gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-44 (திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்)

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள ஊர் ராஜேந்திரபட்டினம் இவ்வூர் அன்று திருஎருக்கத்தம்புலியூர் என அழைக்கப்பட்டது. இவ்வூரில் பாணர் மரபில் பிறந்தவர் திருநீலகண்ட யாழ்ப்பாணர்.

சங்க இலக்கியங்கள் பலவகையான பாணர் சமுதாயங்களை காட்டுகின்றன. சங்ககாலத்தில் நாடோடிப்பாடகர்களாகவும், பல்வேறு கலைஞர்களாகவும் இருந்துள்ளனர்.




048 திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் / Thiruneelakanda yazhpanar nayanar - YouTube

பாணர்கள் ஊர்ஊராய் சென்று பாடிப் பிழைப்பவர்கள் என்பதனை பொருநராற்றுப்படை நேரடியாகவே சுட்டுகிறது. சங்கநூல்களில் ஆற்றுப்படை நூல்களே அலைகுடி(நாடோடி)கள் மற்றும் நிலைகுடிகளைப்பற்றி விரிவாய் கூறுகிறது! வையாற்றின் நீர்த்துறைகள் தோறும் பாணர் அமர இருக்கைகள் இருந்துள்ளது! இதனை பரிபாடலும், மதுரைக்காஞ்சியும் கூறுகிறது! இக்குழுவினர் சேர, சோழ, பாண்டியரை விட குறுநிலமரபான வேளிர்களையும் நிலக்கிழார்களையுமே நாடி வாழ்ந்துள்ளனர். தங்கள் பயணங்களில் கானகர், குறவர், கொடிச்சியர், எயினர் போன்றவர்களிடம் உண்டு, உறவாடி வாழ்ந்துள்ளனர். இன்றைய நாடோடிக் குழுக்கள் போல் தம் பணியை சுருக்காமல் வேளாண்மை, தூதுசெல்லுதல், நெசவு போன்ற பல பணிகளை செய்துள்ளனர். இவர்களின் வாய்மொழியினாலேயே பல எளிய கதாநாயகர்களின் மக்களிடையே பரவின. இன்றும் தென்தமிழகத்தில் அழகர் மாட்டுக்காரர்கள் வள்ளி, தெய்வானை கதைகளையும், வடதமிழகத்தில் தேசிங்குராஜன் கதை, காத்தவராயன், முத்துப்பட்டன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற சிறுதெய்வங்களை மக்களிடையே கொண்டு சேர்க்கும் கூத்துக்கலைஞர்களே அன்றைய பாணர்கள்.




திருஎருக்கத்தம்புலியூரில் நிலைபெற்று வாழ்ந்து வந்த திருநீலகண்ட யாழ்ப்பாணர் சிவபெருமானின் பெருமைகளை தன் யாழின் இசையால் பரப்பினார், வளம்மிக்க சோழநாடு எங்கும் சென்று அனைத்து கோவில்களிலும் தம் யாழிசையால் ஈசனின் பெருமைகளை பாடினார். திருநீலகண்டரின் இசையால் மனம் பறிகொடுத்த மதுரையம்பதி இறைவன் சொக்கன் தம் பக்தர் கனவுகளில் தோன்றி திருநீலகண்டரை அழைத்துவருமாறு பணிக்க அவரும் தன் மனைவி மதங்கசூளாமணியாருடன் மதுரை வந்து இறைவரது விருப்பப்படி பாணர் திருவாலவாய் திருக்கோயிலுள்ள இறைவன் திருமுன் புகுந்திருந்து அவரது மெய்ப்புகழை யாழிலிட்டு இசைத்துப் போற்றினார்.

தரையினில் குளிர்ச்சியினால் சந்த யாழ் நரம்பு தளர்ந்து நெகிழும், எனவே பாணர்க்குப் பலகை இடும்படி இறைவர் அசரீரி வாக்கினால் அருள் செய்தார். அவ்வாறே தொண்டர்கள் பாணருக்குப் பொற்பலகை இட்டனர். பாணரும் பொற்பலகையில் ஏறியமர்ந்து உமையொருபாகர் வண்ணங்களை உலகெலாம் அறிய இசைத்துப் போற்றினார்.அதன்பின் தேவர்கள் போற்றும்படி பல சிவத்தலங்களை அடைந்து தியாகராஜப் பெருமானை தரிசிக்க எண்ணி ஆரூர் வந்தடைந்தார்.




மெய்மறந்து சிவனின் புகழை தம் யாழின் இசையால் பாடினார்.பாணரது இன்னிசைக்கு உவந்து ஆரூர் அண்ணலார், பாணர் உட்சென்று வழிபட, மூடியிருந்த  வடதிசையில் வேறொரு வாயிலை உண்டுபண்ணினார். பாணர் அவ்வழியே புகுந்து வணங்கினார்.

மூலஸ்தானமாகிய கருவறையில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி சிலகாலம் அங்கேயே தங்கியிருந்து அதன்பின் திருவாரூரை விட்டு நீங்கி பலதிகளை சென்று வணங்கினார்.

அதன்பின் ஆளுடைய பிள்ளையாரான திருஞானசம்பந்தரை வணங்க விரும்பி சீகாழிப்பதியை அடைந்தார். திருஞானசம்பந்தப் பிள்ளையாருடன் சிவபெருமான் வீற்றிருக்கும் பல திருத்தலங்களை அடைந்து வணங்கி இன்னிசைத் திருத்தொண்டு புரிந்து வந்த யாழ்ப்பாணர், தமது மனைவி மதங்கசூளாமணியாருடன் ஆளுடைய பிள்ளையாரின் திருமணத்தைக் கண்டு அவருடனே கூடிய  அடியார் திருக்கூட்டத்துடன்  பெருஞ்சோதியினுள் புகுந்து ஈறிலாப் பேரின்ப வாழ்வு பெற்று,

இறைவன் திருவடிநிழலை அடைந்தார்.இவரது பூசை வைகாசி மூலம் நாளன்று நடக்கின்றது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!