Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-6

6

தூக்கமில்லாமல்‌ தவித்தாள்‌ பார்வதி. வேண்டாமென்று ஒதிக்கிய சம்பவம் கண்முன்னால்‌ வந்து நின்றது. மூன்று வருடங்களுக்கு முந்தைய இரவு இதேபோலத்தான்‌ தூக்கம்‌ வாராமல் விடிய விடிய விழித்துக்கொண்டிருந்த பார்வதி விடிந்ததும்‌ முதல்‌ வேளையாக மகனின்‌ அறைக்கதவை திறந்து பார்த்தாள்‌.  

ஆழ்ந்த உறக்கத்திலிருந்த இளமாறன்‌ மெல்ல திரும்பி படுத்தபோது தலைக்கடியில்‌ இருந்த செல்லில்‌ ஒளி வருவதும்‌ போவதுமாய்‌ இருந்தது. செல்போனை எடுத்தாள்‌ கைப்பட்டவுடன்‌ ‘ஆன்‌’ ஆனாது செல்போன்‌. அந்த அழகிய பெண்ணின்‌ முகம்‌ பிரகாசித்தது. ஒரு நிமிடம்‌ பார்வதியால்‌ தன் கண்களையே நம்ப முடியவில்லை. கண்ணை கசக்கி விட்டு பார்த்தாள்‌. உண்மையிலேயே தேவலோக ரம்பை போல அந்தப்‌ பெண்ணின்‌ அழகு ஜொலித்தது. யார்‌ இந்த பொண்ணு என்று கேள்வியோடு மகனையும் போனையும்‌ மாறி மாறி பார்த்தாள்‌ பார்வதி.

அரவம்‌ கேட்டு எழுந்த இளமாறன்‌, அறையில்‌ தாய்‌ நிற்பதை பார்த்துவிட்டு சோம்பல்‌ முறித்தபடி எழுந்து நின்றான்‌.

“அம்மா காபி வேணாம்‌..பசிக்குது ஸ்ட்ரைட்டா டிபனே சாப்புட்டுகிறேன்‌…” என்றான்‌ பதிலேதும்‌ சொல்லாமல்‌ பார்வதி நிற்கவே கண்களைத்‌ திறந்து நன்றாக பார்த்தபோது அவள்‌ கையில்‌ இருந்த செல்போன்‌ முகத்தில் அதிர்ச்சி ரேகையை படர விட்டது.

“செல்லுல இருக்கிற பொண்ணு யாருடா?” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள்‌ பார்வதி.

“அதுவா…அது வந்து…அது வந்து”

“உண்மையை சொல்லுடா ஏன்‌ என்கிட்ட மறைக்கிற? “நேத்து சொல்லலாம்னுதான்‌ நினைச்சேன்‌…நீ…எங்க என்னை பேச விட்டா தானே? உன்‌ புருஷனோட புராணத்தை பாட ஆரம்பிச்சுட்டே!…சரி காலையில பேசிக்கலாம்னு விட்டுட்டேன்‌ இவ யாருன்னு தெரியுமா?”

“தெரியாது….ஆமா யாரு இவ? இவ போட்டோவை எதுக்கு போன்ல வச்சிருக்கே?”  

“அது ஒன்னும்‌ இல்லம்மா உனக்கு இவளை நல்லாவே தெரியும்‌ எயித்திலிருந்து நானும்‌ இவளும்‌ ஒன்னாதான்‌ படிச்சோம்‌. நம்ம வீட்டுக்கு கூட ஒரு முறை வந்திருக்கா!! உனக்கு…சரியா ஞாபகம்‌ இல்லன்னு நினைக்கிறேன்‌. அப்பெல்லாம்‌ ஃபிரண்டாதான்‌ இருந்தோம்‌ கடந்த மூன்று வருடமா ஒருத்தர ஒருத்தர்‌ விரும்புறோம்‌. கல்யாணம்‌ பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்‌. சரி அவங்க விட்ல சம்மதம்‌ வாங்கிகிட்டு அதுக்கு அப்புறம்‌ உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்‌ ஆனா…”

“போதும்‌ வாய மூடு…நீ எதுவும்‌ சொல்ல வேணாம்‌ எங்களோட சம்மதமே உனக்கு தேவையில்லை. நீ எவளையாவது கட்டிகிட்டு எக்கேடாவது கெட்டுப் போ…” என்று திட்டிக்‌ கொண்டே அறை கதவருகே சென்ற அம்மாவை சட்டென்று எழுந்து சென்று கைகளை பற்றி கொண்டான்‌ இளமாறன்‌.

“அம்மா ப்ளீஸ்‌ இப்பவாவது நான்‌ சொல்றத கேளு நான்‌ அந்த பொண்ண விரும்புறேன்‌. ஆனா அவங்க அப்பாவுக்கு இதுல சுத்தமா விருப்பமில்லை. அவர்‌ நம்ம ஜாதில்‌ பொண்ண கொடுக்க மாட்டாராம்‌ தெளிவா சொல்லிட்டார்‌”.

“ஏன்‌…நாம எதுல குறஞ்சிட்டோம்?‌…”

“அவங்க சைவமாம்‌ நாம அசைவமாம்‌ அதுதான்‌ காரணம்‌. கல்யாணம் நடக்கிறதுக்கு வாய்ப்பே இல்லைன்னு சொல்லிட்டார்‌? ஆனா எப்படியாவது அவ அப்பா மனசு மாறுவாருன்னு அவ நம்புறாம்மா. இன்னும்‌ ரெண்டு வருஷம்‌ காத்துகிட்டு இருக்கலாம்னு சொல்றா. எனக்கு அவ பேச்சுல உடன்பாடில்லை எப்ப அந்த ஆளு மனசு மாறுவது?”

“ஒருமுறை நீயும்‌ அப்பாவும்‌ அவர்கிட்ட பேசினா ஒரு வேளை அவர்‌ மனசு மாற வாய்ப்பிருக்கு. அதுக்காகத்தான்‌ நாளைக்கு என்‌ கூட வான்னு நேத்து நைட்டு சொன்னேன்‌. அதை நீ புரிஞ்சுக்காம கோபப்பட்டு பேசினே. அவ ரொம்ப நல்ல பொண்ணும்மா அழகிலும்‌ சரி அறிவிலும்‌ சரி ரொம்ப கெட்டிக்காரி. அவ மட்டும்‌ உனக்கு மருமகளா வந்தா கண்டிப்பா உன்னை பெத்த தாயாட்டம் கவனிச்சுப்பா! அந்த நம்பிக்கை எனக்கிருக்கும்மா. ப்ளீஸ்ம்மா என்னோட வாழ்க்கையே உன்‌ கையில தான்‌ இருக்கு…” கண்கலங்கினான்‌.




ஒரு நிமிடம்‌ ஆடிப்போனாள்‌ பார்வதி பிள்ளைகளுக்காதானே வாழ்கிறோம்‌. அதுங்களுக்கு ஆசைப்பட்ட வாழ்க்கை அமைச்சு கொடுத்தா என்ன தப்பு? ஜாதியாவது மதமாவது எல்லாம்‌ மனுசனா பார்த்து உண்டாக்கினதுதானே? எப்படியாவது அவர்கிட்ட சொல்லி அவன்‌ ஆசைப்பட்ட பெண்ணையே அவனுக்கு கல்யாணம்‌ பண்ணி வச்சிடனும்‌. ஏதோ ஒரு டாக்டர்‌ பொண்ணை பார்த்து வச்சிருக்கேன்னார்‌. அவங்களுக்கு இது இல்லன்னா இன்னொரு மாப்பிள்ளை கிடைக்காமலா போயிடும்‌? ஆனா நம்ம புள்ள ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்காமல்‌ போயிடுமில்லையா? என்று தாயின்‌ மனம்‌ அழற்றியது.




“சரி…அப்பா கிட்ட பேசுறேன்‌ அவர்கிட்ட கொஞ்சம்‌ பக்குவமா நடந்துக்கோ எதுவா இருந்தாலும்‌ மிரட்டி உருட்டி ஒன்னும்‌ சாதிக்க முடியாது. கனிந்து போனா நினைச்சது சாதிக்கலாம்‌ என்று சொல்லிவிட்டு சீக்கிரம்‌ பல்ல தேச்சிட்டு வா டிபன்‌ சாப்பிடலாம்‌… என்று சமையலறைக்கு நுழைந்தாள் பார்வதி.

அரை மணி நேரத்தில்‌ பணியாள்‌ சாந்தி சமைத்து வைத்த உணவு அனைத்தும்‌ டேபிளில்‌ இருக்க, இளமாறன்‌ குளித்து வேறு உடையில் வந்தான்‌. அதற்குள்‌ கணவரும்‌ ரெடியாகி வரவே, இருவரையும்‌ டேபிளில்‌ அமர வைத்து பரிமாறினாள்‌ பார்வதி. கணவர்‌ முகமெடுத்து மகனை பார்க்கவில்லை என்பது இவளுக்கு ரொம்பவும்‌ மன கஷ்டத்தை கொடுத்தது. எல்லாம்‌ சரியாயிடும்‌ பக்குவமா அவர்கிட்ட பேசினா புரிஞ்சுப்பார்‌. 

அப்பாவிடம்‌ விஷயத்தை சொல்லிட்டியா என்று கண்ஜாடையால்‌ கேட்டான்‌ இளமாறன்‌. இல்லை… என்று இடது வலது புறமாய்‌ தலையை அசைக்க அப்புறம்‌,“ஆபீஸ்‌ விஷயமா சீக்கிரம்‌ போகணும்‌ பா…” என்றான்‌ எங்கோ பார்த்தபடி “நான்‌ என்ன சொல்ல போறேன்‌?” விட்டேத்தியாக சொன்னார் மணாளன்‌.

மகன்‌ கிளம்பி வெளியே செல்லும்‌ வரை அமைதியாக இருந்தவர்‌ “என்னடி ஆச்சு உன்‌ மகனுக்கு? தானா வந்து என்கிட்ட பேசுறான்‌? ஏதாவது காரியம்‌ ஆகணுமா? பிசினஸ்க்கு காசு பணம்‌ ஏதாவது தேவைப்படுதா?

“அதெல்லாம்‌ ஒன்னும்‌ இல்லைங்க அவன்‌ மனசுக்குள்ள ஒரு விஷயத்தை போட்டு புழுங்கிகிட்டு இருக்கான்‌ அதை சொல்ல தயங்கி கிட்டு தான் தவிக்கிறான்‌.”

“என்னடி சொல்றா?  என்ன விஷயத்தை போட்டு  புழுங்கிகிட்டு இருக்கான்‌? பெரிய பிசினஸ்‌ மேக்னட்‌…தனியா போய்‌ பிசினஸ்‌ ஆரமிச்சிருக்கான் அவனுக்கு என்ன பிரச்சனை வரப்போவுது? பிரச்சனைகள்‌ எல்லாம்‌ எனக்கு தாண்டி அவன்‌ நல்லாதானே இருக்கான்‌.”

“அதுக்கு இல்லங்க அவன்‌ யாரோ ஒரு பெண்ணை ல..லவ் பண்றானாம்‌…அந்த பொண்ணு பெரிய பணக்காரவிட்டு பொண்ணாம்‌. கோடிக்கணக்கில்‌ சொத்து இருக்குதாம்‌ நம்மள விட அதிக வசதியானவங்கன்னு சொல்றான்‌”.

“ம்ம்‌…”

“ஆனாலும்‌…ஆனாலும்‌…”

“லவ்‌ பண்ற அளவுக்கு வந்தவனுக்கு என்ன பிரச்சனை அவ கூட போய் ரெஜிஸ்டர்‌ ஆபீஸ்‌ கல்யாணம்‌ பண்ணிக்க வேண்டியது தானே?” 

“என்னங்க இப்படி சொல்றீங்க அவன்‌ உங்க சம்மதத்தை வேண்டி கேட்கிறான்‌. அவன்‌ இஷ்டத்துக்கு போகணும்னா எப்பவோ போயிருக்க மாட்டானா?” என்ற பார்வதி மகன்‌ தன்னிடம்‌ பேசியதே கணவரிடம் ஒப்பித்தாள்‌.

“அதானே பார்த்தேன்‌ சோழிய குடுமி சும்மா ஆடாதுன்னு சொல்லுவாங்க காரணம்‌ இல்லாம்‌ அவன்‌ நம்ம கிட்ட வரமாட்டான்‌. கல்யாணம் நடக்கணும்னா அப்பா அம்மாவுடைய உதவி தேவைப்படுது. நாம போய் பேசணும்னு நினைக்கிறான்‌ அதுக்காகத்தான்‌ நம்மள பகடை காயா பயன்படுத்த பார்க்கிறான்‌…”

“சரிங்க அவ நம்ம புள்ளைங்க..அவன்‌ கஷ்டப்பட்டால்‌ அது நமக்கு கஷ்டந்தானே?. அதே அவன்‌ நல்லா இருந்தா நமக்கு தான்‌ சந்தோஷம்‌. அவனுக்கு ஒரு வாழ்க்கை அமைத்துக்‌ கொடுத்துவிடலாம்‌. அதுவும்‌ அவன் ஆசைப்பட்ட வாழ்க்கை அமைத்துக்‌ கொடுத்தால்‌ வாழ்க்கை முழுவதும் அவன்‌ சந்தோஷமா இருப்பானில்லையா? அந்த பொண்ணு கூட பார்த்தேன்‌ ரொம்ப அழகா இருக்கா! சினிமா நடிகை மாதிரி இருக்கா கூட படிச்சபொண்ணு தான்‌ அஞ்சு வருஷமா பழக்கமாம்‌…” 




 

“சீ..கண்டிக்க துப்பு இல்ல அவன்‌ காதல பத்தி வர்ணிச்சிட்டு இருக்குறா சை இதெல்லாம்‌ ஒரு ஜென்மம்‌… என்று பாதி சாப்பிட்டுக்‌ கொண்டிருக்கும் போதே கையை உதறிவிட்டு எழுந்தார்‌.

“என்னங்க எதுவும்‌ சொல்லாம போறீங்க நீங்க ஒருமுறை அந்த பொண்ணோட அப்பா கிட்ட பேசினா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் ஒத்துப்‌ போகலன்னா விட்டுடலாம்‌”. சற்று நேரம்‌ தரையை பார்த்தபடி நின்றவர்,

“சரி எப்ப பாக்கணும்‌? எந்த இடத்தில்‌ பார்க்கனுன்னு அவனையே கேட்டு சொல்லு. என்ன பண்றது தலையெழுத்து எவன்‌ எவன்கிட்டே எல்லாம் போய்‌ பேசி என்‌ மானம்‌ மரியாதை இழக்கணும்னு இருக்கு…”

“ரொம்ப சந்தோஷமா இருக்குங்க…”

“என்னது என்‌ மானம்‌ போறது உனக்கு சந்தோஷமா இருக்கா”

“ஐயோ நான்‌ அப்படி சொல்லலைங்க….”

“ஆமா இதுல ஒன்னும்‌ குறைச்சல்‌ இல்லை” என்று சொல்லிக்‌ கொண்டே வாசலில்‌ இறங்கி காரை நோக்கி நடந்தார்‌. கணவன்‌ தலைமறைந்த உடன்‌ ஓடி வந்து போனை எடுத்து மகனுக்கு கால் பண்ணி விஷயத்தை சொன்னாள்‌.

“இதிலிருந்து என்ன தெரியுதுன்னா உங்க அப்பா உன்‌ கல்யாணத்துக்கு பச்சைக்கொடி காட்டிட்டார்‌.”

“எனக்கு நல்லதாகத்தான்‌ நடக்கும்‌…”

“சரி நீ அந்த பொண்ணு கிட்ட சொல்லி அவங்க அப்பா கிட்ட பேச சொல்லு. எந்த இடத்துல எத்தனை மணிக்கு மீட்‌ பண்ணலான்னு கேட்டு சொல்லு புரியுதா: “சரிமா தேங்க்யூ மா…” என்று மகனின்‌ குரலில்‌ தெரிந்த துள்ளல்‌ தாயின்‌ முகத்தில்‌ மலர்ச்சியை உண்டாக்கியது.

ஆனால்‌ நாம ஒன்னு நினைக்க, தெய்வம்‌ ஒன்னு நினைக்குன்னு சொல்லுவாங்க அப்படித்தான்‌ அன்றைய சந்திப்பு தோல்வியை தழுவியது. உங்க பையன்‌ எனக்கு மாப்பிள்ளையா வந்தா முதல்‌ பலி நானாகத்தான் இருப்பேன்‌ என்றார்‌ அத்தோடு விடாமல்‌ தன்‌ மகளையும்‌ “எங்க அப்பாதான்‌ எனக்கு முக்கியம்‌ அவருக்கு பிடிக்காத விஷயத்தை நான்‌ செய்யமாட்டேன்‌…” என்று சொல்லவைத்துவிட்டார்‌. இரு குடும்பமும்‌ வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இளமாறன்‌ தன்‌ பெற்றோரை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்‌. அன்றிலிருந்து இளமாறனின்‌ மொத்த சந்தோஷமும்‌ காணாமல்‌ போனது. அவன்‌ முன்புப்போல்‌ யாரிடமும்‌ பேசுவதில்லை. எந்த விஷேசத்திலும்‌ கலந்து கொள்வதில்லை. இளமாறனின்‌ முகத்தில்‌ நிரந்தர இருள்‌ சூழ்ந்து விட்டது.

“அம்மா…அம்மா…தூங்குறீங்களா? இன்னைக்கு கோவிலுக்கு போகனுன்னு சொன்னிங்களே?ம்மா.”

ஷோபாவில்‌ சாய்ந்து அமர்ந்திருந்த பார்வதி பட்டென்று கண் விழித்தெழுந்தாள்‌. எதிரில்‌ பணிப்பெண்‌ சாந்தி நின்றிந்தாள்‌.

“பகல்ல என்னைக்கி தூங்கியிருக்கேன்‌?”




“இன்னைக்கு வெள்ளிக்கிழமை கோயில்ல பூஜை பண்ண போகனுன்னு சொன்னீங்களே? அதான்‌ ஞாபகப்படுத்தினேன்மா…”

“ஆமாம்‌ ஆமாம்‌..போகணும்‌. நீ போய்‌ பூஜைக்கு தேவையானதை எல்லாம்‌ எடுத்துவை.” சாந்தியை அனுப்பிவிட்டு ஹாலுக்கு வந்தாள்‌.

அந்த நேரத்தில்தான்‌ வெளிகேட்டை யாரோ தட்டும்‌ சத்தம்‌ கேட்டது. காலிங்‌ பெல்‌ இருக்கே அடிக்க வேண்டியதுதானே? முணுமுணுப்போடு சாந்தியை அழைத்தாள்‌.

“கேட்டை யாரோ தட்டுறாங்க யாருன்னு போய்‌ பாரு சாந்தி..” என்று அனுப்பி வைத்தார்‌.

“அம்மா யாரோ ஒருத்தர்‌ வந்து இருக்காரு யாருன்னு தெரியல பேரைக் கேட்டா பேரு கண்ணனாம்‌ தேங்காய்‌ மண்டிக்காரர்னு சொல்றார்‌”. 

சட்டென்று முகம்‌ மாறியது பார்வதிக்கு ஐயோ இளமாறனுக்கு பொண்ணு பார்த்த கண்ணனா? என்ன பதில்‌ சொல்றது வீட தேடியே வந்துட்டாறே? என்ற பதற்றம்‌.

“உள்ள வர சொல்லு சாந்தி? என்று சொல்லி அனுப்பினார்‌ உள்ளே வந்த கண்ணன்‌,

“அக்கா நல்லா இருக்கீங்களா இந்த வழியா ஒரு வேலை விஷயமா வந்தேன்‌. அப்படியே உங்கள பாத்துட்டு போகலாம்னு…!”

“வாங்க…வாங்க…முதல்ல உக்காருங்க…”

“தேங்காய்‌ எடுத்துட்டு வந்திருக்கேன்‌ வாசலில்‌ வச்சிருக்கேன்‌.”

“ரொம்ப தேங்க்ஸ்பா என்ன சாப்பிடுறீங்க காப்பி சாப்பிடுறீங்களா?”

“அதெல்லாம்‌ ஒன்னும்‌ வேணாம்‌. மாமா வெளியில போயிட்டாரா?

“ஆமாம்‌…”

“வர புதன்கிழமை பெண்‌ பார்க்க வர்றதா சொல்லி இருந்தீங்க அதையும் கேட்டுட்டு போகலாம்னு தான்‌ வந்தேன்‌…”

என்ன பேசுவது என்று புரியாமல்‌ யோசித்தாள்‌ பார்வதி .

“அவரை விட்டு பேச சொல்றே சரிங்களா?” என்று அவருக்கு பிஸ்கட் காபியை கொடுத்து அனுப்பி வைத்தாள்‌.




What’s your Reaction?
+1
21
+1
20
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!