Short Stories sirukathai

உஷ் (சிறுகதை)

அது ஒரு அடர்ந்த வனப்பகுதி, வனப்பகுதியின் நடுமையமான அந்தப் பிரதேசத்தில்,அருவி நீர் ‘சலசலத்து’ ஓடிக்கொண்டிருந்தது . மனதை மயக்கும் தென்றல் காற்று வீசிக் கொண்டிருந்தது .  அருவிக்கரையோரம் பத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் வேட்டையாடப்பட்டு அவற்றின் இறைச்சி வெட்டி பக்குவப்படுத்த பட்டுக்கொண்டிருந்தது .

அதன் அருகே, எரிந்துகொண்டிருந்த அடுப்பில் இருந்து ‘கமகமக்கும்’ மசாலாவின் மனம் அந்த ‘பிராந்தியத்தையே’ கிறங்கடித்துக் கொண்டிருந்தது.

வாளும் , கேடயமும் தாங்கிய படைவீரர்கள் , ஒருவரோடு ஒருவர் ‘வாளோடு வாள்’ மோதச் செய்து சப்தம் எழுப்பி விளையாடிக்கொண்டிருந்தனர். மற்றும் சிலர் கையிலிருந்த ஈட்டி மூலம்  அருகில் இருந்த  நீர் ஓடையில் மீன்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பெரும்பான்மையான படை வீரர்கள் அடுப்பையும், இறைச்சியையும் பார்த்தபடி எப்பொழுது சமையல் தயாராகும் ;அதை ஒரு கை பார்க்கலாம் என்று காத்திருந்தனர். அவர்கள் முகங்களில் வெற்றிக்களிப்பு இருந்தது .ஏதோ ஓர் யுத்தத்தில் வென்று அந்த வெற்றியை கொண்டாட இந்த விருந்து தயாராகிக் கொண்டிருப்பதை நம்மால் உணர முடிந்தது .

அவர்களை அதிக நேரம் காக்க வைக்காமல் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர்கள், எல்லோரும் சாப்பிட வரலாம் என்ற தகவலை தெரிவித்தனர். படைக்கு ‘முந்தியவர்கள்’ பந்திக்கு பிந்தியாவிடப் போகிறார்கள் . மிகப்பெரிய போட்டா போடிக்கு பிறகு சாப்பிடுவதற்கு உண்டான இடங்களில் அமர்ந்தனர் . இடம் கிடைக்காதவர்கள் பரிமாறுவதற்கு தயாரானார்கள் .




‘ டேய் மணிமாறா’ முதல் பந்தியில் சாப்பிட அமர்ந்திருக்கும் கூட்டத்தை பார்த்தால், இரண்டாவது பந்திக்கு சாப்பாடு காணாது போல் உள்ளதே. ஊரில் உள்ள ஒட்டுமொத்த ‘கடோத்கஜன்களும்’ ஓரிடத்தில் வந்து அமர்ந்தது போல் அல்லவா இருக்கிறது!?..

‘வெற்றி வேலா’ நீ உன் வாயை மூடிக்கொள். . நாங்கள் சாப்பிட்டு சாப்பாட்டை காலி பண்ணுவது இருக்கட்டும் ,  பரிமாறுகிறேன் என்ற போர்வையில்  எங்கள் இலைக்கு வருவதற்கு முன்பே  கறியை உன் வாய்க்குள் அமுக்குவதை நிறுத்து.

இவர்களுடைய இந்த சம்பாசனை சிலருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் , பந்தியில் இருந்த பெரும்பாலானோர் காரியமே கண்ணாக இருந்தனர்.

அப்பொழுது பந்தியில் ஒரு ‘சலசலப்பு ‘ஏற்பட்டது . இரண்டு நபர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் .

”  நீ எதற்காக அவன் இலையில் மட்டும் அதிகமான கறியை வைக்கிறாய்? .”

” அவன் கேட்டான் வைத்திருக்கிறேன்….  அவ்வளவுதான் “.

” நானும் தான் கேட்டேன் ” ,       “என் இலையில் வெறும் எலும்பை மட்டும் விசிறிவிட்டு போகிறாய்” .

“யுத்தத்தில் சண்டையிட்டவர்களுக்கன விருந்து இது”.

” இப்பொழுது நீ என்ன கூற வருகிறாய்”?  வாதம் செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களுக்கும்  இடையே புகுந்தான் ‘மற்றொருவன் ‘.

அவன் என்ன சொல்கிறான் என்று உனக்கு புரியவில்லையா ? இந்த யுத்ததில் ‘நானும்’ என்னுடைய கூட்டாளிகளும் நன்றாக போராடினோம், . எதிரி நாட்டு வீரர்கள் புறமுதுகிட்டு ஓடியதற்கு முக்கிய காரணமே நாங்கள் தான். அதனால், என் போன்ற போராளிகள் சாப்பிட்டு முடிக்கும்வரை , உன் போன்ற ” வெத்துவேட்டு ” காத்திருந்து மீதம் இருப்பதை தின்னவேண்டும். ஒருவேளை மீதம் எதுவும் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் சாப்பிட்டுவிட்டு போட்ட எச்சில் இலையை கிளரி பார் நிச்சயம் உனக்கு ஏதாவது கிடைக்கும் .

முதலாமவன் இப்பொழுது கோபத்தின் உச்சிக்கு சென்று இருந்தான்.

என்னையா எச்சில் இலையை கிளர சொல்கிறாய்?என்று கூறியபடி தான் சாப்பிட்டுக்கொண்டிருந்த இலையை விசிறி எதிரே இருந்த அவனின் முகத்தில் அடித்தான்.

இரண்டு நபர்களுக்கு இடையே நடந்த வாதம் இப்பொழுது 2 குழுக்களுக்கு இடையே நடக்க ஆரம்பித்தது . இனி பேசி பிரயோஜனமில்லை மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான் என்ற முடிவை இரு தரப்பினரும் எடுத்து ‘உடைவாள்’ மீது கை வைத்த நேரம் கணீரென்ற அந்தக் குரல் ஒலித்தது .

‘படைத்தலைவர்’ ‘…. படைத் தலைவர் வருகிறார்’  என்ற குரல் வீரர்கள் மத்தியில் மளமளவென்று பரவியது.

” நிறுத்துங்கள் என்ன குழப்பம் இங்கே ”  ” என் அனுமதியின்றி ஆயுதங்களை கையில் எடுக்க என்ன துணிச்சல் உங்களுக்கு”?.

சண்டையிட ஆரம்பித்து இருந்தவர்கள் , தங்களுடைய தன்னிலை விளக்கத்தை தர முன்வர —

“பேச வேண்டாம்” ” நான் இப்பொழுது எதுவும் கேட்கத் தயாரில்லை”   இது சாப்பிடும் நேரம் . உங்களை விசாரித்து ,நேரத்தை விரயம் செய்து ,மற்ற வீரர்களையும் பட்டினி போட நான் தயாரில்லை . அனைவரும் அமைதியாக சாப்பிடுங்கள் . நீங்கள் எவ்வளவு தான் சாப்பிட்டாலும் காலியாகி விடாத அளவிற்கு உணவு தயாராக உள்ளது . எனவே இனி எந்த சத்தமும் எழுப்பாமல் அமைதியாகச் சாப்பிடுங்கள் மாலையில் உங்களை விசாரிக்கிறேன் .

அதன்பிறகு எவருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் படைத்தலைவர் தன் பாதையில் நடந்தே போய் விட்டார் . அதன் பிறகு அங்கே எந்த ஒரு கூச்சல் குழப்பமும் இல்லை. அந்த இடத்தில்  எந்த ஒரு சச்சரவும் நடக்காததுபோல் ‘ அவரவர்’  அவரவருடைய இடங்களில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர் .
—————–   ——————  —————–
மாலை நேரம் கடந்து போயிருந்தது . சூரியன் முழுமையாக தன் முகத்தை மறைத்துக் கொண்ட போதும், அவன் விட்டுச் சென்றிருந்த ஒளிக்கற்றைகள்  வெளிச்சத்தை தந்து கொண்டிருந்தன . ஆனால், அந்த வெளிச்சம் எந்த நேரத்திலும் மறைந்து, முழுமையான இருள் கவிழ்ந்து விடும் என்ற நிலை இருந்தது . அப்பொழுது,  படைத்தலைவர் ஒட்டுமொத்த படை  வீரர்களையும் யுத்தத்திற்குத் தயாராக அணிவகுத்து நிற்குமாறு கட்டளை இட்டார்.

இந்தக் கதையில் இப்பொழுதுதான் ” நான் ” வருகிறேன் . என்னைப்பற்றி இந்த கதையின் போக்கில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் . தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு என்னைப் பற்றி நானே தெரிவிக்கிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்திருங்கள் .

படைவீரர்கள் அனைவரும் யுத்த உடையில் தயாராக நின்றனர் . அனைத்து வீரர்களும் மார்பில் கவசம் தரித்து இருந்தனர் .வாள், வேல், வில், என்று தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஆயுதங்களை கைகளில் தாங்கி இருந்தார்கள். அவர்கள் தலையில் அணிந்திருந்த தலைக்கவசம் ஏறத்தாள முக்கால்வாசி முகத்தை மறைத்தபடி இருந்தது . அந்தப் படைப்பிரிவின் முன்னாள் ‘ நான்’ நின்று கொண்டிருந்தேன் . ஏனென்றால் படைத்தலைருக்கு அடுத்தபடியாக அந்த படையின் தலைமை பொறுப்பில் உள்ளவன் நான். .

‘ வீரர்களே உங்கள் அனைவருக்கும் ஓர் முக்கிய செய்தி’ படைத் தலைவர் பேச ஆரம்பித்தார் . அவரும் முழுவதாக கவசத்தை அணிந்திருந்தார் .

நம்பகமான , நம் உளவாளிகள் மூலம் எனக்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறது . வீரர்களின் அணிவகுப்பு முன்னே நடந்தபடி பேசலானார் ‘ படைத்தலைவர்’.

நான் சொல்வதை நீங்கள் கலவரம் அடையாமல் கேளுங்கள் . நம்முடைய படை வீரர்களுக்கு மத்தியில்,’ ஒரே ஒரு எதிரி நாட்டு வீரன்’ கலந்துவிட்டான் . ஆனால் ,அவன் யார் என்று தெரியவில்லை . அவனுடைய நோக்கம் என்ன என்பதும் தெரியவில்லை. நம்மில் கலந்து இருக்கும் அந்த ஒற்றை வீரனை எவ்வாறு கண்டு பிடிக்கப் போகிறோம் என்பதும் தெரியவில்லை.

படைத் தலைவரின் குரல் கரகரப்பு ஒலித்தது . கனீரென்ற அவரது குரல் மாறி பிசிருதட்டியது.  படை தலைவரின் நடையில் இருந்த மிடுக்கு கூட குறைவாகவே தென்பட்டது. அந்த ஒற்றை வீரனுக்காக படைத்தலைவர் இவ்வளவு கவலை கொள்ளுவது ஏன்? . லட்சம் வீரர்கள் கொண்ட நம் படைப்பிரிவை அவன் என்ன செய்து விடுவான்? . நான் குழம்பிக் கொண்டிருந்தேன் .

வீரர்களே நான் சொல்வதை கவனமாகக் கேளுங்கள் . நீங்கள் உங்கள் அருகே இருக்கும்  உங்கள் சகாக்களை கவனியுங்கள்.  அவர்களை தவிர உங்களால் புரிந்து கொள்ள முடியாத நபர்கள் யாராவது உள்ளே ஊடுருவி இருக்கிறார்களா?  என்பதை கூர்ந்து கவனியுங்கள்.

பௌர்ணமி நிலவின் ஒளி வெளிச்சத்தை வாரி இறைத்துக் கொண்டிருந்தது . அந்த வெளிச்சத்தில் வீரர்கள் தன் அருகே இருந்த மற்ற வீரர்களை அடையாளம் காண முயற்சித்தனர்.

ஆனால் முடிவு வேறுவிதமாக இருந்தது.கூட்டத்தில் முழுவதும் ‘ ஆங்காங்கே’  ” இதோ இவன் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது”  என்று  கூச்சலிட்டனர் ;ஒட்டு மொத்த படைப்பிரிவு முழுவதும்  குழப்பமும் ஏற்பட்டது.

” என்ன முட்டாள்தனமான கட்டளை இது ” இந்த இருள் சூழ்ந்து வரும் நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய நபர்களை இனம்காண சொல்வது என்பதும், அதனை முறைப்படுத்தாமல் இப்படி அறிவிப்பு போல் அனைத்து வீரர்களுக்கும் முன்னாள் தெரிவிப்பது என்பதும், எவ்வளவு தவறான விஷயம் . நான் எனக்குள்ளேயே ‘புழுங்கினேன்’ .

மதியம் சாப்பாட்டிற்காக சண்டையிட்ட இருவரில் ஒருவன், இதுதான் சரியான நேரம் என்று தன் கையிலிருந்த வேளை இவன்தான் எதிரி நாட்டு ஒற்றன் என்று கூறியபடி எதிரே இருந்த தன்னுடன் சண்டையிட்டவன் மீது மீது வீசினான். அவனுடைய இந்தச் செயல் படைவீரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஒருவருக்கொருவர் தாக்கிக் கொள்ள ஆரம்பித்தனர் .

‘ போச்சி போச்சி’ ‘ எல்லாம் போச்சு ‘  நான் நினைத்தபடியே நடந்து விட்டது. நம்முடைய வீரர்கள் நமக்குள் ஆகவே அடித்துக்கொள்ளும் இந்த செயலுக்கு முழு காரணம் படைத்தலைவர் தான்.கொதித்துப் போனேன் நான் .

படைத்தலைவர் இருந்த புறம் திரும்பிய நான் கோபமாக  படைத் தலைவனை வெறிக்க ஆரம்பித்தேன் . அவனது கோலிக்குண்டு பூனை விழிகள் , “பாதரச துண்டம் ” போல் நிலவொளியில் ஜொலித்தன. ” சட்டென்று எனக்குள் ஒரு மின்னல்”  ‘பாதரசம் போன்ற கண்கள்’ ‘கரகரப்பான குரல்’ ‘ மிடுக்கு இல்லாத நடை’ நான் நினைப்பது சரியாக இருந்தால் ஒருவேளை இந்த ஆள் படைத்தலைவன் இல்லையோ !!!

ஆம்! அப்படித்தான் இருக்க வேண்டும். நம் படை பிரிவிற்கும் புகுந்து கொண்ட எதிரி நாட்டு  ஒற்றை படை வீரன் இவனாகதான் இருக்கும் .நான் சிந்தித்து முடிப்பதற்கு முன்பே அவன் சுதாரித்துக் கொண்டு இருந்தான்.

நான் அவனை தாக்க முயற்சிப்பதற்கு முன்னாலேயே “எருமை மாடு” போல் என் மீது பாய்ந்தான். நான் கத்துவதற்கு முயற்சித்தேன். ஆனால், அவனது கைகள் என்னுடைய கழுத்தை இறுக்கிப் பிசைந்து கொண்டிருந்தன. என்னால் கத்த முடியவில்லை. இப்படியே இருந்தால் செத்துப் போக வேண்டியது தான் . நான் மிகவும் பிரயத்தனம் செய்து அவனை கீழே புரட்டித் தள்ளினேன் . திடீரென்று “வீல்” என்ற அலறல் . அந்த அலறல் சத்தம் மிக கொடூரமாக இருந்தது .





___________   __________   ________  _
திடுக்கென்று கண்விழித்து அமர்ந்தேன் . வேலையை முடித்து விட்டு எப்பொழுதும் நான் வந்து தங்கும் அதே ‘ திருவல்லிக்கேணி மேன்ஷன் ‘. நான் படுத்து உறங்கும் அதே கட்டில் . “சே” எல்லாம் கனவு தானா !!!  “ஆனால் அந்த சத்தம் மட்டும் உண்மையாக கேட்டதே”  இருட்டில் ‘ தட்டுத் தடுமாறி ‘ எழுந்தேன்.

‘ மேன்சன்’ வாசலில் ஏகப்பட்ட  கலவர குரல்கள் . நான் கண்டது கனவாக இருந்தாலும் கேட்டசத்தம் உண்மைதான் . கத்தியது யாராக இருக்கும் .
மெதுவாக நான் என் அறை வாசல் கதவை திறந்தேன் . நான் மேன்சனில் மூன்றாவது மாடியில் இருக்கிறேன் . எனக்கு பக்கத்து அடுத்த என்று அனைத்து அறைகளிலும் ஒருவர் ஒருவராக கதவை திறக்க ஆரம்பித்தனர் .

” யாருப்பா அது, இப்படி கத்தறது”.

“ஏம்பா நைட்டு நிம்மதியா தூங்க விட மாட்டீங்களா?”.

“நைட்டு நேரத்துல  கண்ட கண்ட பேய் படங்கள் பார்க்காதீங்க அப்படின்னு சொன்னா கேட்கவா போறீங்க “.

எல்லா அறைகளிலும் அடுத்தடுத்து லைட் போடப்பட்டது..
” யாருப்பா கத்துனது” என்ற குரல் எல்லோரிடமிருந்தும் வலுவாக வந்தது.

” ஐயையோ ” “ஒருவேளை நான்தான் கத்தி தொலைத்துவிட்டேனா” , “இல்லையே’ அவன் என் கழுத்தை நெறிக்கும் பொழுது கத்த முயற்சி செய்தது உண்மைதான், ஆனால் நான் கத்த வில்லையே .

அப்பொழுது  மேன்ஷனில் இரண்டாவது மாடியில் இருந்து . ஒருவனுடைய குரல் வந்தது “நான்தான் கத்தினேன்’. நான் மெதுவாக இரண்டாவது மாடியை நோக்கி கீழே இறங்கினேன் .

” சாரிடா மச்சான் ,ஏதோ  கனவு  எனக்கே தெரியாமல் கத்தி விட்டேன்”. எல்லோரையும் கஷ்டப் படுத்திட்டேன், மன்னிச்சிடுங்க ‘பாஸ்’ . கருப்பு நிறம் உடைய ஒருத்தன் பேசிக்கொண்டிருந்தான் . “அப்போ நான் கத்தலை” .

அந்த கருவாயன் உட்பட அனைவரும் உறங்குவதற்கு அவர்களுடைய அறைக்குள் நுழைய ஆரம்பித்தனர் .  நானும் என்னுடைய அறைக்கு திரும்பினேன்.

நான் என்னுடைய கட்டிலில் படுத்தபடி யோசித்தேன். . அந்தக் “கருவாயன்” எந்த அறைக்கு உள்ளே சென்றான் .எனக்கு நேர் கீழே இருக்கும் அறை .அதாவது நான் மூன்றாவது மாடியில் இருக்கிறேன். அவன் இரண்டாவது மாடியில் எனக்கு நேர் கீழே படுத்து இருக்கிறான் .

“எனக்கு ஆச்சரியமாக இருந்தது “. ஒரே நேரத்தில் எனக்கு வந்தது போலவே, ஒரு கெட்ட கனவு எனக்கு நேர் கீழே படுத்திருந்த அவனுக்கும் வந்திருக்கிறது .எங்கள் இருவருக்கும் கனவு வந்த நேரம் மட்டும்தான் ஒன்றா? அல்லது நாங்கள் இருவரும் கண்ட கனவும் ஒன்றுதானா ?

அந்த கருவாயனின் முகம் என் மனதிற்குள் வந்து போக ஆரம்பித்தது . பாதரச துண்டம் போல் இருந்த அவனுடைய விழிகள் என் மனக்கண்ணில் வந்து என்னை “திக்குமுக்காடச்” செய்து கொண்டிருந்தது .

“யார் இந்த கருவாயன்’ இந்த மேன்ஸ்னுக்கு இவன் புதியவனாக இருக்கிறானே.  இவனுடைய கண்கள் ஏன் என் கனவில் வந்தவனின்  கண்களோடு ஒத்துப்போகிறது . “குழம்பி குழம்பி’ யோசித்தேன்.நான் கனவில் பார்த்த எதிரி நாட்டு வீரன் இந்த கருவாயன் தான் .

காலையில் அந்தக்  கருவாயனிடம் பேச வேண்டும் என்று முடிவு செய்தேன் . தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த நான் எப்பொழுது தூங்கிப் போனேன் என்று எனக்கே தெரியவில்லை.
____________  __________  __________

காலையில் ஜன்னல் வழியாக வந்த சூரிய வெளிச்சம், என் முகத்தை சுட்ட போதுதான் விழிப்பு வந்தது.காலை நேரத்து வேலைகள் ஞாபகத்திற்கு வர பெட்ஷீட்டை சட்டென்று உதறிவிட்டு எழுந்தேன்.

நான் வார இதழ் ஒன்றில் ரிப்போர்ட்டர் ஆக பணிபுரிகிறேன் .ஊர் உலகத்தில் உள்ள மர்மம், அமானுஷ்யம் இது சம்பந்தப்பட்ட செய்திகளை தொகுத்து தருவது தான் என்னுடைய வேலை. அது என்னவோ தெரியவில்லை என்னுடைய சிறிய வயதிலிருந்தே இந்த மர்மம் அமானுஷ்யம் இவை அனைத்தும் என்னோடு பின்னிப்பிணைந்தே வந்திருக்கிறது. இப்பொழுது நீங்கள் கண்ட மர்மம் இருக்கிறது அல்லவா ,இது போல் ஏராளமான அமானுஷ்ய அனுபவங்களும் எனக்கு உண்டு.

முடிவில் என்னுடைய வேலையும் அது  தொடர்புடையதாகவே அமைந்துவிட்டது.   நான் இந்த வேலையை மிகவும் ரசிக்கிறேன். உங்களிடம் பேசிக் கொண்டே அந்த கருவாயனை மறந்துவிட்டேன்.

யார் அவன்? நான் பலமுறை இது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். எது பற்றி என்கிறீர்களா? அதாவது குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கக்கூடிய இரண்டு நபர்களுடைய நினைவலைகள், ஒன்றையொன்று பின்னிப் பிணைந்து இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு என்பதற்கான ஆராய்ச்சிகளை பற்றி பலமுறை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னுடைய வாழ்க்கையில் நான் இதனை சந்திப்பது இதுவே முதல் முறை.

தலையை வாரி முடித்து, இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் மெல்லிய கோடு போல் திருநீரை இட்டுக்கொண்டு, ‘தப தப ‘என்று மாடிப்படிகளில் கீழே இறங்க ஆரம்பித்து விட்டேன்.




இரண்டாவது மாடியில் என் அறைக்கு நேர் கீழே உள்ள அறை வாசலுக்கு வந்து நின்று விட்டேன். இப்பொழுது கதவை தட்ட வேண்டியதுதான்.

” டொக் டொக் …..டொக் டொக்”…. வரப்போகிறான் வரப்போகிறான் அந்த கருவாயன் தான் வரப்போகிறான்.

முதலில் அவனிடம் எனக்கு வந்த அதே கனவுதான் வந்ததா என்பதை கண்டிப்பாக கேட்டுவிட வேண்டும். ஆனால், இப்போது கதவைத்திறந்து அவன் அல்ல வேறு ஒருவன்.

‘சொல்லுங்க ப்ரோ’, என்ன விஷயம்?

இல்ல, ‘நேத்து நைட்டு ,இங்க ஒருத்தர் கத்தினார் இல்லையா?’ அவரு யாரு!?

“போச்சுடா நீங்களும் அவனை பத்தி கேட்கத்தான் வந்திருக்கீங்களா?”  ஓவர் நைட்ல நம்ம மாப்ள இந்த மேன்சனோட சூப்பர் ஸ்டார் ஆயிட்டான்.

அவன் என்னோட பிரண்டு தான் ப்ரோ.. நைட் ஏதோ கனவு கண்டிருப்பான் போல,

இப்ப அவரு இருக்கிறாரா? நான் அவர பார்க்கலாமா?

“ஓ பார்க்கலாமே!!!!” ஆனா, இங்க இல்ல.. நீங்க அவனோட சொந்த ஊருக்கு போகணும். போன பாக்கலாம்.

சொந்த ஊரா? அது எந்த ஊர்   ப்ரோ ?

எனக்கு நேரம் ஆயிருச்சு நான்  வேலைக்கு கிளம்பனும்.

“ஓ சாரி !!!!”ஆனா ,அந்த ஒரே ஒரு கேள்வி மட்டும், அவர் எந்த ஊர் என்று மட்டும் சொல்லி விடுங்களேன் ப்ரோ.

அவனோட ஊர் பேர் எனக்கு வாயில வராது, மேற்கு தொடர்ச்சி மலையில் ஏதோ ஒரு சின்ன கிராமம் அவ்வளவுதான் எனக்கு தெரியும். வேணும்னா சாய்ந்தரம் வாங்க, அவனோட முழு விலாசமும் டைரியில் இருக்கு தேடி எடுத்து தரேன்.

மேற்குத் தொடர்ச்சி மலையா ?அப்போ அங்க அருவி எல்லாம் இருக்குமா??
இப்பொழுது, என் எதிரே இருப்பவன் என்னை ஒரு அற்பமான கரப்பான் பூச்சியை பார்ப்பது போல் பார்த்தான். அவன் பார்வையின் பொருளை உணர்ந்து கொண்ட நான்,”சாரி ப்ரோ” நான் சாயந்திரம் வாரேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப…..

அவன் என் முதுகுக்குப் பின்னே, இன்னும் சாய்ந்தரம் வேறு வந்து தொலைவாயா என்று முணுமுணுக்கும் சத்தம் என் காதுகளில் தெளிவாய் கேட்டது.

சரி இனி அந்த கருவாயனை தேடிச்சென்று நான் என்ன செய்யப் போகிறேன். உங்களுக்கு நான் என் பெயரை சொல்ல வில்லையே மாயவன் . என்ன என் பெயரும் அமானுஷ்யமாக இருக்கிறதா அதுதான் என் வாழ்கையே. நான் ஒரு முறை அல்ல பல முறை பேயை நேரில் பார்த்திருக்கிறேன் தெரியுமா? அதை உங்களுக்குச் சொல்லட்டுமா? இப்பொழுது ,நேரம் இல்லை ஒருவேளை “வாசகர்கள் நீங்கள்  மீண்டும் என்னை அழைத்தால் கண்டிப்பாக சொல்கிறேன். இப்ப வேலைக்கு நேரம் ஆயிடுச்சு ,நான் போயிட்டு வரேன் “பை பை பை”..,

மாயவனை பேய் கதை சொல்ல அழைக்க வேண்டும் என்றால்  கமெண்டில்    தெரியப்படுத்தங்கள் நண்பர்களே!




What’s your Reaction?
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!