gowri panchangam Sprituality

சிவத் தொண்டர்கள்-20 (கழறிற்றறிவார் நாயனார் )

சேர நாட்டின், கொடுங்கோளூரில் பிறந்தவர் மாக்கோதையார் என்னும் இயற்பெயர் கொண்ட கழறிற்றறிவார் நாயனார். அரசர் குலத்தில் பிறந்த இவர் அரசை விரும்பாது சிவ பக்தராகத் திகழ்ந்தார். சிவனடியார்களுக்குச் சிவத் தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார். திருவஞ்சைக்களத்தில் எழுந்தருளியிருக்கும் அஞ்சைக் களத்தீஸ்வரரை தினமும் வணங்கி வழிபட்டார்.

கழறிற்றறிவார் நாயனார்!! - ஆரூர் சுந்தரசேகர்.




சிவனின் ஆடல்

கொடுங்கோளூர் அரசன் செங்கோற் பொறையன், ஆட்சி துறந்து தவம் புரிய காட்டிற்குச் சென்றான். அமைச்சர்களும் அறிஞர்களும் மாக்கோதையாரிடம் வந்து அரசை ஏற்று நடத்துமாறு கூறினர். அரசாட்சியை விரும்பாத மாக்கோதையார், திருவஞ்சைக்களம் ஆலயம் சென்று இறைவனிடம் முறையிட்டார். இறைவனும் அவருக்கு அருள் செய்து, விலங்குகள் பேசும் மொழியை அறிந்து கொள்ளும் ஆற்றலைத் தந்து அரசாட்சி புரிய ஆணையிட்டான். அதுமுதல் சேர நாட்டிற்கு மன்னனாக முடிசூட்டிக் கொண்டு, சேரமான் பெருமாள் என்னும் பெயரில் அவர் ஆட்சி புரிந்தார். விலங்குகள் பேசும் மொழியை உணரும் ஆற்றல் பெற்றதால் அவர் ‘கழறிற்று அறிவார்’ என்று அழைக்கப்பட்டார்.

ஒரு நாள் சேரமான் பெருமாள் நகர்வலம் வந்தபோது, எதிரே சலவைத் தொழிலாளி ஒருவர் வந்தார். அவர், உவர் மண்ணைத் தன் தலையில் சுமந்தவாறு வந்துகொண்டிருந்தார். அது மழையால் அவர் உடல் மேல் வழிந்து, காய்ந்து, திருநீறு பூசியிருக்கும் கோலத்தில் காட்சி தந்தது. அவரைக் கண்ட சேரமான், உடல் முழுதும் நீறு பூசிய சிவனடியார் என்றேண்ணி, உடன் யானையிலிருந்து கீழிறங்கி அவர் பாதம் பணிந்து வணங்கினார்.




உடனே பதறி விலகிய அந்த வண்ணார், ‘அடியேன் அடி வண்ணான்’ என்று சொன்னார். சேரமானும் ‘அடியேன் அடிச்சேரன். நீங்கள் சிவனின் திருநீற்றுக் கோலத்தை எனக்கு நினைவு படுத்தினீர்கள். வருந்தாது செல்லுங்கள்’ என்று சொன்னார். மக்கள் மனம் மகிழும் வகையில் நல்லாட்சி புரிந்த சேரமான் பெருமாள் ‘பொன்வண்ணத்தந்தாதி’, ‘திருவாரூர் மும்மணிக்கோவை’ ஆகிய நூல்களை இயற்றினார். தினந்தோறும் சிவனுக்குப் பூஜை செய்து, பூஜையின் முடிவின் சிவபெருமானின் கால் சிலம்பொலியைக் கேட்டு மகிழ்ந்தார்.

36-கழறிற்றறிவார் - சேரமான் பெருமாள் நாயனார்-Cheraman Perumal Nayanar - YouTube

சேரமான் பெருமாள், சிவபெருமானின் அருளால் சுந்தரருக்கு  உற்ற தோழர் ஆனார். ஒருநாள் சேரமான் பெருமாள் நீராடிக் கொண்டிருக்கும் வேளையில், சுந்தரர் திருவஞ்சைக்களத் திருக்கோயிலையடைந்து, சிவபெருமானை அடையும் தனது விருப்பத்தை எடுத்துக் காட்டும் வகையில் ‘தலைக்குத் தலைமாலை’ என்ற திருப்பதிகத்தைப் பாடினார். அது கேட்டு மகிழ்ந்த சிவபெருமான், சுந்தரரை அழைத்துவருமாறு திருக்கயிலையில் இருந்து வெள்ளையானையுடன் தேவர்களை அனுப்பி வைத்தார். சுந்தரரும் அதன்படி வெள்ளை யானையில் ஏறி கயிலைக்குப் புறப்பட்டார்.




இதனை தமது ஆற்றலால் உணர்ந்து கொண்ட சேரமான் பெருமாள் நாயனார், தமது குதிரையின் மேல் ஏறி திருவஞ்சைக்களத்தை அடைந்தார். சுந்தரர் யானையின் மீதேறி விண்ணில் செல்வதைக் கண்டவர், தமது குதிரையின் காதில் ஐந்தெழுத்தை ஓதினார். உடன் மேலெழுந்த குதிரை வானில் சென்று, யானையை வலம் வந்து, அதற்கு முன்னே சென்றது.

சேரமான் திருக்கயிலையை அடைந்து ‘திருக்கயிலாய ஞான உலா’ பாடி சிவபெருமானைத் துதித்தார். இறைவன் அதைக் கேட்டு மகிழ்ந்து ‘நீ சிவகணத்தோடு ஒருவனாகி இங்கே இருப்பாயாக!’ என்று அருள் பாலித்தார். சேரமான் பெருமாள் நாயனார் eன்னும் கழறிற்றறிவார் நாயனார் சிவகணங்களுள் ஒருவரானார்.

சேரமான் பெருமாள் நாயனார் என்னும் கழறிற்றறிவார் நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!