Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-11

11

“ஹலோ” என்றபடி தன்முன் வந்து நின்ற ஆதித்யனை ஏறிட்டுப் பார்த்து ஆச்சரியமானாள் மகிதா.

“நீங்களா சார்? உங்கள் கம்பெனி கணக்குகளை எல்லாம் சரியாக முடித்து விட்டேனே… எதுவும் தப்பு இருக்கிறதா?” பரபரப்பாக கேட்டாள்.

“நான் வேலை விஷயமாக பேச வரவில்லை. கொஞ்சம் பர்சனலாக பேச வேண்டும். எதிரே இருக்கும் காபி ஷாப்பிற்கு வருகிறாயா?”

“அப்படியெல்லாம் கண்ட இடத்திற்கு வருகிற பெண் அவள் இல்லை சார்” ரவீந்திரன் திடுமென ஆஜரானான்.

“கண்ட இடத்திற்கா? காபி ஷாப்பிற்குதானே கூப்பிட்டேன்” எதிரே கை காட்டினான் ஆதித்யன்.

“சார் புரிஞ்சுக்கோங்க. மகிதா நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண். இது போல் கூப்பிடுபவர்களுடன் எல்லாம் போகிறவள் இல்லை”

“உங்களுக்கு தொண்டையில் எதுவும் பிரச்சனையாகி பேச முடியாததால் டப்பிங் பேச ஆள் வைத்திருக்கிறீர்களா?” ஆதித்யன் கேட்ட விதத்தில் சிரிப்பு வர உதட்டை மடித்து சிரிப்பை அடக்கிய மகிதாவை கோபமாக பார்த்தான் ரவீந்தர்.

“இவளுடைய அப்பா இவள் பொறுப்பை எங்களிடம் கொடுத்து இருக்கிறார். அப்படி யாருடனும் அனுப்ப முடியாது. வாயில் கொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்? திறந்து சொல்வது தானே வர முடியாதென்று…”

மகிதா எழுந்து கொண்டாள். “வாங்க சார் பேசலாம்” நடந்தாள்.

சற்று முன்தான் ரவீந்தர் அவளிடம் தடுக்க தடுக்க காதல் வசனங்கள் சிலவற்றை பேசியிருந்தான். அந்த எரிச்சலில் இருந்தவள் ஆதித்யனை காக்க வந்த கடவுளாகப் பார்த்தாள்.  

” என்னுடைய பொறுப்பு எப்போதும் என்னிடம் மட்டும் தான் சார். என் அப்பாவிற்கு கூட அந்த உரிமையை நான் கொடுப்பதில்லை” ஆணித்தரமாக சொல்லிவிட்டு நடந்தாள்.

“உன்னை முதன்முதலாக பார்த்தபோது மிகவும் வெகுளிப் பெண், வெளி உலகம் தெரியாதவள் என்று நினைத்தேன்” ஆதித்யனின் விழிகளில் சிறு பிரமிப்பு.

“நான் ரொம்பவே வெகுளி தான் சார். இப்போது பாருங்களேன் அவ்வளவாக பழக்கம் இல்லாத உங்களுடனேயே காபி சாப்பிட வந்துள்ளேன்” கைப்பையை மடியில் எடுத்து வைத்துக் கொண்டாள்.

“ம்ஹூம் உன் பேச்சில் நம்பிக்கை இல்லை. அந்த ஹேண்ட் பேக்கில் என்ன வைத்திருக்கிறாய்? குறைந்தபட்சம் பெப்பர் ஸ்ப்ரே…அதிகபட்சம் ஆசிட் பாட்டில்…?”




 

மென் சிரிப்புடன் தன் பேக்கை திறந்து பெப்பர் ஸ்ப்ரே பாட்டிலை வெளியே எடுத்து வைத்தவள், கூடவே சிறு கத்தி ஒன்றையும் எடுத்து வைக்க வியப்பில் விழி விரித்தான்.

“உன்னைப்போய் கட்டுப்படுத்த வேண்டுமென நினைக்கிறானே அந்த ரவீந்தர். அவரை நினைத்தால் எனக்கு பாவமாக இருக்கிறது”

“அவனெல்லாம் எனக்கு ஒரு ஆளே கிடையாது சார். அவன் அப்பாவுக்காக அவன் உளறல்களை எல்லாம் பொறுத்து போய்க் கொண்டிருக்கிறேன். சொல்லுங்கள் நீங்கள் என்ன விஷயம் பேச வேண்டும்?”

“ஏன் இப்படி செய்தாய் மகிதா?” ஆதித்யன் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். “அப்பா உன் மேல் மிகவும் கோபமாக இருக்கிறார்”

“ஐயோ கம்பெனி அக்கௌன்ட்ஸை ரொம்ப சரியாகவே மெயின்டெயின் பண்ணுகிறேன் சார். பிறகென்ன கோபம்?” 

“அன்று கோவிலில் உனக்காகத்தான் உன் பக்கம் பேசி அப்பாவை தாலி எடுத்துக் கொடுக்க வைத்தேன். வேறு வழி இல்லாமல்தான் அப்பாவும் செய்தார். ஆனால் அதனை இப்படி வீடியோவாக்கி அவரது கோபத்தை சம்பாதித்து கொண்டாயே”

“சார் அந்த வீடியோ நான் செய்த ஏற்பாடு கிடையாது.  யாரோ கோவிலுக்கு வந்தவன் வீடியோ எடுத்து போட்டிருக்கிறான். ஆனால் அதில் உங்கள் அப்பாவை பற்றி பெருமையாகத்தானே பேசி இருந்தார்கள்?”

“உனக்கு இது புரியாது மகிதா. அப்பாவிற்கு அந்த வீடியோ பிடிக்கவில்லை.உன்னை கழுத்தை நெறிக்கும் ஐடியா வைத்திருக்கிறார்.நீ அவரிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்.எச்சரிக்கத்தான் வந்தேன்” பில்லுக்கு பணத்தை வைத்துவிட்டு எழுந்தான் ஆதித்யன்.

க்ளைன்ட்ஸை கோபப்படுத்தக் கூடாது என்பது சற்குணம் அவளுக்கு சொல்லிக் கொடுத்த தொழில் பாடம்.இந்த கோபக்கார கிளைண்டை எப்படி கையாள்வது யோசித்தாள் மகிதா. 

“இவள் குடும்பத்திற்கு ஆக மாட்டாள். இவளை நம் வீட்டோடு சேர்க்க நினைக்காதீர்கள் என்று அன்றே தலைதலையாக அடித்துக் கொண்டேன். யாராவது கேட்டீர்களா?” திவ்யா சத்தமாக கத்திக் கொண்டிருக்க, நான்கு விசில் வந்துவிட்ட குக்கரை அணைத்துவிட்டு, மிக்ஸியில் மசாலாவை அரைக்க துவங்கினால் மகிதா.

அவள் காதில் விழ வேண்டும் என்றேதான் ஹாலில் பேசிக் கொண்டிருக்கிறாள். பாட்டிக்காக தயாரித்து வைத்திருந்த குழைவான ரசம் சாதத்துடன் அவர் அறைக்கு செல்லும்போது ஹாலில் பேசிக் கொண்டிருந்த இருவரையும் கண்டு கொள்ளாமல் நடந்தாள். இந்த செய்கை திவ்யாவிற்கு மேலும் ஆத்திரத்தை கொடுத்தது.

“அம்மா உங்களுக்கு அன்று மேட்ரிமோனியல் சைட்டில் அக்கவுண்ட் ஓபன் பண்ணி கொடுத்தது என் தவறு” தாயிடம் காய்ந்தாள்.

திலகவதிக்கு முதன் முதலில் மகிதாவை பார்த்த தினம் நினைவிற்கு வந்தது. போட்டோவில் தான் பார்த்தாள். பார்த்த உடனேயே மகனுக்கு ஏற்ற துணை என அவள் மனதில் பட்டு விட்டது.

“அம்மா இப்போதெல்லாம் வீட்டில் இருந்தே வரன் பார்க்கலாமே! உங்கள் மகனுக்கு நீங்களே பெண்ணை செலக்ட் செய்து கொள்ளுங்கள்” மேட்ரிமோனியல் சைட்டை உபயோகிக்கும் முறையை தனது அம்மாவிற்கு விளக்கி விட்டுப் போனாள் திவ்யா.

 ஆர்வமாக அதனுள் பார்த்துக் கொண்டிருந்த திலகவதி மகனுக்கென சில பெண்களை தேர்ந்தெடுத்து வைத்தாள். அதில் அவள் மிகவும் விரும்பியது மகிதாவை.

“இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கிறால்ல?” மாலை வீட்டிற்கு வந்த மகளிடம் காட்டி கேட்க,அப்படி என்ன பெரிய அழகி என கம்ப்யூட்டர் ஸ்கிரீனை பார்த்த மகிதாவிற்கு கறைகளற்ற நிலவாக ஜொலித்துக் கொண்டிருந்த மகிதாவை பிடிக்காமல் போனது.

“ம்…சுமாராக இருக்கிறாள். வேறு யாரை பார்த்து வைத்திருக்கிறீர்கள்?”

திலகவதி காட்டிய பெண்கள் எல்லோருமே நிறத்தில், தோற்றத்தில், அவயங்களின் வடிவமைப்பில் தன்னைவிட ஒரு படி மேலாகவே இருப்பதை கவனித்த திவ்யாவிற்கு யாரையுமே பிடிக்காமல் போனது.

” ஒருத்தரும் சரியில்லைம்மா. நீங்க அழகை மட்டுமே பார்க்காதீங்க. அவங்க ஃபேமிலி பேக்ரவுண்ட் முக்கியம். இதோ பெரிய அழகினு கொண்டாடிக்கிட்டு இருந்தீங்களே… இவள் சாதாரண பள்ளிக்கூட வாத்தியார் மகள்.வெறும் 30 பவுன்தான் போடுவார்களாம். இவள் எப்படி நம் வீட்டிற்கு ஒத்து வருவாள்?”




 திவ்யா தனக்கு போடப் போவதாக சத்யேந்திரன் சொல்லிக் கொண்டிருக்கும் நூறு பவுன் நகையை மனதில் வைத்துக் கொண்டு பேசினாள்.

“அதனால் என்னம்மா… பொண்ணு கொடுப்பது பெரிய இடமாக இருக்க வேண்டும், பெண் எடுப்பது நம்மை விட சிறிய இடமாக இருக்க வேண்டும்னு பெரியவங்க சொல்லுவாங்க. நம்மை விட வசதி குறைந்தவர்கள் என்றாலும் குணத்தில் நன்றாக இருந்தால் சம்மந்தம் செய்து கொள்ள வேண்டியதுதானே?”

“அடடா திலகா உனக்கும் இவ்வளவு விவரம் இருக்கிறதா? நான் உன்னை இவ்வளவு விவரமென்று நினைத்ததில்லையே” என்றபடி வந்தார் பாட்டி.

முதல் முறையாக மாமியார் கொடுத்த பாராட்டில் ரொம்பவே பெருமிதம் திலகவதிக்கு .”பாருங்கத்தை இந்த பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள்?”

 பாட்டி கண்ணாடியை துடைத்து போட்டு பார்த்துவிட்டு கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு கையால் திருஷ்டி கழித்து நெற்றியில் மடக்கினார்.

“உடனே உன் புருஷனை போய் பேசி முடிக்கச் சொல். நல்ல பொண்ணுங்கெல்லாம் சீக்கிரமே விலை போய்விடுவார்கள்”

“என்ன பாட்டி என்னை குத்தி காட்டுகிறீர்களா?” திவ்யா கேட்க இருவரும் திடுக்கிட்டனர்.

 திவ்யாவின் ப்ரோபைலை மேட்ரிமோனியலில் பதிவு செய்து ஒரு வருடம் ஆன பிறகும் அவளுக்கு சரியான மாப்பிளை அமையாமல் இருப்பதால் இப்படி கேட்டாள்.

“உன்னை நான் ஏன்டி குத்த போகிறேன்? வருகிறவனையெல்லாம் அதையும் இதையும் சொல்லி நீ கழித்துக் கொண்டே இருக்கிறாய். உன் கல்யாணமும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதே போல் ஆதியுடைய கல்யாணத்தையும் தள்ளிப் போட வேண்டாம் என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்”

“என்னவோ செய்யுங்க போங்க”

மகள் சலித்தாலும் திலகவதி அன்று இரவே கணவனிடம் விபரத்தை சொல்ல,”அம்மா எனக்கு ஒரு வருடம் போகட்டும் .திவ்யா கல்யாணம் முடியட்டும்” தடை போட்டான் ஆதித்யன்.

சத்தியந்திரன் “ஆதி திவ்யாவிற்கு தட்டிப் போய்க் கொண்டே இருக்கிறது. உனக்கு அமைந்தால் பார்க்கலாம்” என்றபடி போனை வாங்கினார்.

“இந்தப் பெண்ணா?” சத்யேந்திரன் யோசனையாக போனை எட்டிப் பார்த்த ஆதித்யனின் முகம் பிரகாசமானது.

“சரிதாண்பா ஒத்து வந்தால் முடித்து விடலாம்”

 சத்யேந்திரனின் முகம் இறுகியது.




What’s your Reaction?
+1
64
+1
27
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!