Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ -2

2

“உதயம்‌ மசாலா” என்ற நேம்போர்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாசலில்‌ மாவிலை தோரணங்களும்‌ கதவில் ஆளுயர ரோஜா மாலையும்‌ தொங்கிக்கொண்டிருந்தது. அன்று ஆயுத பூஜை என்பதுதான்‌ சிறப்பு காரணம்‌. அங்குள்ள உபகரணங்களை சுத்தப்படுத்தி, மஞ்சள்‌ மற்றும்‌ சந்தனம்‌ கலந்து அதன்‌ மீது குங்குமம்‌ வைத்துக் கொண்டிருந்தனர் பெண்கள்‌ சிலர்‌. இன்னும் சற்று நேரத்தில்‌ பூஜை தொடங்க இருக்கிறது மகனைக்‌ காணவில்லையே? என்று பார்வையால்‌ கணவனை தேடிய பார்வதிக்கு முகம்‌ சோர்வுற்றது. வாசலுக்கு வந்தவள்‌ கணவன்‌ மணாளன்‌ யாருடனோ போனில்‌ பேசிக்‌கொண்டிருப்பது கண்ணில்‌ படவே தரையில்‌ புரண்ட புடவையை கைகளில்‌ பிடித்துக்‌ கொண்டு அவரருகில்‌ வந்தாள்‌.

“என்னங்க இன்னமும்‌ நம்ப பையனை காணோமே ஐந்து மணிக்கு பூஜையை ஆரம்பிக்கலான்னு சொன்னீங்க? அவனில்லாம எப்படிங்க?” மறுமுனையில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவர்‌, “சார்‌ நான்‌ கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன்‌… என்று போனை கட்‌ பண்ணி விட்டு மனைவி பக்கம்‌ திரும்பினார்‌. 

“போன்‌ போட்டு பார்த்தியா? எங்க இருக்கானா?” மனைவியை எதிர்‌ கேள்வி கேட்டார்‌ “ஏன்‌ நான்‌ தான்‌ கேட்கணுமா? நீங்க கேட்க கூடாதா? எத்தனை நாளைக்குதான்‌ அவன்‌ கூட பேசாம இருக்கப் போறீங்கன்னு நானும்‌ பாக்குறேன்‌?”

“ஏய்‌ பார்வதி வாய மூடிக்கிட்டு இரு…தேவை இல்லாம என்னை டென்ஷன்‌ படுத்தாத புரியுதா? உன்‌ மகனுக்கு அறிவுங்கிறது சுத்தமா இல்ல, ஒரு பொண்ணப்‌ பாத்து கட்டி வச்சாலாவது ஒழுங்கா இருப்பான்னு நெனச்சு பொண்ணையும்‌ பார்த்தாச்சு. இப்போ என்னடான்னா இந்த கல்யாணத்துல விருப்பமில்ல நிறுத்திடுங்கன்னு சொல்றான்‌ பொண்ணு பாக்க வரமாட்டானாம்‌.”

“பொண்ணு வீட்டுக்காரங்க கிட்ட புரட்டாசி முடிஞ்சவுடனே வரோம்னு சொல்லிருக்கேன்‌. ஒரு வாரம்‌ தள்ளிப்‌ போடலாம்‌ புரட்டாசி முடிஞ்சு ஐப்பசியில ஏன்‌ வரலன்னு கேட்டாங்கன்னா என்ன பதில்‌ சொல்றது.? எனக்கு இருக்கிற டென்ஹன்‌ போதாதுன்னு இவனால புது டென்ஷன்‌ ஒன்னு உருவாகிருக்கு…”




“கோபப்படாதீங்க நம்ப ஜோசியர்‌ தான்‌ சொன்னாரே… கல்யாணம்‌ எல்லாம்‌ பெத்தவங்க விருப்பப்படிதான் நடக்குமாம்‌. அதுல எந்த மாற்றமும்‌ இல்லையாம்‌. ஆனா இப்ப அவனுக்கு நேரம்‌ சரியில்லையாம்‌. எடுத்தேன்‌ கவுத்தேன்னு தான்‌ பேசுவானாம்‌. ஜனவரி பிறந்த பிறகு எல்லாம்‌ சரியாயிடும்னு சொன்னார்‌ அதனால ரெண்டு மாசம்‌ தள்ளி போடறது நல்லது.”

“நான்‌ மட்டும்‌ என்ன சொல்ற? பொண்ண பார்த்துட்டு முடிவு பண்ணிடலாம்‌. கல்யாணத்தை ஜனவரிக்கு மேல வச்சுக்கலாம்னு தான்‌ சொல்றேன்‌. அதுக்காவது ஒத்து வரணுமில்லையா? அத விட்டுட்டு ஒரேடியா பொண்ணை பார்க்கவே வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்‌? அப்போ அவங்களுக்கு வாக்கு கொடுத்துட்டேனே என்னப்பத்தி அவங்க என்ன நினைப்பாங்க சொல்லு? அவன்‌ கொஞ்சமாவது யோசிச்சான்னா இப்படியெல்லாம்‌ பேசமாட்டான்‌”

“சரிங்க…அவங்கிட்ட நான்‌ பேசுறேன்ங்க. சொல்ற விதத்துல எடுத்து சொன்னா புரிஞ்சுப்பாங்க. பொண்ணை மட்டும்‌ வந்து பார்த்துட்டு போடான்னு சொல்றேன்‌. மத்ததெல்லாம்‌ ஜனவரிக்கு மேல வச்சுக்குவோம்‌. சரி நேரா பார்த்தாதான்‌ அவன்‌ கிட்ட பேச மாட்றீங்க? போன்லையாவது எங்கப்பா இருக்கே? எப்ப வருவேன்னு! ஒரு வார்த்தை கேளுங்க…” என்றாள்‌ பார்வதி.

மனைவியின்‌ பேச்சை மனம்‌ ஏற்க மறுத்தாலும்‌ மகனுக்கும்‌ தனக்குமான இடைவெளி அதிகரித்துக்‌ கொண்டே போவது மணாளனின்‌ மனதிற்கு பாரமாகவே இருந்தது. ரொம்ப அன்யோன்யமாக பழகின என்னையே எடுத்தெறிஞ்சு பேசுறான்னா அவன்‌ மனசுல என்ன இருக்குன்னு தெரியலையே? என்று மனம்‌ பலதும்‌ எண்ணி கலங்கியது.

வயசுல மூத்தவங்கள்‌ அப்படி இப்படி இருக்கத்தான்‌ செய்வாங்க பிள்ளைங்களாவது அனுசரிச்சு போனா என்ன? தானா வந்து அப்பா கிட்ட பேச மாட்றான்‌. நானா வந்து பேசணும்னு நினைக்கிறான்‌. என்ன பண்றது நாம தான்‌ விட்டுக்‌ கொடுத்து போகணும்‌. என்று தனக்குள்‌ ஒரு முடிவுக்கு வந்த மணாளன்‌ போனில்‌ மகனை அழைத்தார்‌. இரண்டு மூன்று முறை ரிங்‌ அடித்தும்‌ மறுமுனையில்‌ எந்த பதிலும்‌ இல்லாமல்‌ போகவே சோர்வோடு போனை கட்‌ பண்ணிவிட்டு மனைவி பக்கம்‌ கோபத்தோடு திரும்பினார்‌.

“உன்‌ மகன்‌ போன எடுக்க மாட்றான்‌? பெல்‌ மட்டும்தான்‌ அடிச்சுட்டு இருக்கு. திரும்பவும்‌ பண்ணுனா பேசுறேன்‌. இல்ல உன்‌ போன்ல இருந்து கூப்பிடு…”  என்று சொன்ன மறுநிமிடம்‌ பார்வதியின்‌ கையிலிருந்த ஃபோன்‌ ஒலித்தது. போனை ஆன்‌ பண்ணி “சொல்லுப்பா எங்கப்பா இருக்கே” என்று பார்வதி கேட்க, 

“அம்மா… அப்பா எதுக்கு கால்‌ பண்றாரு? நான்‌ தான்‌ அவர்கிட்ட பேசமாட்டேன்னு உனக்கு தெரியுமில்லே? என்று மகன்‌ பேசியதை கேட்டு பதறிப்போனாள்‌ பார்வதி.

“உங்க அப்பாடா…நீ இங்க வரலைன்னா அவர்‌ கேட்கத்தானே செய்வாரு இதோ பக்கத்துல இருக்காரு பேசு”

“இல்லம்மா எனக்கு அவர்கிட்ட பேசுறதுக்கு விருப்பமில்லை…” என்று மறுமுனை துண்டிக்கப்பட்டது. என்ன நடந்திருக்கும்‌ என்பதை யூகித்தது மணாளனின்‌ மனசு.

“எவ்வளவு திமிரு இருந்தா என்னையே இப்படி தூக்கி எறிஞ்சு பேசுவான்‌?”

“இல்லைங்க அவன்‌ உங்கள பத்தி எதுவும்‌ சொல்லல… அப்பா எதுக்கு கால்‌ பண்ணினாருன்னு மட்டுந்தான்‌ கேட்டான்‌.”

“அதை ஏண்டி எங்கிட்ட கேட்க கூடாது? நான்‌ போன்‌ பண்ணா எடுக்கவே மாட்றான்‌. உங்கிட்ட கால்‌ பண்ணி பேசுறான்‌? இப்போ வேணுன்னா அவன் லட்சக்கணக்கில்‌ சம்பாதிக்கலாம்‌. ஆனா இதுக்கு முன்னாடி? அவன்‌ சாப்பிட்ட சாப்பாடு போட்டிருக்கிற டிரஸ்‌ எல்லாமே என்னோட உழைப்புல இருந்துதானே வந்தது. இப்போ சம்பாதிக்கிற திமிர்ல அவன்‌ பேசுறான்‌. ஆனா இதுவரைக்கும்‌ சோறு போட்டேனே அதுக்கு என்ன உபகாரம்‌ பண்ண

போறான்‌. ஆம்பிள்ளை பிள்ளைன்னு செல்லம்‌ கொடுத்து வளர்த்தது தப்பா போச்சு..இப்போ…தலைக்கு மேல உக்காந்துகிட்டு ஆட்டம்‌ காட்டுறான்‌.”

“சரி சரி நான்‌ பாத்துக்கிறேன்‌ நீங்க போய்‌ எல்லாரும்‌ வந்துட்டாங்களான்னு  பாருங்க…” என்று கணவனை அனுப்பிவிட்டு திரும்பவும்‌ மகனுக்கு கால்‌ பண்ணி, 

“டேய்‌…அப்பா.. உன்‌ மேல கோவமா இருக்காரு நீ நேர்ல வந்து ஒரு வார்த்தையாவது பேசு…இல்லாட்டி எனக்கும்‌ சேர்ந்து பிரச்சனையாயிடும் புரியுதா:

“சரி சரி வரேன்‌ ஆனா அஞ்சு மணிக்கெல்லாம்‌ வர முடியாதும்மா. நான் ரொம்ப தூரத்துல இருக்கேன்‌. நான்‌ அங்க வரதுக்கு எப்படியும்‌ ஆறு மணியாவது ஆயிடும்‌. நீங்க பூஜையை ஆரம்பிங்க எனக்காக வெயிட்‌ பண்ண வேணாம்‌…” போனை கட்‌ பண்ணினான்‌.

அப்பாவுக்கும்‌ பிள்ளைக்கும்‌ நடுவுல மாட்டிகிட்டு நானில்லே முழிக்கிறேன்‌. இதெல்லாம்‌ எப்போ சரியாகப்போகுதுன்னு ஒன்னும்‌ புரியல: என்று புலம்பியபடி அங்கிருந்து நகர்ந்தாள்‌ பார்வதி.

உதயம்‌ மசாலா: கம்பெனியில்‌ விட்டுக்கு தேவையான மசாலா பொருட்கள் அதாவது குழம்பு மிளகாய்த்தூள்‌, கரம்மசாலா, மஞ்சள்தூள்‌, சம்பார்பொடி, ரசப்பொடி என அனைத்துவித மசாலா வகைகளும்‌ நல்ல முறையில்‌ சுத்தம் செய்யப்பட்டு அரைத்து பக்கெட்‌ பண்ணி உள்ளூர்‌, வெளியூருக்கு அனுப்பப்படுகிறது. இங்கே பெண்கள்‌ இருபது பேர்‌, ஆண்கள்‌ பதினைந்து பேர் மொத்தம்‌ முப்பத்தைந்து பேர்‌ வேலை பார்க்கிறார்கள்‌. தமிழ்நாடு மட்டுமல்லாமல்‌ எல்லா மாநிலங்களுக்கும்‌ இவர்கள்‌ தயாரிக்கும்‌ மசாலா பொருட்கள்‌ ஏற்றுமதி செய்யப்படுகிறது. நல்ல பெயரோடும்‌ தரமானதாகவும்‌

இருப்பதால்‌ அனுப்பும்‌ பொருட்கள்‌ ரிட்டன்‌ வராமல்‌ விற்பனையாகி விடுவது சிறப்பம்சம்‌.

“நம்ம கம்பெனியில கோடிக்கணக்கில்‌ லாபம்‌ கிடைக்கிறது. இதை விட்டுட்டு நீ ஏன்‌ இன்னொருத்த கிட்ட கைக்கட்டி வேலைப்பார்க்கணும்‌?”

“இல்லப்பா நான்‌ படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை அதுதான்‌. அத விட்டுட்டு இந்த மொளகாப்பொடி நெடியில என்னால காலந்தள்ள முடியாது.” மணாளனின்‌ முகம்‌ இரெத்தம்‌ இழந்தது.  

“பகலெல்லாம்‌ இந்த நெடியில கிடந்து வியர்வை சிந்தி சம்பாரிச்ச காசுலதானே நீங்க இப்ப சொகுசா காரு பங்களான்னு வாழ்ந்துகிட்டு இருக்கீங்க…இத முதல்ல புரிஞ்சிக்கோ?” இதுவரை பட்ட கஷ்டம்‌ பாரமாய்‌ அழுத்தியது.

“அதுதான்‌ ஏன்னு கேக்குறேன்‌? பட்ட கஷ்டமெல்லாம்‌ போதும்‌. இனிமேலாவது நான்‌ சொல்றதை கேக்கலாமில்லையா?” அவன்‌ குரல் கணீரென்று ஒலித்தது.

“ஓ…தொர எனக்கே புத்தி சொல்றீங்களோ? சொல்லுங்க கேட்டுகிறேன்‌.”




“புத்தி சொல்லலப்பா ஐடியாதான்‌. அதாவது இந்த கம்பெனியை வேற யாருகிட்டயாவது சேல்ஸ்‌ பண்ணிடுங்க…அந்த பணத்துல ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரமிக்கலாம்‌. பாரின்‌ கண்ட்ரி கூட டையப் வச்சிக்கிட்டா, ஒரே வருஷத்துல பல கோடி முதல்‌ எடுத்துடலாம்‌…”

“அதெல்லாம்‌ நமக்கு சரிப்பட்டு வராதுப்பா. மொளகா நெடியோடு ஒன்றிப்போன என்னால ஏசியும்‌ கம்பியூட்டரும்‌ ஒத்து வராது. உனக்கு எது தோதுபடுதோ அத நீ பாத்துக்கோ, என்‌ பிசினஸ்சை நான்‌ பார்த்துக்கிறேன்‌…” சட்டென்று பேச்சை முறித்தார்‌.

இப்படித்தான்‌ மூன்று வருடங்களுக்கு முன்னாடி அப்பாவுக்கும்‌ பிள்ளைக்கும்‌ வாக்குவாதம்‌ ஆரபித்து பேச்சு வார்த்தை நின்றுப்போனது.

“அப்பா…அப்பா…” குரல்‌ கேட்டு பட்டென்று திரும்பிப்பார்த்தார்‌ மணாளன்‌. மகள்‌ திவ்யா காரைவிட்டு இறங்கி கொண்டிருந்தாள்‌ பின்னால்‌ அவள் கணவன்‌ கோபி.

“வாம்மா… வாங்க மாப்பிள்ளை…”

“இந்த வருஷம்‌ நீ வரலையேன்னு கவலையா இருந்துச்சு. நல்ல வேளை ரெண்டு பேரும்‌ சேர்ந்தே வந்துடீங்க..வாங்க வாங்க உள்ளே போகலாம்‌ உங்க அம்மா பார்த்தா சந்தோஷப்படுவா..” மகளை பார்த்த சந்தோஷத்தில்‌ சுறுசுறுப்பு தொற்றிக்கொள்ள, நடையை எட்டிப்போட்டு நடந்தார்‌.

“அப்பா…இங்கே பூஜையை முடிச்சுட்டு அவர்‌ ஆஸ்பிட்டலுக்கு கிளம்பனும்பா.! அதனால ரொம்ப நேரம்‌ இருக்க முடியாதுப்பா சாரிப்பா…

“ஆமாம்‌ மாமா உடனே கிளம்பனும்‌…”

“சரிங்க மாப்பிள்ளை…எல்லாம்‌ ரெடியாதான்‌ இருக்கு பூஜையை முடிச்சுட்டூ உடனே கிம்பிடலாம்‌…”

மகள்‌, மருமகனின்‌ வரவை பார்த்த பார்வதிக்கு இன்ப அதிர்ச்சி. ஒவ்வொரு வருடமும்‌ மகள்‌ கையால்தான்‌ சந்தனம்‌ குங்குமம்‌ வைத்து கற்பூரம் கொளுத்தி அரவை மிஷினை ஓடவிடுவார்கள்‌. அவள்‌ திருமணமாகி சென்றதிலிருந்து இரண்டு வருடமாய்‌ பூஜைக்கு வருவதில்லை. அதுவே மணாளனுக்கு பெரிய குறையாய்‌ இருந்தது. “என்னங்க அவ இனி அந்த குடும்பத்து பொண்ணுங்க! அவங்க சொல்லுக்கு கட்டுப்பட்டு, அங்கதானே இருக்கணும்‌. நாம கூப்பிட்டவுடனே ஓடிவரமுடியுமா??” என்று கணவனை ஒப்பேத்தியிருந்தாள்‌. ஆனால்‌ சொல்லாமல்‌ கொள்ளாமல்‌ மகளும் மருமகனும்‌ வந்து இறங்கவே இன்ப அதிர்ச்சியாகிவிட்டது. இருவரையும் முக மலர்ச்சியோடு வரவேற்று அமரவைத்த பார்வதியின்‌ நெற்றிப்பொட்டு சுருங்கியது.

“என்ன திவ்யா முன்ன பார்த்ததுக்கு இப்போ ரொம்ப இளைச்சு போயிருக்கே? சரியா சாப்புடுறதில்லையா?”

“அப்படியெல்லாம்‌ ஒண்ணுமில்லம்மா நல்லாதான்‌ சாப்புடுறேம்மா…” அம்மாவும்‌ மகளும்‌ பேசிக்கொண்டிருக்க, மருமகனுக்கு கம்பெனியை சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தார்‌ மாமனார்‌.

சுமார்‌ அரைமணிநேரத்தில்‌ பூஜை நடந்து முடிந்தது. அங்கு வந்திருந்த பணியாட்களுக்கு பாத்திரமும்‌ புது துணியும்‌ வைத்து கொடுத்தார்கள்‌.  

“அம்மா…௮ண்ணன்‌ எப்போ வரும்‌? அண்ணனை பார்த்து ரெண்டு மாசமாகுதும்மா…”

“இப்போ வந்துடுவான்‌ கொஞ்ச நேரமிருந்தா பார்த்துட்டு போகலாம்‌ ஆனா

நீதான்‌ உடனே போகனுன்னு சொல்றீயே?”

“அத்தை…அல்ரெடி ரொம்ப லேட்டாயிடிச்சு நாளைக்கு மறுநாள்‌ சண்டேதானே வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்‌.”

“சரிங்க தம்பி…” மருமகன்‌ முன்னே நடக்க மகள்‌ தயங்கி நின்று தாயைப்‌ பார்த்தாள்‌.

“என்ன திவ்யா?”

“அந்த பொண்ணு பாக்கிற விஷயத்தை பத்தி அண்ணன்‌ என்ன சொன்னிச்சு? பதில்‌ சொல்ல திணறிய பார்வதி வீட்டுக்கு போனவுடன்‌ போன்‌ பண்ணு என்று செய்கையால்‌ சொல்லி மகளை அனுப்பி வைத்தாள்‌.

பொண்ணு பார்க்கவே வரமாட்டேன்‌ என்று பிவாதமாய்‌ இருக்கும் மகனைப்பற்றி என்ன வென்று சொல்லுவாள்‌? 




 

What’s your Reaction?
+1
23
+1
15
+1
0
+1
0
+1
0
+1
1
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!