Serial Stories மல்லிகைப் பந்தல்

மல்லிகைப் பந்தல்-13

(13)

“இந்தா…லலிதா வரிசை சாமானையெல்லாம் எடுத்து தாம்பளத்துல வை. நான் போய் கோமதி கிளம்பிட்டாளான்னு பார்த்துட்டு வர்றேன். வீரமணி வந்தான்னா சீக்கிரமா கிளம்ப சொல்லு. ராவுகாலத்துக்கு முன்னாடி போய் சடங்கு வீட்ல நிக்கனும்” என்று கூறிவிட்டு சுந்தரவள்ளி வெளியே சென்றாள்.

சுந்தரவள்ளியின் வழியில் தூரத்து சொந்தத்தில் ஒரு பெண்ணிற்கு சடங்கு. அதற்குத்தான் சீர் வரிசைகளை வாங்கி வைத்திருந்தாள். கிளம்ப சொல்லி உத்தரவிட்டுவிட்டு சென்றிருந்தாள். 

உள்ளே சென்று பெரிய பெரிய தாம்பாளங்களை எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்தாள் லலிதா. பெரிய பெரிய பைகளில் இருந்த சீர் வரிசைகளை தாம்பாளங்களில் எடுத்து வைத்தாள். பழங்கள், சீனி, சர்க்கரை, மாலை என எடுத்து வைத்தவள் ஒரு பையிலிருந்த பட்டுப் பாவாடை தாவணியை எடுத்து தாம்பாளத்தில் வைத்த போது தன்னையும் மீறி அந்த பாவாடை தாவணியை கைகளில் எடுத்து வைத்துக் கொண்டு அழகுப் பார்த்தாள்.

உமாபதி குழந்தையாகயிருந்த போது அவனுக்கு பெண் குழந்தையின் உடைகளைப் போட்டுப் பார்த்ததும், ரசித்ததும், அவனை அந்தக் கோலத்தில் வித விதமாக புகைப்படங்கள் எடுத்து ஆல்பத்தில் வைத்து ரசித்ததும் ஞாபகத்தில் புரண்டது. ஒருநாள் அந்த ஆல்பத்தை மாமியார் நடுவீட்டில் கிழித்துப் போட்டக் கொளுத்தியதும், பெரிய ரகளை வளர்த்ததும் கூடவே ஞாபகம் வந்தது. 

சில நிமிடங்கள் வேதனையின் உணர்வுகள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அப்படியே அமர்ந்திருந்தாள். 

அதன் பிறகு அப்படி உமாபதியை அலங்கரிப்பதையும், புகைப்படம் எடுப்பதையும் சுத்தமாக நிறுத்திவிட்டாள்.

வீரமணி கூட அவளுக்காக அம்மாவிடம் பரிந்துக் கொண்டு பேசினான். “அம்மா… சின்ன விசயத்தை நீ ஏன் இப்படி பெருசாக்குறே? பொம்பளைப் புள்ளை வேணும்கற ஆசையில அவ இப்படி நடந்துக்கறா. நான்தான் எல்லா ஃபோட்டோவையும் எடுத்தேன். இதெல்லாம் நிறைய வீட்ல நடக்கறதுதானே. என்ன… இதெல்லாம் உமாபதிக்கு விபரம் தெரியறவரைக்கும்தான் செய்ய முடியும். விவரம் தெரிஞ்சுட்டா அவனே இதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டான். விடேன்…”

ஆனால் சுந்தரவள்ளி விடவில்லை. தான் எவ்வளவு கண்டித்தும் லலிதாவின் இந்த செயல் அவளை மிகவும் அவமானப்படுத்துவதாக நினைத்தாள். 

தன் கோபத்தையெல்லாம் வேறு வேறு விதங்களில் காட்டினாள்.




நாளடைவில் லலிதாவும் மெல்ல மெல்ல மாறிவிட்டாள். தன்னுடைய ஆசைகளை அணைப் போட்டு தடுத்துக் கொண்டாள். உமாபதியும் பள்ளிக் கூடம் சென்றான். புடிப்பு விளையாட்டு என வளர்ந்தான். அவளுக்குள் இருந்த பெண் குழந்தையின் மீதான ஆசை அமுக்கப்பட்ட ஒன்றாக இருந்ததே தவிர சுத்தமாக அழிக்கப்பட்ட ஒன்றாக இல்லை. 

இதோ… பட்டுப் பாவாடை தாவணியை தடவிப் பார்க்கும் இந்த நேரத்திலும் அமுக்கப்பட்ட அந்த ஆசைகள் மெல்ல மெல்ல மேலே எழுந்தன. அவளை ஆட்டுவித்தன.

உமாபதி பெண்ணாகயிருந்திருந்தால்…இந்நேரம் வயசுக்கு வந்திருப்பான். அவனும் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறான். 

அவன் மட்டும் பெண்ணாகயிருந்திருந்தால்…இதோ இந்தப் பெண்ணிற்கு நடக்கப் போகும் சடங்கை போல உமாபதிக்கும் சடங்கு செய்திருக்கலாம். பட்டுப்பாவடைக்கட்டி பூவைத்து ஜடை தைத்து கைநிறைய வளையல் போட்டு சந்தனம் பூசி…

கற்பனையில் உமாபதியை பெண்ணாக்கி அவள் கண்ட கோலம் அவளை சிலிர்க்க வைத்தது. இப்படி ஒரு கற்பனை செய்வது மாமியாருக்குத் தெரிந்தாலே போதும் கற்பனை செய்த மூளையை மண்டை ஓட்டைத் திறந்து வெளியே எடுத்து கசக்கி பிழிந்துவிடுவாள். 

‘ம்…நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ பெருமூச்சை வெளியேற்றியவள் பட்டுப் பாவடை தாவணியை தாம்பாளத்தில் வைத்து அதன் மீது வளையல் கொலுசு தங்கச் சங்கிலி எல்லாவற்றையும் வைத்துவிட்டு எழுந்தாள். 

குளித்துவிட்டு கிளம்புவதற்காக துணிகளை எடுத்தக் கொண்டு குளியலறைக்கு சென்றாள். 

ஏதேதோ… நினைவுகளுடன் குளித்து உடை மாற்றிக் கொண்டு தன் அறைக்கு வந்தவளுக்கு கண்ட காட்சி தூக்கி வாரிப்போட்டது.

அங்கே…  

  உமாபதி சீர்வரிசை தட்டில் வைத்திருந்த பட்டுப் பாவடை தாவணியில்!

கண்ணாடி எதிரே   தாவணியை சரி செய்தபடி அவன் தன் அழகை அப்படியும் இப்படியும் திருப்பிப் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான். கைகளில் வளையல்கள். கழுத்தில் சங்கிலி. முகத்தில் பவுடர், பொட்டு கண்மை லிப்ஸ்டிக்….

“உமா….”

சட்டென்று திரும்பியவன் அம்மாவைப் பார்த்து சிரித்தான். “அம்மா… நான் எப்படியிருக்கேன்?” திரும்பி நின்றவனை விரும்பிப் பார்த்தாள்.

அவள் காண நினைத்த கோலம். அந்த பட்டுப் பாவடை தாவணியைப் பார்த்த போது அவளுக்குள் எழுந்த ஆசை இதோ… கண்ணெதிரே…

அவனருகே வந்தவள் அவனை மேலும் கீழுமாகப் பார்த்தாள். உடலெல்லாம் சிலிர்த்து விட்டது. அப்படியே … பெண்ணாக அழகான பெண்ணாக உமாபதி. 

அந்தக் கோலம் அவளுக்குள் சொல்ல முடியாத பரவசத்தை உண்டாக்கியது. இறந்து போன இரண்டு பெண் குழந்தைகளும் ஒன்றாக திடீரென வளர்ந்து அவளுடைய கண்ணெதிரே நிற்பதைப் போலிருந்தது. 

மதுரை மீனாட்சியம்மனாய்…தெய்வீக அழகுடன் சிரிக்கும் உமாபதியை வாரி அணைத்துக் கொள்ள அவளுடைய உணர்வுகள் துடித்தன. 

சின்ன வயதில் வித விதமாக பெண் குழந்தையின் உடைகளை அவனுக்குப் போட்டு ரசித்தது, மகிழ்ந்தது நினைவில் புரண்டது. வெகு நாட்களாக அப்படி செய்யாமல் தன் ஆசைகளுக்கு அணைப் போட்டு வைத்திருந்தவளுக்கு, வெளியில் மற்றவர்களின் பெண் குழந்தைககளைப் பார்க்கும் போது எழும் கட்டுக்கடங்கா ஆசைகளை கட்டி வைத்தவளுக்கு இதோ….

உமாபதியின் இந்தக் கோலம்….

அவள் எதிர்பாராதது என்றாலும்… ஏதோ இனம் புரியாத சுகத்தை தந்தது. அதிர்ச்சியாக இருந்தாலும் பெரும் ஆனந்தத்தை தந்தது.

“உமா… உமா… என்னடா இது?”

அவன் அம்மாவின் கைகளை ஆசையுடன் பற்றிக் கொண்டான். “அம்மா… எப்படியிருக்கேன் நான்” என்றான்.




லலிதாவிற்கு கண்களிலிருந்து கண்ணீரே வந்துவிட்டது. “ரொம்ப… ரொம்ப… அழகாயிருக்கேடா. சத்தியமா நீ இப்படி டிரஸ் பண்ணிக்கிட்டு நிப்பேன்னு நினைக்கலைடா. இந்த பாவாடை சட்டையை எடுத்து சீர்ல வைக்கும் போது இதைத்தான்டா நினைச்சேன். நீ..பொண்ணா பிறந்திருந்தா இந்நேரம் வயசுக்கு வந்திருப்பே. உனக்கும் இப்படியெல்லாம் அலங்காரம் பண்ணிப் பார்த்திருப்பேன்னு நினைச்சேன்டா. ஆனா… நீ இப்படி எனக்கு ஆச்சரியத்தைக் கொடுப்பேன்னு நினைக்கலைடா…” பரவசத்தில் திளைத்தவளாக லலிதா சொல்ல”  

அவன் அம்மாவின் தோளில் இருகைகளையும் போட்டுக் கொண்டான். தன் நெற்றியால் அம்மாவின் தலையில் செல்லமாக இடித்தான்..

“அம்மா… சின்ன வயசுல நீ என்னை பெண்ணா அலங்கரிச்சு நிறை ஃபோட்டோஸ் எடுத்ததாகவும், அதையெல்லாம் பாட்டி எரிச்சுட்டதாகவும் ரொம்ப வேதனையோட சொல்லுவியே. நான் பெண்ணா பிறந்திருந்தா நீ ரொம்ப சந்தோ\ப்பட்டிருப்பேன்னும் அடிக்கடி சொல்லுவியேம்மா. இப்ப இந்த பட்டுப் பாவாடை சட்டையைப் பார்த்ததும் உன் மனசு என்ன நினைச்சிருக்கும்னு எனக்கு தோணுச்சு. அதான்…உனக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுக்கனும்னு இப்படிப் பண்ணினேன்.”

“உன்னை இப்படியேப் பார்த்துக்கிட்டிருக்கனும் போலிருக்குடா. நீ மட்டும் பெண்பிள்ளையாயிருந்திருந்தா இப்படித்தான் ரொம்ப அழகாயிருந்திருப்பே.”

சொல்லியவாறே அவனுடைய கையை எடுத்து வரிசையாகப் போட்டிருந்த வளையல்களை வருடினாள். அவனுடைய அழகில் சில கணங்கள் மெய் மறந்து நின்றவள் திடீரென சுய நினைவு வந்தவளாக பதறினாள்.

“ஐய்யோ… உங்க ஆச்சி இப்ப வந்துடுவாங்க. சீக்கிரம் இதையெல்லாம் கழட்டித்தா. சீர் வரிசையில வச்சுடறேன்” அவசர அவசரமாக அவன் பாவாடை தாவணியை உருவினாள். மடித்து எடுத்துக்கொண்டு வெளியே ஓடி சீர்வரிசையில் வைத்தாள். 

சீர் வரிசைகளை மறுபடி அடுக்கி சரிப்பார்த்துக் கொண்டிருந்த அம்மாவையே தானிருந்த அறையின் ஜன்னல் வழியேப் பார்த்தான் உமாபதி.

“அம்மா… பெண் குழந்தையின் மீது உனக்கு இத்தனை ஆசையா? நான்… நான்…பெண்தான் என்பதை நீ அறிவாயா?’ மானசீகமாக அம்மாவைப் பார்த்துக் கேட்டான் உமாபதி. 




                               

What’s your Reaction?
+1
9
+1
12
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!