Serial Stories தொடுவதென்ன தென்றலோ

தொடுவதென்ன தென்றலோ -1

1

தொடர்‌ மழை காரணமாக சென்னையில்‌ அன்றையதினம்‌ பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. வாசற்படியில்‌ கீழ்‌ தேங்கி நின்ற மழைநீரை துடைப்பத்தால்‌ தள்ளி சுத்தம்‌ செய்து கொண்டிருந்தாள்‌ தேவகி.

கேட்டிற்கு அருகில்‌ வந்து நின்ற ஆட்டோவிலிருந்து இறங்கியவளை பார்த்தவுடன் செய்து கொண்டிருந்த வேலையை நிறுத்திவிட்டு கேட்டை திறந்து வரவேற்றாள்‌ தேவகி.

“வா…மாலதி…” அந்த மாலதியின்‌ கையில்‌ கனத்துக்கொண்டிருந்த வாழைத்தாரை வாங்க கை நீட்டினாள்‌ தேவகி.

“பரவாயில்ல அண்ணி நானே எடுத்துட்டு வரேன்‌…” தூக்கமுடியாமல்‌ தூக்கிக்கொண்டு வீட்டிற்குள்‌ நுழைந்த மாலதியை பின்‌ தொடர்ந்தாள் தேவகி.

சமயலறையில்‌ சாதம்‌ வேகும்‌ மணம்‌ நாசியை தாக்க, “ஐயோ சாதத்தை மறந்துட்டேன்‌ பாரு…” என்று இரண்டே எட்டில்‌ சமயலறைக்குள்‌ நுழைந்தாள்‌ தேவகி. அவளை தொடர்ந்து சமயலறைக்கு வந்த மாலதி, சாதம்‌ வடிக்கும்வரை பொறுமைகாத்து பின் மெல்லா பேச்சை துவங்கினாள்‌.

“என்ன அண்ணி செம்பருத்திக்கு வரன்‌ பாத்திருப்பதாய் கேள்விப்பட்டேன்…?”

“ஆ…ஆமாம்‌…மாலதி.” தேவகியின் யோசனை எல்லாம் மாலதிக்கு யார்‌ சொல்லியிருப்பார்கள்‌? என்பதில் இருந்தது. 

“அண்ணன்‌ சொன்னாரு அண்ணி…”

தேவகியின் மனதை படித்தவள் போல் பட்டென்று சொன்னாள்.

 ஆமா செம்பருத்திக்கு அப்படியென்ன வயசாயிடிச்சு அண்ணி? அவ படிப்பே இன்னும்‌ முடியல அதுக்குள்ள கல்யாணத்துக்கென்ன அவசரம்‌?”

இத கேக்கத்தான்‌ இவ்வளவு தூரம்‌ வந்தீயா? என்பதுப்போல் பார்த்தாளே தவிர கேட்க தைரியமில்லை.

“என்ன அண்ணி எதுவும்‌ சொல்லமாட்றீங்க?

“அ..வளுக்கு இருவத்தொன்னு முடிஞ்சி இருவத்திரெண்டு நடக்குதில்லையா மாலதி? அதான்‌ உங்க அண்ணன்‌ மாப்பிள்ளை பாக்க ஆரமிச்சிருக்கார்‌…?”

“இந்த சின்ன வயசுல கல்யாணம்‌ பண்ணி கொடுத்தா அவளுக்கு மனப்பக்குவம்‌ இருக்காதே?. எம்‌ பொண்ண கட்டிகொடுத்து அவ படுற கஷ்டம்‌ போதாதா? கொஞ்ச நாள்தான்‌ போகட்டுமே…” என்று மாலதி தேவகியிடம் பேசிக்கொண்டிருந்தது அடுத்த அறையில் இருந்த செம்பருத்தியின் காதுகளில் கணீரென்று கேட்டது.

அப்போதுதான்‌ செம்பருத்தியின்‌ மூளைக்கு அந்த விஷயம்‌ சுரீரென்று உரைத்தது. ஐயோ நேத்து மாப்பிளையோட போட்டோன்னு அப்பா ஒரு போட்டோ கொடுத்தாரே…? பெயர்கூட ஏதோ மணிமாறனோ? இளமாறனோ? ஏதோ ஒரு மாறன்‌. அந்த போட்டோவை எங்க வச்சேன்னு தெரியிலையே? பதற்றத்தோடு தேடி ஓரிரு நிமிடங்களில்‌ கண்டுபிடித்து அப்பாடான்னு பெருமூச்சச்சோடு போட்டோவை எடுத்து வேண்டாவெறுப்பாக பார்த்தப்போது, அவனின்‌ உருவம்‌ அப்படியொன்றும் மனதை கவருவதாய் இல்லை. தோள்களை குலுக்கியபடி போட்டோவை டேபிள்‌ மேல்‌ வைத்தாள்‌.

நல்ல வேளை போட்டோ கிடைத்து விட்டது இல்லன்னா அத்தகிட்ட காட்டனும்‌ போட்டோவை எடுத்துட்டுவா என்று வந்ததும்‌ வாராததுமா கேட்க ஆரமித்துவிடுவார்‌.

“எம்புள்ளைக்கு மட்டும்‌ நல்ல வேலை இருந்திச்சின்னா செம்பருத்தியை அவனுக்கே கட்டி வச்சிடலாம்தான். என்ன பண்றது அவனுக்கு எந்த வேலையும்‌ அமையமாட்டுதே…” அத்தையின்‌ குரல்‌ கணிரென்று கேட்டது.

சமயலறையில்‌ பாத்திரம்‌ உருளும்‌ கர்ணகடூரமாய் கேட்க, சத்தத்தை வைத்து அம்மாவுக்கு அத்தையின்‌ பேச்சில்‌ உடன்பாடில்லை என்பதை புரிந்து கொண்டாள்‌ செம்பருத்தி.




பின்னே இருக்காதா? அத்தையோட அருமை புதல்வன்‌ குணாவை பத்தி ஊருக்கே தெரியும்போது அம்மாவுக்கு தெரியாமலா இருக்கும்‌?.

இவளுடைய அறைக்கு பக்கத்தில்தான்‌ சமயலறை இருக்கிறது. கதவு திறந்திருந்தால்‌ அங்கே என்ன பேசினாலும்‌ காதில்‌ விழும்‌. ஆனால்‌ இது நாள்‌ வரைக்கும்‌ அம்மா அத்தையை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியதில்லை! அம்மா அப்படித்தான்‌. சரி அப்பாவாவது அத்தை கருத்துக்கு எதிர்ப்பு சொல்லுவாரென்று பார்த்தால்‌ அதுவும்‌ இல்லை. “மாலதி எது சொன்னாலும்‌ சரியாகத்தான்‌ இருக்கும்‌ அவ நாக்குல கருப்பு இருக்கு சொல்றதெல்லாம்‌ நடக்கும்‌.” என்பார்‌ அப்பா.

அதென்ன லாஜிக்கோ? இதுவரை புரியாத புதிராவே இருக்கிறது.

அத்தையை பொறுத்தவரை அண்ணன்‌ மட்டும்‌ நல்லா இருந்தா போதும்‌. அண்ணன்‌ குடும்பம்‌ எப்படி போனாலும்‌ அதைப்பற்றின கவலையில்லை. அடுத்தது அண்ணன்‌ மகள்‌ வசதியான குடூம்பத்தில்‌ வாக்கப்பட போகிறாளே? என்ற காழ்புணர்ச்சி. தன்னுடைய மகளுக்கு அமையாத ஒரு வாழ்க்கை அண்ணன்‌ மகளுக்கு அமைந்துடுமோ? என்ற வயிற்றெரிச்சல்‌. இப்படி பல விஷயங்கள்‌ ஜீரணமற்று இருப்பதால்தான்‌ அண்ணன்‌ வீட்டைத்தேடி வந்திருக்கிறாள்‌ அத்தை. அம்மா கல்யாணமான புதிதில்‌ அத்தையால்‌ என்னன்ன கஷ்டங்களை அனுபவித்தாள்‌ என்று உறவினர்கள்‌ சொல்ல கேட்டிருக்கிறாள்‌. அத்தையை பற்றி மற்றவர்கள் சொல்லி சொல்லியே அத்தையின்‌ உண்மையான முகம்‌ என்னவென்று இவளுக்கு நன்றாகவே தெரியும்‌.

ஒருமுறை அத்தை பேசியதை அப்பாவிடம்‌ சொல்லப்போக, “இப்படி எல்லாம் குடும்பத்துக்குள்ள குழப்பத்தை உண்டு பண்ணாதே செம்பருத்தி. நீ சின்ன புள்ள…உன்‌ வயசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்கோ…” என்று அன்று முழுவதும் ஒரே அட்வைஸ்சாய்‌ பொழியத்‌ தொடங்கி விட்டார்‌. இவரை இனி மாற்றுவது சாத்தியமில்லை என்று அன்றோடு அத்தை பற்றினை எந்த விஷயத்தையும்‌ அப்பாவோடு பகிர்ந்து கொள்வதை அறவே தவிர்த்தாள்‌.

தூரத்தில்‌ கேட்ட புல்லட்டின்‌ சத்தம்‌ அப்பாவின்‌ வருகையை உணர்த்தியது. புல்லட்டின்‌ சத்தம்‌ படிப்படியாக குறைந்து மெளனித்த சில நொடிகளுக்கு பிறகு,

“குட்டிம்மா படிக்கிறீயா? ஆமா…மாலதி குரல்‌ கேக்குது உங்க அத்தை வந்திருக்காளா?” என்று அப்பா படித்துக்கொண்டிருந்த தங்கை வாணியிடம்‌ விசாரிப்பது காதில்‌ விழுந்தது.

“ஆமாம்பா அத்தை காலையிலேயே வந்துட்டாங்கப்பா! அம்மா கூட கிச்சன்ல பேசிகிட்டு இருக்காங்க…” என்று வாணி பதில்‌ சொல்வதும்‌ காதில்‌ விழுந்தது.

அதற்குள்‌ சமையலறையில்‌ இருந்து அத்தை வெளியில்‌ வந்திருக்க வேண்டும் “அண்ணா எப்படின்னா இருக்கே? நல்லா இருக்கியா?” என்ற பாச விசாரிப்பு. “நல்லா இருக்கேம்மா… ஆமா உன்‌ விட்டுக்காரர்‌ வெளியூர்‌ போனாரே இன்னும்‌ வரலயா? கடை பக்கம்‌ போனேன்‌. கட பசங்கதான்‌ இருந்தாங்க! ஊருக்கு போன முதலாளி இன்னும்‌ வரலைன்னு சொன்னாங்க ஏன்‌ இத்தனை நாளாகுது.?” 

“சரக்கு எடுக்க போன இடத்துல ஓனருக்கு உடம்பு சரியில்லையாம்‌..ஹாஸ்பிட்டல்ல இருக்காராம்‌. சரி ஒரு ரெண்டு நாள்‌, இருந்து அவர பார்த்து பேசிட்டு வரேன்னு போன்‌ பண்ணினார்‌. ரெண்டு நாளாவே நான்‌ தான்‌ கடைக்கு போயிட்டு வந்துகிட்டு இருக்கேன்‌.”

“ஏன்‌ உன்‌ மவனை போக சொல்ல வேண்டியதுதானே? அவன்‌ என்ன பண்றான்‌? ஊர்‌ சுத்திட்டு இருக்கானா? அவனுக்கு கொஞ்சம்‌ கூட பொறுப்பேயில்லை.”

“அதெல்லாம்‌ ஒன்னுல்லண்ணா அவன்‌ ஏன்‌ ஊர்‌ சுத்த போறான்‌? வேலை விஷயமா டெய்லி அலஞ்சிகிட்டு இருக்கான்‌. நானும்‌ எவ்வளவோ சொல்லிட்டேன்‌ நமக்கு கடை இருக்குடா கடையை பார்த்துகிட்டே வேலைதேடுடான்னா கேட்டாதானே? நான்‌ படிச்ச படிப்புக்கு கடையில போய் உட்கார்ந்தா என்‌ ஃபிரெண்ட்ஸ்‌ எல்லாம்‌ கேவலமா நினைப்பாங்கன்னு சொல்றான்‌. நம்முடைய சொந்தத்‌ தொழிலை பத்தி அவனுக்கு தெரியல? சரி தலைக்கு உசந்த புள்ள!…ரொம்ப கண்டிச்சா தப்பான முடிவுக்கு போயிடூவானோன்னு பயந்துகிட்டு வாயை திறக்கறதே இல்லண்ணா…”

“ஆமா…ஆமா…நீ சொல்றதும்‌ சரிதான்‌…இந்த காலத்து பிள்ளைங்களை கண்டிக்கவே  பயமா இருக்கு.. ஆமாம்‌ டிபன்‌ சாப்டியா? அவ உள்ள என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? ஏய்‌ தேவகி கொஞ்சம்‌ இங்கே வா..நான்‌ வந்து இவ்வளவு நேரமாகுது நீ பாட்டுக்கு சமையலறையே கெதின்னு கிடக்குற? வெளியில்‌ போன மனுஷன்‌ வீட்டுக்கு வந்திருக்கானே சாப்பிட்டானா காபி வேணுமா ஏதாவது கேட்டியா? ஆமா மாலதிக்கு டிபன்‌ குடுத்தியா…” சரவெடிவென பொரிந்தார்‌ விநாயகம்‌.

“இல்லங்க இப்பதான்‌ வந்துச்சு பேசிக்கிட்டே இருந்ததுல மறந்துட்டேன்‌.”

“ஆமா பேசிக்கிட்டே இருந்தாளா… பெரிய பேச்சு…ஏண்டி மாலதி வந்த உடனே வயித்துக்கு ஏதாவது கொடுக்கனுமில்லையா? அவ பசி தாங்க மாட்டான்னு உனக்கு தெரியாதா என்ன?…”  

“அண்ணா விடண்ணா அண்ணிய ஏன்‌ திட்டற? நானென்ன விருந்தாடியாவா

வந்திருக்கேன்‌…?எனக்கு வேணுன்னா நான்‌ போட்டு சாப்பிட போறேன்‌…”

என்று சொல்லிக்‌ கொண்டு டேபிள்‌ அருகே சென்று தட்டை எடுக்கும்‌ சத்தம்‌ கேட்டது.

“செரி…செம்பருத்தி என்ன சொல்றா? அவளுக்கு அந்த பையனை புடிச்சிருக்கா? கேட்டியா இல்லியா?” மனைவியை பார்த்து கேட்டார் விநாயகம்‌.




“புடிக்காம என்னங்க அவதான்‌ உங்களுக்கு புடிச்சிருந்தா போதுன்னு சொல்லிட்டாளே? இனிமே ஆக வேண்டிய வேலையை பாக்கணும்‌. அத விட்டுட்டு புடிச்சிருக்கா புடிச்சிருக்கான்னு பத்து வாட்டி கேட்டுகிட்டு இருக்க முடியுமா? முதல்‌ ரெண்டு வார்த்தை உரக்க சொன்னாலும்‌ அடுத்தடுத்த வார்த்தைகளை வாயிற்குள்‌ முணுமுணுத்துக்கொண்டாள்‌ தேவகி. காரணம் கணவன்‌ விநாயகத்தை பொருத்தவரை மற்றவர்கள்‌ அவரிடம் வளவளவென்று பேசினால்‌ பிடிக்காது. ஆனா அவர்‌ அதற்கு எதிர்மறை வாயை திறந்தால்‌ மூடவே மாட்டார்‌.

“அண்ணா…மாப்பிள்ளை புடிச்சிருக்கு புடிக்கல அத விடு! அவளுக்கு இப்ப என்ன வயசாகுது? எம்‌எஸ்ஸி பைனல்‌ இயற்‌ படிக்கிறா! அதுக்குள்ள என்ன அவசரம்‌? உடனே கல்யாணம்‌ பண்ணவேண்டிய கட்டாயமில்லையே? இதையெல்லாம்‌ போன்ல பேசினா சரியா வராது. நேருல போய்‌ பேசினாதான் என்ன ஏதுன்னு புரியுன்னு கிளம்பி வந்தேன்‌…”

படிக்கிறேன்‌ என்று பெயர்‌ பண்ணிக்கொண்டு விரித்து வைத்திருந்த புத்தகத்தை மூடி வைத்தாள்‌ செம்பருத்தி. இந்த அத்தை வந்திருக்கும் நோக்கம்‌ மத்தவங்களுக்கு புரியாமல்‌ இருக்கலாம்‌. ஆனா எனக்கு நல்லாவே புரியும்‌..! நாத்தனாரை பேசாவிட்டால்‌ காரியத்தை கெடுத்து விடுவாள்‌ என்பது அம்மாவின்‌ கூற்று. ஆனால்‌ எனக்கு அப்படியில்லை.  அத்தையால்‌ மட்டும்தான்‌ எனக்கு வரும்‌ வரங்களை தடுக்க முடியும்‌ காரணம்‌ அத்தையின்‌ பேச்சை மட்டும்தான்‌ அப்பா கேட்பார்‌.

ஏற்கனவே இரண்டு வரன்களை படிப்பை காரணம்‌ காட்டி தவிர்த்தாச்சு. மூன்றாவதாய்‌ வந்த இந்த வரனில்‌ அப்பா ரொம்பவும்‌ ஆர்வமாய் இருக்கிறார்‌. இதை எப்படியாவது அத்தையிடம்‌ சொல்லி எனக்கு இந்த கல்யாணத்திலும்‌ விருப்பமில்லை என்பதை தெரியப்படுத்தவேண்டும்‌. அப்பா அம்மா இருக்கும்போது இது சம்மந்தமாக அத்தையிடம்‌ பேச முடியாது. என்ன பண்ணலாம்‌? குறுக்கும்‌ நெடுக்குமாய்‌ இரண்டு முறை நடந்தாள். ‌ செல்போனை எடுத்து லாக்கை அகற்றினாள்‌ பளிச்சென்று அவனின்‌ உருவம்‌ கண்களை குளிர வைத்தது.

மொபைலில் இருந்தவன் இவளின்‌ பதற்றத்தை பார்த்து  சிரித்துக்கொண்டிருந்தான்‌.  பொய் கோபத்தோடு மொபைலை ஆப் பண்ணினாள். ஆனாலும் அவனையே மனம் நாடியது. அவளுடைய ராஜராஜன்‌ பெயருக்கு ஏற்றாற்போல்‌ ஆளும்‌ ராஜாமாதிரித்தான்‌ இருப்பான்‌.

அடர்ந்த மீசை, கூர்மையான மூக்கு, கருத்த உதடு, சிறிய கண்கள்‌, அலை அலையாய்‌ படிந்திருக்கும்‌ தலைகேசம், அகன்ற மார்பு மொத்தத்தில்‌ மாற்றுக்‌கருத்தில்லாத கம்பீரமான ஆண்மகன்‌. இவன்தான்‌ என்‌ உயிர்‌ மூச்சு சுவாசம்‌ வாழ்க்கை! எல்லாமே இவனை எப்படி மிஸ்‌ பண்ணமுடியும்‌? 

ஹாலில்‌ அப்பா பேசுவது கணிரென்று கேட்டது.

“இல்ல மாலதி… வந்திருக்கிற வரன்‌ நல்ல வரன்‌ வசதியான குடும்பம்‌. அவங்க நமக்கு ஒரு விதத்துல தூரத்து சொந்தம்‌ கூட. நம்ம அப்பா தாத்தா எல்லாரையும்‌ அந்த குடும்பத்தாருக்கு தெரியுமாம்‌. இப்போ நொடிஞ்சு போயிருந்தாலும்‌ அப்ப நாம எப்படி வாழ்ந்தோம்‌ என்று அவங்களே பெருமையா சொல்றாங்க. அப்படி நம்ம குடும்பத்தை பத்தி தெரிஞ்சவங்க விட்ல நம்ம பொண்ணு வாழ போனா அவளுக்கும்‌ ஒரு மரியாதை இருக்குமில்லையா? அடுத்தது வசதியிலும்‌ ஒன்னும்‌ குறைவில்லை. ஏகப்பட்ட சொத்து இரண்டு புள்ளைங்க தான்‌. ஒரு பொண்ணு ஒரு பையனாம்‌. மாப்பிள்ளை தான்‌ பெரியவரு அவர்‌ தங்கச்சியை மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு டாக்டர்‌ மாப்பிள்ளைக்கு கட்டிக்கொடுத்திட்டாங்க. அதனால குடும்பத்துல பிக்கல்‌ பிடுங்கல் எதுவுமில்லை. நல்லா விசாரிச்சு பார்த்துட்டு தான்‌ இந்த முடிவுக்கு வந்தேன்‌.”

“பையனுக்கும்‌ பொண்ணுக்கும்‌ வயசு வித்தியாசம்‌ நிறைய இருக்கும் போல…௮..ண்ணா?” கடைசி ஆயுதமாய்‌ வயது வித்தியாசத்தில்‌ வந்து நின்றாள்‌ மாலதி.

“ஆமா மாலதி… பையனுக்கு இருபத்தொன்பது நம்ம செம்பருத்திக்கும் அவருக்கும்‌ ஏழு வயசு வித்தியாசம்‌. அப்படித்தான்‌ இருக்கணும்‌. சம வயசுல கட்டினா ஏட்டிக்கு போட்டியாத்தான்‌ நிக்குங்க. இருந்தாலும்‌ மாப்பிள்ளையை நேரில்‌ பார்த்தால்‌ வயசே தெரியாது.”

“அப்போ…நீ மாப்பிள்ளையை நேர்ல போய்‌ பார்த்துட்டன்னு சொல்லு?

“நான்‌ எங்க நேருல போய்‌ பார்த்தேன்‌ மாலதி…? அப்படியே போனாலும் உங்கிட்ட சொல்லாம போவேணா? அவரை வீட்டில்‌ போய்‌ பார்க்கல. ஒரு கல்யாணத்துக்கு போனபோது இவர்தான்‌ மாப்பிள்ளைன்னு காட்டினாங்க! எனக்கு பாத்த உடனே புடிச்சிடிச்சு! செம்பருத்திக்கு புடிச்சிருந்தா கல்யாண வேலையை நடத்திடலாம்னு இருக்கேன்‌. ஏன்‌ உனக்கு இந்த சம்பந்தம் பிடிக்கலையா…??” கேள்வியோடு தங்கையின்‌ முகத்தை ஏறிட்டார்‌ விநாயகம்‌.

ஓரளவுக்கு முடிவு பண்ணிய சம்மந்தத்தை நாம்‌ கெடுத்தோம்னு இருக்க வேணாமே என்று எண்ணியவள்‌,“அப்படி சொல்லலண்ணா நான்‌. வசதியான குடும்பமா இருந்தாலும்‌ நல்ல ஆளுங்களா இருக்கணுமில்லையா?. இன்ன கொஞ்சம்‌ நல்லா விசாரிச்சு பார்த்துட்டு அப்புறமா சம்மதம்‌ சொல்லான்னுதான்‌ சொல்றேன்‌.

சமையலறையின்‌ கதவோரம்‌ நின்றிருந்த தேவகியையும்‌ அறைகதவை திறந்துகொண்டு வெளியில்‌ வந்த செம்பருத்தியையும்‌ கவனத்தில்‌ வைத்தே பேசினாள்‌ மாலதி.

“நான்‌ நாலு நாளா இதே வேலையா தான்‌ சுத்திக்கிட்டு இருக்கேன்‌ மாலதி. மாப்பிள்ளை குணமென்ன? கெட்ட பழக்கம்‌ ஏதாவது இருக்கா? எங்க படிச்சாரு? என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டேன்‌. எல்லாருமே அவரை ஆஹா ஓஹோன்னு பாராட்டுறாங்கள்‌. யார்‌ வாயிலிருந்து அவரைப்பத்தின ஒரு குறை கூட வரலன்னா பார்த்துகோ!‌. அப்புறம்‌ வரதட்சனைன்னு எதுவும்‌ கேக்ககூடாதுன்னு மாப்பிள்ளையே சொன்னாராம்‌. இதிலிருந்து அவரோட குணம்‌ என்னன்னு தெரியுதில்லையா”?

“இந்த காலத்துல யாரு வரதட்சணை வேணாம்னு சொல்றா? அதை போடு இதை போடுன்னு நம்பள ஆட்டி படைச்சிடுறாங்க. அதுமட்டுமில்லை இரண்டு ஜாதகத்தையும்‌ போட்டு பார்த்ததில்‌ ஒன்பது பொருத்தமிருக்கு” கணவனை முந்திக்கொண்டு சொன்னாள்‌ தேவகி.

“ஆமாம்‌…மாலதி அப்புறம் தேவகி கிட்ட இருக்கிற நகை எல்லாம்‌ மாத்தி, அகக்கம் பக்கத்துல கடன உடன வாங்கி எப்படியாவது ஒரு ஐம்பது சவரனை போட்டுடனும்னு முடிவு பண்ணி இருக்கேன்‌. மேற்கொண்டு கல்யாண செலவு பாத்திரம்‌ பண்டம்‌ இதுக்கெல்லாம்‌ என்ன பண்றதுன்னுதான்‌ தெரியில?…”

“அப்போ நீ அந்த மாப்பிள்ளைதான்னு முடிவே பண்ணிட்டே அப்படிதானே?”

கேட்கும்‌ போது அவள்‌ குரல்‌ பிசிறியது. ஒரு நல்ல வாழ்க்கை அமையப்போகுதுன்னா அதை கேட்டு சந்தோஷ படாம இப்படி குமுறுகிறாளே?. இவளுடைய குரலே சரியில்லையே என்று யோசித்தாள்‌ செம்பருத்தி. ஒரு விஷயம்‌ மட்டும்‌ அவளுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது.

 அத்தை சாதாரணப்பட்டவ இல்ல எந்த ஒரு விஷயமா இருந்தாலும்‌ அதுல குற்றம்‌ குறை கண்டுபிடிக்க கூடியவள்‌. அப்படி இருக்கும்போது கண்டிப்பா அண்ணன்‌ மகள்‌ செம்பருத்திக்கு இப்படி ஒரு நல்ல வாழ்க்கை அமையறதை அவ விரும்ப மாட்டாள்‌. ஏதாவது ஒரு ரூபத்துல பிரச்சினை பண்ணிக்கிட்டேதான்‌ இருப்பா. ஏன்‌ இந்த கல்யாணத்தை நிறுத்தக்கூட அவ முயற்சி பண்ணுவாள்‌. எது எப்படியோ கல்யாணம்‌ நின்னா சரி. என்று மனதிற்குள்‌ எண்ணிய செம்பருத்தி முகத்தை சிரித்தப்படி வைத்துக்கொண்டு அத்தையின்‌ அருகில்‌ வந்து நலம்‌ விசாரித்தாள்‌.




What’s your Reaction?
+1
33
+1
21
+1
1
+1
1
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!