எனக்கென ஒரு வானம் 

எனக்கென ஒரு வானம்-2

2

மாலை வைசாலி வீட்டிற்கு திரும்ப வரும்போது வாசலில் நின்றிருந்த பெரிய காரை பார்த்த உடனேயே அக்கா என வாய்க்குள் முணுமுணுத்து புன்னகைத்துக் கொண்டாள்.

” அட அக்கா! உனக்கு நம் வீட்டு பக்கம் வருவதற்கெல்லாம் பாதை தெரியுமா?” கிண்டலாக கேட்டபடி உள்ளே நுழைந்த தங்கையை ஹால் சோபாவில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருந்த சுமலதா முறைத்தாள்.

” என்னடி கழுதை! வாய் ரொம்பத்தான் துள்ளுது”வள்ளென்றாள்.

 அந்தி மங்கும் நேரம். இன்னமும் ஹாலில் விளக்குகள் போடப்படாமல் ஒரு மாதிரி அரையிருளில் இருக்க, அந்த அரைகுறை இருட்டிலும் பளிச்சென வெளியே தெரிந்த தன் அக்காவின் நிறத்தையும் உடல் வனப்பையும் ஓரக் கண்ணால் ரசித்தபடி போய் விளக்குகளை எரிய விட்டாள் வைசாலி.

” விளக்கு வைக்கிற நேரம், லைட்டை கூட போட மாட்டாயா?” குரலில் அதிகாரத்தைக் காட்டி அக்காவை வம்புக்கு இழுத்தாள்.

“ஓஹோ உங்கள் வீட்டிற்கு லைக் போட்டு பராமரிக்கத்தான் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என்று நினைத்தாயா?” விருக்கென்று எழுந்து அமர்ந்து சுமலதா போட்ட சண்டையை வைசாலி எதிர்பார்த்தே இருந்தாள். அக்காவின் சுபாவம் இதுதான் என்று தெரிந்தாலும் அந்த ‘உங்கள் வீடு’ என்ற பதம் வைசாலியை உறுத்தவே செய்தது.

 நான்கு வருடங்களுக்கு முன்பு வரை இது உன்னுடைய வீடாகவும்தானே இருந்தது! மனதிற்குள் தோன்றியதை வெளியே கேட்காமல் காத்தாள்.

“அம்மா காபி” கேட்டபடி தன் அருகே சோபாவில் சரிந்த தங்கையை எரிச்சலாக பார்த்தாள் சுமலதா.




” அதென்னடி அம்மாவை வந்ததும் வராததுமாக வேலை ஏவிக்கொண்டு… போய் ஆற்றி குடி”

சொகுசாக காரில் வந்து இறங்கிய நிமிடத்திலிருந்து தாயை அதிகாரம் செய்து கொண்டிருக்கும் தன்னை மறந்து தங்கையை திட்டினாள்.

“சுமா மேடம் வந்ததிலிருந்து அம்மாவிற்கு எவ்வளவு வேலைகள் பார்த்தீர்களோ?” பணிவு போல் கேட்டாள் வைசாலி.

” நான் ஏன்டி இங்கே வேலை பார்க்க வேண்டும்? எனக்கென்ன தலையெழுத்து ? “மீண்டும் தலை நிமிர்ந்து கொண்டவளை  பார்த்து இப்போது வைசாலிக்கு எரிச்சல் வந்தது.

 இந்த நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்தான். அவளுடைய அழகை பார்த்து பெரிய பணக்கார இடத்தில் சம்பந்தம் தேடி வந்தது.  பெரிய கர்வத்துடன் மணம் முடித்து புகுந்த வீட்டிற்கு சென்றவள், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இப்படி பிறந்த வீட்டினரை மட்டம் தட்டுவதையும் அவர்கள் எல்லோருமே தனக்கு ஏவல் செய்வதற்காகவே பிறப்பெடுத்திருக்கின்றனர் என்பது போல் பேசுவதையும் வைசாலியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“இந்தா வைசு உனக்கு நீ கேட்பது போன்றே டபுள் ஸ்ட்ராங் காபி” காபியை இவள் கையில் கொடுத்த தேவகி “உனக்கு இன்னொரு காபி கொண்டு வரவா சுமா?” என்றாள் மூத்த மகளை பார்த்து.

“அதென்ன எப்போது பார்த்தாலும் காபி? எனக்கு கிரீன் டீ போட்டுக் கொண்டு வாருங்கள்” சுமலதா சொல்ல தாய் மகள் இருவருக்குமே தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

ஆரம்பத்திலிருந்தே தங்கையை விட தான் அழகில் படிப்பில் எல்லாவற்றிலும் முதல் என்ற கர்வம் சுமலதாவிற்கு நிறையவே உண்டு. திருமண வாழ்வும் அவர்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய இடத்திலிருந்து அவளுக்கு அமைந்துவிட, சுமலதாவின் கர்வம் பல மடங்கு கூடிவிட்டது. நான் பிறந்ததே மகாராணியாக வாழத்தான்,ஏதோ தெரியாத்தனமாக சிறிது நாட்கள் உங்கள் குடிசையில் இருக்க வேண்டி வந்துவிட்டது என்பது போன்றே எப்போதும் பேசுவாள், நடந்து கொள்வாள்.

 இந்த குணத்திற்கு அப்பா முகுந்தன் முழு ஒத்துழைப்பு கொடுப்பார். அவருக்கு எப்போதுமே தனது மூத்த மகளிடம் ஒருவகை பிரமிப்பு உண்டு. தன்னுடைய மகள்தானா இவ்வளவு அழகாக அறிவாக அமைந்திருக்கிறாள்… அழகில் அப்படியே மனைவியை அச்சடித்தார் போல் வந்த மகள், அறிவிலும் சுறுசுறுப்பிலும் தன்னை கொண்டிருப்பதாக கூறிக் கொள்வார் முகுந்தன் .

இதற்கு எதிர்ப்பதமாக தன்னைப் போன்ற உருவமும் தாயைப் போன்ற அறிவுமாக இரண்டாவது மகள் அமைந்து விட்டதான குறைபாடும் அவரிடம் உண்டு. அப்பாவின் உரமூட்டல்கள் சுமலதாவின் திமிரை மிகவும் அதிகரித்தது. 

தேவகியும் வைசாலியும் அப்பாவையோ சுமலதாவையோ மாற்ற முயற்சிக்கவில்லை. இதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள் கேட்டகிரிக்குள் தள்ளிவிட்டு தங்கள் வேலையை பார்த்து வந்தனர்.




 எப்போதும் பிறந்த வீடு வந்திருக்கும் அக்காவின் பின்னே உபசரித்தபடி நடக்கும் தந்தையை காணாமல் கண்களால் தேடினால் வைசாலி. தாயிடம் கண்களால் கேட்க தேவகி உள் அறையை காட்டினாள். அட அக்கா ஹாலில் உட்கார்ந்திருக்கும் போது அப்பா அறைக்குள்ளா?

” அப்புறம் சொல்லு சுமி, என்ன விசேஷம் உங்கள் வீட்டில்?” வைசாலி சம்பிரதாயமாக கேட்க, சுமலதா படபடத்தாள்.

” விசேஷமா? அது… என்ன… உனக்கு எப்படி… அதெல்லாம் யார் சொன்னது?”

” யாரும் சொல்லவில்லையே, நான் சாதாரணமாக கேட்டேன். எதற்கு இப்படி ஜெர்க் ஆகிறாய் சுமி?”

“இப்படி அழைக்காதே  என்று சொல்லியிருக்கிறேன், அது அவர் வைத்த செல்லப்பெயர்.அவர் மட்டும்தான் கூப்பிட வேண்டும்”

 உன் கணவர் உன்னை இப்படி அழைப்பதற்கு முன்பே நான் அழைத்திருக்கிறேன், மறந்துவிட்டாய் போல… மனதிற்குள் நினைத்துக் கொண்டு தலையாட்டி எழுந்தாள்.

” அம்மா அப்பாவிடம் பேசியுருக்கிறேன். நீ பிறகு அவர்களிடம் கேட்டுக் கொள்” சுமலதா சொல்ல “எதை?” புரியாமல் கேட்டாள்.

” அதுதான் அப்பாவிடம் கேட்டுக் கொள் என்றேனே ” சுமலதா முடித்து விட  வைசாலி தோள்களை குலுக்கி விட்டு… முகம் கழுவி உடைமாற்றி வந்த போது சுமலதா கிளம்ப ஆயத்தமாவது தெரிந்தது.

 இப்போதும் தந்தையை காணாமல் ஆச்சரியமுற்றாள் வைசாலி. சுமலதா தானே தந்தையின் அறைக்குள் போய்,  “யோசித்து சொல்லுங்கள்பா என்றாள்.

 “யோசிக்க ஒன்றும் இல்லை வேண்டாம் என்று சொல்லிவிடு “

உள்ளிருந்தபடியே அப்பா சொல்வதைக் கேட்ட வைசாலிக்கு ஒன்றும் புரியவில்லை. அப்பாவின் எதிர்மறையான பதிலைக் கேட்டு வாடிய முகத்துடன் வரும் அக்காவை எதிர்பார்த்திருக்க மாறாக மலர்ந்திருந்தது சுமலதாவின் முகம்

அம்மாவிடமும் தங்கையிடம் சிக்கனமான ஒரு பையுடன் விடைபெற்று கிளம்பினாள். 

“என்னம்மா விஷயம்?”

ஆவல் தாங்காமல் வைசாலி கேட்க தேவகி பெருமூச்சு விட்டாள். “சுமலதா அவள் புகுந்த வீட்டு பிரதிநிதியாக இங்கே வந்திருக்கிறாள். அவளுடைய கொழுந்தனின் திருமண விபரம் பேச வந்திருக்கிறாள்”

 அம்மா சொல்லவும் வைசாலிக்கு பளிச்சென்று நினைவு வந்துவிட்டது. இன்று ஷோரூமில் சந்தித்த அந்த அறிமுகமானவன் போன்றே தோன்றிய அவன், அக்கா சுமலதாவின் கொழுந்தன். அத்தானின் உடன் பிறந்த தம்பி.

ஏனோ மனம் படபடக்க அம்மாவின் முகத்தை பார்த்தாள். 

“அவருக்கு…அத்தானின் தம்பிக்கு  இரண்டு வருடங்களுக்கு முன்பே திருமணம் ஆகிவிட்டது தானேம்மா?”

 தேவகி மெல்ல தலையசைத்தாள்.”ம்… விவாகரத்தும் ஆகிவிட்டதாம்”

” ஓ “அம்மா சொன்ன செய்தியை ஜீரணிக்க இரண்டு முழு நிமிடங்கள் வைசாலிக்கு தேவைப்பட்டது. 

ஏதோ உறுத்த தேவகியை நிமிர்ந்து பார்த்தாள் “அம்மா” என்றாள் கலங்கிய குரலில்.

 தேவகி மகளின் கன்னத்தை மென்மையாக வருடினாள் “சுமா கொழுந்தனுக்கு உன்னை பெண் கேட்டு வந்திருக்கிறாள்”




What’s your Reaction?
+1
50
+1
23
+1
3
+1
1
+1
3
+1
0
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!