவது தெரியாதே!

( தொடரும்)




What’s your Reaction?
+1
8
+1
8
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!