gowri panchangam Sprituality

சிவத்தொண்டர்கள்-38 (தண்டியடிகள் நாயனார் )

அறுபத்து மூன்று நாயன்மார்களும் சிவபெருமானுக்கு ஏதேனும் ஒரு வகையில் தொண்டுகள் பல செய்து வந்தனர். தன்னலம் இன்றி தொண்டுகள் பல செய்தவர்கள் சிவபெருமானின் அருளுக்கு பாத்திரமாகி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இடம் பிடித்தவர்தான் தண்டியடிகள் நாயனார்.

தினமும் இறைவனின் ஆலயத்தை வலம் வந்து, ‘நமசிவய’ எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரித்து, சிவதொண்டு செய்து வாழ்ந்தார். திருவாரூர்க் கமலாலயக் குளத்தை பிறவிக்குருடராக இருந்தும் சீரமைக்கும் திருத்தொண்டினைச் செய்தவர்.“நீர்நிலைகளை பாதுகாப்பது போன்ற தொண்டுப்பணிகளே சிவனுக்குச் செய்யும் பூஜை” என வாழ்ந்து காட்டினார்.




தண்டியடிகள் நாயனார்!! ​​​​​​​ஆரூர் சுந்தரசேகர்.

சிவபெருமான் மேல் கொண்டிருந்த பேரன்பினால் கோயிலின் திருக்குளத்தை சீரமைக்கும் பணியைச் செய்து இறையருளால் கண் ஒளி பெற்ற தண்டியடிகள் நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்ட தொகையில்
“நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” என்று புகழ்கிறார்.

திருவாரூரில் அவதரித்த தண்டியடிகள் நாயனார்:
சோழ நாட்டிலே தலைசிறந்து விளங்கும் திருவாரூர் என்னும் ஸ்தலத்தில் செங்குந்தர் மரபில் அவதரித்தவர் தண்டியடிகள் நாயனார். இவர் பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர்.புறக்கண் அற்ற இவர் தன் அகக் கண்ணினால் திருவாரூர்த் தியாகேசப் பெருமானை நினைத்தபடி, நாள்தோறும்
கோயிலை வலம் வந்து பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தார். அடியவர்களுக்கும், கோயிலிலும் சிறுசிறு தொண்டுகள் செய்து வந்தார்.




30- Dandi Adigal Nayanar-தண்டியடிகள் நாயனார் - YouTube

கமலாலய திருக்குளத்தை தூர்வாரும் பணி:
தண்டியடிகள் நாயனார்காலத்தில் திருவாரூரில் சமணர்கள் ஆதிக்கம் சற்று பரவியிருந்தது. அதனால் சமணர்கள் சைவத்தொண்டர்களுக்குப் பற்பல வழிகளில் இன்னல்களை விளைவித்தனர். தண்டியடிகள் நாயனர் தியாகராஜர் கோயில் அருகில் உள்ள நீராடும் கமலாலய திருக்குளத்திற்கு பக்கத்தில் சமணர்கள் பல மடங்களைக் கட்டிக்கொண்டு தங்கள் மதப் பிரசாரத்தை நடத்தி வரலாயினர். திருக்குளம் ஆக்கிரமிப்பால் சுருங்கியும் பராமரிப்பு இன்றியும் காணப்பட்டது. தண்டியடிகள் நாயனார் திருக்குளத்தை விரிவுபடுத்தி, சுத்தப்படுத்த விரும்பினார்.




கண்ணற்ற தண்டியடிகள் நாயனார் இறைவனின் அருளால் திருக்குளத்தின் நடுவிலே ஒரு கம்பை நட்டார். மற்றொரு கம்பை குளத்தின் கரையிலே நாட்டினார். இரண்டு கம்புகளுக்கும் இடையில் கயிறு கட்டினார். கயிற்றைத் தடவிக் கொண்டே குளத்திற்குள் இறங்கி மண்ணைத் தோண்டுவார், அதைக் கூடையிலே சுமந்து வந்து கரையில் கொட்டுவார். இப்படியே கயிறை பிடித்தபடியே சென்று திருக்குளத்தை தூர்வாரும் பணியைச் செய்து கொண்டிருந்தார். அந்த சிவதொண்டு செய்த நேரத்திலும் கூட, அவரது வாய், ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரிப்பதை நிறுத்துவது இல்லை. தண்டியடிகள் நாயனாரின் இந்தத் தொண்டால், வெகு விரைவிலேயே குளம் சுத்தமாகி, ஆழம் ஏற்பட்டு, தண்ணீர் பெருகத் தொடங்கியது.

தண்டியடிகள் நாயனாரின் செயலைக் கண்ட சமணர்கள் பொறாமை கொண்டனர். எனவே அவர்கள் தண்டியடிகளிடம் சென்று, நீங்கள் மண்ணைத் தோண்டுவதால் அவற்றிலுள்ள சிறு பூச்சி, புழு போன்ற உயிரினங்கள் இறக்கும். எனவே, அவற்றை துன்புறுத்த வேண்டாம் என்று கூறினார்கள். அதற்கு தண்டியடிகள் நாயனார், “கல்லிலுள்ள தேரைக்கும், கருப்பை உயிருக்கும் நல்லுணர்வு தந்து காக்கும் ஈசனுக்கு, இந்த ஜீவராசிகளை எப்படிக் காக்க வேண்டும் என்பது தெரியும்.




. சிவபெருமானுக்கு நான் செய்யும் இப்பணியால், சிறு ஜீவராசிகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் எவ்வித தீங்கும் நேராது” என்றார். “நாங்கள் எடுத்துச் சொல்லும் தருமத்தை நீ காதில் வாங்கிக் கொள்ளவில்லை. உனக்கு காதும் மந்தமோ?” என்று கேட்டனர். எனக்கு கண்கள் இல்லையே என்று நான் என்றுமே வருந்தியதில்லை. நான் அகக்கண் கொண்டு, ஈசனின் திருவடியை மட்டுமே தரிசித்துக் கொண்டிருக்கிறேன். சிவபெருமானது திருவருளால் உலகமெல்லாம் அறியும் படி நான் கண் பெற்றால் நீங்கள் யாது செய்வீர்கள்? ” என்று தண்டியடிகள் நாயனார் கேட்டார். சமணர்கள் ” நாங்கள் யாவரும் இந்த ஊரை விட்டே ஓடி விடுகிறோம்,” என்றனர். அத்துடன் நில்லாது, அவர் வைத்திருந்த மண்வெட்டி, கூடை ஆகியவற்றை பிடுங்கி எறிந்தார்கள், நடந்தவைகளை நினைத்து தண்டியடிகள் நாயனார் மிகவும் வருந்தினார்.

தண்டியடிகள் நாயனார்




தண்டியடிகள் நாயனார் கண்ணொளி பெறுதல்:

வருத்தத்துடன் தண்டியடிகள் நாயனார், ஆரூர் பெருமானின் முன்னின்று, ” அடியேனது துன்பத்தை நீக்கி அருள்புரிதல் வேண்டும்.” என்று கண்ணீர் மல்க வேண்டினார், அப்படியே தூங்கியும் போனார். அவரது கனவில் தோன்றிய ஈசன், “மனக்கவலையை விடு. உன்னுடைய சபதம் நாளை நிறைவேறும்” என்று அருளினார். பின்னர் சோழ அரசனின் கனவிலும் தோன்றி ” தண்டியடிகள் நானார் செய்யும் கமலாலய குளத் திருப்பணிக்கு ஊறு விளைவிக்கும் சமணர்களின் வழக்கினை முடித்து வை.” என்று கட்டளையிட்டார். இறையாணையைக் கேட்டதும் சோழ அரசன் கண்விழித்து திருவாரூரை அடைந்தான். தண்டியடிகளைச் சந்தித்து நடந்தவைகளைக் கேட்டறிந்தார். பின்னர் சமணர்களை அழைத்து விசாரித்தான். சமணர்கள் இறையருளால் தண்டியடிகளுக்கு கண்ணொளி கிடைத்து விட்டால் திருவாரூரைவிட்டு வெளியே செல்வதாக தெரிவித்தனர். மறுநாள் இருத்தரப்பினரையும் அழைத்துக் கொண்டு குளத்திற்கு வந்தார் சோழ அரசன்.




தண்டியடிகள் நாயனார் இறைவனை மனத்தால் வழிபட்டு திருவைந்தெழுத்தை ஓதியபடி குளத்தில் மூழ்கினார். அவர் எழுந்தபோது, அவரின் பிறவிக்குருடு நீங்கி கண்ணொளி கிடைத்தது. தண்டியடிகள் நாயனார் பார்வை பெற்ற அதே நேரம் அவர்களைச் சுற்றியிருந்த சமணர்கள் கண்பார்வை பறி போனது. தண்டியடிகள் நாயனாரின் இறை பக்தியை எண்ணி அனைவரும் பரவசம் அடைந்தனர்.

சமணர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி ஊரை விட்டே புறப்பட்டு போய்விட்டனர். தண்டியடிகள் நாயனார் தான் எண்ணியபடி, திருக்குளத்தை அரசரின் உதவியுடன் பெரிதாக கட்டி முடித்தார். தண்டியடிகள் நாயனாரின் அறப்பணியை அரசரும், மக்களும் கொண்டாடி பெருமிதம் கொண்டனர். அதன்பிறகு பல காலம் இறைவனுக்கு தொண்டு செய்து வந்த தண்டியடிகள் நாயனார், நெடுநாள் பூவுலகில் பக்தியுடன் வாழ்ந்து நீடுபுகழ் பெற்று இறுதியில் சிவபதம் அடைந்தார்.

தண்டியடிகள் நாயனாரின் குருபூஜை பங்குனி மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!