Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ-4

இளமாறன்‌ வரவில்லையே என்ற ஒரு குறை தவிர மற்றபடி ஆயுத பூஜை மிக சிறப்பாகவே நடந்தேறியது. மகளாவது வந்து கலந்துகொண்டாளே! என்ற சிறு சந்தோஷம்‌ பார்வதிக்கு.

ஆனாலும் கணவரிடம்‌ வாயே திறக்கக்‌ கூடாது என்பதில்‌ தெளிவாக இருந்தாள்‌ பார்வதி. எதை பேசினாலும்‌ உடனே, மகன் மேல்‌ கோபப்பட தொடங்கி விடுவார் என்பது அவளுக்கு தெரியாததா என்ன?‌. இந்த இளமாறன் சும்மாவது வந்து தலையை காட்டி இருக்கலாம்? அப்படி எங்கதான்‌ போனான்‌‌? வரேன்னு சொன்னவன்‌ ஏன்‌ வரவில்லை? என்று பல வித கேள்விகள்‌ மனதிற்குள்‌ எழுந்து அடங்கியது.

பூஜை முடிந்தது வந்தவர்களுக்கெல்லாம்‌ திருப்தியாக துணிமணிகள்‌ சுவிட்‌ என கொடுத்தாயிற்று, இனியென்ன வீட்டிற்கு கிளம்ப வேண்டியதுதான்‌ பாக்கி. வீட்டிலிருந்து எடுத்து வந்த எல்லா பொருட்களையும்‌ எடுத்து கையில் வைத்திருந்த பையில் அடுக்கினாள்.

போன்‌ பேசிட்டு வரேன்னு வெளியில போன கணவர்‌ திரும்பாதது கோபத்தை கிளப்பியது. மணிகணக்கா அப்படி என்னதான்‌ பேசுவாரோ? என்று முனுமுனுத்தபடி தலையை உயர்த்தியபோது, கம்பெனியை மூடுவதற்காக கையில்‌ பூட்டோடு நின்றிருந்தார்‌ வாட்ச்மேன்‌.  

“பேக்‌கை எல்லாம்‌ எடுத்துட்டு போய்‌ கார்ல வச்சிடவாம்மா?” டிரைவர்‌ அருகில்‌ வந்து கேட்டார்‌.

“இந்த ரெண்டு பையையும்‌ டிக்கியில வச்சுடுப்பா! என்னுடைய ஹேண்ட் பேக்கை பின்னாடி வை…” என்று சொல்லிவிட்டு “சார்‌ எங்க இருக்காரு வெளியில பேசிக்கிட்டு இருக்காரா?”

“ஆமாம்மா போன்ல பேசிட்டு இருக்கார்‌.”

“சரி சரி வேற ஏதாவது விட்டூட்டேனான்னு ஒரு வாட்டி பாத்துட்டு வா…” என்று அவனை அனுப்பி விட்டு வாசலை நோக்கி வந்தாள்‌ பார்வதி. கணவர் யாருடனோ போனில்‌ பேசி சிரித்துக்கொண்டிருந்தார்‌. அவர்‌ இப்படி மனவிட்டு சிரித்து மூன்று வருடங்களாகிவிட்டது.

மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவமது. கணவன்‌ மனைவி இருவரும்‌ குலதெய்வம்‌ கோவிலுக்கு சென்றிருந்தனர்‌. அப்போதுதான்‌ அந்த போன்‌ வந்தது.

“என்ன ரமேஷ்‌ நீ சொல்றத நம்பற மாதிரி இல்லையே? ஆளை நல்லா பாத்தியா? மூஞ்ச பாத்தியா? அவந்தான்னு கன்‌ஃபார்மா தெரியுமா? அப்படியாப்பட்ட பையன்‌ இல்லை இருந்தாலும்‌ நீ பொய்‌ சொல்ல மாட்ட உன்‌ மேல நம்பிக்கை இருக்கு. என்ன ஏதுன்னு விசாரிச்சாதான்‌ தெரியும்‌. சரி எல்லாத்தையும்‌ நான்‌ பார்த்துக்கிறேன்‌. இந்த விஷயத்தை வேற யார் கிட்டயும்‌ ஷேர்‌ பண்ணாத ஓகேவா…?”

என்று கணவர்‌ அவருடைய பால்ய சினேகிதனான ரமேஷிடம் பேசிக்கொண்டிருந்தது காதில்‌ விழுந்தது. கணவருக்கு நெருங்கிய நண்பர் என்றால்‌ அந்த ரமேஷ்‌ ஒருவர்தான்‌ குடும்ப நண்பரும்‌ கூட. யாரை பற்றியோ அதிர்ச்சியோடு பேசிக்‌ கொண்டிருந்த கணவரிடம்‌ யாரு என்ன என்று கேட்க வேண்டுமென மனம்‌ நினைத்தாலும்‌ முக்கியமான விஷயம்‌  என்றால்‌ அவரே சொல்லுவார்‌. என்று அமைதியாக காரின்‌ பின்பக்க கதவை திறந்து அமர்ந்தாள்‌ பார்வதி.

வீடு வந்து சேரும்‌ வரை மனைவியிடம்‌ எந்த விஷயத்தையும்‌ பகிர்ந்து கொள்ளாமல்‌ அமைதியாகவே வந்தார்‌ மணாளன்‌. கணவரின்‌ குணம்‌ தெரிந்து பார்வதியும்‌ எதையும்‌ கேட்டுக்கொள்ளாமல்‌ வந்தாள்‌. வீடு வந்ததும்‌ காரை விட்டூ இறங்கியவர்‌ டிரைவரிடம்‌ இருந்து கார்‌ சாவியை வாங்கிக்‌ கொண்டு விட்டை நோக்கி நடந்தார்‌.

“என்னங்க முகம்‌ ஏன்‌ டல்லா இருக்கு? உங்க ஃபிரண்டு ரமேஷ்‌ போன்ல அப்படி என்ன சொன்னார்‌?.” மனைவியை கோபத்துடன்‌ பார்த்தவர்‌, “வீட்டு சாவி எங்க? கொடு கதவ திறக்கணும்‌…”




“என்னங்க நான்‌ என்ன கேட்கிறேன்‌ நீங்க என்ன சொல்றீங்க?

“அந்த கண்றாவியை என்‌ வாயால சொல்லக்கூடாதுன்னுதான்‌ அமைதியா வரேன்‌. திரும்பத்‌ திரும்ப அதையே கேட்டு என்‌ வாயை கிளறாதே…”

“என்ன விஷயம்னு சொல்லிட்டீங்கன்னா வாய மூடிக்கிட்டு பேசாம இருக்க போறேன்‌…”

சற்று நேரம்‌ அமைதியாக இருந்தவர்‌ மூச்சை மெல்ல இழுத்து விட்டார்‌. பிறகு மனைவியை அருகில்‌ அழைத்து அமர வைத்து,

“உன்னுடைய சுவீகார புத்திரன்‌ இருக்கானே….அவன்‌ யாரோ ஒரு பொண்ணு கூட சுத்திக்கிட்டு இருக்கானாம்‌. நம்ப ரமேஷ்‌ இரண்டு முறை அவன அந்த பொண்ணு கூட பார்த்திருக்கான்‌. இன்னைக்கு அந்த பொண்ணு கூட ரெஸ்டாரன்ட்ல சாப்பிட்டுகிட்டு இருந்திருக்கான்‌. பொறுத்து பொறுத்து பார்த்திருக்கான்‌ ரமேஷ்‌. அவனால்‌ ஜீரணிக்க முடியவில்லை உடனே எனக்கு கால்‌ பண்ணி விஷயத்தை சொன்னான்‌.”

“என்னங்க சொல்றீங்க?”

“ம்ம்‌…எதுன்னு விசாரிச்சு பையனுக்கு சீக்கிரமா ஒரு கால்‌ கட்டபோடுன்னு சொல்றான்‌. இவ்வளவு நடந்திருக்கு பெத்தவ உனக்கும்‌ ஒன்னும்‌ தெரியல? என்னாலயும்‌ கண்டுபிடிக்க முடியல? நம்ப ரெண்டு பேரையும்‌ அவன்‌ முட்டாளாக்கிட்டான்‌”. என்று சொல்லிவிட்டு சட்டென்று எழுந்து அறைக்குள்‌ நுழைந்து கொண்டார்‌ மணாளன்‌.

கன்னத்தில்‌ அறை வாங்கியது போல்‌ உணர்ந்தாள்‌ பார்வதி. தலைச்சம் பிள்ளை என்று எவ்வளவு செல்லம்‌ கொடுத்து வளர்த்தேன்‌. இதுவரைக்கும் எந்த விஷயத்தையும்‌ என்கிட்ட அவன்‌ மறைச்சதே இல்ல. அப்பா கிட்ட சொல்லத்‌ தயங்கற விஷயத்தை கூட என்கிட்ட மனச விட்டு பேசுறவன்‌, இப்போ ஒரு பொண்ணு கூட பழக்கம்‌ ஏற்பட்டிருக்கு ஃபிரண்ட்லியா என்கிட்ட அந்த விஷயத்தை சொல்லி இருக்கலாமே? யாரோ மூணாவது மனுஷன்‌ பார்த்துட்டு சொல்ற அளவுக்கு நடந்து இருக்கானே? என்று மகனை நினைத்து வேதனைப்பட்டாள்‌ பார்வதி.

இரவு வெகு நேரம்வரை மகன்‌ வராததால்‌ எழுந்து வந்து ஹாலில் அமர்ந்திருந்தாள்‌ பார்வதி. அப்போது கதவைத்‌ திறந்து கொண்டு மகன் உள்ளே வருவது தெரிந்தது.

“ஏம்பா… மணி என்ன ஆகுது? வர நேரமாகுன்னு ஒரு போன்‌ பண்ணியாவது சொல்லி இருக்கலாமில்லையா?

அவன்‌ முகம்‌ கொடுத்து பேசவில்லை மகனிடம்‌ இருந்து எவ்வித பதிலும்‌ இல்லாமல்‌ போகவே எழுந்திருந்து அவன்‌ அருகில்‌ சென்று மெல்ல முதுகை தொட்டாள்‌ பார்வதி. அவன்‌ தலை கவிழ்ந்து நின்றிருந்தான். 

“என்னப்பா உடம்பு கிடந்து சரியில்லையா?” 

நெகிழ்ச்சியோடு கேட்டதும்‌ தாயை ஏறிட்டுப்‌ பார்த்தான்‌ இளமாறன்‌. அவன்‌ கண்கள்‌ சிவந்து தலையெல்லாம்‌ கலைந்து இருப்பதாய்‌ தோன்றியது. பதறிப்போன தாய்‌ நெற்றியில்‌ கையை வைக்க நீட்டிய போது மகன்‌ தாயின்‌ கரத்தை தட்டி விட்டான்‌. முகம்‌ மாற்றத்தோடு அவனை நெருங்கினாள்‌ பார்வதி. குப்பென்ற அந்த நெடி அவள்‌ நாசியை தாக்கவும்‌ இரண்டடி பின்னடைந்து வாயை மூடிக்‌ கொண்டாள்‌.

“ஐயோ குடிச்சிருக்கியா? கெட்ட நாத்தம்‌ அடிக்குது. உனக்கு அந்த பழக்கமெல்லாம்‌ இல்லையே என்னடா ஆச்சு ஏன்டா இப்படி எல்லாம்‌ பண்ற? உனக்கு இந்த வீட்ல என்னடா குறை வச்சோம்‌? ராத்திரி பகலுமா உங்க அப்பா கஷ்டப்படுறது நீ நல்லா இருக்கணும்ங்குறதுக்காக தானே? அவரை விடு நீ தான்‌ உலகம்னு வாழ்ந்துகிட்டு இருக்குற என்னை கூட நினைச்சு பாக்கலையே புது புது பழக்கத்தை எல்லாம்‌ கத்துக்கிட்டிருக்கே? இது உங்க அப்பாக்கு தெரிஞ்சா உடைஞ்சு போயிடுவாரு. ஏண்டாப்பா இப்படி எல்லாம் பண்ற?” என்று தலையில்‌ கை வைத்துக்‌ கொண்டு சோபாவில்‌ அமர்ந்தவளுக்கு அடக்க முடியாமல்‌ கண்ணீர பெருக்கெடுத்தது.




“ஆமா நான்‌ குடிச்சிருக்கேன்‌ உண்மைதான்‌ என்ன பத்தி இந்த வீட்ல யாருக்கு அக்கறை இருக்கு? எல்லாம்‌ அவங்க அவங்க வேலையை பார்த்துக்கிட்டு இருக்கீங்க? என்ன பத்தி என்‌ மனச பத்தி யாராவது கவலைப்பட்டீங்களா? நான்‌ வெளியில சொல்ல முடியாம மனசுக்குள்ள போட்டு புழுங்கிகிட்டு இருக்கேன்‌.

“என்கிட்ட சொல்லு உன்னுடைய அம்மா நான்‌ என்கிட்ட ஏன்‌ மறைக்கிற?

அப்படி என்ன தல போற பிரச்சனை உனக்கு? இன்னிக்கி அப்பா சொன்ன செய்தியை கேட்டவுடனே எனக்கு மனசே சரியில்ல?”

“என்ன சொன்னார்‌…? என்னை ஒரு பொண்ணு கூட பார்த்ததா யாராவது அவர்‌ கிட்ட போட்டு கொடுத்திருப்பாங்க அதைக்‌ கேட்டு வானத்துக்கும்‌ பூமிக்குமாய் குதிச்சு இருப்பார்‌. உன்னை திட்டோ திட்டுன்னு திட்டி தீர்த்திருப்பார்‌. தப்பு செஞ்சது நான்‌ என்னையில்ல அவர்‌ கேட்கணும்‌. எனக்கு பதிலா உன்னை ஏன்‌ திட்டுறார்‌? பேசாம நாம ரெண்டு பேரும்‌ இந்த விட்டை விட்டடு போயிடலாம்‌. நான்‌ லட்சகணக்கில்‌ சம்பாதிக்கிறேன்‌ ஒரு பிளாட்‌ வாங்கிட்டு அங்கேயே போயிடலாம்‌. நீ என்‌ கூட வந்துடுமா. இவர்கிட்ட நீ பட்ட கஷ்டம்‌ எல்லாம்‌ போதும்‌ இனிமேலாவது நீ நிம்மதியா இருக்கணும்‌.” தெளிவாக பேசினான்‌.

“அவர்கிட்ட மாட்டிகிட்டு நான்‌ கஷ்டப்படுறேனா? என்னடா சொல்ற?   இல்லை நான்‌ நிம்மதியாதான்‌ இருக்கேன்‌. என்‌ புருஷனை விட்டுட்டு என்னை வர சொல்றியா? அவருக்கு நம்பள விட்டா யாருடா இருக்கா? அவருக்கு ஒரு தலைவலி காய்ச்சல்னா பக்கத்திலிருந்து கவனிக்க ஆள்‌ இருக்காங்களா அவர்‌ அனாதையா இந்த விட்ல கெடக்கணும்‌…நான்‌ உன்‌ கூட வந்து சொகுசா இருக்கனும்‌ அப்படித்தானே?”

“அம்மா…நான்‌ என்ன சொல்றேன்னா…?”

“நீ எதுவும்‌ சொல்ல வேணாம்‌. ஆனா ஒன்னு நீ நினைக்கிறது கனவுல கூட நடக்காது. அவர்‌ என்ன திட்டினாலும்‌ அடிச்சாலும்‌ என்ன பண்ணினாலும் சாகுற வரைக்கும்‌ நான்‌ அவர்‌ காலடியில்‌ தான்‌ கிடப்பேன்‌. நீ என்னை என்ன வேணாலும்‌ நினைச்சுக்கோ. உனக்கு ஒரு வாழ்க்கை தேடுகிற அளவுக்கு பக்குவம்‌ வந்துடுச்சு. நாங்க வேணாம்னு தூக்கி எறிஞ்சு பேசுற ஆனா எனக்கு என்‌ புருஷன்‌ தான்‌ முக்கியம்‌ இன்னொரு வாட்டி தனியா போகலாம்னு பேசுறதா இருந்தா என்கிட்ட பேசுவதை நிறுத்திக்கோ…” என்று சொல்லிவிட்டு வழிந்த கண்ணீரை முந்தானையால்‌ துடைத்த படி அறையை நோக்கி நடந்தாள்‌.

“அம்மா ஒரு நிமிஷம்‌ நாளைக்கு காலையில உன்ன ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போறேன்‌ நீ என்‌ கூட வரணும்‌. நீ வந்தா எல்லாமே நல்லபடியா நடக்கும்‌.”

“எந்த இடத்துக்கு? எந்த இடமா இருந்தாலும்‌ உங்க அப்பா கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு தான்‌ வருவேன்‌ எதுவா இருந்தாலும்‌ அவர்கிட்ட போய்‌ சொல்லு அவர்‌ போன்னு சொன்னா வரேன்‌ போகாதேன்னா கண்டிப்பா வரமாட்டேன்‌. எங்களை புரிஞ்சிக்காத பிள்ளை எங்களுக்கு தேவையில்லை…”  

“என்னம்மா நீ பைத்தியம்‌ மாதிரி பேசுற? அப்பாதான்‌ என்ன புரிஞ்சுக்கல? எப்ப பார்த்தாலும்‌ என்‌ கூட ஏட்டிக்கு போட்டியா நடந்துக்கிறார்னா நீ என் அம்மா இல்லையா நீயும்‌ நானும்‌ என்னைக்காவது சண்டை போட்டு இருப்போமா? இந்த உலகத்திலேயே உனக்கு யாருடா பிடிக்கும்னு கேட்டா எங்க அம்மான்னுதான்‌ சொல்லுவேன்‌. அது எந்த சூழ்நிலையிலும்‌ மாறாது. ஆனால்‌ நீ பெத்த புள்ளையே முக்கியம்‌ இல்லன்னு சொல்ற? கட்டின புருஷன்‌ தான்‌ வேணும்னு பேசுறே. சரி உன்னால வர முடியாது என்ன விட்டுடு நான்‌ எப்படியோ போறேன்‌ என்ன பத்தி தான்‌ உங்க ரெண்டு பேருக்கும்‌ கவலையே இல்லையே?” மகன்‌ என்ன சொல்ல நினைக்கிறான்‌ என்பதை தெரிந்து கொள்ளும்‌ ஆவல்‌ இருந்தாலும்‌ அவன்‌ போக்கில்‌ போய்‌ அவனை சமாதானப்படுத்தும் அளவிற்கு பார்வதிக்கு பொறுமையில்லை.

“சரி டேபிள்ல டிபன்‌ இருக்கு பசி எடுத்தா சாப்பிடு நான்‌ போய்‌ தூங்க போறேன்‌ எனக்கு இன்னைக்கு ஃபுல்லா ஒரே அலைச்சல்‌ டயர்டா இருக்கு…” என்று முனுமுனுத்தபடி அறைக்குள்‌ நுழைந்தாள்‌ பார்வதி.




 

What’s your Reaction?
+1
16
+1
18
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!