Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-14

14

இளம் வயலட் நிறத்தில் ஓரத்தில் சில்வர் ஜரிகை ஓடிய அந்த ஷிபான் ஸாரியை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக கட்டிக்கொண்டாள் தாரிகா. வயலட் நிற ஒட்டுப் பொட்டும் ,  தீபம் மாடல் ஜிமிக்கியும் அணிந்து கொண்டு வழுவழுவென முடியை வாரி பின்னலிட்டு கொண்டு கீழே இறங்கி வந்தவளின் கண்களில் தோட்டத்தில் கொத்துக்கொத்தாய் பூத்திருந்த வயலட் நிற டிசம்பர் பூக்கள் தென்பட்டன.

இப்போது நான் முழுக்க முழுக்க இந்த கிராமத்து பெண்ணாக வேண்டும் மனதிற்குள் எண்ணிக் கொண்டு அந்த பூக்களை நோக்கி போனாள் . ”  இதனை பறித்து கட்டி கொடுக்கிறாயா செவ்வரளி ? ”  தோட்டத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தவளிடம் கேட்டாள். முகம் மலர தலையாட்டினாள் அந்தச் சிறுமி.

பத்தே நிமிடங்களில் தாரிகா காலை உணவை உண்டு முடிக்கும் போது கையில் கட்டிய பூச்சரத்துடன்,” அம்மா இந்தாங்க பின்புற வாசல் அருகே நின்று குரல் கொடுத்தாள் “

” உன்னை எப்படி கூப்பிட சொல்லியிருக்கிறேன்? ”   இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு அதட்டலாக தாரிகா கேட்க பயந்து பயந்து இதழ் அசைத்து” இந்தாருங்கள் அக்கா ” என்றாள் செவ்வரளி. புன்னகையோடு பூச்சரத்தை வாங்கிக்கொண்ட தாரிகா மெதுவாக சிறுமியின் கன்னத்தை தட்டவும் மறக்கவில்லை.

 ” என்ன இது ..? ”  காட்டமான குரலுடன் தமயந்தி கேட்க செவ்வரளி பயந்து பின்வாங்கி ஓடினாள். டிசம்பர் பூச்சரத்தை தமயந்தியின் முன்னாலேயே இரண்டாக மடித்து தலையில் வைத்து ஹேர் பின் குத்தி இரண்டு தோள்களிலும் முன்னால் இழுத்து விட்டுக் கொண்டு  , ” பூ அத்தை செவ்வரளி தொடுத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். என் சேலைக்கு மேட்ச்சாக அழகாக இருக்கிறது இல்லையா ? ”  கேட்டுவிட்டு ஓரக்கண்ணால் சவாலுடன் பார்த்து விட்டு வாசலுக்கு நடந்தாள்.

 மயில்வாகனன் வெளியிலிருந்து வீட்டிற்குள் வர இப்போது மகனிடம் என்னைப் பற்றி புகார் சொல்லுவார்களோ ? தாரிகா நடையை நிறுத்தி திரும்பிப் பார்க்க தமயந்தி மகனைப் பார்த்து முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே போனாள். மகனிடம் கோபமா?  எதற்கு என்னை திருமணம் செய்ததற்காகவா ? மயில்வாகனன் தாயிடம் பாராமுகமாக நடந்து கொள்வது அவள் நினைவில் வந்தது . மகன் மட்டுமன்றி அம்மாவும் அப்படியே இருக்கிறார்களே? அவர்களின் திருமணத்தையும் தாண்டி இருவருக்குள்ளும் வேறு ஏதோ பிணக்கு இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.




இந்த விளக்கத்தையும் இவனிடமே கேட்டால் என்ன யோசித்தபடி திரும்பியவள் அவளை பார்வையிலேயே மென்றபடி வந்து கொண்டிருந்த மயில்வாகனனை புதிராகப் பார்த்தாள்.  இவன் எதற்கு இப்படி பார்க்கிறான்?   தன் தோற்றத்தின் மீது அவனுக்கு ஆர்வம் இருக்கிறதோ? தன் கண்களை கூர்மையாக்கி அவன் மீது போட்டாள்.

 இமை சிமிட்டாமல் அவளருகில் வந்து நின்றவன் ”  எங்கே போகிறாய் ? ”  அவள் முன்புற தோளில் கிடந்த டிசம்பர் பூச்சரத்தை தொட்டு வருடியபடி கேட்டான்.

ம்க்கும். வழக்கமான வேவு வேலைதானா  ?  ஆனால் இப்போது இவனுக்கு ஒரு பொருத்தமான பதில் சொல்லியாக வேண்டுமே.. வேகமாக யோசித்தாள். “எங்கே கிளம்பி இருக்கிறாய் ? ”  என்று கேட்டேன்.  மயில்வாகனன் கை  அவள் தலை பூச்சரத்தை தொட்டபடி தான் இருந்தது .

 ” எதற்கு கேட்கிறீர்கள் ? “தான் பதில் சொல்லக் கூடிய நேரத்தை தள்ளிப் போட்டாள் .

” சேலைக்கு பொருத்தமாக இந்தப் பூ உனக்கு அழகாக இருக்கிறது”  அவனது பேச்சு திசை மாறியது .தொடர் யோசனை பாதித்து தாரிகா விழித்தபடி நின்றாள். இவன் இப்படி எல்லாம் ரசனையாக பேசுவானா?  குனிந்து தன்னைத் தானே ஒருமுறை பார்த்துக் கொண்டாள். இப்போது அவளுக்குமே தான் கொஞ்சம் அழகாக இருப்பது போலத்தான் தோன்றியது.

” நீ இப்படியெல்லாம் அலங்காரம் செய்து கொள்வாயா ?   சுடிதார் தானே உன்னுடைய வழக்கமான உடை ?” அவனது குரலில் அதிகப்படியான வியப்பு .தாரிகாவிற்கு கொஞ்சம் கோபம் வந்தது .

” ஏன் நான் இப்படி அலங்காரம் செய்து கொள்ள மாட்டேனா?”

” உனக்கு சேலை கட்ட தெரியுமா என்ன ? ”  அவனது விழிகள் சேலை படிந்திருந்த உடலின் வடிவத்தில் நின்றது.

”  எல்லாம் தெரியும் வழியை விடுங்கள் நான் போக வேண்டும். “

” அதுதான் எங்கே என்று கேட்கிறேன் ? “

தாரிகா பல்லைக் கடித்தாள்.  இவனிடம் இருந்து தப்பிக்க முடியாது வேகமாக யோசித்து “நான் அனந்தநாயகி அண்ணி வீட்டிற்கு போகலாம் என்று நினைத்தேன் ” வாய்க்கு வந்ததை சொன்னாள் .

 ” ஓ .அக்கா வீட்டிற்கா. வா நானே  அழைத்துப் போகிறேன். ”   அவன் கைகளை நீட்ட திகைத்தாள்.

” இ…இல்லை நானே போய் விடுவேன் …ஆ … அதோ என்னுடன் சுகந்தியும் வருகிறாள்”  அந்தப் பக்கமாக வந்த சுகந்தியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டாள் .

” அப்படியா சுமதி ? ”   மாமனின் கேள்விக்கு விழித்த மருமகளின் கையை அழுத்தி எச்சரிக்கை ஊட்டினாள்.

”  வீட்டிலேயே அடைந்து கிடப்பது வெறுப்பாக இருக்கிறது என்று சொன்னாயே சுகந்தி?  நாம் இப்போது அன்பரசி அண்ணி வீட்டிற்கு போய் வரலாம் தானே ? ” என்றாள்.

” ஆமாம்… ஆமாம். அப்படியேதான் ” தலையசைத்தாள் சுகந்தி.  வீட்டை விட்டு எங்கே வெளியே போவதானாலும் யாருடன் என்றாலும் அவளுக்குச் சரிதான்.




” ஓ… சரிதான். என்னுடன் வாருங்கள் . ”  சொன்னதோடு இருவர் கைகளையும் பற்றி இழுத்துக் கொண்டுபோய் ஜீப்பில் தள்ளி ஏற்ற ஜீப்  டாப் கியரில் பறந்தது.

திடுமென இவர்களை எதிர்பார்க்காத அனந்தநாயகி விழித்தாள்.”அதென்னவோ இவர்களுக்கு திடீரென்று உங்கள் மீது பாசம் வந்துவிட்டது அக்கா.  உடனே பார்த்தே ஆக வேண்டும் என்று அடம். அதனால்தான் கூட்டி வந்தேன்”. மயில்வாகனனின் விவரிப்பில் அனந்தநாயகி முகம் மலர்ந்தது.

” ஓ ..அப்படியா உள்ளே வாங்கம்மா” பாசத்துடன் தம்பி மனைவி ,  அத்தை மகளின் கையைப் பற்றி அழைத்துப் போனாள் .

உள்ளிருந்து வந்த அன்பரசியின் முகத்திலும் அதே ஆச்சரியம். அனந்தநாயகி ,  அன்பரசி முறையே அண்ணன் தம்பியை திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். தாரிகா ஒரு முடிவெடுத்து சகோதரிகள் இருவரின் கைகளையும் பிடித்து கொண்டாள் .

”  எங்களுக்கு அங்கே ஒரே போர் அண்ணி .இன்று ஒருநாள் உங்களோடு இங்கே இருக்கலாம் என்று வந்திருக்கிறோம் “கிளி மொழியில் தலைசாய்த்து மிழற்றினாள்.

” அதற்கு என்னம்மா ?  தாராளமாக இருங்கள் ”   சம்மதத்தை ஒத்த குரலில் அறிவித்தனர் சகோதரிகள்.

” நீங்கள் கிளம்புங்கள் . எங்களை அண்ணிகள் பார்த்துக் கொள்வார்கள். தாரிகா சாமர்த்தியமாகப் பேச,”  ஆமாம் தம்பி நீ போ.  நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ” அக்காக்களின் உத்தரவை மீற முடியாமல் ஓரக்கண்ணால் தாரிக்காவை அளந்தபடி மனமின்றி வெளியேறினான் மயில்வாகனன்.

” தறி ஓட்டுகிறோம் , கயிறு திரிக்கிறோம்  , தென்னந்தோப்பு , வாழைத்தோப்பு …” என்று தங்கள் குடும்ப தொழில்களை பெருமையாக வரிசைப் படுத்திக் கொண்டிருந்தனர் அன்பரசி ,ஆனந்தநாயகி.

” தென்னந்தோப்பை பார்க்கலாமா அண்ணி ? ”  தாரிகா கேட்க ,  “போகலாமே நீ இங்கே பார்த்துக்கொள் அன்பு ” அனந்தநாயகி உடன் கிளம்பிவிட்டாள் .

நடையில் ஓர் துள்ளலுடன் சுகந்தி சற்று முன்னே நடக்க,  அனந்தநாயகி உடன் இணைந்து நடந்தாள் தாரிகா . ” உங்களுக்கு என்னை பிடிக்கவில்லை அண்ணி ? ”  மெல்லிய குரலில் சுகந்தி காதில் விழாமல் கேட்டாள்.

பளீரென்ற வயலட் நிறத்தில் உடையும்,  தலை நிறைந்த வண்ண பூவுமாக தேவதைத்தனத்துடன் அருகே நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணை பிடிக்கவில்லை என்று எப்படி சொல்வாள் அனந்தநாயகி ?

”  அப்படி ஒன்றும் இல்லை ” மறுதளித்தாள்.

” அத்தைக்கு என்னை பிடிக்கவில்லையோ? ”   இதனை கேட்கும்போது தாரிகாவின் மனம் ஏனோ படபடத்தது

அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை..அனந்தநாயகி இப்படி மறுத்து விட வேண்டும் என்றுதான் அவள் நினைத்தாள். ஆனால் சிறிது நேரம் மௌனமாக நடந்தவள் ” இருக்கலாம்”  என்று கூற தாரிகாவின் மனம் சங்கடம் உற்றது.




” ஏன் அண்ணி  ? ”  கேள்வியின் முடிவில் தாரிகா லேசாக தொண்டையை செருமிக் கொண்டாள்.  ஐந்து நிமிட நடைக்கு பிறகும் அனந்தநாயகியிடமிருந்து இந்தக் கேள்விக்கான பதில் வராமல் போகவே ” என் அப்பாவிற்கும் உங்கள் அப்பாவிற்கும் சண்டையா  ? ” தாரிகா விடாமல் துருவினாள்.

” உன் அப்பா யார் ? ”  அனந்த நாயகி கேட்டாள்.

” என் அப்பா ராஜவேலு . சென்னையில் மிகப்பெரிய ஜவுளி கடை ஓனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கூட மிகப்பெரிய பணக்காரர்கள் எல்லோருமே எங்கள் கடையில் தான் துணிகள் வாங்குவார்கள். ” பெருமிதமாக சொன்னாள் தாரிகா.

” 20  வருடங்களுக்கு முன்பு உன் தந்தை எங்கே எங்கள் ஊரில் தான் தறியில் நெய்த புடவைகளை வீடுவீடாகப் போய் வாங்கி வந்து துணி மூட்டையாக கட்டி தலையில் ஏற்றிக் கொண்டு வெளியூர்களுக்கு எல்லாம் சென்று விற்று வந்தார். அது தெரியுமா உனக்கு ? ” அனந்தநாயகியின்  விளக்கம் தாரிகாவிற்கு கொஞ்சம் அதிர்வை கொடுத்தாலும் சமாளித்துக் கொண்டாள்.

”  அதில் தவறு ஏதும் இருக்கின்றதா ?  அப்பா ஆரம்ப காலத்தில் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தேன் என்று அடிக்கடி சொல்லியிருக்கிறார். 20 வருடங்களுக்கு முன்பு சாதாரண தொழிலாளியாக இருந்தவர் இப்போது இவ்வளவு பெரிய முதலாளியாக இருக்கிறார் என்றால் அது போற்ற வேண்டிய விஷயம் தானே ? “

தாரிகாவின் பேச்சிற்கு பதில் சொல்ல பிடிக்காமலோ என்னவோ அனந்தநாயகி வாயை இறுக்கி கொண்டு நடந்தாள்.  அப்போது தோப்பிற்குள் வேலை பார்த்துக் கொண்டிருந்த சில வேலையாட்கள் அவளை நிறுத்தி ஏதோ விபரம் கேட்க அவர்களுக்கு நின்று பதில் அளிக்கத் தொடங்க தாரிகா எட்டுக்களை வைத்து சுகந்தியுடன் இணைந்து கொண்டாள்.

கண்களை சுழற்றி தூரமாக பார்த்தவள் பக்கத்து கம்பி வேலிக்கு அந்தப் பக்கம் நின்றிருந்த அவனைக் கண்டதும் கண்களை சுருக்கினாள்.  நேரடியாகவே மோதி பார்த்து விட வேண்டியது தான் என்று தீர்மானித்தாள்.

” அதோ அந்தப் பக்கம் போய் பார்க்கலாம் வா சுகந்தி”   சிறு கம்பி வேலி ஒன்றை தாண்டி கைகாட்டிவிட்டு சுகந்தியின் கையை பிடித்து இழுத்து கொண்டு பக்கத்து தோப்பிற்குள் நுழைந்தாள்.

அங்கே பத்தடி தூரம் நடந்ததுமே சரசரவென சில ஆட்களால் அவர்கள் சூழ்ந்து கொள்ளப்பட்டனர்.  கைலியோ வேட்டியோ கட்டிக்கொண்டு மேலே சட்டை இன்றி வெற்றுடம்புடன் இருந்த அவர்கள் தோப்பின் வேலையாட்கள் என்று தெரிந்தது. அவர்களது கைகளில் இளநீர் சீவும் அரிவாள் இருந்தது. சிலரது கைகளில் நீளமான கம்பு.

” சுகந்திம்மா  வாங்க போகலாம் ”   அவர்களில் தடிமனாக இருந்த ஒருவன் குரல் கொடுக்க இன்னும் இருவர் சுகந்தியின் கைகளை பற்றி இழுத்தனர்.

நொடியில் தாரிகா சுகந்தியிடம் இருந்து தள்ளி நிறுத்தப்பட்டாள்.   சுகந்தி இழுத்துச் செல்லப்பட்டாள். சுகந்தியின் பின்னால் பார்வையை கொடுத்தபடி தாரிகா மரங்களின் பின்னே நின்றிருந்த அவனை நோக்கி நடந்தாள்.

” இந்தச் செயல்கள் எல்லாம் உங்கள் சம்மதத்துடன் தான் நடந்து கொண்டிருக்கிறதா ? ”  உயர்ந்த குரலில் அவன் அதிரும்படி கேட்டாள்.

திடுமென முதுகுக்குப்பின் ஒலித்த பெண்ணின் குரலில் அதிர்ந்து திரும்பிய அவன் பேச்சின்றி ஒரு நிமிடம் திகைத்து நின்றான்.




What’s your Reaction?
+1
20
+1
15
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!