Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -5

 5

எத்தனை மிக மோசமான கனவு இப்போது நினைத்தாலும் உடல் ஒருமுறை சிலிர்த்துக் கொண்டுதான் விடுகிறது. பாட்டியை ஏமாற்றிவிட்டு தான் செய்யப்போகும் காரியம் அபிராமியின் மனதில் சொல்லவொன்னா கிலியை ஏற்படுத்தியிருந்தது. கல்லூரிக்குப் போகும் வழியில் இருந்து முற்றிலும் மாறி வேறு பாதையில் பயணிக்கும் போது யாராவது தெரிந்தவர்கள் பார்த்துவிட்டால் என்ற பயத்தை விடவும், முகம் அறியா மனிதர்கள் கூட தெரிந்தவர்கள் போல தோன்றியது.

தான் நிற்கும் இடத்தை தாண்டி செல்லும் பார்வைகள் கூட தன்னை கூர்மையாய் துளைப்பதைப் போல வெலவெலத்துப் போனாள், பஸ்ஸாண்டிற்கு அருகில் உள்ள டீக்கடையில் கமல் தில்பர்ஜானே பாடிக்கொண்டு இருந்தார். தட் தட்டென்று டம்ளர்களின் ஓசையில் பாய்லரில் கொதிக்கும் பாலின் மணமும் நாசியை வருடியது. இந்த மதனை இன்னமும் ஏன் காணவில்லை நேரம் செல்லச்செல்ல பதட்டமடைந்து கொண்டிருந்த போது அந்த கார் அவளை உரசியபடி நின்றது. மதன் முன்பக்கக் கததை திறந்து விட்டான். 

வா… என்னும் ஜாடையில் விநாடிக்கும் குறைவான நேரத்தில் காரில் அமர்ந்தாள் அபிராமி ஏன் இத்தனை நேரம் யாராவது பார்த்திடப் போறாங்கன்னு நான் ரொம்பவும் பயந்தே போயிட்டேன் மதன். 

நீ எப்பத்தான் இந்த பயத்தை விடப்போறீயோ ஏதாவது சாப்பிட்டியா ?

ம்.. சரியா சாப்பிட முடியலை, முதன்முறையா பாட்டிக்கிட்டே பொய் சொல்லிட்டு வர்றேன் ஏதோ கொலைக்குற்றம் பண்ணியதைப் போல குற்ற உணர்ச்சி வதைக்கிறது. 

அவன் காரை சற்று நிறுத்திவிட்டு அவளை நோக்கித் திரும்பினான். அபிராமி உன்னை எனக்கு பார்த்ததும் பிடிச்சது ஆனா இப்படி எதற்கெடுத்தாலும் பயப்படறது பிடிக்கலை, உன் கூட கல்லூரியில் படிக்கும் பெண்களும் காதலிக்கிறார்கள்தானே அவர்கள் யாரும் அவங்க ஆளோட வெளியே போறதேயில்லையா ? இது 1960 இல்லை 90 இப்போ யாரும் கட்டுப்பெட்டியா இருக்கிறது இல்லை, காதலிக்கும் பொண்ணு கூட வெளியே போகணுமின்னு ஆசைப்படுறது ஒண்ணும் கொலைக்குற்றம் கிடையாது. மகாபலிபுரம் வேண்டான்னு சொன்னே நானும் உன் பேச்சுக் மதிப்புகொடுத்து மனசுக்குள்ளே ஏமாற்றமா இருந்தாலும் சரின்னேன். பிறந்தநாள் அதுவுமா நான் கல்யாணம் செய்துக்கொள்ள போற பொண்ணை ஒரு கோவிலுக்கு கூட்டிட்டுப் போகக் கூட நான் ஆசைப்படக்கூடாதா ? காரில் உட்கார்ந்து பத்து நிமிஷமாச்சு இன்னும் நீ எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூட சொல்லலை, 

மன்னிச்சிடுங்க மதன் எனக்கு இருந்த பதட்டத்தில் நான் …. பிறந்தநாள் வாழ்த்துக்கள் இப்போ நாம எந்த கோவிலுக்கு போறோம். 

ம். குட் கேர்ள், அவள் மூக்கைப்பிடித்து திருகினான். பூந்தமல்லி போகும் வழியில் எங்கள் குலதெய்வ அம்மன் கோவில் இருக்கு கல்யாணம் ஆனபிறகு, தம்பதிசகிதமாய் போக வேண்டியது இப்பவே நாம போகப்போறோம் அங்கே போய் எந்த சிக்கலும் இல்லாம சீக்கிரம் நம்ம கல்யாணம் நடக்கணுமின்னு மனசார வேண்டிக்கிட்டு உடனே திரும்பிடலாம். 




ரொம்ப தூரமா மதன் ஏன்னா காலேஜ் விடற நேரத்தில நான் கரெக்டா இருக்கணும். 

அதெல்லாம் போயிடலாம் என்ற மதனின் முகத்தில் சிரிப்பு ஒன்று படர்ந்தது. அபிராமி அப்போது இருந்த மனநிலையில் அதை கண்டுகொள்ளவில்லை.

எல்லாம் சரியாக நடந்துவிடும் இன்றோடு இவளுக்கு முழுக்கு போட்டுவிட வேண்டியதுதான் மதனின் காதல் களியாட்டத்தில் இவள்தான் நீண்டநாள் பயணித்தவள். மதனின் தந்தை சிறு வயதில் படிக்க முடியாமல் போனதால் பொருளாதாரத்தில் சற்று உயர்ந்ததும், மற்ற பிள்ளைகளுக்கு படிப்புச்செலவிற்கு அதிகம் உதவுவார். கல்லூரி நிர்வாகம் அவரை கெளரவிக்க ஒரு விழா எடுத்தது அதில் தந்தைக்கு பதில் மதன்தான் பங்குபெற்றான். நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பரத நாட்டியத்தில் பங்குபெற்ற அபிராமியின் நாட்டியமும் முக பாவமும் வெகுவாய் கவர்ந்திழுத்தது. அப்போதே அவளுக்கு புள்ளி வைத்துவிட்டான். வேண்டுமென்ற மற்றவர்களை ஒதுக்கி அவளுக்கு ஒரு சிறப்பு பரிசு என தன் மோதிரத்தை கழற்றிக் கொடுத்தான். தந்தையினை வைத்தே கணக்கிட்ட நிர்வாகத்திற்கு அதில் தவறேதும் தெரியவில்லை என்றாலும், அபிராமியின் தனிக் கவனத்தைப் பெறுவதற்கே அந்த செய்கை. 

பெரிய இடம் டி அபிராமி அவரு பார்வை படாதான்னு எத்தனை பொண்ணுங்க ஏங்கிகிட்டு இருக்கோம் தெரியுமா ? ஆனா நீ ஈஸியா கவுத்திட்டியே ? அவ அழகுக்கு இது ரொம்பவும் தாமதம் தான் அதிர்ஷ்டக்காரி அபிராமி நீ சக தோழிகளின் கிண்டலும் கேலியும் அபிராமியை அந்த அளவிற்கு பாதிக்கவில்லையென்றாலும், இலேசான ஒரு சலனம் எட்டிப்பார்த்தது. கூடவே அவளின் வயதிற்கே தோன்றிய கர்வமும் மதனின் சில படையெடுப்புகளிலேயே அவளை விழ வைத்தது. மற்றப்பெண்களில் இருந்து தனித்து தெரிந்த அபிராமியை எப்படியாவது தன் வசப்படுத்திவிடவேண்டும் என்று வெகு நாளைய கனவு இன்று நனவாகப்போகிறது. ஆனாலும் இந்த பெண்களுக்கு இத்தனை ஆசைகள் இருக்கக்கூடாது. முன்பின் அறியா ஒருத்தன் காதல் என்ற ஒற்றை வார்த்தையில் இவர்களை பொம்மலாட்ட பொம்மையைப் போல எப்படிவேண்டுமானாலும் ஆட்டிவைக்கலாம்.

நாளும் ஒரு காரில் வருவதும், வசீகரிக்கும் தோற்றமும் செல்வச்செழிப்பில் மிதந்த மதனிற்கு ஒரு பெரிய காரியம் இல்லை, தன் கடைக்கு அருகில் உள்ள கல்லூரியில் சில பெண்கள் அவனின் கண் பார்வைக்கு சொக்கி காத்திருந்தார்கள். அவர்களை இலகுவாக வழிக்குக்கொண்டு வந்து ஏதாவது ஒரு பலவீனமான நேரத்தில் அவர்களின் பெண்மையை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை அத்தோடு கைகழுவிவிடுவது அவன் வேலை. ஆனால், தான் கெட்ட குரங்கு வனத்தையும் சேர்த்து அழிக்கும் இல்லையா ? அப்படித்தான் அவனின் சில கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டார்கள் மதனுடன். 

அதீத காதலில், மதனின் அன்பு போய்விடுமோ என்ற பயத்தில், வறுமையில் உழண்டு இருந்தததை விடவும் எதிர்காலத்தில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கை என்று ஏதாவது ஒரு காரணத்திற்காக மதனின் வாழ்வில் பெண்கள் வந்துகொண்டே இருந்தார்கள். ஏமாற்றப்படுகிறோம் என்றே அறியாமல் ! உண்மையை அறிந்தபோது மதனை நெருங்கவே முடியாத அளவிற்கு கவசம் போடப்பட்டு இருக்கும். அந்த நாளைய நெருக்கத்திற்கு பிறகு, மதன் அந்த பெண்களின் கண்ணில் படமாட்டான். எந்த தகவலும் இல்லை நேரிலும் சந்திக்க இயலவில்லை என்று மனம் புழுங்கி மறந்தவர்களும் இறந்தவர்களும் உண்டு. ஆனால் அபிராமி எதிலும் மசியவில்லை, ஏதாவது ஒரு வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தி அவளை தொட முயன்றாலும் ஒரு அடி விலகியே நின்றாள். 

மதனிடம் அவளுக்கு மயக்கம் இருந்தாலும், பேராசை இல்லை, எதன் பொருட்டும் தன்னை இழந்துவிடக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருப்பதே அவளை வெகு சீக்கிரம் அடையவேண்டும் என்ற எண்ணத்தை மதனிற்கு கொண்டுவந்தது. ஆனால் அது மட்டும்போதுமா அபிராமி ஒருமுறை மட்டும் ஆளக்கூடியவளா ? ஆனால் ஏமாற்றங்கள் தினமும் தாங்கிக்கொள்கிறவளும் இல்லை, மதனிடம் ஏமாந்த பல பெண்கள் தங்கள் நிலை பெற்றோருக்கு தெரிந்தால் தாங்கமாட்டார்கள் என்று அந்த நாளையே ஒதுக்கிவிடுவார்கள். அபிராமிக்கு யாரும் இல்லை என்பதால் ஒருவேளை நாளை அவள் என்னை சந்திக்கு இழுத்துவிட்டால் என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு விடையாய் வந்தான் சந்தர்.




 

அபிராமியை ஹோட்டலுக்கு அழைத்துவந்து ஏதாவது சாப்பிடக் கொடுப்பதைப் போல அவளை மயக்கநிலைக்கு ஆட்படுத்தி மதன் தன் தேவையைத் தீர்த்துக்கொண்டதும், அவளை மோசமான கோணங்களில் படமெடுத்து அதை வைத்து மிரட்டியே அபிராமியின் மேலுள்ள ஆசை தீரும்வரையில் உபயோகப்படுத்திக்கொள்ளலாம் என்ற மதனின் எண்ணத்திற்கு உதவியாய் வந்தவன் சந்தர். சில திரைமறைவு காரியங்களில் மதனின் வலதுகையைப் போல இயங்குபவன்

தான் அறியாமல் நடக்கும் எந்த ஆபத்தையும் உணராமல் பலஇலட்சங்கள் இழைத்து கண்ணாடியாலேயே செதுக்கப்பட்ட அந்த ஹோட்டலின் முகப்பினை வேடிக்கைப்பார்த்தாள் அபிராமி மதன் நாமயேன் இங்கே வந்திருக்கும். 

அபி என் பிறந்த நாளுக்கு உனக்கு விருந்து தரவேண்டாமா ? இந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கிளம்பிவிடுவோம். இன்னைக்கு என் பிறந்தநாள் அதனால் அம்மாவும் எங்கள் கோவிலுக்கு வருவாங்க, அவங்க கிளம்பறவரைக்கும் உன்னை காரிலேயே உட்காரவைப்பதைக் காட்டிலும், எதிரில் அமர்ந்து நீ சாப்பிடற அழகை ரசிக்கலாம் இல்லையா ?! பாட்டி மிஞ்சி மிஞ்சிப்போன உனக்கு என்ன சாப்பிடக்குடுத்திருக்கப் போறாங்க இங்கேயெல்லாம் வேற லெவல் நீ பார்த்துக்கூட இருக்கமாட்டே. வாய்ப்பு கிடைக்கும் போது அனுபவிக்கணும் அபி அப்பறம் தவறவிட்டுட்டோமேன்னு கஷ்டப்படணும். மேற்கொண்டு அவளைப் பேச விடாமல் உணவு வகைகளை ஆர்டர் செய்தான். 

மதன் சொன்னதைப் போல நாம அறியா உலகம் என்று இருக்கிறது போலும், தன் பரப்பப்பட்ட உணவு வகைகளை கண்டதும், அபிராமி அப்படித்தான் நினைத்தாள். இங்கே யாரும் நம்மை வித்தியாசமா பார்க்கமாட்டாங்க. எத்தனை மணிநேரம் இருந்தாலும் வெளியே போக சொல்லமாட்டாங்க. இந்த மாதிரி பைவ்ஸ்டார் ஓட்டலில் எல்லாம் வாடிக்கையாளர்களை ராஜாவும் ராணியும் மாதிரி டிரீட் பண்ணுவாங்க இப்ப இதே இடத்தில நான் உனக்கு முத்தம் தந்தா கூட எவனும் அலட்டிக்கவே மாட்டான். செஞ்சி காட்டட்டா ? 

உங்களுக்கு ரொம்பவும் ஆசைதான் அவங்க பார்க்கலைன்னாலும் எனக்கு இன்னமும் வெட்கம் விட்டுப்போகலை மதன். நான் முன்னாடியே சொன்னதுதான் காசு பணம் சீர்செனத்தின்னு என்னால பெரிசா கொண்டு வர முடியலைன்னாலும், என்னை பரிபூரணமா பரிசுத்தமா உங்களுக்கு தரணுன்ங்கிறதுதான் என் விருப்பம் நீங்களும்

மூச்….நான் நல்ல மூட்லே இருக்கேன் பேசாமல் சாப்பிடு ! என் பிரண்ட் ஒருத்தன் வந்திருக்கான். அம்மா கோவிலில் இருந்து எப்போ கிளம்பறாங்கன்னு நமக்கு தகவல் தர்றதுக்காக என் பிரண்ட்டை வரச்சொல்லியிருக்கிறேன். பேசிட்டு வந்திடறேன் என்று வாசல்பக்கம் நகர்ந்தான் அங்கே சந்தருடன் இருந்த மற்றொரு இளைஞனின் கண்கள் மதனைப் பார்த்ததும் சுருங்கின. அவனுக்குள் ஒரு எச்சரிக்கை மணி ஒலித்தது. 

அன்று காலையிலேயே காலணி களை கட்டியிருந்தது வந்தனாமாமி வீட்டில் தான் கச்சேரி, வழக்கம் போலவே வந்தனாவின் மருமகளின் வசவுகள் சுதாவும் லட்சுமியும் அவரவர் போர்ஷனில் இருந்து எட்டிப்பார்த்தார்கள். இவ என்ன பொம்பிளை வயசான மனுஷியைப் போட்டு இந்த பாடுபடுத்தறா?! மாமியாருன்னு ஒரு மட்டு மரியாதை வேண்டாமா ?

விடு லட்சுமி நாம போய் கேட்டா, நீயாருன்னு கேப்பா ஏற்கனவே மாமி எல்லார் வீட்டுலேேயும் போய் அவளைப் பத்தி குறை சொல்றாங்கன்னு கோவம் வேற ?! ஆனா இருக்கிற இடத்திலே வைச்சிப் படைக்க கொடுத்து வைக்கலை என் மாமியாரைத்தான் சொல்றேன் தாங்கு தாங்குன்னு தாங்கினாலும், அவங்களுக்கு அவருடைய பெரிய பிள்ளைதான் உசத்தி, நாளும் கிழமைக்கு இங்கே வந்து தலையைக் காட்டிட்டு போறதோட சரி, அங்கே காரு, ஏஸின்னு நல்ல வசதியில்லை விட்டுட்டு வர்ற மனசில்லை.

வெறும் வசதிகளால் மட்டும் வாழ்க்கை நிறைஞ்சி போறதில்லைன்னு அவங்களுக்கு எப்பத்தான் புரியப்போகுதோ, ஜாடிக்கேத்த மூடின்னு சொல்லுவாங்க ஆனா கடவுள் அப்படி சரியான விதத்திலே ஜோடியை சேர்க்கிறது இல்லைன்னு தானேதெரியுது. அனுசரிச்சப் போற குடும்பத்திலே யாராவது ஒருத்தர் அடங்காபிடாரியா இருக்கறது இல்லையா. நான் இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே வந்தனா மாமி வீட்லே எப்பப்பாரு சத்தமாத்தான் இருக்கு.

காலியா இருக்க ஆறாம் நம்பர் வீட்டுக்கு யாரோ குடுத்தினம் வர்றாங்களாம், பெரிய பொண்ணு, நாலுபேர் கொண்ட குடும்பன்னு ஆச்சி நேத்து சொன்னாங்க, இரண்டு பொண்ணாம் முதப்பொண்ணுக்கு கல்யாணம் ஆகி விவாகரத்தும் ஆயிடுச்சாம் இரண்டாவது பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்களாம். பாவம் என்ன பிரச்சனையோ என்னவோ ?

பெண்பிள்ளைகளின் வளர்ச்சியும் அதன் பிறப்புமே கல்யாணத்தை குறிவைத்து தானே நடக்குது 1992லே கூட இன்னமும் போராடிட்டு தான் இருக்கும். 

என்ன லட்சுமி பெமினிஸமா ?




அதற்கும் நமக்கும் ரொம்ப தூரம் சுதா நடுத்தரம் மற்றும் அதற்கு கீழேயுள்ள பெண்களின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை, வழக்கம்போலவே அடுத்தவர்களுக்காக சுழல்வதுதான் அதையும் மீறி சிலர் வெளியே போனாலும் அவங்களோட ஒழுக்கத்தை சொல்லியே இறக்கி வைச்சிடுவாங்க. நம்ம பக்கத்து காலனி வாசுதேவன் பொண்ணு நல்லா படிச்சி பெரிய வேலையிலே சேர்ந்தா ஏனோ கல்யாணமிங்கிற அடக்குமுறை பிடிக்கலை அவ முகத்திற்கு முன்னாடி பேசினாலும் முதுகுக்கு எத்தனை வார்த்தைகள் அவளின் ஒழுக்கத்தை குறித்து.யாரு இந்த ஒழுக்கத்திற்கு இலக்கணம் வகுத்ததுன்னு தெரியலை. 

இதையெல்லாம் பேச ஆரம்பிச்சா பேசிகிட்டே போகலாம் இந்த வருஷத்தோட அபிராமி படிப்பை முடிக்கிறாபோலயிருக்கே, உன் ஒன்னுவிட்ட தம்பிக்கு பேசணுமின்னு சொன்னியே பாட்டிகிட்டே பேசிட்டியா ?

இன்னும் இல்லை அவனும் அமெரிக்காவிலிருந்து வரணுமே, நல்ல பையன் இவளும் நம்ம கண்முன்னாடியே வளர்ந்தவ அப்பா அம்மா இல்லாத பொண்ணு ஆச்சிகிட்டே சொல்லித்தான் பாட்டிகிட்டே பேசணும் கிழம் என்நேரம் என்ன மூட்ல இருக்குன்னு தெரியாதே ?! அவர்களின் வீட்டு வாயிலில் டெம்போ ஒன்று வந்து நின்றது. புதுமனிதர்கள் இறங்கிட ஏற்கனவே தண்ணிப்பிரச்சனை நம்மோட சண்டை பிடிக்க இன்னும் நாலுபேர் வந்திட்டாங்க களுக்கென்று சிரித்தபடியே லட்சுமியும் சுதாவும் வருவோர்களை வரவேற்கத் துவங்கினார்கள்.




What’s your Reaction?
+1
5
+1
10
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!