Serial Stories ஜில்லுன்னு ஒரு நெருப்பு

ஜில்லுன்னு ஒரு நெருப்பு-1

1

2015ம் வருடம் ஜனவரி மாதம்.

ஞாயிற்றுக் கிழமை.  

குளிர் இன்னும் முற்றிலும் விலகாத அதிகாலை ஐந்து மணி.

வழக்கம் போல் சீக்கிரத்திலேயே எழுந்து யோகாசனத்தில் ஈடுபட்டிருந்தார் டாக்டர் கிருபாகரன்.  எழுபத்தியெட்டு வயதிலும் அந்த இருபத்தியெட்டு வயது சுறுசுறுப்பு இன்னமும் அவரிடம் ஒட்டிக் கொண்டிருப்பதற்குக் காரணம்… அந்த யோகாசனப் பயிற்சிதான்.  தன்னை ஒரு மிலிட்டரி மேனாய் நினைத்துக் கொண்டு தனக்குத்தானே சட்ட திட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு, அதிலிருந்து சற்றும் வழுவாமல் வாழ்ந்து வரும் நாட்டுப்பற்றாளர்.

சற்றுத் தள்ளி ஒரு ஸ்டூல் மேல் வைக்கப்பட்டிருந்த அவரது மொபைல் போன் நாதஸ்வர இசையை ரிங் டோனாக ஒலிக்கச் செய்தது.

உட்கார்ந்தபடி யோகாசனம் செய்து கொண்டிருந்தவர் சட்டென எழுந்து, பக்கத்திலிருந்த துண்டை எடுத்து நெஞ்சுப் பகுதியைத் துடைத்துக் கொண்டே வந்து மொபைலை எடுத்துப் பார்த்தார். 

அவரது பி.ஏ. வாசுகி அழைத்திருந்தாள். 

“யெஸ்” என்றார்.

“குட் மார்னிங் டாக்டர்”

“வெரி கு மார்னிங்!… என்ன ஆச்சரியம்?… இன்னிக்கு இவ்வளவு சீக்கிரத்திலேயே டியூட்டிக்கு வந்திட்டே?… நாட்டுல மழை வந்து ரொம்ப நாளாச்சு… அதனால மழை வர ஏற்பாடா?” கிண்டலடித்தார்.

“டாக்டர்… இன்னிக்கு எட்டரை மணிக்கு கார்ப்பரேஷன் ஆடிட்டோரியத்துல உங்களுக்கு பாராட்டு விழா டாக்டர்… அதை உங்களுக்கு ஞாபகமூட்டத்தான் இப்பக் கால் பண்ணினேன்” என்றாள் வாசுகி.

“ஓ… அந்த ஃபங்ஷன் இன்னிக்குத்தானா?… ஸாரி… நான் மறந்திட்டேன்!… இட்ஸ் ஓ.கே…நான் எட்டு மணிக்கு ரெடியாகி கீழே வந்திடறேன்”

“ஓ.கே.டாக்டர்!… அதுவரைக்கும் நான் கீழே உங்க ஆபீஸ் ரூம்ல இருக்கேன்!.. நிறைய பேப்பர்ஸ் ஃபைல் பண்ண வேண்டியிருக்கு போலிருக்கு… அதைப் பண்ணிட்டிருக்கேன்” என்றாள் மிகவும் பவ்யமாக.

“ஷ்யூர்… ஷ்யூர்” என்று சொல்லி விட்டு மொபைலை ஆஃப் செய்தவர் அதை டீப்பாயின் மீது போட்டு விட்டு நேரே பாத்ரூமிற்குள் நுழைந்தார்.  அவர் வாய் அவரையுமறியாமல், “உன்னால் முடியும் தம்பி… தம்பி!… உஅன்க்குள் இருக்கும் உன்னை நம்பி” என்று பாடியது.

அவர் குளித்து விட்டு வருவதற்குள் அவரைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

அறுபதுகளின் துவக்கத்தில் கோவைக்கு வந்து புற நகர்ப்பகுதியில் சிறியதாய் ஒரு ஆஸ்பத்திரி துவக்கி, இன்று அதை கோவையின் நெம்பர் ஒன் ஆஸ்பத்திரி ஆக்கிக் காட்டியவர்.  ஆரம்பத்தில் பாகிஸ்தான் இந்தியப் போரில், செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில், போர்முனைக்குச் சென்று ராணுவ வீரர்களுக்கு மருத்துவ உதவிகளைச் செய்தவரை அன்றைய அரசாங்கம் பாராட்டி கௌரவித்தது.  




அவரது சேவைக் குணத்தை அறிந்த சர்வதேச செஞ்சிலுவை அமைப்பு அவரை வளைகுடா போர் முனைக்கு அனுப்ப விழைய, அதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுச் சென்று, அங்கேயும் தன் சேவையைத் திறம்படச் செய்து பாராட்டுப் பெற்றார். 

சமீபத்தில் நடந்த கார்கில் போரின் போது அரசாங்கமே அவரின் வயது கருதி போர் மூனைக்கு அனுப்பத் தயங்கிய போது, தானே வலிய முன் சென்று, “ராணுவ வீரர்களுக்கு மருத்துவம் செய்வது என் கடமை என்று நினைப்பவன் நான்!… ஸோ… நான் என் கடமையைச் செய்வதை தயவு செய்து தடுக்காதீர்கள்” என்று கட்டயக் கோரிக்கை வைத்து அதில் வெற்றியும் பெற்று, கார்கில் போரில் காயமடைந்த நம் படை வீரர்களுக்கு மகிழ்வோடு அவர் அளித்த மருத்துவ உதவிகளைக் கண்டு இந்தியத் துணைக் கண்டமே வியந்தது.

பல வெளிநாடுகளும் அவருக்கு தங்கள் நாட்டின் உயரிய செவை விருதுகளை வழங்கிக் கௌரவித்தன.

மருத்துவப் பணியில் முழு மூச்சுடன் இறங்கிய காரணத்தால் வாழ்க்கையில் “திருமணம்” என்று ஒன்று இருப்பதையே மறந்து போனார்.  அதைப் பற்றிய நினைவு அவருக்கு வந்த போது அவரது வயது ஐம்பத்தெட்டைத் தொட்டிருந்தது.  ஆனாலும், பெண்மை கலந்த அவரது முக வசீகரத்தில் விழுந்த பல பெண்கள் அந்த வயதிலும் அவரைத் திருமணம் செய்து கொள்ள முன் வந்த போது அவர் ஆணித்தரமாய் மறுத்து விட்டார். தனது ஆஸ்பத்திரியைத் தன் மனைவியாகவும், நோயாளிகளைப் பிள்ளைகளாகவும் ஏற்றுக் கொண்டு, ஒரு மருத்துவ வாழ்க்கை வாழத் துவங்கினார்.

இவ்வலவு சிறப்புக்களைக் கொண்டவருக்குத்தான் இன்று பாராட்டு விழா. “தமிழ்நாடு டாக்டர்ஸ் அசோஸியேஷன்” அவரது சேவைகளைப் பாராட்டி அவரைக் கௌரவிக்கின்றது.

குளித்து முடித்து வெளியே வந்த டாக்டர், அடுத்த பதினைந்தாவது நிமிடம் தன் மாடியறையைப் பூட்டிக் கொண்டு கீழே இறங்கினார். அது அவருடைய பிரத்யேக அறை. அவரைத் தவிர வேறு யாரும் அதனுள் பிரவேசிக்கக் கூடாது.  இதுவரையில் பிரவேசித்ததும் இல்லை. வேலைக்காரர்களுக்குக் கூட அனுமதியில்லை. அந்த அறையைப் பெருக்குவது முதற் கொண்டு, தரையை மாப் கொண்டு துடைப்பது, உள்ளேயிருக்கும் அட்டாச்டு பாத்ரூம் மற்றும் டாய்லெட்டைக் கழுவுவது வரை எல்லாமே “தன் கையே தனக்குதவி” பாலிஸிதான்.

கீழிறங்கியவர் அதே பரபரப்புடன் டைனிங் டேபிளுக்குச் சென்று, அங்கு தனக்காகப் பரிமாறப்பட்டிருந்த டிபன் ஐட்டங்களை விழுங்கி விட்டு, தனது அலுவலக அறைக்குள் நுழைந்து,  “என்ன மிசஸ் திருவள்ளுவர்?… புறப்படலாமா?” கேட்டார்.

“ஓ.கே.டாக்டர்”

இருவரும் வெளியேறி, போர்ட்டிக்கோவில் இறங்கிய போது, டாக்டரின் மொபைல் நாதஸ்வரம் இசைத்தது.  “யாரப்பா இது?… புறப்படற நேரத்துல?” தனக்குத் தானே கேட்டுக் கொண்டு மொபைலை எடுத்துப் பார்த்தார்.  அவரது நண்பரும், போலீஸ் கமிஷனருமான வாசன் கால் செய்திருந்தார்.

“ஹல்லோ… மிஸ்டர் வாசன்… ஹௌ ஆர் யூ?” கார்க்கதவைத் திறந்து கொண்டே கேட்டார்.

“ஐ யாம் ஃபைன் டாக்டர்!… பை த பை…ஒரு முக்கியமான வ்பிஷயம் உங்க கிட்டப் பேசணும்… ஆர் யூ ஃப்ரீ?… இப்ப வரலாமா?” கமிஷனர் கேட்க,

“ம்ம்ம்… நான் இப்ப ஒரு ஃபங்ஷனுக்குக் கிளம்பிட்டிருக்கேன்!…”

“தெரியும் டாக்டர்!… இன்னிக்கு கார்ப்பரேஷன் ஆடிட்டோரியத்துல உங்களுக்குப் பாராட்டு விழா!… அதானே?”

“யெஸ் கமிஷனர்… அதே தான்”

“அது சம்மந்தமாய்த்தான் உங்க கிட்ட பேச வர்றேன்னு சொன்னேன்” கமிஷனர் ஒரு புதிராய்ப் பேசினார்.

“வாட்?… அது சம்மந்தமாகவா?… வொய்?… ஈஸ் தேர் எனி ப்ராப்ளம்?” டாக்டர் சற்று சீரியஸான குரலில் கேட்க,

“யெஸ் டாக்டர்!… அங்க உங்களுக்கு ஏதோவொரு ஆபத்து இருக்கறதா… இன்ஃபர்மேஷன் கிடைச்சிருக்கு”

அதைக் கேட்டு, “ஹா…ஹா…ஹா…”வெனச் சிரித்த டாக்டர் கிருபாகரன், “எங்கிருந்து வந்திச்சு?… எப்படி வந்திச்சு?” சிரிப்புடனே கேட்டார்.

”எங்க இன்ஃபார்மர் மூலமா வந்திருக்கு… பட்… அதுக்காக… நாம இதை சாதாரணமா ஒதுக்கிட முடியாது”




“இப்ப நான் என்ன பண்ணனும்கறீங்க?” டாக்டர் தன் சிரிப்பை நிறுத்தி விட்டுக் கேட்டார்.

“நீங்க இன்னிக்கு… அந்த ஃபங்ஷனுக்குப் போகாம இருபது பெட்டர்னு எனக்குப் படுது” என்றார் கமிஷனர்.

“என்ன கமிஷனர் சார்…. நீங்களே இப்படிச் சொன்னா எப்படி?… வேணுமின்னா ஒண்ணு செய்யுங்க!… செக்யூரிட்டியை இன்னும் கொஞ்சம் டைட் பண்ணுங்க!… ஃபங்ஷனுக்கு வர்ற பொதுமக்களை தரோவா செக் பண்ணுங்க” அலட்சியமாகச் சொன்னார் டாக்டர்.

“அதெல்லாம் நீங்க சொல்லவே வேண்டியதில்லை டாக்டர்!… ஆட்டோமேடிக்கா நாங்க அதுகளை செஞ்சிடுவோம்!… இருந்தாலும் எதுக்கு அனாவசியமா ஒரு டென்ஷனைக் கிரியேட் பண்ணனும்னு…” கமிஷனர் இழுக்க,

“நோ மிஸ்டர் கமிஷனர்!… நான் பல போர் முனைகள்ல தைரியமா உலவியவன்!… துப்பாக்கிச் சத்தங்களும், பீரங்கி குண்டுகளும் நாலாப் பக்கமும்  முழங்கற இடத்துல மரணத்தை ஒரு தோளிலும்… மெடிக்கல் கிட்டை இன்னொரு தோளிலும் போட்டுக்கிட்டு சாதாரணமாய்த் திரிவே!… ஸோ… இந்த பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்படற ஆள் இல்லை!… ஸார் கமிஷனர்… என்னால் உங்க வேண்டுகோளை ஏற்றுக்கிட்டு ஃபங்‌ஷனுக்கு போகாம இருக்க முடியாது!… என்னை மன்னிச்சிடுங்க” சொல்லி விட்டு மொபைலிலிருந்து வெளியேறி காரில் ஏறியமர்ந்தார் டாக்டர் கிருபாகரன்.

உடன் ஏறிய வாசுகி, “என்ன டாக்டர்… எதுக்கு போலீஸ் கமிஷனர் உங்களைக் கூப்பிட்டிருக்கார்?… அவங்க டிபார்ட்மெண்ட் ஃபங்ஷன் எதுக்காவது உங்களை சீப் கெஸ்டா இன்வைட் பண்ணியிருக்காரா?” ஒரு பர்ஸனல் செகரட்டரியாய் தன் பணியை செவ்வனே செய்தாள் வாசுகி.

“இப்ப வேண்டாம்!… அப்புறமா சொல்றேன்!… லெட் அஸ் மூவ் நவ்” என்றார்.

“டிரைவர்… கிளம்பலாம்” என்று வாசுகி சொன்ன பிறகுதான் கார் நகர்ந்தது.

கமிஷனரின் வேண்டுகோளை டாக்டர் கிருபாகரன் ஏற்றுக் கொள்ளாததால், கார்ப்பரேஷன் ஆடிட்டோரியம் ஒரு விபரீத விளையாட்டைச் சத்திக்க தன்னை தயார் படுத்திக் கொண்டது.




What’s your Reaction?
+1
13
+1
15
+1
2
+1
0
+1
1
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!