Serial Stories இது ஒரு காதல் மயக்கம்

இது ஒரு காதல் மயக்கம்-13

13

  சுகந்தியை நாங்கள் பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறோம். இனி இதுபோல் எல்லாம் அவளை வெளியே கூட்டிக் கொண்டு போக வேண்டாம் அறிவுறுத்தலோடு வந்து நின்ற  தமயந்தியை ஏறிட்டாள் தாரிகா.

 ” அவள் தான் ஆற்றில் குளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள் அத்தை ”   மெல்லிய குரலில் தன்னை விளக்க முயன்றாள்.

” அவளுக்கு என்ன தெரியும்?   நாம் தான் அவளை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் .இனி ஒரு முறை இப்படி செய்யாதே”  சொல்லிவிட்டு தமயந்தி உள்ளே போய்விட்டாள். தாரிகாவிற்கு தலை வெடித்து விடும் போல் வலித்தது. மாமனார் தர்மராஜாவிலிருந்து சங்கரேஸ்வரி மயில்வாகனன் அன்பரசி அனந்தநாயகி இதோ இப்போது தமயந்தி என எல்லோருமே சுகந்தியை ஏதோ பாதுகாத்து வைக்கப்பட்ட அபூர்வ பொருள் என்பது போலவே பேசினார் இது தாரிகாவிற்கு மேலும் மேலும் எரிச்சலை கொடுத்தது.

”  சுகந்தியை தூக்கிக் கொண்டு போவதற்கு வெளியே ஒரு கும்பல் காத்துக்கொண்டிருக்கிறது மருமகளே ”  சமாதானமாக பேசியபடி அவள் அருகே வந்து அமர்ந்தார் தர்மராஜா. இது அவளுக்கு புது செய்தி. நம்பமுடியாத செய்தி.

“என்ன மாமா சொல்லுகிறீர்கள்?  யார் ?எதற்காக? ”  அதிர்ச்சியுடன் கேட்டாள்

” வேறு யாருமல்ல. அவளுடைய சொந்த அப்பாதான்.”   தர்ம ராஜாவின் குரலில் அளவற்ற வெறுப்பு.

” ஐயோ அவளுடைய அப்பாவா ?  ஏன் இப்படி ? “

”  ஆமாம் அவளுடைய அப்பாதான் .அவருக்கு சுகந்தியை நாங்கள் எங்களிடம் வைத்துக்கொண்டு அவரை தவிக்க விடுவதாக ஒரு எண்ணம். தன் மகளை தன்னிடம் அழைத்துக் கொண்டு விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்”

” ஆனால் இதற்கு சுகந்தி சம்மதிக்க வேண்டும் அல்லவா?  அவள் சிறு குழந்தை அல்லவே. வளர்ந்த யோசிக்கத் தெரிந்த மெச்சூர்டான பெண்.  அவளை எப்படி இப்படி கட்டாயப் படுத்த முடியும்? “

” இந்த ஞாயத்தை எல்லாம் அவர் எங்கே யோசிக்கிறார் ?  ஒரே முரட்டுத்தனத்துடன் என் மகளை எனக்கு கொடுத்துவிடு என்று நிற்கிறார் .அவள் எங்கே வெளியே போனாலும் அவளை  பின் தொடர்ந்து தொடர்ந்து போய் தன் வீட்டிற்கு கூட்டி கொண்டு போய்விடவேண்டும் என்று ஆட்களை ஏவி கொண்டு இருக்கிறார். தன் வீட்டிற்கு மகளை அழைத்துச் சென்று விட்டால் அங்கே அவளிடம் நைச்சியமாகப் பேசி தன்னுடனேயே இருக்க வைத்துவிடலாம் என்று நம்புகிறார்”

” இது என்ன முட்டாள்தனமான எண்ணம் ? ”  என்று கேட்டு விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் தாரிகா.

 சுகந்தியின் தந்தை இப்போது அவர்கள் குடும்பத்துடன் சண்டையிட்டு இருந்தாலும் அவர் வீட்டு மாப்பிள்ளை அல்லவா?   அவரைப் பற்றி இப்படிப் பேசினால் என்ன நினைப்பார்கள் ? சிறு குற்ற உணர்அவளுள். ஆனால் தர்ம ராஜா அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

”  முரட்டு முட்டாள் மருமகளே சுகந்தியின் அப்பா” சட்டென ஒரு பட்டத்தை  அளித்தார் . தாரிகாவினுள் ஏனோ சிறு நெருடல் .  இதே பட்டத்தை தானே இவர் என் அப்பாவிற்கும் கொடுத்தார் ?  ஏன் எல்லா மனிதர்களையும் இவர் இப்படியே எடை போடுகிறார்  ? அப்போதே சுகந்தியின் தந்தை மீது அவளுக்கு ஒரு அபிப்ராயம் உண்டாகி விட்டது. ஏன் இது இவர்களது தவறான புரிந்துகொள்ளல் ஆக இருக்கக் கூடாது?  அவள் மனம் எதிர்த்திசையில் யோசிக்கத் தொடங்கியது.

”  உண்மையில் சங்கரேஸ்வரி சித்திக்கும் சுகந்தியின் அப்பாவிற்கும் இடையே என்னதான் பிரச்சினை மாமா? “

” அது பெரிய பிரச்சனை மருமகளே.  சுகந்தியின் அப்பா சுந்தரேசனுக்கு சங்கரேஸ்வரியை மிகுந்த மன திருப்தியோடு தான் திருமணம் செய்து வைத்தோம் . நமக்கு ஈடான வசதி படைத்தவர்கள் .அத்தோடு நன்றாக படித்த குடும்பத்தினர்.அவர்களது குடும்ப பழக்கவழக்கம் வேறு விதமாக இருந்தது . அது சங்கரேஸ்வரிக்கு கொஞ்சமும் ஒத்து வரவில்லை . அடிக்கடி இருவருக்கும் இடையே சண்டை சச்சரவு வந்து கொண்டே இருந்தது. அது ஒரு நாளில் பூதாகரமாகி சங்கரேஸ்வரி இனி அங்கே போக முடியாது என்று இங்கேயே வந்து இருந்து விட்டாள். சுந்தரேசன் குடும்பத்தினர் எனது மகளையாவது என்னிடம் கொடுத்துவிடு என்று பஞ்சாயத்து வைத்து பேசினர். ஆனால் பஞ்சாயத்து பேசிய பெரியவர்கள் பெண்குழந்தை அம்மாவுடன் தான் இருக்க வேண்டும் என்று முடித்துவிட்டனர். ஆனாலும் சுந்தரேசன் எப்படியாவது சுகந்தியை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.”

”  சங்கரேஸ்வரி சித்தியை அவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்க நீங்கள் எதுவும் முயற்சி செய்யவில்லையா மாமா ? “

” என்ன அண்ணா உங்கள் மருமகளுக்கு நான் இங்கே இருப்பது உறுத்துகிறது போலவே .  என்னை இந்த வீட்டை விட்டு  அனுப்புவதற்கான ஏற்பாடுகளில் இறங்கிவிட்டாள் போல் தெரிகிறது  ? ” அலறலான குரலுடன் திடுமென சங்கரேஸ்வரிவந்து நிற்க தாரிகா அதிர்ந்தாள். இதென்ன இப்படி பேசுகிறார்கள்?

”  வாயை மூடு சங்கரி .அவள் அப்படிப் பட்ட பெண் இல்லை .நம் வீட்டு விஷயம் அவளுக்கும் தெரிய வேண்டும் இல்லையா ? அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன் ” தர்மராஜா உடனேயே குரல் கொடுத்து விட சங்கரேஸ்வரி வாயை மூடிக் கொண்டாலும் கண்களால் தாரிகாவை எரித்துக் கொண்டிருந்தாள்.

” நீ மாடிக்கு போ மருமகளே .நாம் பிறகு பேசலாம் .”  தர்மராஜா உடனடியாக தாரிகாவை  அந்த இடத்தை விட்டு அனுப்ப முயன்றார். மாடிப் படிகளில் ஏறிக் கொண்டே இங்கே கவனித்தபோது …

சங்கரேஸ்வரி ”  இப்படி ஒரு நிலைமை வரும் என்று எனக்குத் தெரியும் அண்ணா  . அதனால்தான் சுகந்தியை நம் மயிலுக்கு கல்யாணம் செய்து விட சொன்னேன். நீங்கள் …” இதற்கு மேல் இந்த பேச்சை கேட்க பிடிக்காமல் வேகமாக தங்கள் அறைக்குள் வந்து பூட்டிக்கொண்டாள்.

” அத்தையும் ,  சுகந்தியும் கண்ணாடி பாத்திரத்தை போன்றவர்கள்.   நாம் அவர்களை கவனமாக கையாள வேண்டும் ” மயில்வாகனன் தான் கட்டிலில் அமர்ந்தபடி சொல்லிக்கொண்டிருந்தான்.

ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாயா ?  இப்படித்தான் தாரிக் காவின் மனதினுள் மீண்டும் கசப்பு பரவியது.

”  உங்கள் அத்தையையும் அத்தை மகளையும் கவனமாக கையாள வேண்டிய அவசியம் எனக்கு என்ன வந்தது ? ” ஆத்திரமாக கேட்டுவிட்டு நிமிர்வாக தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். இமைக்கும் நேரத்தில் கதவருகே நின்றிருந்த அவள் அருகே வந்திருந்தான் மயில்வாகனன் .அவன் கண்கள் கனல் மழை பொழிந்து கொண்டிருந்தது.

” எப்போது பார்த்தாலும் ஏட்டிக்குப் போட்டியான பேச்சு . திமிரான பார்வை. முட்டாள்தனமான முறைப்பு.”  சொல்லிக்கொண்டே விரல்களை குவித்து சேர்த்து அவளது இரு இதழ்களையும் கொத்தாகப் பற்றி அழுத்தி நசுக்கினான்.

” போடா …டேய்…”  அவனது விரல்களுக்குள் சிக்கிக் கொண்டிருந்தாலும் கடினப்பட்டு இதழ்களை பிரித்து இந்த வார்த்தைகளை உச்சரிக்க தாரிகா யோசிக்கவில்லை. அவளது பேச்சின் முடிவில் சட்டென அவளது இதழ்கள் தண்டிக்கப்பட்டன அவனது வழக்கமான பாணியில். கன்றி சிவந்து தடித்த இதழ்களை கைகளால் பொத்தியபடி அவனை முறைத்தாள்.




” முத்தம் வேண்டும் என்றால் நேரடியாக கேட்க வேண்டும்.   இப்படி சுற்றிவளைத்து என்னை தூண்டக் கூடாது ” சாதாரணம் போல் சொன்ன மயில்வாகனனின் குரலில் ஏதோ அவள் புரிந்து கொள்ள முடியாத உணர்வு.

இவனிடம் நான் எப்போது முத்தம் கேட்டேன் .அது சரி இப்போது இவன் கொடுத்ததற்கு பெயர் தான் முத்தமா ?  தாரிகா எதையும் யோசிக்க முடியாமல் விரிந்த விழிகளுடன் நின்றிருக்க மெல்ல அவள் முகத்தருகே குனிந்து அவன் கிசுகிசுப்பான குரலில் ” மயக்கம் வரவில்லை ? ”  என்றான்.

தாரிகா இரண்டு கைகளையும் அவன் மார்பில் பதித்து அவனைத் தள்ளிவிட்டு கதவை திறந்து வெளியே போக முயன்றாள். ”  உனக்கு அத்தை பற்றி சுகந்தியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா  ? ” அவனது குரலில் சட்டென நின்றாள்.

 வேண்டும்.  அவளுக்கு தெரிந்து கொள்ளத்தான் வேண்டும் .சங்கரேஸ்வரியின் வாழ்வு எதனாலோ வீணடிக்க பட்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது.  அதனை சரிப்படுத்த வேண்டும் என்று அவள் நினைத்தாள் .  அத்தோடு படிக்கின்ற வயதில் எதையோ காரணம் காட்டி சுகந்தி வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதையும் அவள் விரும்பவில்லை. இதற்கெல்லாம் ஒரு தீர்வு காண வேண்டாமா ?

தாரிகா அறைக் கதவை மூடினாள் .நடந்து போய் கட்டிலில் அமர்ந்து கொண்டாள். ”   சொல்லுங்கள் எல்லாவற்றையும் தெளிவாக சொல்லுங்கள்.  எனக்கு எல்லா விபரங்களும் வேண்டும் .” எதிர்பார்ப்போடு அவனை அண்ணாந்து பார்த்தபடி கேட்டாள்.

மயில்வாகனன் அவள் அருகே கட்டிலில் அமர்ந்து கொண்டான்.  மெல்ல பேசத் துவங்கினான்.

”  இதில் சில எனக்கு சிறுவயதாக இருந்தபோது நடந்த சம்பவங்கள் .எனக்காகத் தெரிந்தவை சில. பிறர் சொல்லி தெரிந்து கொண்டவை சில. சங்கரேஸ்வரி அத்தை மூன்றே மாதங்கள் தான் சுந்தரேசன் மாமாவுடன் வாழ்ந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன் மணம் முடித்து போன மறு வாரத்தில் இருந்தே அவர்களுக்கு இடையே பிரச்சனை வந்து கொண்டே இருந்திருக்கிறது பிரசவத்திற்கான பிறந்த வீடு வந்த அதை அதன் பிறகு அங்கே போகாமலேயே இங்கேயே தங்கிவிட்டார் கணவன்-மனைவிக்கிடையே என்ன பிரச்சனை என்று எனக்கு முழுதாக தெரியாது. என் அப்பா அம்மாவிற்கு கூட தெரியாது என்றே நினைக்கிறேன். அத்தையின் பிடிவாதத்தினால் அப்பாவும் அதை சரியாக கேட்டது இல்லை என்றே தோன்றுகிறது .அதைப்பற்றி நாங்கள் யாரும் விவரமாக கேட்டால் உடனே அத்தை நான் உங்களுக்கு பாரமா ? என்னை விரட்டுகிறார்களா ?  என்று கேட்கத் தொடங்கி விடுவார். அதனால் நாங்கள் அவரை அப்படியே விட்டுவிட்டோம்”

” இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? ”  சற்றே அதிகப்படியான வார்த்தைகள் தான் ஆனால் தாரிகா இதனை கேட்பதற்கு அஞ்சவில்லை.

ஆச்சரியமூட்டும் வகையில் மயில்வாகனன் இந்தப் பேச்சுக்கு கோபப்படவில்லை. அவன் உள் மனதிலும் இது போல் எண்ணம் இருந்திருக்கும் போல. சற்றே கன்றிய முகத்துடன் தலைகுனிந்து அமர்ந்திருந்தான்.

” அத்தை நாங்கள் என்ன சொன்னாலும் உயிரை விட்டு விடுவேன்.  என்று சொல்லத் தொடங்கி இருந்தார்கள் .அதனால் எங்களால் ஒரு அளவுக்கு மேல் அவர்களிடம் பேச முடியவில்லை”

” சரி. பிறகு? ”  உள்ளூர மண்டிய எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்டாள்.

”  சுகந்தி பிறந்து ஆறு மாதம் வரையிலும் மனைவி மீண்டும் வீட்டிற்கு வருவாள் என்று காத்திருந்து பார்த்துவிட்டு மாமாவே அவர்களை அழைத்துப் போக வந்தார். அத்தை அப்போது மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு செத்து விடுவேன் என்று மிரட்டினார். நாங்கள் என்ன செய்வது ? மாமாவை திருப்பி அனுப்பி விட்டோம்”

 ”   பிறகும் சில வருடங்கள் கழித்து மாமா முயற்சிக்க அத்தை மறுக்க இப்படியே நாட்கள் போய் விட்டன. இடையில் மாமா சுகந்தியை பள்ளிக்கு அனுப்பும் போது பள்ளியில் இருந்து தூக்கிக் கொண்டு போய் விட… அத்தை அழுது ஆர்ப்பாட்டம் செய்ய நாங்கள் போய் சண்டை போட்டு அவளை வாங்கிக் கொண்டு வந்தோம் . அதிலிருந்து அவளை முழு பாதுகாப்புடன் தான் எங்கும் வெளியில் அனுப்புவது .பதிமூன்றாவது வயதில் சுகந்தி பெரியமனுஷி ஆனபோது மீண்டும் மாமா அவர்களை அழைத்துப் போக வந்தார். “

”  இந்த முறை மாமா ஒரு வித்தியாசமான கோரிக்கையுடன் வந்தார் .சுகந்திக்கு சடங்கு செய்யும் உரிமை முறைமாமன் என்ற பெயரில் அவரது தங்கை மகன் அபிஷேக்கிற்கு தான் இருப்பதாக சொல்லி அவனுடன் வந்தார். அத்தை மிகுந்த கோபத்துடன் அவர்களை அனுப்ப முயல அவர்களும் பதிலுக்கு முடியாது என்க அன்று மிகப்பெரிய சண்டையாகிவிட்டது .அத்தை என் மகளை என் பிறந்த வீட்டை விட்டு எந்த நாளும் அனுப்பவே மாட்டேன் என்று சபதம் போல் சொல்ல , என் மகளை என் தங்கை மகனுக்கு திருமணம் முடிக்காமல் விடமாட்டேன் என்று மாமா சபதம் சொல்ல அந்த இடமே ரணகளம் போல் ஆகிவிட்டது”

”  அத்தை அன்று சுகந்தியின் சடங்கை முறைமாமன் என்ற பெயரில் என்னை வைத்து செய்து முடித்துவிட்டார் .அத்தோடு அங்கேயே சபையில் வைத்து என் அண்ணன் மகனுக்குத்தான் என் மகள் என்றும் ஊரார் முன்னிலையில் அறிவித்துவிட்டார் .அதையும் பார்க்கலாம் என்று மாமா சவால் விட்டு விட்டு சென்றார் .அன்றிலிருந்து மாமா சுகந்தியை எப்படியாவது அவர்கள் வீட்டிற்கு அழைத்துப் போய் அபிஷேக்கிற்கு திருமணம் முடித்து வைத்து விட வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டே இருக்கிறார் .அதனால் நாங்கள் சுகந்தியை மிக பத்திரமாக வீட்டிற்குள் வைத்து பாதுகாத்து வருகிறோம் “




” ஓ அதனால் தான் அடிக்கடி எங்களை கண்காணித்துக்கொண்டே இருந்தீர்களா? ”  தாரிக்காவினுள் புதிரை ஓரளவு அறிந்து கொண்ட உணர்வு.

”  ஆமாம் நீயும் சுகந்தியும் நெருங்கிப்பழக ஆரம்பித்தது எனக்கு மகிழ்ச்சி என்றாலும் உங்களை நான் கண்காணித்த படியே இருந்தேன். அன்று நீ எழுந்து செல்லும்போது நானும் எழுந்து உங்கள் இருவர் பின்னாலேயே ஆற்றிற்கு வந்தேன். நீங்கள் குளித்துக் கொண்டிருக்கும் போதே திடீரென உள்ளே முழுகுவது போல் தெரிய வேகமாக ஆற்றில் குதித்து உன் முடியைப் பிடித்து இழுத்தேன். சுகந்தி அந்தப் பக்கம் யாராலோ இழுக்கப்பட்டு கொண்டிருந்தாள். உன்னையே அவளின் முடியை பிடித்து இழுக்கும்படி கூறினேன் .அதன் பிறகு இருவரையும் எழுந்து வெளியே போட்டேன்”

மயில்வாகனனின் இலக்கங்கள் தாரிகாவிற்கு ஓரளவு ஒத்துக்கொள்ளும் படியே இருந்தது.”  எல்லாம் சரிதான் .ஆனாலும் உங்கள் மாமாவின் பக்கத்து நியாயத்தை நீங்கள் அலட்சியப்படுத்துவதாகவே எனக்குத் தோன்றுகிறது “

” ம் . இருக்கலாம் ஆனால் எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை “

” ஆனால் நான் அப்படி விடமாட்டேன் “

” என்ன செய்யலாம் என்கிறாய் ? “

” ஏதாவது . நீங்கள் மட்டும் எனக்குக் கொஞ்சம் சுதந்திரம் கொடுக்க வேண்டும்.  பேச்சிலும் செயலிலும்…”

” ம்ஹும் ” மயில்வாகனன் தலையை தடவியபடி யோசிக்க,

”  என்னை நம்புங்கள் சுகந்திக்கு நல்லது மட்டுமே செய்ய வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன் ” தாரிகா அவசரமாக பேசினாள்.

விழிகளை இறுக மூடியபடி சிறிது நேரம் அமர்ந்திருந்த மயில்வாகனன் பின் விழிதிறந்து அவளை பார்த்து  மறுப்பாக தலையசைத்தான் ”  இல்லை .வேண்டாம் இது உன்னால் முடியாது.  நீ பேசாமல் இரு .” அவ்வளவுதான் எழுந்து வெளியே போய்விட்டான்.

என்னையா பேசாமல் இருக்கச் சொல்கிறாய் ?  இரு இதை நான் என்னவென்று பார்க்கிறேன். சுகந்திக்கு உரிய நியாயத்தை செய்யவில்லை என்றால் என் பெயர் தாரிகா இல்லை தனக்குள் ஓர் உறுதி எடுத்துக் கொண்டால் தாரிகா.




What’s your Reaction?
+1
20
+1
10
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!