Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-12

12

வந்து ஐந்து நிமிடமாயிற்று.இன்னமும் வாயை திறக்க காணோம் …சலிப்புடன் சத்யேந்திரனை பார்த்திருந்தாள் மகிதா.

“என்ன விஷயம் சார் ?”நான்காவது தடவையாக கேட்கிறாள்.

 ” பாரும்மா அந்த வீடியோ…”

” சார் அது நான் திட்டம் போட்டு செய்ததில்லை. இதைத்தான் அன்றே உங்கள் மகனிடம் தெளிவாக விளக்கி விட்டேனே”

” என்ன ஆதித்யனுடன் பேசினாயா?”

” ஆமாம் சார் அவரோடு காபி ஷாப்பில்…” ஆரம்பித்தவள் இப்போதுதான் அவர் கேட்ட தொனி உணர்ந்து ,அடடா…ஆதித்யன் அந்த சந்திப்பை அப்பாவிடம் சொல்லவில்லை போலவே, நாக்கை கடித்துக் கொண்டாள்.

“நீங்கள் இரண்டு பேரும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறீர்களா? “ஒரு மாதிரி குரலில் கேட்டவரை வெறித்தாள்.

” சார் அப்படி எந்த தேவையும் எனக்கு கிடையாது. ஒரே ஒரு தடவை தற்செயலாக சந்தித்ததுதான்.அந்த வீடியோவை பற்றி கேட்டார். விளக்கம் கொடுத்தேன். அவ்வளவுதான்”

இப்போது சத்யேந்திரனிடம் சிறு நிம்மதி “மகிதா நீ ரொம்பவும் நல்ல பெண். எனக்கு உன்னை வெறுப்பதற்கு காரணம் இல்லை. உன்னுடைய சில குணங்களை மட்டும் மாற்றிக் கொண்டாலே போதும்”

மகிதா தலையை சொறிந்து கொண்டாள் .”சாரி சார் தலையும் புரியவில்லை, வாலும் தெரியவில்லை”

“மகிதா நாங்கள் கிராமத்து மனிதர்கள். கிராமத்து கட்டுத்திட்டங்கள் மிகவும் கட்டுக்கோப்பானவை. அதை பின்பற்றி மிகவும் ஒழுக்கமாக வளர்ந்தவன் நான். என் குடும்பத்து ஆட்களும் அப்படித்தான். இந்த காதல் கண்றாவியெல்லாம் எங்களுக்கு பிடிக்காது”

மகிதா அவர் பேச்சை கை உயர்த்தி நிறுத்தினாள். “என்ன சார் சொல்ல வர்றீங்க? காதலிப்பவர்கள் எல்லோரும் ஒழுங்கீனர்கள் என்கிறீர்களா?”

“அப்படியும் கூட வைத்துக் கொள்ளலாம்.ம்… என் வரையில் அப்படித்தான்”

“ஆனால் எனக்கு அப்படி கிடையாது சார். காதல் பெரிய விஷயம். அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள். காதலால் மட்டுமே நிறைவான குடும்ப வாழ்க்கை கிடைக்கும் என்று நம்புபவள் நான்”

 சத்யேந்திரன் வலது கையால் பட்டென்று டேபிளில் தட்டினார்.” பார்த்தாயா இந்த உன்னுடைய எண்ணத்தைதான் மாற்றிக் கொள் என்கிறேன்”




 

“நான் ஏன் மாற்றிக் கொள்ள வேண்டும்?” சத்யேந்திரன் பொறுமையை இழுத்துப் பிடித்தார்.

“உன்னுடைய ப்ரோபைலை மேட்ரிமோனியல் சைட்டில் இருந்து எடுத்து இருக்கிறோம்”

” என்னது என் ப்ரொபைல் மேட்ரிமோனியில் இருக்கிறதா? அப்பாபாஆ…” பற்களை கடித்தாள்.

 சிலம்பேந்தி நின்ற கண்ணகியை ஒத்திருந்த மகளை அலட்சியம் செய்தார் சுப்பிரமணி. “எனக்கு பிள்ளைகளின் மேலிருந்த நம்பிக்கை போய் விட்டது. உன் அண்ணனைப் போல் உன்னையும் விட நான் தயாராகவில்லை. சீக்கிரமே சொல்கிற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட தயாராக இரு”

மகிதாவிற்கு ஆத்திரமாக வந்தது .பேசாமல் இரண்டே நாட்களில் எவனையாவது பிடித்து காதலித்து ஓடிப் போய் விடலாமா ?அவசர திட்டம் ஒன்று மனதிற்குள் போட்டுப் பார்த்தாள். ம்ஹூம்… இரண்டே நாட்களில் வருவதெல்லாம் காதல் கிடையாது .போட்ட திட்டத்தை அழித்தாள்.

“பார்த்தீங்களா சார்…சொல்ற மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டுன்னு அப்பா சொல்றாரு. அதப்படி முடியும் ?நானெல்லாம் காதலித்து தான் கல்யாணம் செய்து கொள்வேனாக்கும்” மறுநாளே தன் ஆபீசுக்கு வந்து நின்று அறிவித்த மகிதாவை வியப்பாய் பார்த்தார் சத்யேந்திரன்.

நேற்று பேசிக் கொண்டிருக்கும்போதே “இதோ வர்ரேன்” என்று எழுந்து போனவள் இன்று காலையே இடம் தேடி வந்து  புலம்புகிறாள்.

இப்போது சத்யேந்திரனுக்கு அவள் மீண்டும் வெகுளியாக அறியாப் பிள்ளையாக தோன்றினாள். “உனக்கு இந்த காதல் மேல் ஏன் இப்படி ஒரு ஆசை?”

“காதலை பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா சார்? ஆனால் இதோ நீங்கள் இருக்கிறீர்களே… என்னவோ போங்க சார்.மேட்ரிமோனியில் என்னை பார்த்ததை மறந்துடுங்க சார். நான் லவ் மேரேஜ்தான் செஞ்சுக்க போறேன்.இதை சொல்லிட்டு போகத்தான் வந்தேன்” மகிதா கிளம்பிப் போன பின்பு அவளது கேரக்டரை தன் மனதிற்குள்ளேயே ஓட்டிப் பார்த்த சத்யேந்திரன் அன்று இரவே வீட்டில் அறிவித்தார்.

 “ஆதித்யனுக்கு மகிதாவை மணம் பேசப் போகிறேன்” சிறிய முகச் சிணுக்கம் இருந்தாலும் திவ்யாவும் பாட்டி ,அம்மாவுடன் அப்பாவை வரவேற்றாள். ஆதித்யனோ மிகுந்த உற்சாகத்தை காட்டினான்.

 அவன் தோளை தட்டிய சத்யேந்திரன் “டேய் அரேஞ்சிடு மேரேஜ்தான்டா இது .ரொம்ப பொங்காதே” என்றார் செல்லமாக.

“நீங்க சொன்னா சரி தான்பா”  பவ்யம் காட்டினான் மகன்.  ஆனால் இந்த குடும்பத்தின் சந்தோஷம் மறுநாள் மகிதாவின் பேச்சில் காணாமல் போனது. 

சுப்பிரமணியிடம் போனில் பேசி அறிமுகமாகிக் கொண்ட சத்யேந்திரன் மறுநாளே பெண் பார்த்த வருவதாக குறித்தார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த மகிதா தனக்காக அங்கே காத்திருந்தவர்களை கண்டு திகைத்தாள். திருமணத்திற்கு அனைவர் முன்பாகவும் வெளிப்படையாகவே மறுத்தாள்.




What’s your Reaction?
+1
56
+1
31
+1
1
+1
2
+1
2
+1
2
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!