Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-6


படுக்கையை விட்டு எழுந்து வந்து ஜன்னல் அருகே நின்று, கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கிருபை. தெருவில் பிரஞ்சுக்காரர்கள் நடமாட்டமே அதிகமாக இருந்தது. அவ்வப்போது ஆங்காங்கே நம் ஆட்களும் இருந்தனர்.

“ஏன் இன்னும் சிஸ்டர் மேடம் வரலை?…. ஆமா இது எந்த ஊரு?… தூரத்தில் கடலெல்லாம் தெரியுது!… அமெரிக்காவா இருக்குமா?… இல்லையே… இங்கே எல்லோரும் தமிழில் தானே பேசுறாங்க?” திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்ட சிறுமியாய்த் தவித்தாள்.

அப்போது, கீழே நீளமான ஒரு கார் வந்து நிற்க, சிஸ்டர்தான் வந்து விட்டார்கள் என்றெண்ணி ஆசையுடன் எட்டிப் பார்த்தாள். வேறு யாரோ இருவர் இறங்கி அவசர அவசரமாய் ஆஸ்பத்திரிக்குள் வந்தார்கள்.  “ச்சை… வேற யாரோ”

“இன்னிக்கு சிஸ்டர் மேடம் வந்தா பேசக் கூடாது… தெனமும் கண்டிப்பா வந்து என்னைப் பார்த்திட்டுப் போவேன்னு அன்னிக்கு சொன்னாங்க… அதனால இன்னிக்கு வந்ததும் அவங்க கூட காய் விட்டுடணும்” மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டாள் கிருபை.  சற்று நேரத்திற்கு முன் கீழே வந்து நின்ற அந்தக் கார் அங்கிருந்த இரண்டு டாக்டர்களை ஏற்றிக் கொண்டு அவசரமாய் கிளம்ப, அதைத் தொடர்ந்து ஆஸ்பத்திரியின் வெள்ளை நிற வேன்கள் பிரஞ்ன்ச் பேசும் ஆஸ்பத்திரி சிப்பந்திகளை நிரப்பிக் கொண்டு வரிசையாக வெளியேறின.


“ச்சை!” என்று சலித்தவாறே வந்து படுக்கையில் அமர்ந்தாள் கிருபை. “பேசாம சுப்பக்கா கூட அந்தக் காப்பகத்திலேயே இருந்திருக்கலாம்”

அப்போது, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த நர்ஸ், கப்போர்டை திறந்து சில  மாத்திரைகளை எடுத்து கிருபையின் கையில் தர வாங்கிக் கொண்டவள்,  “நர்ஸ் சிஸ்டர்  இன்னும் வரலையா?” கேட்டாள். 

அவளை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே, நீர் நிறைந்த கண்ணாடி டம்ளரை அவளிடம் நீட்டிய நர்ஸ்,  “யாரைக் கேட்கறே?… சிஸ்டர் சகாய மேரியையா?” கேட்டாள்.

“ஆமாம்” என்று தலையாட்டிய கிருபை, இரண்டு மாத்திரைகளை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீரை ஊற்றினாள்.

“உனக்கு விஷயமே தெரியாதா?… நேத்திக்கு நைட் இங்கிருந்து போகும் போது அவங்களோட ரோல்ஸ்ராய்ஸ்  கார் பள்ளத்துல உருண்டு விழுந்து… அவங்க விபத்து நடந்த இடத்திலேயே இறந்துட்டாங்க”

அந்தச் செய்தியை கேட்டதும் புரையேறி, வாயிலிருந்த மாத்திரைகளையும் தண்ணீரையும் அப்படியே துப்பி விட்டுத் திரும்பினாள் கிருபை.  “நீங்க… நீங்க… என்ன சொல்றீங்க?”  கண்களில் “கட… கட”வென்று கண்ணீர் கொட்டியது.




“ஆஸ்பத்திரி ஆளுங்க பாதி பேருக்கு மேல் இப்பதான் வேன்ல போயிருக்காங்க!… அந்த வேன் திரும்பி வந்ததும் மத்தவங்கெல்லாம் போவாங்க!… நானும் அப்போ கிளம்பிடுவேன்… திரும்ப ராத்திரிதான் வருவேன்!… நீ நல்லாத் தூங்கி ஓய்வெடு… என்ன?”

சிஸ்டர் சகாயமேரியின் சாவு  அந்த  நர்சை  எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது  அவளது இயல்பான பேச்சிலும், செய்கையிலுமே தெரிந்தது.

“நான்… நானும்… உங்க கூட வர்றேன்” சன்னமாய்ச் சொன்னாள் கிருபை.

“என்னது?… நீ வர்றியா?… அது சரி… பேஷண்ட்களெல்லாம் வெளிய போகக் கூடாது தெரியுமல்ல?” சொல்லியபடி அறைக் கதவை ஓங்கிச் சாத்தி விட்டுச் சென்றாள் அந்த நர்ஸ்.

அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை பிரவாகமெடுக்க, படுக்கையில் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள் கிருபை. “அம்மா” என்ற வார்த்தைக்கு உருவம் கிடைத்து விட்டதாய் அகமகிழ்ந்து கொண்டிருந்தவள் அரண்டு போனாள். விதியின் கைகளில் இவ்வளவு பயங்கரமான விரல்களா?…. காலனின் பசி தீர்க்க நல்லவர்கள் மட்டுமே பலகாரங்களா?… ஆசிரமத்திலிருந்து தப்பி வந்தது தவறோ?” என்றெல்லாம் நினைக்கத் தொடங்கினாள் கிருபை.  பாவம், ஆசிரமத்தின் அந்தப்புர பயங்கரங்கள் அவள் அறியாதவை அல்லவா?.

மறுநாள் காலை, அறைக்குள் வந்த லேடி டாக்டர், “ஹவ் ஆர் யு மை பேபி?” என்று விசாரித்தபடி அவளைப் பரிசோதித்தார்.

“ஓ.கே.ம்மா!… நீ கம்ப்ளீட்டா க்யூர் ஆயிட்டே” என்றவரை விரக்தியுடன் பார்த்தாள் கிருபை.

“என்னம்மா?… நான் மறுபடியும் உன்னை அந்த ஆதரவற்றோர் காப்பகத்திற்கு அனுப்பி விடுவேன்!னு பயப்படுறியா?” முதுகில் தட்டிக் கொடுத்தபடி கேட்டார் டாக்டர்.

“ஆமாம்” என்று மேலும் கீழும் தலையாட்டினாள் கிருபை.

“கவலைப்படாதே!… நாங்கள் உன்னை அங்கு அனுப்ப மாட்டோம்!…. சர்ச்சுக்கு சொந்தமான பிரெஞ்சு ஸ்கூல் ஒண்ணு மரக்காணத்தில் இருக்கு!… அங்கேயே தங்கிக்க விடுதியும் இருக்குது!… இனி அதுதான் உன்னோட உலகம்!… அங்கு இருக்கிற ஃபாதர்தான் உன்னோட ஃபாதர்!… அங்கு இருக்கிற சிஸ்டர் தான் உன்னோட அம்மா!… தைரியமா போ…” கனிவோடு சொன்னார்.

“நீங்க அடிக்கடி என்னை அங்க வந்து பார்ப்பீர்களா டாக்டர்?” பரிதாபமாய் கேட்டாள்.

“நோ… நோ!… ஒரு குழந்தையை அவங்க கையில் ஒப்படைச்சிட்டா திரும்பவும் நாங்க போய்ப் பார்க்க கூடாது!…  பேசக்கூடாது!… முழுக்க முழுக்க அவங்கதான் பொறுப்பு!…” என்றார் டாக்டர்.

“ம்ஹும்… நான் போகமாட்டேன்…. இங்கியே இருந்துக்கறேன்!” சிணுங்கினாள் கிருபை.


“ஏய்!… டோன்ட் பி ஸில்லி!… இது ஆஸ்பத்திரி… இங்கேயே ரொம்ப நாளைக்கெல்லாம் தங்க முடியாது!.. அங்க அந்த சர்ச் ஸ்கூல்ல இருக்கறவங்கெல்லாம் எங்களை விட நல்லா உன்னைய கவனிச்சுக்குவாங்க!… நல்லா படிக்க வெச்சு… பெரிய ஆளாக்குவாங்க!… என்ன சரியா?” கொஞ்சமாய்க் கோபமும்… நிறைய அன்பும் கலந்த குரலில் சொன்னார் டாக்டர்.

கிருபை பதிலேதும் சொல்லாமல் மௌனம் சாதிக்க,

“சரி”ன்னு சொல்லும்மா?” டாக்டர் அவள் பிடரியை அன்போடு தடவி,  மென்மையான வார்த்தைகளில் கூற, தயக்கத்துடன் தலையாட்டினாள் கிருபை.

****

நான்கு நாட்களுக்குப் பிறகு, மாலை ஆறு மணிவாக்கில் வந்து நின்ற அந்த ஸ்கூல் வேனில் பத்து சிறுவர்களுடன் கிருபையும் ஏற்றப்பட்டாள்.

வேன் மரக்காணம் நோக்கிப் பறந்தது. எதிர்காலத்தைப் பற்றிய கவலை சிறிதும் இன்றி  வேனில் பயணிப்பதுதான் உலகத்திலேயே மிக உயர்ந்தபட்ச சந்தோஷம் என்கிற பாணியில், கலகலப்பாய் பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் பயணித்தது அந்த சிறுவர் கூட்டம்.

கிருபை மட்டும் தனித்து அமர்ந்திருந்தாள். மனதில் பல்வேறு நினைவுகள். பயமுறுத்தும் எண்ணங்கள். கூண்டு போட்ட ராணுவ வேனில் தன்னை அந்த இரண்டு சிப்பாய்களும் புரட்டி எடுத்ததை நினைத்துப் பார்த்தாள். மேனியெங்கும் சிலிர்த்தது. கை கால்கள் நடுங்கின. அடிவயிற்றில் சுரீரென்று அந்த எரிச்சல் தோன்றி மறைந்தது.




கண்களை இறுக மூடித் திறந்து, தலையை வேகமாய்ச் சிலுப்பி, அந்த மோசமான நினைவுகளை அழித்தாள்.  “இந்தப் பசங்களையெல்லாம் யாரும் அந்த மாதிரி செய்ய மாட்டாங்க போலிருக்கு!.. அதான் இத்தனை சந்தோசமா இருக்காங்க!.. பேசாம… நானும் பையனாகவே இருந்திருக்கலாம்” ஏக்கம் தோன்றியது.

****

மணி இரவு 11:45 

கிட்டத்தட்ட எல்லா சிறுவர்களும் தூங்கி வழிய கிருபை மட்டும் கொட்டக் கொட்ட விழித்திருந்தாள்.  அந்தப் புது இடம் அவளுக்குத் தூக்கத்தைத் தரவில்லை. அப்போதுதான் எந்த எண்ணம் அவளுக்குள் தோன்றியது.  ஏன்?…. அப்படிச் செய்தால் என்ன?… நானும் பையன் ஆயிட்டா என்ன?” தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

“அது செரி… ஒரு நாளைக்கு இல்லாட்டி ஒரு நாள்… எப்படியும் மாட்டிக்குவே!” மனதின் ஆழத்திலிருந்து ஒரு குரல் வந்தது.

“அதெப்படி?… நாம ரொம்ப ஜாக்கிரதையா இருந்துக்கிட்டா யாருக்குத் தெரியப் போகுது?” இது மனதின் இன்னொரு புறத்திலிருந்து வந்த பதில் குரல்.

 நீண்ட குழப்பத்திற்குப் பிறகு ஒரு முடிவினைத் தீர்க்கமாய் எடுத்தவள், மெல்ல எழுந்து, தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் தோல் பையை எடுத்து, அதிலிருந்து மேல் சட்டை ஒன்றையும்,  கால் சட்டை ஒன்றையும் வெளியில் எடுத்தாள்.

பக்கத்து அறைக்குள் நுழைந்து, தான் அணிந்திருந்த பாவாடை சட்டையைக் களைந்து விட்டு, அந்த டவுசர் மற்றும் சட்டையை அணிந்து கொண்டு வந்தாள்.

சற்று முன் வரை தான் படுத்திருந்த இடத்தை விட்டு, பசங்கள் படுத்திருந்த இடத்திற்கு வந்து, அவர்களோடு படுத்துக் கொண்டாள்.




What’s your Reaction?
+1
8
+1
11
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!