Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-5

5

கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்த செம்பருத்திக்கு படிப்பில்‌ கவனம் செல்லவில்லை. வரும்‌ வழியில்‌ தோழியை நிறுத்திவிட்டு, ராஜாவை பற்றின தகவல்‌ ஏதாவது கிடைத்ததா என்று அந்த ஸ்டூடியோவுக்கு சென்று

விசாரித்தாள்‌. ஸ்டுடியோகாரன்‌ கையை விரித்தான்‌. உங்க நம்பர்தான் எங்கிட்ட இருக்கே மேடம்‌…ஏதாவது தகவல்‌ கிடைத்தால்‌ சொல்றேன் என்றான்‌. 

“ஆறு மாசமா இதே பதிலைத்தான்‌ சொல்றீங்க? நான்‌ அவர்‌ கிட்ட பேசி ஆறு மாசமாகுது. அவர்‌ போன்‌ என்னாச்சு வேற யார்கிட்டையாவது கேட்கலாமில்லையா?

“அவன்‌ மும்பையில இருக்குற வரைக்கும்‌ வாரத்துக்கு ஒரு முறை அவன் கூட பேசிக்கிட்டுதானே இருந்தீங்க…? இப்ப அவன்‌ இந்தியாவிலேயே இல்லையே?”

“ம்ம்‌…நீங்க கொடுத்த ரெண்டு நம்பர்லேயும்‌ ட்ரை பண்ணினேன்‌ ஃபோனே போகல…”

“கப்பல்ல வேலை செய்றவன்‌ மேடம்!‌ ஒரே இடத்துல இருக்க மாட்டானில்லையா? நடுகடல்ல சிக்னலும்‌ கிடைக்காது? அவனா போன் பண்ணினாதான்‌. கண்டிப்பா போன்‌ பண்ணுவான்‌ கொஞ்சம்‌ வெயிட் பண்ணுங்க. எனக்கு பண்ணினாலும்‌ உடனே உங்களை கூப்புடுறேன்‌”.சலிப்போடு அங்கிருந்து கிளம்பினாள்‌.

சுபா இறங்கி கொண்டு கையசைத்தது கூட அவளுக்கு நினைவில்லை. விட்டு வாசலருகே அப்பா நின்று கொண்டிருப்பது மட்டும்‌ தெரிந்தது.

“இங்கே நிறுத்துங்க…” என்று சுய உணர்வு பெற்றவளாய்‌ தீடீரென்று ஆட்டோவை நிறுத்த சொல்லி இறங்கிக்கொண்டு கையில்‌ கசங்கி கிடந்த நூறு ரூபாய்‌ நோட்டை ஆட்டோகாரரிடம்‌ கொடுத்துவிட்டு தன்‌ அப்பாவின் அருகில்‌ வந்தாள்‌.

“என்னடா என்னாச்சு முகமெல்லாம்‌ வாடிக்கிடக்கு?” என்று கேட்டுக்கொண்டே மகளுடன்‌ விட்டிற்குள்‌ நுழைந்தார்‌ விநாயகம்‌. அன்று மட்டுமல்ல அதற்கு அடுத்து வந்த இரண்டு நாட்களும்‌ செம்பருத்தி முக வாட்டத்தோடுதான்‌ இருந்தாள்‌.  




கதவை தட்டும்‌ சத்தம்‌ கேட்டு பழைய நினைவுகளை ஒதிக்கிவைத்துவிட்டு கதவை திறந்தாள்‌ செம்பருத்தி.

“அக்கா…அம்மா… உன்னை சாப்பிட கூப்பிடுறாங்க” என்றாள்‌ தங்கை வாணி. 

“அதுக்கு ஏன்‌ கதவ போட்டு இந்த தட்டு தட்டுறே? குரல்‌ கொடுத்தா வரமாட்டேன்னா?” கோபித்துக்கொண்டே ஹாலுக்கு வந்தாள்‌ செம்பருத்தி. அன்று இரவு சாப்பிட அமர்ந்த போது மீண்டும்‌ அந்த மாப்பிள்ளை இளமாறன் பற்றின பேச்சு எழுந்தது.

“அவங்க பொண்ணு பாக்க எப்ப வராங்க?” என்று அம்மா ஆரம்பித்தாள்‌.

“அடுத்த வாரம்‌ புதன்கிழமை சாயந்திரம்‌ வர்றதா சொன்னாங்க! அன்னைக்கு ஒரு நாள்‌ செம்பருத்தியை லீவு போட சொல்லிட்டு பியூட்டி பார்லர் கூட்டிட்டு போயிட்டு வா…

“எதுக்குங்க பியூட்டி பார்லர்‌ எல்லாம்‌ நாம சிம்பிளா உட்கார வைக்கிறதுதான் நல்லது…”

“என்னடி அப்படி சொல்ற? என்‌ மக அழகுதான்‌ இல்லன்னு சொல்லல! ஆனா அவங்க அம்மாவே அவ்வளவு மேக்கப்‌ போட்டுக்கிட்டு இருக்காங்க! நாம எதுக்கு சிம்பிளா இருக்கணும்‌?. இன்னமும்‌ நீ பழைய காலத்திலேயே இருக்குறேன்னு நினைகிறேன்‌. அவளுக்கு அலங்காரம்‌ பண்ணி கூட்டிட்டு வா என்ன ஒரு ஆயிரம்‌ இரண்டாயிரம்‌ செலவாகும்‌ அவ்வளவுதானே? என்‌ 

பொண்ணுக்கு இது கூட செய்ய மாட்டேனா?” மகளுக்கு அப்பாவின்‌ பேச்சு ரசிக்கவில்லை. 

“அப்பா எதுக்குப்பா இந்த ஃபார்மாலிட்டிஸ்‌ எல்லாம்‌ கேஃசுவலா பாக்கணும்‌. இப்படி விட்டுக்கு வர வச்சு இதுதான்‌ பொண்ணு இதுதான்‌ மாப்பிள்ளை என்று காண்பிக்கிறது ஒரு மாதிரி இருக்குப்பா…?”  

“ஆமாப்பா அக்கா சொல்றது கரெக்ட்தான்‌ இதெல்லாம்‌ சினிமாவுலதான்  காமிப்பாங்க…இப்பல்லாம்‌ யாரு இப்படி பண்றா?” வாணி தன்‌ பங்குக்கு சொல்லவும்‌,

“அட நம்ம வாணிக்கு கூட விவரம்‌ தெரிஞ்சு இருக்கே?” என்று அப்பா சொல்லக் ‘களுக்’ கென்று மற்ற இருவரும்‌ சிரித்தார்கள்‌ வாணிக்கு வெக்கமாய்‌ போய்விட்டது.

“அவ என்ன சின்ன குழந்தையா? பதினொன்னு படிக்கிறாளே…” என்கிறாள்‌ தேவகி. 

எப்படியாவது இந்த அலைன்ஸ்சை வரவிடாம பண்ணிடனும்‌ ஏன்னா ராஜாதான்‌ என்‌ மனசுல ஸ்ட்ராங்கா உட்கார்ந்திருக்கான்‌.’ அவனை எப்படியாவது கண்டுபிடிச்சு அவன்‌ கூட பேசி என்‌ மனசுகுள்ள மறைத்து வைத்திருக்கிற காதலை அவனிடம்‌ சொல்லி எல்லாம்‌ நடந்தா நல்லாதான் இருக்கும்‌. ஆனால்‌ அது எப்போது நடக்கும்‌?. ஒருவேளை என்னுடைய நினைப்பு பொய்த்துப்போனால்‌? ஜயோ அவனில்லாதா ஒரு வாழ்க்கையை என்னால்‌ நினைத்துகூட பார்க்க முடியவில்லையே?. எது எப்படியோ இப்போதைக்கு இந்த பெண்‌ பார்க்கும்‌ படலத்தை நிறுத்தியாக வேண்டும்‌. இதற்கு ஒரே ஆள்‌ யாருன்னா அத்தைதான்‌. அத்தை மாலதிக்கிட்ட சொன்னாதான்‌ இந்த விஷயம்‌ முடிவுக்கு வரும்‌.

மறுநாள்‌ ஞாயிற்றுக்கிழமை கல்லூரி லீவு என்பதால்‌ “அத்தை வீட்டுக்கு போறேம்மா” என்று ‌வீடு பக்கத்தில் மட்டும்‌ ஓட்டுவதற்காக அப்பா வாங்கிகொடுத்திருந்த பழைய ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்‌.

“சரி போயிட்டு சீக்கிரமா வா…உங்க அத்த கல்யாணத்த பத்தி ஏதாவது வாயை கிளறுவா அமைதியா வந்துடு. நல்லது செய்யாட்டாலும்‌ கெட்டது செய்றதுக்குதான்தான்‌ ஆளுங்க நிறைய இருக்காங்க…” என்று அம்மா புலம்பியதை காதில்‌ வாங்கியப்படி மெல்ல வீட்டை விட்டு கிளம்பினாள் செம்பருத்தி.

திடீரென்று அண்ணன்‌ மகள்‌ விட்டுக்கு வரவும்‌ முகமெல்லாம்‌ பல்லானது மாலதிக்கு “வாடி என்‌ மருமகளே என்ன திடீர்னு இந்த இந்த பக்கம்‌? அத்தை ஞாபகம்‌ வந்துடுச்சா?”

“ஒன்னுமில்ல அத்த…சும்மாதான்‌. மாமா ஊர்ல இருந்து வந்துட்டாரா? நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க மாமா ஊர்ல இருந்து எப்ப வந்தார்‌.?”

“வந்துட்டாரு அந்த டேபிள்‌ மேல மெட்ராஸ்‌ மிக்ஸர்‌ இருக்கு எடுத்து சாப்பிடு. என்று சொன்னவள்‌ செம்பருத்திக்கு காபி போடுவதற்காக கிச்சனுக்குள்‌ நுழைந்தாள்‌.




“அத்தை கீதா அக்கா எப்படி இருக்காங்களா இந்த வருஷம்‌ தீபாவளிக்கு ஊருக்கு வராங்களா?”

“எங்க வர்றது அவளே மாமியார்‌ கொடுமையில கிடக்கிறாள்‌. நில்லுனா நிக்கணும்‌. உட்காருன்னா உட்காரனும்‌. அப்படியில்ல வச்சிருக்கா அவ மாமியார்‌ அம்மா வீட்டுக்கு போக கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காளாம்‌. புருஷங்காரனும்  ஒத்து ஊதுறானாம் எதுவும்‌ வேணாம் வீட்டுக்கு வந்துடுன்னு சொல்கிறேன்‌ கேட்டதானே? கொஞ்ச நாள் பாக்குறேன்னு சொல்றா என்ன பண்றது?”

“முன்ன பின்ன தெரியாத குடும்பத்துல கல்யாணம்‌ பண்ணி கொடுத்துட்டு நான்‌ படுற அவஸ்தை கொஞ்சம்‌ நஞ்சமில்லை. இதே கவலை தான் எங்களுக்கு அதுக்காகத்தான்‌ உன்‌ கல்யாணத்தை கூட அவசரப்பட வேணான்னு சொல்றேன்‌. எங்க அண்ணா நிதானமாத்தான்‌ இருக்கு, உங்க அம்மா தான்‌ எதையாவது சொல்லி உன்ன எவன்‌ தலையிலாவது கட்டி வச்சுடுவாங்களோன்னு பயமா இருக்கு” நல்லவேளை அத்தை தானாவே விஷயத்துக்கு வந்துட்டா! இனி பேசறதுக்கு எளிமையாக இருக்கும்‌ என்று எண்ணினாள்‌ செம்பருத்தி.

“ஆமா அத்த…அம்மா சொன்னவுடனே அப்பாவும்‌ சரின்னு சொல்லிட்டார்‌. அடுத்த வாரம்‌ புதன்கிழமை பெண்‌ பார்க்க வராங்களாம்‌”

“அது எப்படி என்னை மீறி இந்த கல்யாணம்‌ நடந்துடும்மா நான்‌ பாத்துகிட்டு சும்மாவா இருப்பேன்‌.? பொண்ணுக்கு புடிக்கல மீறி கல்யாணம்‌ பண்ணுனா பிரச்சனை பெருசா ஆய்டும்னு எப்படியாவது எங்க அண்ணன்‌ கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்திட மாட்டேன்‌?”.

இந்த கல்யாணத்தை நிறுத்துவதில்தான் அத்தைக்கு எவ்வளவு சந்தோஷம்‌ என்று மனதிற்குள்‌ சொல்லிக்‌ கொண்டாள்‌ செம்பருத்தி. 

“பொண்ணு பாத்துட்டு போனதுக்கப்புறம் நாம வேணாம்னு சொல்றது நல்லா இருக்காது. முன்னாடியே அவங்க வர்றத தடுத்துடனும்‌.”

“ஆமாம்‌ அத்தை அதையேத்தான்‌ நானும்‌ சொல்றேன்‌. என்ன ஐடியா பண்ணலாம்னு நீங்க தான்‌ யோசிக்கணும்‌…”

“அத பத்தி எல்லாம்‌ நீ கவலைப்படாத என்கிட்ட சொல்லிட்டே இல்ல எல்லாத்தையும்‌ நான்‌ பார்த்துக்கிறேன்‌. என்‌ பையனுக்கு மட்டும்‌ நல்ல வேலை கிடைக்கட்டும்‌ மறுமாசமே நீ என்‌ வீட்டு மருமகளா பரிசம் போட்டுடுவேன். வேலையிலாதவனுக்கு எப்படி பொண்ணை கொடுப்பதுன்னு உங்க அப்பா ஒரு முறை சொன்னார்‌. அது என்‌ மனசுல உறுத்திகிட்டே இருக்கு…அது மட்டுமல்ல ஜாதகத்திலேயும்‌ பொருத்தம்‌ கொஞ்சம்‌ சரியில்ல…”

நல்லவேளை ஜாதக பொருத்தமில்லை. இல்லன்னா இந்த அத்தை பெத்த மன்மதனை எவ கட்டிப்பா? அங்கங்கே பொறுக்கித்தனம்‌ பண்ணிக்கிட்டு சுத்திகிட்டு திரியிறான்‌. சிகரெட்‌, குடின்னு, இல்லாத கெட்ட பழக்கமே இல்லை. ம்ம்..ஜோசியக்காரர்‌ நல்லா இருக்கணும்‌ ஜாதகம்‌ பொருந்தாமல்‌ இருப்பதால்‌ சின்ன வயசுல இருந்தே இவங்க ரெண்டு பேருக்கும்‌ கல்யாணத்தை பத்தின பேச்சே யாரும் எடுப்பதில்லை. இவளுக்கும்‌ அவனைப்‌ பார்த்தால் அறவே பிடிக்காது. அவனும்‌ இவளை பார்த்து சைட்‌ அடிச்ச மாதிரி தெரியல. ஆனா ஊர்ல இருக்குற அத்தனை பொண்ணுங்களையும்‌ சைட்‌ அடிக்கிறான்‌. ஓகே இதுவும் ஒரு விதத்துல நல்லது தான்‌. என்னுடைய வெள்ளை சட்டைக்காரனை கடவுள்‌ எனக்கு கொடுத்துட்டாருன்னா போதும்‌. என்று மனதிற்குள்‌ சொல்லி கொண்டாள்‌. வெள்ளை சட்டைக்காரன்‌ என்றவுடன்‌ அவள்‌ முகத்தில்‌ ஒரு அரும்பு புன்னகை தோன்றியது.

வெகு நேரம்‌ அத்தையிடம்‌ பேசிக்கொண்டிருந்து விட்டு அவள்‌ சமைத்துக் கொடுத்த மதிய உணவையும்‌ சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பினாள்‌. இவள் வீட்டிலிருந்து அத்தை வீட்டிற்கு சுமார்‌ இரண்டு கிலோ மீட்டர்‌ தூரம் இருக்கும்‌.

உச்சி வெயிலில்‌ இவள்‌ ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு போகும்போது ஒரு கார்‌ கிராஸ்சானது. சட்டென்று குறுக்கே வந்த காரை எரிச்சலோடு பார்த்தாள் செம்பருத்தி. ஆனால்‌ அடுத்த நிமிடமே அவள்‌ முகம்‌ தாமரையாய்‌ மலர்ந்தது. காரணம்‌ காரை ஓட்டிக்‌ கொண்டிருந்தது அவன்தான்‌ அதே வெள்ளை சட்டைக்காரன்‌. அப்படியென்றால்‌ வெளிநாட்டிலிருந்து வந்து விட்டானா? எனக்கு கால்‌ பண்ணியிருக்கலாமே? சற்று தூரத்தில்‌ டூவீலரை நிறுத்திவிட்டு அந்த காரை நோக்கி சென்றாள்‌. அதற்குள்‌ காரிலிருந்து இறங்கியவன்‌ செல்போனை பேசியபடி அந்த பூக்கடையை நோக்கி சென்றான்‌. அவன்‌ தன்னை பார்த்துவிடக்கூடாது அவனுக்கு திடீரென்று சர்ப்ரைஸ்‌ கொடுக்கவேண்டும்‌ என்பதற்காக மரத்துக்குபின்னால்‌ ஒளிந்து காருக்குள்‌ பார்த்தப்போது அங்கே நவ நாகரீக உடையில்‌ ஒரு நங்கை அமர்ந்திருப்பது கண்ணில்‌ பட்டது. அடுத்த நிமிடமே இவள்‌ முகம்‌ மாறியது.  

ஒரு ரோஜா மாலையும்‌ சில முழம்‌ பூக்களும்‌ வாங்கியவன்‌ 500 ரூபாய்‌ நோட்டை நீட்டினான்‌. அவர்‌ சில்லறைக்காக தன்னுடைய கல்லாவை ஆராய்ந்தபோது “வேணாம்‌ ஓகே… என்று தலையசைத்து விட்டூ திரும்பவும்‌ காரில் ஏறிக்கொண்டான்‌. அதுவரை அந்த இளம்‌ பெண்‌ முன்னிருக்கையிலேயே காத்திருந்தாள்‌. கார்‌ சற்று தொலைவில்‌ இருந்த கோவிலுக்கு அருகில் சென்று நின்றது. அவன்தானா அது? சற்று குழப்பமாக இருந்தது. அவன் கோவிலில்‌ இருந்து வரும்‌ வரை அங்கேயே காத்திருப்பது என்ற முடிவில் இருந்தாள்‌. பைக்‌ வீலை செக்‌ பண்ணுவதுப்போல்‌ இவள்‌ சற்று நேரம்‌ அதை கவனித்துக்‌ கொண்டிருந்துவிட்டு பூக்கடைக்காரரை தேடி சென்றாள்‌.

“வாம்மா செம்பருத்தி வீட்ல அப்பா அம்மா எல்லாம்‌ நல்லா இருக்காங்களா?” பல வருடமா பழக்கப்பட்டவர்‌ என்பதால்‌ குடும்பத்தை பற்றி விசாரித்தார்‌.

“எல்லாம்‌ நல்லா இருக்காங்க மாமா இப்போ ஒருத்தர்‌ வந்துட்டு போனாறே அவர்‌ யாரு உங்களுக்கு வேண்டப்பட்டவரா? “ஏன்‌ கேக்குற?” என்று அவர் இவள்‌ முகத்தை ஏறிட அதற்குள்‌ வேறு ஒரு கஸ்டமர்‌ வந்துவிட்டார் அவருக்கு பூவை கொடுத்துவிட்டு இவள்‌ புறம்‌ திரும்பியவர்‌,

“இல்லை…இந்த ரெண்டு வருஷத்துல அந்த அம்மா அடிக்கடி கோவிலுக்கு வரும்‌. இவரு எப்பவாவது வருவார்‌. வெளியூரூல வேலைப்பார்க்கிறாருன்னு நினைக்கிறேன்‌. ரொம்ப நல்ல மனுஷன்‌ பாக்கிகாசு கூட வேணாம்னு போறாருன்னா பாரேன்‌.” என்று சொன்னவரை கடுகடுவென்று நோக்கி விட்டு சட்டென்று திரும்பி பைக்கை ஸ்டார்ட்‌ பண்ணி கிளம்பினாள்‌.




அப்படின்னா அவனுக்கு கல்யாணம்‌ ஆகிடிச்சா? ரெண்டு வருஷன்னு பூக்கார மாமா சொல்றாரே? நான்‌ ஆறு மாசத்துக்கு முன்னாடிகூட வாட்சப்‌ கால்ல அவன்கிட்ட பேசினேனே?

“நீ வித்தியாசமான பொண்ணு உன்னை நெனச்சா எனக்கு ஆச்சரியமா இருக்கு. எனக்காக ஒரு ஜீவன்‌ இந்த உலகத்தில இருக்குன்னு நினைக்கும்போது வானத்தில பறக்கனும்போல இருக்கு…அப்படி இப்படின்னு உருக்கமா பேசினானே? அப்படின்னா என்ன நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்டானோ? என்னுடைய காதல்‌ பொய்த்துவிட்டதா? உண்மையான காதல்‌ ஜெயிக்குன்னு சொல்வாங்களே? நான்‌ அவனை உண்மையாகத்தானே காதலித்தேன்‌? பிறகு எப்படி என்‌ காதல்‌ தோற்றுப்போனது? வெளிநாட்டில் கப்பலில்‌ வேலை செய்வதாக அந்த ஸ்டுடியோக்கார பாபு சொன்னானே?

மூளையை கசக்கி யோசித்தாள்‌. அதாவது செம்பருத்தி கல்லூரியில்‌ சேர்ந்த புதிது. பாஸ்போட்‌ போட்டோ எடுக்க அந்த ஸ்டூடியோவுக்கு சென்றிருந்தாள்‌. உள்ளே நுழைந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. அந்த ஸ்டூடியோவில்‌ ஷோகேசில் இருந்த அந்த புகைப்படம்தான்‌ அவளின்‌ இன்ப அதிர்ச்சிக்கு காரணம்‌.

“அண்ணா இவரை உங்களுக்கு தெரியுமா!

“ஓ… நல்லா தெரியுமே இவன்‌ என்‌ ஃபிரண்டுதான்‌ ஏன்‌ கேக்குறீங்க?”

“வந்து…வந்து…எனக்கு இவருடைய அட்ரஸ்‌ வேணும்‌…”

குழப்பத்தோடு அவன்‌ இவளை பார்ப்பது தெரிந்தது. இவரை நான்‌ ரொம்ப நாளாய்‌ தேடிகிட்டு இருக்கேன்‌. உங்களுக்கு எவ்வளவு பணம் வேணுன்னாலும்‌ தரேன்‌. இவரோட போன்‌ நம்பர்‌ அட்ரஸ்‌ இருந்தா கொடுங்க…” என்றவளை விநோதமாக பார்த்தான்‌.

“என்ன காரணமுன்னு கேட்காதீங்க அவர்கிட்ட ஒரே ஒரு முறை பேசணும் பிளீஸ்‌… அவன்‌ யோசிப்பதை பார்த்துவிட்டு தன்‌ கழுத்திலிருந்த ஜெயினை கழற்றி கொடுத்தாள்‌.

“இபோதைக்கு இதை வச்சுக்கோங்க…ஆனா எனக்கு அவர்‌ கிட்ட பேசியே ஆகவேண்டும்‌…”

“நாளைக்கு இதே நேரத்துக்கு வா பேச வைக்கிறேம்மா…”  

அவன்‌ சொன்னதுப்போல்‌ அடுத்த நாள்‌ அவனோடு பேச வைத்தான்‌. தான் அவனை முதல்‌ முதலில்‌ சந்தித்தது மனசை பறிகொடுத்தது எல்லாவற்றையும்‌ அவனிடம்‌ வெட்கத்தை விட்டு கொட்டினாள்‌. பொறுமையோடு கேட்டுகொண்டிருந்தவன்‌ எனக்கும்‌ உன்னை பார்கனுன்னு தோணுது. ஆனா இப்போதைக்கு அது முடியாது. காரணம்‌ நான் அரசாங்கத்துல முக்கியமான பணியில் இருக்கேன்‌. நான்‌ யார்‌ யாரிடம் பேசுறேன்னு வாட்ச்‌ பண்ணிகிட்டே இருப்பாங்கள்‌. அதனால்‌ அடுத்த வாரத்துல ஒரு நாள்‌ நானே கால்பண்றேன்‌. என்றவன்‌ இரண்டாவது நாளே

இவள்‌ லயனுக்கு வந்தான்‌. “இன்னைக்கு ஈவினிக்‌ சந்திக்கலாமா?” என்றான்‌. இவளுக்கும்‌ அவனை பார்க்க வேண்டுமென்ற ஆவல்‌. சரி என்று உடனே சம்மதித்தாள்‌.

ஒரு உயர்தர ஓட்டலின்‌ பெயரை சொல்லி. சரியாக ஐந்து மணிக்கு அங்கு வந்திடு அங்கே உனக்கொரு சர்பிரைஸ்‌ இருக்கு என்றான்‌. 

சர்ப்பரைஸ்சா! என்னவா இருக்கும்‌? அவனை பார்ப்பதே ஒரு சர்ப்ரைச்தானே!. என்று மனம்‌ சிலாகித்தாலும்‌ வெளிகாட்டிக்கொள்லாமல்‌ நோட்ஸ்‌ வாங்க ஃபிரண்டு விட்டுக்கு போறேன்‌ என்று பெற்றோரிடம்‌ சொல்லிவிட்டு கிளம்பினாள்‌. ஆட்டோ பிடித்து அந்த ஓட்டலின்‌ பெயரை சொல்லி ஏறி அமர்ந்தபோது ஆட்டோக்காரரின்‌ ஆராய்ச்சி பார்வை படபடப்பை உண்டாக்கியது.

ஒருவழியாக ஓட்டல்‌ என்ரன்ஸில்‌ இறங்கி உள்ளே நுழைந்தபோது எதிர்ப்பட்ட நபர்‌ இவளிடம்‌ நெருங்கி,

“ஆர்‌ யூ செம்பருத்தி? டூ யூ வான்ட்‌ மீட்‌ ராஜா?“எஸ்‌…” அவளை அழைத்து சென்றவன் ஒரு அறையின் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றான்‌.  

சதுர வடிவமுள்ள அந்த ஹால்‌ முழுவதும்‌ வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கண்களை கூசிய வெளிச்சத்தின்‌ நடுவில் கைகளில்‌ சிவப்பு ரோஜாக்களை சுமந்தபடி அவளை நோக்கி கம்பீரமாக வந்தான் அவளுடைய ராஜகுமாரன்‌.

ஓடிசென்று கட்டிக்கொள்ள வேண்டும்‌ என்ற தவித்த மனதை அடக்கியபடி நின்றாள்‌.

மெல்ல அருகில்‌ வந்தவன்‌ சிவப்பு ரோஜாக்களை மென்மையாக அவள் கைகளில்‌ திணித்துவிட்டு அவளை அணைக்க முயன்றபோது நாசூக்காக விலகிக்கொண்டாள்‌. நொடிப்பொழுது முகம்‌ மாறியவன்‌ அடுத்த கணமே  தன்னை சமாளித்துக்கொண்டு, “நீ வித்தியாசமானவள்‌ செண்பா…!” முதல் முறை போனில்‌ பேசும்போதுகூட அவள்‌ பெயரை அப்படித்தான்‌ அவன்  அழைத்தான்‌. வா…என்று அவளை அழைத்து சென்று அங்கிருந்த வட்ட மேஜையில்‌ அமர வைத்தவன்‌ அவளுக்கு எதிரில்‌ அமர்ந்துகொண்டான்‌. 

இருவரின்‌ பார்வையும்‌ கலந்தபோது நாணத்தில்‌ தலைகவிழ்ந்தாள்‌.

“ஒவ்வொரு காதல்‌ நினைவும்‌ விசேஷமானதகுதான்‌…செண்பா அதிலும்‌ முதல் முறையாக காதலை உணரும்போதும்‌, அந்த உணர்வை காதலியிடம் அல்லது காதலனிடம்‌ சொல்லும்போது ஏற்படுகிற  சந்தோஷம்‌, பதட்டம்‌, உணர்ச்சிப்‌ பிரவாகம்‌…எல்லாமே மறக்க முடியாத பசுமையான நினைவுகளை தருகிறது‌. காதலில்‌ மட்டுமே இந்த மாயாஜாலம்‌ சாத்தியமாகும்”‌.

“ம்ம்..”

 “ஒவ்வொரு காதலனையும்‌ கேட்டுப்‌ பாருங்கள்‌… என்னவள்‌ என்னில்‌ புகுந்த பின்தான்‌ என்னையே நான்‌ உணர்ந்தேன்‌ என்று கூறுவான்‌. அது ஏனோ தெரியவில்லை. அப்பா, அம்மா சொல்லியும்‌ கேட்காதவர்கள்‌ கூட காதலி சொன்னால்‌ உடனடியாக கேட்கிறார்கள்‌ – காதலின்‌ மாயமா அது?”

என்றெல்லாம்‌ வெகுநேரம்‌ பேசினான்‌. பிறகு ஸ்பெஷல்‌ டின்னர்‌! இப்படியே நேரபோனதே தெரியவில்லை. இவள்தான்‌ மணியை பார்த்து, பதறிப்போய்  வீட்டிற்கு கிளம்ப வேண்டும்‌ என்று எழுந்தாள்‌. மீண்டும்‌ சந்திப்போம்‌ என்று கைகுலுக்கி பிரியா விடை கொடுத்தான்‌. அன்றிலிருந்து அவ்வப்போது இவள்‌ அவனை சந்திப்பதும்‌ அவன்‌ இவளை தேடி கல்லூரிக்கு வருவதும்‌ இருவரும்‌ காரில்‌, ஃபீச்சோரம்‌ ஒரு டிரைவ் போவதுமாய்‌ நாட்கள்‌ நகர்ந்தது. இவர்களில்‌ காதல்‌ தொடர்ந்தது.

அன்று காலை ஏழுமணிக்கே அவனிடமிருந்து கால்‌ வந்தது, உடனே உன்னை சந்திக்கணும்‌ கெஸ்ட்‌ ஹவுஸ்கு வா…என்று கெஸ்ட்‌ ஹவுஸின்‌ முகவரியை அனுப்பினான்‌. அவன்‌ குரலில்‌ பதற்றம்‌ தெரிந்தது. இவளும்‌ அடித்து பிடித்துக்கொண்டு ஓடினாள்‌. இன்று என்‌ அம்மாவின்‌ நினைவுநாள்‌ நீ என்‌ கூடவே இருந்தால்‌ நல்லா இருக்கும்‌ ப்ளீஸ்‌… என்றான்‌. அவன்‌ கண்களில் கண்ணீரை கண்டு இளகிப்போனவள்‌ சரி என்று சம்மதித்தாள்‌. நேரம்‌ செல்ல செல்ல அவனிடம்‌ மாற்றம்‌ தெரிந்தது. இவளை காமத்தோடு  அணுகினான்‌ அதை புரிந்துகொண்டவள்‌ அவனிடமிருந்து விலகினாள். அவன் அவளை கட்டாயப்படுத்தினான். அவனை உதறிவிட்டு    அங்கிருந்து வெளியேற முயன்றாள்‌.

“ப்ளீஸ்‌… இன்னைக்கு ஒரு நாள்‌ மட்டும்‌ எனக்கு நீ வேணும்”‌. என்று மண்டியிட்டு கெஞ்சினான்‌.

“இல்ல…அது முடியாது அதெல்லாம்‌ கல்யாணத்துக்கு பிறகுதான்‌…”

“அப்படின்னா எம்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? நான்‌ உன்னை கல்யாணம்‌ பண்ணிக்க போறவன்‌…” அவன்‌ கண்கள்‌ சிவந்திருந்தது.

“இருக்கலாம்‌ ஆனால்‌ நமக்குன்னு ஒரு கலாச்சாரம் இருக்கு அத மீற முடியாது. மீறவும்‌ மாட்டேன்‌…” தெளிவாக சொன்னாள்‌. அவள்‌ கண்களில் தெரிந்த தீவிரம்‌ அவனை யோசிக்க வைத்தது. விலகி நின்றான்.  

“ஓகே…நீ கிளம்பலாம்‌…” என்று முதுகைக்காட்டிக்கொண்டு பேசினான்‌. அடுத்த நிமிடமே அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துவிட்டாள்‌. அவன்‌ இவள்‌ மேல்‌ கொண்ட ஆழமான காதலால்தான்‌ அப்படி கேட்டிருப்பான்‌ என்று சமாதானப்படுத்திகொள்ள முயன்று தோற்றாள்‌. சே…அவனுக்கு என்ன  மாதிரியான மனநிலை? காதலின்‌ உச்சம் காமம்தானா? பார்க்காமல் பேசாமல்‌ ஒருவரை ஒருவர்‌ புரிந்துகொண்டு வாழ்ந்து சரித்திரம்‌ படைத்த காதலும்‌ இருக்கத்தானே செய்கிறது. அவனுக்கு அதுதான்‌ தேவையென்றால்‌

அவனிடமேருந்து விலகியிருப்பதுதான்‌ நல்லது. இவளாக அவனுக்கு கால் பண்ணவில்லை. ஒரு வாரம்‌ வரை அவனிடமிருந்தும்‌ எந்த ஃபோன்‌ காலும் வரவில்லை.

பிறகு திடிரென்று ஒரு நாள்‌ நான்‌ மும்பையில்‌ இருக்கிறேன்‌. வருவதற்கு மூன்று மாதமாகலாம்‌ என்று ஒரு புது நம்பரை கொடுத்து வெள்ளிக்கிழமை தோறும்‌ மாலை ஆறு மணிக்கு பேசு என்றான்‌. அந்த நேரத்துக்கு செம்பருத்தியின்‌ அம்மா கோவிலுக்கு சென்றுவிடுவாள்‌ என்பதால் இவளுக்கும்‌ அவன் மேலிருந்த கோபத்தை தூக்கிவைத்துவிட்டு பேசத்தொடங்கினாள். யாழ் அந்த நம்பரும் சிலநாட்களுக்கு பிறகு துண்டிக்கப்பட்டது.

சரி தொடர்புகொள்ள முடியாத இடத்தில்‌ இருக்கிறார்‌ என்று நினைத்திருந்தாள்‌.  ஆனால்‌ அவனை வேறொரு பெண்ணுடன்‌ பார்த்தபோது மனம்‌ தளர்ந்துப்போனாள்‌. அடுத்த நாளே பாபுவை தேடி சென்றாள்‌. ஆனால் எல்லாமே தலைகீழாக மாறியிருந்தது.

அப்படின்னா பாபு அவ்வப்போது அவனைபற்றின தகவலை தந்ததெல்லாம்‌??. இதை சும்மா விடக்கூடாது என்ற வெறியோடு அவன்‌ முன்னால்‌ நின்றப்போது, இவளின்‌ முகத்தை பார்த்தவுடன்‌ பாபு எழுந்து அவள்‌ அருகில் வந்தான்‌. நான்தான்‌ சொன்னேனே…என்று எதையோ சொல்ல வாயெடுத்தவனை கைகளை உயர்த்தி தடுத்தாள்‌.

“நீங்க சொல்ற எந்த விளக்கமும்‌ எனக்கு தேவையில்லை… ராஜராஜன்‌ இந்த ஊர்லதான்‌ இருக்கிறார்‌ என்பது எனக்கு தெரியும்‌. அவருடைய உண்மையான நம்பரை கொடுங்க…முதலும்‌ கடைசியுமாய்‌ அவர்கிட்ட இரண்டு வார்த்தை பேசணும்‌…” ஒரு நிமிடம்‌ யோசித்தவன்‌ தன்‌ செல்போனில்‌ இருந்த நம்பரை அவளுடைய செல்லுக்கு அனுப்பினான்‌. 

மட மடவென்று அங்கிருந்து கீழே இறங்கி வந்தவள்‌ அந்த நம்பருக்கு கால் பண்ணினாள்‌. முதல்‌ ரிங்கிலேயே எடுத்துவிட்டான்‌ அவன்‌.

“நான்‌… உங்களை காதலித்தது உண்மை ஆனால்‌ நீங்க தப்பானவர்‌. உங்க காதலும்‌ பொய்‌…இப்போதோன்‌ உங்களை பற்றின உங்கள் கல்யாணம் உள்பட எல்லா விஷயமும் எனக்கு தெரியவந்தது…”

“செண்பா…சாரி என்னைப்பற்றி சொல்ல நிறைய முறை முயற்சி செய்தேன்‌.

ஆனால்‌ நீ எப்படி எடுத்துக் கொள்வாயோ என்ற தயக்கத்தில்‌ சொல்லாமல் மறைத்துவிட்டேன்‌…சாரி…வெரி சாரி…”

“நம்பினவங்களை கழுத்தறுப்பதுதான்‌ உங்களுடைய குணமென்றால்‌ கடைசி

பலி நானாகவே இருக்கட்டும்‌…இனி மற்றவர்கள்‌ வாழ்க்கையில் விளையாடாதீங்க…எல்லாத்தையும் விட்டுடுங்க என்னுடைய வாழ்க்கையையும்‌ சேர்த்துதான் சொல்கிறேன்‌. ஓகே…இதுதான்‌ நாம பேசுற கடைசி கால்‌…குட்‌ பை…” போன்‌ துண்டிக்கப்பட்டது. செம்பருத்தி வீடு வந்து சேர்ந்தது கூட வியப்பே! செம்பருத்தியின்‌ கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.




 

What’s your Reaction?
+1
15
+1
17
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!