Sprituality மனமென்னும் ஊஞ்சலேறி

மனமென்னும் ஊஞ்சலேறி-15

15

“அத்தை அவருக்கு சாப்பாட்டில் எது மிகவும் பிடிக்கும்? அக்கறையாக கேட்ட மருமகளை ஆச்சரியமாக பார்த்தாள் சுந்தராம்பாள்.

 படிப்பு என்று காலையில் செல்பவள் மாலைதான் வீடு திரும்புவாள். உடன் புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க எழுத என உட்கார்ந்து விடுவாள்.தூக்கம் கண்ணை சொக்க பத்து மணிக்கெல்லாம் படுத்து விடுவாள்.

 மகன் வீட்டிற்கு வருவதோ பதினோரு மணிக்கு மேல். இவர்கள் இருவர் வாழ்க்கை முறையில் குழம்பி போய் இருந்த சுந்தராம்பாள் தாரணி அக்கறையாய் கேட்கவும் முகம் மலர்ந்தாள்.அவள் படிப்பு முடியும் வரை குழந்தை அது இதுவென எதுவும் பேசக் கூடாதென மகன் உத்தரவே போட்டிருக்க,கஷ்டப்பட்டு வாயை மூடிக் கொண்டிருந்தாள்.இன்று அவளுக்கு மிகுந்த சந்தோசம்.

“பொண்டாட்டி கையால் என்ன சமைச்சு போட்டாலும் புருஷனுக்கு அமிர்தம்தான் புள்ள. உனக்கு எது நன்றாக சமைக்க வரும்?”

” வந்து அத்தை… நான் அதிகம் சமைத்ததில்லை. பெரியம்மாதான் சமையல் கவனித்துக் கொள்வார்கள். காபி டீ போடுவது அப்புறம் சாதம் வடிப்பது இது போன்ற சின்ன சின்ன வேலைகள்தான் தெரியும். ஆனால் நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்களானால் படித்துக் கொள்வேன் அத்தை”

 இப்போது சுந்தராம்பாளுக்கே, பாவம் படிக்கும் பெண் அவளுக்கு எதற்கு இந்த அடுப்படி வேலை என்று தோன்றிவிட்டது.

“பரவாயில்லை விடு புள்ள, உன்னுடைய படிப்பு முடிந்ததும் சமைக்க கற்றுக் கொள்ளலாம்”

“சரிதானத்தை ,ஆனால் இப்பொழுது சிம்பிளாக ஏதாவது அவருக்கு நானே செய்து கொடுக்க நினைக்கிறேன்” 

“அவனே அழகாக சமைப்பான். அவனுக்கு நாம் என்னம்மா சமைக்க முடியும்?”

சுந்தராம்பாள் கேட்டதன் நியாயம் புரிய தாரிணியினுள் மெல்லிய சிணுக்கம்.மிட்டாய் பறிக்கப்பட்ட குழந்தையாய் நின்றிருந்தவளை பார்த்த சுந்தராம்பாளுக்கு சிரிப்பு வந்தது.

“பலகாரம் சமையலெல்லாம் வேண்டாம் புள்ள,அவன் காப்பி விரும்பி குடிப்பான். சூப்பரா ஒரு காப்பி போட்டு கொடுத்துடு” 

தாரணிக்கு சப்பென்றானது. மாமியாரின் துணையுடன் பிரம்மாண்டமாக ஒரு விருந்து தயாரிக்க நினைத்திருந்தவள், இப்போது வெறும் காபியா? ஏன் கூடாது என்றது அவள் மனது. வெறும் காப்பியையே வித்தியாசமாக செய்தால்… போனில் வீடியோ பார்த்தவள் உற்சாகத்துடன் செய்முறையில் இறங்கினாள்.

 சுந்தராம்பாள் அருகில் இருந்து பார்த்து ஆச்சரியப்பட்டாள். ஒரு காபியில் இவ்வளவு வேலைகளா? 

சீனியையும் இன்ஸ்டன்ட் காப்பி பொடியையும் ஒரு கப்பில் போட்டு பத்து நிமிடங்கள் நன்றாக அடித்து கிரீமாக்கியவள் அதன் மேல் சுடு பாலை ஊற்றி, க்ரீம் மேலே மிதந்து வர கோகோ பவுடரால் மேற்புறத்தை டஸ்ட் செய்து, மீதம் இருந்த கிரீமால்  மூன்று புள்ளிகள் வைத்து மூன்றையும் சேர்த்து ஒரு கோடு இழுக்க, அழகாக மூன்று இதயங்கள் உண்டானது.

” அட “சுந்தராம்பாள் ஆச்சரியப்பட, உற்சாகத்துடன் காபியை எடுத்துப் போய், மாலை ஹோட்டலுக்கு கிளம்பிக் கொண்டிருந்த  பூரணசந்திரனிடம் கொடுத்தாள்.




“ஏய்” விழி விரித்து ஆச்சரியமாய் பார்த்தவன், ஆவலுடன் காபியை வாங்கி பருகினான், விழி மூடி தலை உயர்த்தி அவன் ரசித்து மிடறு விழுங்க தாரணியின் மனம் உற்சாகத்தில் துள்ளியது.

“ரொம்ப நேரமாக கையால் அடித்து கஷ்டப்பட்டு செய்தா சாமி” சுந்தராம்பாள் உள்ளிருந்து சொல்ல, “ஏன் இவ்வளவு வேலையை இழுத்துக் கொள்கிறாய” என்றான் கண்டிப்புடன்.

“தேங்க்ஸ்” என்றாள் தாரணி. “நீங்கள் சொன்னபடி பேசினேன். இப்போது எனக்கும் புவனாவிற்கும் எல்லாம் சரியாகி விட்டது. எனது நன்றியை சொல்வதற்காகத்தான் இந்த சாக்லேட் இதயம்” என்று காப்பி கப்பை காட்டிவிட்டு கைகளை இதய வடிவில் காட்டினாள்.

கண்களை அவளை விட்டு நகர்த்தாமல் பார்த்தபடியே சொட்டு காபி கூட கப்பில் இல்லாமல் குடித்து முடித்தவன், தனது பையைத் திறந்து அந்த வாழை இலைச்சுருளை வெளியே எடுத்து அவளிடம் கொடுத்தான். “ஹோட்டலில் சாமி படங்களுக்கு வாங்கினேன். நீ வைத்துக்கொள்”

கெட்டியாய் நெருக்கமாய் கட்டிய மல்லிகை பந்து இலைச் சுருளுக்குள் மணத்தது. தாரணி ஹேர்பின்களைத் தேட, “முடியை எடுத்து,நீயே வைத்து விடு சாமி” சொல்லிவிட்டு பின்பக்கம் இருந்த தறிக்கூடத்திற்கு நடந்தாள் சுந்தராம்பாள்.

அது எப்படி வைப்பது தாரணி குழம்ப அவள் தோள் தொட்டு திருப்பியவன் பின்னலில் அடி முடி எடுத்து மல்லிகைப்பந்தை சொருகினான். குனிந்து அவள் காதிற்குள் “நைட் நான் வருவதற்குள் தூங்கிவிடு” என்று விட்டு வேகமாக கிளம்பி போய் விட்டான்.

தன்னையறியாமல் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்து விட்டாள் தாரணி.

மறுநாள் கல்லூரியில் புவனாவை பார்த்தபோது புதிதாய் ஒரு பாசம் பெருகியது அவளுள். “ரொம்ப தேங்க்ஸ்டி”

” இப்போ எதுக்குடி தேங்க்ஸ்?”

” எதுக்கோ ?சொல்லனும் போல இருந்தது”

கார்த்திகை தீபமாய் மின்னும் தோழியின் முகத்தை கூர்ந்து பார்த்தாள் புவனா “என்னடி அண்ணன் கூட ஒரே ரொமான்ஸா?”

“அண்ணனா? அது யாரடி?”

“பக்கத்தில் ஹோட்டல் வைத்திருக்கிறாரில்ல, அந்த கருப்பண்ணசாமி எனக்கு உடன்பிறக்காத அண்ணன்”

“அடிப்பாவி என்னடி இப்படி தலைகீழாக மாறிவிட்டாய்?”

“கல்யாணம் முடிகிற வரைக்கும் ஓகே தாண்டி, இன்னொரு பெண்ணை கல்யாணம் முடிச்சவங்க, ஆட்டோமேட்டிக்கா நமக்கு அண்ணன் ஆயிடுறாங்க. அதனால அந்த கருப்பண்ணசாமியை என் அண்ணனோட லிஸ்ட்ல சேர்த்து ரெண்டு மாசம் ஆச்சு. இப்போ இந்த ரோட்டு முனையில ஒரு புது ஐஸ்கிரீம் ஷாப் ஓபன் பண்ணியிருக்காங்கல்ல, அந்த ப்பிரான்சிஸ் ( franchise) எடுத்திருக்கிற ஆளு, நம்மளோட அடுத்த லிஸ்ட்க்கு வராரு”

கையில் வைத்திருந்த நோட்டால் பொத்து பொத்தென்று புவனாவின் முதுகில் அடித்தாள் “அடிப்பாவி தூய்மையான காதல் அது இதுன்னு எப்படி எல்லாம் சலம்பிக்கிட்டு திரிந்தாய்…”

“அதற்காக தூக்கு மாட்டி தொங்குவேனென்று நினைத்தாயா? அடிப்போடி,ஒன்று போனால் இன்னொன்று! எனக்குன்னு ஒருத்தன் வந்து வாய்க்கிற வரை நான் இப்படித்தான்…”

“எப்படியோ போய் தொலை எருமை! இனிமேல் என் மண்டையை உருட்டுவதை நிப்பாட்டிவிடு”

“அல்ரெடி கல்யாணமான ஆன்ட்டிங்க கூடெல்லாம் இனிமே நான் பிரண்ட்ஷிப் வச்சிருக்கறதா இல்ல.அவுங்க வேலைக்காக மாட்டாங்க. புதுசா வேறு ஆளைத்தான் பிடிக்கனும்” சொல்லிவிட்டு இன்னமும் நான்கு அடிகளை தோழியிடமிருந்து பெற்றுக் கொண்டாள் புவனா.

அடித்துக் கொண்டிருந்த தாரணியின் மனமோ ஒருவகை நிறைவில் ததும்பியது.

——–

அஸ்வின் மீண்டும் மீண்டும் அழைக்க தவிர்க்க வழியின்றி இருவரும் திவ்யா வீட்டு விருந்திற்காக சென்னை சென்றனர். டைல்ஸும், கிரானைட்டும் குவாட்ஸும், கண்ணாடியுமாக பளபளத்த தங்கள் த்ரீ பெட்ரூம் அப்பார்ட்மெண்ட்டை பெருமிதமாக சுற்றிக் காட்டினாள் திவ்யா.

பார்த்தாயா என் வீட்டை என்று சொல்லாமல் சொன்ன அவள் பாவனைகளுக்கு தாரணி இரண்டே வார்த்தைகளில் பதில் சொன்னாள்.




“நல்ல சுத்தம்! பளபளப்பு! அப்படியே மியூசியம் மாதிரி இருக்கிறது”

இதை பாராட்டாக எடுத்துக் கொள்வதா? தூற்றலாகவா?” திவ்யா புரியாமல் விழித்து நிற்க 

பூரணசந்திரனும் அஸ்வினும் சாப்பிட அமர்ந்திருந்தனர்.

“பிரைட்ரைஸில் சிக்கனையோ பன்னீரையோ வேகவைத்து போடுவதை விட, பொறித்துப் போட்டீர்களானால் இன்னமும் நன்றாக இருக்கும் ஆன்ட்டி. பிரியாணிக்கு பாஸ்மதி ரைசைவிட சீரகசம்பா யூஸ் பண்ணுங்க. அரிசியை இரண்டு ஸ்பூன் நெய் விட்டு வறுத்து வைத்துக் கொண்டீர்களானால் பிரியாணி உதிரி உதிரியாக வரும்”

 சாப்பிடும் போது நிறைய சமையல் குறிப்புகளை பூரணசந்திரன் சொல்ல திவ்யாவின் மாமியார் அவற்றை நோட்டிலேயே எழுதிக் கொள்ள ஆரம்பித்தார்.

எங்களுடைய நாகரீக உணவு வகைகளை பார்த்தீர்களா? என்று சாப்பிடும் போது பேச திட்டமிட்டு இருந்த திவ்யா விழித்து நின்றாள். அவளையும் தாண்டி அஸ்வினும் அவன் குடும்பத்தினரும் தாரணியுடனும் பூரணசந்திரனுடனும் ஒட்டுதலாக பழகத் தொடங்க தன் வீட்டிலேயே தன்னை தனிமையாக உணர்ந்தாள் திவ்யா.

இருவருக்குமான உடைகள் இனிப்புகள் பழங்கள் கொடுத்து சந்தோசமாக அவர்களை வழியனுப்பி வைத்தனர் அஸ்வின் குடும்பத்தினர்.

லிப்டில் நெருக்கிய கூட்டத்தினால் கணவனின் தோள் உரசியபடி நின்றவள் “அதெப்படி திவ்யா வீட்டினர் எல்லோரையுமே உங்களுக்கு தலையாட்ட வைத்தீர்கள்?” என்றாள்.

” அங்கே உன் அக்காவை பேசவிடாமல் செய்தால் பிரச்சனை வராது என்று தோன்றியது. அவர்களுக்கு பிடிக்காத சேப்டர் சமையல் என்று கண்டுபிடித்தேன். அதனால் அதைப் பற்றியே பேசி அவர்கள் வாயை மூட வைத்து விட்டேன்”

 கண்கள் பளிச்சிட அவனைப் பார்த்த தாரணி ” இப்போது இந்த விருந்து நல்லபடியாக முடிந்ததற்கு நன்றி சொல்வது என்னுடைய முறையா?” என்றாள்.




What’s your Reaction?
+1
52
+1
21
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!