Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி -10

10

“அடடா அய்யாவை எனக்கு நன்றாக தெரியுமே!இவரே முன்னால் நிற்கிறார் என்றால் வேறு எந்த விபரங்களும் நீங்கள் கொடுக்க வேண்டாம். இப்போதே திருமணத்தை முடித்து விடலாம்” ஐயர் சொல்ல சத்யேந்திரனும் ஆதித்யனும் திகைத்தார்கள்.

“பக்கத்து முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தோம்..அங்கே ஒரு சின்ன பிரச்சனை கொஞ்சம் உதவி செய்கிறீர்களா சார்?” என்று கேட்டுத்தான் அவர்களை இங்கே அழைத்துக் கொண்டு வந்தாள் மகிதா.

இங்கேயானால் யாரோ இருவர் திருமண கோலத்தில் இருக்கின்றனர். அதற்கு இவர்களை சாட்சியாக்குகிறார் ஐயர்.

கருவறைக்குள் போய் பூசாரி மந்திரம் சொல்ல ஆரம்பிக்கவும் மகிதா சத்யேந்திரனிடம் முணுமுணுத்தாள்.” சார் இது என்னோட கூட பிறந்த அண்ணன். அது அவர் காதலிக்கும் பெண். இவங்க காதலை எங்க அப்பா ஒத்துக்கலை. வேற வழி தெரியாமல்தான் இந்த கோவிலில் திருமண ஏற்பாடு செய்தோம். இங்கே கடைசி நேரத்தில் ஏதேதோ விபரங்கள் கேட்கிறார்கள். திருட்டு கல்யாணமா? அதெல்லாம் இங்கே செய்ய மாட்டோம். பெரியவர்களை கூட்டி வாருங்கள் என்கிறார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் வந்தபோதுதான் உங்களை பார்த்தேன். நீங்கள்தான் சார் மனது வைத்து பெரிய மனிதராக முன்னால் நின்று இந்த திருமணத்தை நடத்தித் தர வேண்டும். ப்ளீஸ் சார்”

சத்யேந்திரன் திகைத்தார். “இங்கே பாரும்மா இந்த காதலெல்லாம் எனக்கு பிடிக்காது. இது மாதிரி திருமணத்திற்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்”

“ஐயோ சார் அப்படி சொல்லாதீங்க. இவங்க இரண்டு பேர் முகத்தையும் பாருங்க .திருமணம் முடித்து புது வாழ்விற்குள் நுழைவதற்காக காத்துக் கொண்டிருக்கும் இவர்களோட கனவை நசுக்கி விடாதீர்கள். தயவு பண்ணுங்க சார்” கைகூப்பி கேட்டாள்.

ஆனால் சத்யேந்திரனோ தீவிரமாக மறுத்தார்.” இந்த மாதிரி விஷயங்களில் எனக்கு சுத்தமாக உடன்பாடு கிடையாது. இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன்”

 மகிதா ஆதித்யன் பக்கம் திரும்பினாள் “சார் நீங்களாவது உங்க அப்பாவிற்கு எடுத்து சொல்லுங்க சார். நீங்கள் வயது பையன். உங்களுக்கு இது போன்ற காதல் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் தானே?”

“அப்போது என்னை ஒன்றும் தெரியாத முட்டாள் என்கிறாயா? சத்யேந்திரன் உறும ஆதித்யன் சமாதானமாக அவர் கையை பற்றினான்.

” அப்பா விடுங்கப்பா, உங்களை இங்கே தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இந்த சூழ்நிலையை என்ன செய்வது என்று மட்டும் யோசிப்போம்”

“யோசிக்காதீங்க சார். எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க”

“சார் நான் இல்லாத வீட்டு பொண்ணு சார். இதை காரணம் காட்டி இவங்க அப்பா என்னை வேண்டான்னு சொல்றாரு. வசதி இல்லாதவள் என்றால் வாழ்வில் எதற்கும் ஆசைப்பட கூடாதா சார்?” சுகந்தி கண்ணீர் விட ஆரம்பித்தாள்.

” அப்பா என்னை வீட்டை விட்டு விரட்டி விடுவேன் என்கிறார் சார். திருமணம் முடித்து போனால் எப்படியாவது அவரை சமாளித்து விடுவேன். உதவி செய்யுங்கள் சார்” எல்லோரும் கெஞ்ச சத்யேந்திரன் குழப்பமாய் நின்றிருந்தார்.

அப்போது ஐயர் தட்டில் மஞ்சள் கயிறுடன் வந்து சத்யேந்திரனிடம்  நீட்டினார். ‘பெரியவங்க தாலி எடுத்துக் கொடுங்க. முகூர்த்த நேரம் முடியப் போகுது”




“தாலி எடுத்துக் கொடுத்துடுங்கப்பா. மற்றதை பிறகு பார்க்கலாம்” ஆதித்யன்சொல்ல  வேறு வழியின்றி மஞ்சள் கயிறை எடுத்து ராஜேந்திரன் கையில் கொடுத்தார் சத்யேந்திரன்.

இந்த நிகழ்வை அப்போது கோவிலுக்கு வந்த இளைஞன் ஒருவன் தனது போனில் வீடியோவாக எடுத்துக் கொண்டான். அவன் ஒரு யு ட்யூப் சேனல் வைத்துக் கொண்டிருப்பவன். மறுநாளே காதலர்களை இணைத்து வைத்த நம் ஊர் பெரிய மனிதர் என்ற தலைப்புடன் இந்த வீடியோ வெளியானது.

அவர்கள் ஏரியாவில் ஓரளவு தெரிந்த புள்ளி என்பதனால் வீடியோ பலரால் பார்க்கப்பட்டு வியூஸ் எகிற, உற்சாகமடைந்த அந்த இளைஞன் சத்யேந்திரனை பற்றிய முன் வாழ்க்கையை தேடி எடுத்து அடுத்தடுத்த வீடியோக்களாக வெளியிட துவங்கினான்.

குற்றம் சொல்லும் அளவு எந்த தகவல்களும் இல்லை என்றாலும் பரம்பரை பணக்காரர் என்பது போன்ற சத்யேந்திரனின் நடவடிக்கைகளுக்கு இந்த வீடியோக்கள் முற்றுப்புள்ளி வைத்தது. கிராமத்தில் சாதாரண மரக்கடை வைத்திருந்த அவரது தந்தையை பற்றியும் அந்த தொழிலை கைவிட்டு நகரத்திற்கு வந்து தடுமாறி மரக்கடையில் வேலைக்குச் சேர்ந்து சத்யேந்திரன் குடும்ப பொறுப்புக்கு வரும் வரை கொஞ்சம் சாதாரண நிலையிலேயே இருந்த அவர்கள் குடும்ப பின்னணி வெளியானது.

இதனை சத்தியேந்திரன் விரும்பவில்லை.தான் பரம்பரையாக மரத்தொழிலில் அனுபவம் வாய்ந்தவன் என்பதே தனது தொழில் மேலும் மேலும் முன்னேறுவதற்கான காரணமாக இருக்கும் என்பதனை நம்பினார். இப்போது நடந்து கொண்டிருப்பதோ… அவர் பற்களை நறநறவென கடித்தார்.எல்லாவற்றிற்கும் காரணம் அவள்தான்…. அவர் கோபம் முழுவதும் மகிதா மேல் திரும்பியது.




 

What’s your Reaction?
+1
54
+1
33
+1
1
+1
8
+1
2
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!