நீ காற்று நான் மரம்

நீ காற்று நான் மரம்-1

1

 

” விபூதி , குங்குமம் நெத்தியிலே வெச்சுண்டு கிளம்பு.”

“தேர்வில் நல்ல மார்க் வாங்குவே”

“இப்போ மணியாச்சு கிளம்பு..”

“இப்போவே போனா தான் சரியா இருக்கும்.”

கைப் பிடித்து தம்பி முரளியை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு செல்லத் தயாரானான் மோகன்.

அம்மா ருக்மணி வீட்டு எஜமானி.

அப்பா கோவிந்தன் அங்கே உள்ள மிகப்பெரிய துணிக்கடையில் ஒரு இருபது வருடமாக முதலாளிக்கு எல்லாமும். காலை 8மணி முதல் இரவு கடை அடைக்கும் 11 மணி வரை , கணக்கு வழக்கு எல்லாமும்.

அவர் மேலே நம்பிக்கை வைப்போர்க்கு இந்த கோவிந்தன் தெய்வம் தான்.

முதலாளி முழு நம்பிக்கை வைத்ததின் பலன் இப்போது மூன்று கடைகள் வேறு வேறு ஊரில் வைத்து விட்டார்.

சென்னை பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஊரில் இருக்கும்  ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் முரளியும் ,மோகனும் முறையே 7ஆம் வகுப்பும்,+ 1 ம் படிக்கின்றனர்.

4  வயது சிறியவன் என்பதால் முரளியை ஆசை ஆசையாக வளர்ப்பான் அண்ணன் மோகன் .

அவனுக்கு சிறிய வயதில் பாட்டிலில் பால் கொடுப்பதில் இருந்து ஆரம்பித்தவன் , கை பிடித்து ஒவ்வொரு முறை அவன் விழும் போதும் தூக்கி விடுவான். முரளி சந்தோஷப் படும் போது இவனும் சந்தோஷப் படுவான்.

இன்று இருவருக்கும் பள்ளியில் இறுதித் தேர்வு..இறுதி நாள்.

” அண்ணா , இந்த கணக்கு தான் வர மாட்டேங்குது…

உனக்கு மட்டும் எப்படி வரதுண்ணா??”

“எதையும் செய்யும் போது அதன் மேலே ஒரு பிடிப்பு வேண்டும் என பழைய கணக்கு வாத்தியார் சொல்லுவார்..” அப்படி இருந்தா எல்லாமும் வரும்டா உனக்கும்”

“பிடிப்புனா என்னண்ணா??”

“உனக்கு அம்மா செய்யற சமையல்ல எது பிடிக்கும்?.”

“அம்மா தான் எல்லாம் நல்லா செய்வாளே.. எனக்கு எல்லாம் பிடிக்குமே”

“எது ரொம்ப பிடிக்கும்.”

அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே ,

“அம்மாவின் ரிப்பன் பக்கோடா ரொம்ப பிடிக்கும் தானே உனக்கு ?”.




“ஆமாண்ணா, உனக்கு எப்படி தெரியும்? “

ஒவ்வொரு முறை ரிப்பன் பக்கோடா செய்யும் போதும் ருக்மணி முரளிக்கு பிடிக்கும் என தனி டப்பாவில் போட்டு வைப்பதை மோகன் கவனித்திருக்கிறானே.

“அந்த பக்கோடா ஏன் பிடிக்கிறது உனக்கு..?” “அம்மா உனக்கு ரிப்பன் பக்கோடா பிடிக்கும் என சொல்லி சொல்லி உன் மனசு அப்படிக் கேக்க ஆரம்பிச்சுடுத்து.”

..”அதே போல நாமே சிலவற்றை பிடிப்பது போல கொஞ்ச நாள் நடந்துண்டா, அதுக்கும் நம்மை பிடிக்க ஆரம்பிச்சுடும். “

“ஆரம்பத்தில் ஸ்கூலுக்கு வர நீ எப்படி அடம் பிடிப்பே..இப்போ எப்படி ரெடியா கிளம்பி வரே..? அதே போலத்தான்..”

இந்த மாதிரி பொருளில் ஒரு பேச்சாளர் ஒருசொற்பொழிவில் சொல்ல கேட்டது..

அட.. இது உண்மையா என பத்தாவது வகுப்பில் படிக்கும் போது அதனை முயன்று பார்த்தான்.

கணிதத்திலும், அறிவியலிலும் 100,100 மதிப்பெண் எடுத்தான். மற்ற பாடங்கள் மேலே ஏனோ பிடிப்பு வரவில்லை, அல்லது பிடித்தம் செலுத்தவில்லை.இதை இப்போ தம்பிக்கு சொல்கிறான்.

முரளிக்கு எல்லாம் தெரிந்து கொள்ள ஆசை..

மோகனுக்கும் தம்பி கேட்பதை தனக்குத் தெரிந்தவரை சொல்லித்தர ஆசை.

பள்ளிப் படிப்பு நேரம் தவிர

மற்ற நேரத்தில பொது நூலகத்தில் ஏதாவது படிக்கும் பழக்கம் மோகனுக்கு.

பக்கத்தில் இருக்கும் பார்க்கில் விளையாடுவான் முரளி.

தண்ணீர் குடிக்க மட்டும் நூலகம் வருவான் முரளி.

தினமும் ஒரு அரை மணி இப்படி வெளியே போய் வருவார்கள்.

அண்ணாவிடம் எந்த கேள்வி கேட்டாலும் பதில் கிடைக்கும் என நம்பிக்கை முரளிக்கு.

மோகனும் தெரியாதவற்றை, நூலகக் காப்பாளரின் துணையுடன் நெட்டில் தேடி பதில் சொல்வான்.

தினமும் காலை மாலை நேரம் ஒரு இருபது நிமிட நடையின் போது இப்படி பேசிக்கொண்டு செல்வதில் இருவருக்கும் ஒரு சுகானுபவம்.

“எதுக்குண்ணா விபூதிக்கு மேலே குங்குமம் வெக்கணும்.ஏன் குங்குமத்துக்கு மேலே விபூதி வெச்சுக்கறதில்லே.?”




” நீ என்ன கலர் ?”

” நான் கொஞ்சம் பொன்னிற கோதுமை கலர்னு அம்மா சொல்லுவா ..அவள் போலே..,”

“நான் என்ன கலர்..?”

“நீ அப்பாவை அப்படியே உறிச்சு வெச்சுருக்கியாம் மாநிறமா”, “

அம்மா சொல்லுவாளே உன்னைத் திட்டும் போது” நு சிரிக்கிறான் .

“இது போல எல்லாருடைய முகத்தில் பளிச்சுனு தெரிய ஒரு பிரைமர் கோட் போல விபூதி..அதான்.

காண்டிராஸ்டா இருந்தா பளிச்சுனு தெரியும் போல..அதான் அப்படி இருக்கும்..”

தனக்கு அந்த நேரத்தில் தோன்றியவற்றைச் சொன்னான்.

“ஓ.அது தான் அப்பா எப்பவும் வெள்ளை சட்டை போடறாரா??”

“இருக்கும்டா”

முதலாளி சில சமயம் சம்பளத்துக்கு பதில் சட்டை கொடுக்கும் போது

வெள்ளை கலரை எடுத்து கொள்வார்.

வேட்டி, அனைத்து பேண்டுக்கும் போடலாமே..என அப்பா இவனிடம் சொல்வார்.

“காண்டிராஸ்ட் நா என்னண்ணா??”

எதிர் எதிர் திசை மாதிரி..

காந்தம் பத்தி படிச்சுருக்கியா??

இன்னிக்கு தேர்வில் பாடம் அதானே உனக்கு..

அதில் எதிர் எதிர் துருவம் ஈர்க்கும், ஒரே துருவம் விலகும் என படிச்சுருக்கியே ..”

“அது மாதிரி தான்”




“பரவாயில்லை ,

ஒரு கேள்விக்கு பதில் ஞாபகப் படுத்திட்டயே..

தேங்க்ஸ் ணா”

அதற்குள் பள்ளி வந்து விட்டது..

இறுதித் தேர்வு நடந்து முடிந்தது அன்றுடன்.

“தம்பியைக் காணோமே”

என மோகன் தேடிக் கொண்டிருக்க முரளி வந்தான். அவன், மற்றும் நண்பர்களின்

சீருடைகள் முழுக்க இங்க் கால் கோலம் போடப் பட்டிருந்தது …கொண்டாட்டங்கள்..கடைசி நாளில் ..

எல்லாருடைய முகத்திலும் சந்தோஷம்,நிம்மதி..

ஆல் பாஸ் தானே.

நீ காலையில் சொன்ன காந்தக் கேள்வி வந்தது ..சரியா எழுதிட்டேன்.

“எதிர் எதிர் துருவம்

ஈர்க்குமின்னு சொன்னியே “……

“நீயும் நானும் மாதிரியாண்ணா?”

மோகனுக்கு இப்போது வாய் பேசவில்லை.

தம்பி இப்போது புரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டான் ..இனி அவனுக்கு நல்லது கெட்டது சொல்லிக் கொடுப்பது சுலபம் என எண்ணி கொண்டிருந்த வேளையில் …..

முரளி கேட்டான்……

“லவ் பண்றது நா என்னண்ணா??”




What’s your Reaction?
+1
12
+1
17
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!