Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் -4

 4

அபிராமி அவனின் பக்கம் பார்வையைத் திருப்பாமலே கூடுமானவரை இருந்தாள், எல்லாரும் வந்தாச்சு பின்கட்டு வீட்டுலே இருக்கிற வந்தனா மாமி குடும்பம் நிலாச்சோறுக்கு வரலையே ஏன் ? லட்சுமி நீ பக்கத்து வீட்டுக்காரிதானே வரும்போது ஒரு குரல் கொடுத்திட்டு வரலாம் இல்லை ? சுதாவின் கேள்விக்கு லட்சுமி சுள்ளென்று பதில் கொடுத்தாள்.

ஏன் மாசாமாசம் பெளர்ணமி வருது நிலாச்சோறு சாப்பிடறது எழுதப்படாத சட்டம் இங்கே இதிலே நான் வேறு போய் கூப்பிடனுமா ஏன் அந்த மாகாராணி வந்தனாமாமி மருமக வாயில விழனுமா என்ன ? இருந்தாலும் உங்களுக்கு இத்தனை குறும்பு ஆகாது சுதாக்கா இரண்டு கட்டு தள்ளின்னாலும் நீங்க ஏன் கூப்பிடலை

மன்னிச்சிடும்மா நான் மறந்திட்டேன் எப்போதும் போல வந்திடுவாங்கன்னு நினைச்சேன் ஆனா…

போதும் போதும் உங்க சண்டை சீக்கிரம் சாப்பாட்டை போடுங்க அக்கா இரண்டுபேரும் இந்த பெளர்ணமிதான் நான் வீட்டுச் சாப்பாட்டை சாப்படிடறதே ?! அதிலும் உங்க இரண்டு பேர் சமையலும் நளபாகம் ஆச்சே 

ஏன்டா சிவா உனக்கு சோறு வேணுன்னா கேட்டு வாங்கிச்சாப்பிடு இவங்க சமைக்கிற வெந்ததையும் வேகாததையும் சாப்பிடற எங்களுக்கு இல்லை தெரியும் அந்த வருத்தம் இதிலே தேவையில்லாம ஏன் நளபாகன்னு அந்தாளை இழுக்கறே விடு ? என்று பேசிவிட்டு தலையிலேயே ஒரு கொட்டு வாங்கினான் லட்சுமியின் கணவன் ரவி

பார்த்து அண்ணா அக்கா அடிக்கிற அடியிலே உங்க தலையிலே ஒனிடா விளம்பரத்திலே வர்ற ஆளோட சிம்பல் மாதிரி ஆகிடப்போகுது. 

நான் தப்பா சொல்லலை லட்சுமி உனக்கு ஆதரவாத்தான் சொன்னேன். அடிபட்ட இடத்தை தடவியேபடியே பல்டி அடித்தான் ரவி. 

எப்படி நான் சமைக்கிறது வெந்தும் வேகாததும் மாதிரியிருக்கா இனிமே ஆபீஸ் கேண்டீன்லே கரப்பான்பூச்சி விழுந்த சாப்பாட்டைச் சாப்பிடுங்க அப்பத்தான் என் அருமை தெரியும்

ஹா…ஹா….பார்த்தீங்களா கணேசன் அண்ணா எத்தனை சமத்து சுதாக்கா சமையலைப் பத்தி பேசவேயில்லை நீங்கதான் வாயைக் கொடுத்துட்டு வாங்கிக்கட்டிக்கிட்டீங்க….!

சுதா முதல்ல அவனுக்கு சோத்தை போடு இப்படியே பேசி குடும்பத்தையே வம்புக்கு இழுப்பான் போல….கணேசன் சிரித்துக்கொண்டே சொல்லவும் அத்தனைநேரம் தேடிக்கொண்டு இருந்த வந்தனா மாமி படிக்கெட்டு ஏறி மெதுவாய் வந்தமர்ந்தார். டன் கணக்காய் முகத்தில் சோகம் குடிகொண்டு இருந்தது? !




என்ன வந்தனா சோகமா இருக்கே ? இந்த வீட்டை வாங்கியதும் முதலில் குடித்தனம் வந்தது வந்தனா மாமிதான் இருவருக்கும் ஒரே வயது என்பதாலும், தனிமரமாய் தான் நின்றாலும் வந்தனாவின் நிறைவான குடும்பமும் அவரின் புன்னகையான முகமும் இருவருக்கும் உரிமையாளர்- குடித்தனக்காரர்கள் என்பதையும் தாண்டி ஒரு ஒட்டுதலை உருவாக்கியிருந்தது.

இரண்டு மகன்களும், ஒரு மகளும் எல்லாருக்குமே மணமாகிவிட்டது. பெரியவன் தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகிவிட பெண்ணிற்கு மதுரையில் மாப்பிள்ளை எடுத்தாகிவிட்டது எஞ்சிய சின்னவனுக்கு தன் ஒன்றுவிட்ட அண்ணன் மகள் நித்யாவை எடுத்திருந்தார். சொந்தத்திற்குள் பெண் எடுத்தால் கடைசிவரையில் பார்த்துக்கொள்வாள் என்ற நம்பிக்கையை வந்த இரண்டாவது நாளே தகர்த்துவிட்டாள் மருமகள்.

வயசாயிடுச்சி இனிமே நீங்கயேன் அடுப்படியில் கஷ்டப்படணும் அதான் நான் வந்துட்டேன் இல்லை இனிமே நான் பார்த்துக்கறேன் நீங்க ஓய்வெடுங்க, நான்தான் இருக்கேனே அவருக்கும் உங்களுக்கும் நானே பரிமாறுகிறேன் நீங்க உட்காருங்க அங்கேயிங்கே அலைய வேண்டாம் பேசாம கிருஷ்ணா ராமான்னு படுத்துகிடங்க நான் எதுக்கு இருக்கேன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வந்தனாவின் நலனைக் கருத்தில் கொண்டு செய்வது போலயே அந்த வீட்டில் அவரை தனிமைப்படுத்திவிட்டாள் நித்யா.

மகனுக்கு தன் தாயை நன்கு கவனிக்கிறாள் என்ற எண்ணம், வந்தனாவுக்குமே தன் மருமகளை தவறாக நினைக்கத்தோன்றவில்லை, அத்தைக்கு வயசாயிடுச்சு வரவு செலவு கணக்குகளை எல்லாம் நான் பார்த்துக்கறேன் என்று கொத்துசாவியை வாங்கி இடுப்பில் சொருகியவளின் சொரூபமே மாறிவிட்டது. அக்கம் பக்கத்தினருக்கு பண விஷயத்தில் வந்தனா உதவுவது வழக்கம் ஒரு கஷ்டம்ன்னா வந்தனாமாமி இருக்காங்கன்னு ஒரு நம்பிக்கை நிலவும் அந்த வட்டத்தில், வயது மூப்பினால் சில மருந்து செலவுகள், கோவில் கைங்கரியங்கள் என எல்லாம் அந்த வழியில் அடைக்கப்பட்டது.

நித்யா கோவில் காரியத்திற்கு ஒரு ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கிட்டேன். நல்லாயிருக்கு அத்தை கோவில் எங்கே போயிடப்போகுது ஏழைகடன் ஏழுவருஷன்னு பழமொழியே இருக்கே, இங்கே நீங்களே நானோ ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடறதுயில்லை பாவம் அந்த மனுஷன் நாள் முழுக்க வேலைவேலைன்னு ஓடறார் நைட்டு கூட அடிச்சுப்போட்டாமாதிரி தூங்கறார். அத்தனை கஷ்டப்பட்டு வர்றதை அநாமத்தா கோவிலுக்கு நான் தரமாட்டேன். இனிமே இதெல்லாம் வச்சிக்காதீங்க. 

உங்க காலம் முடிஞ்சிப்போச்சு மூணுவேளை சோறும் நல்லநாளுக்கு புடவையும், மருந்து மாத்திரை செலவுகளுக்குமே மூச்சுமுட்டுது. இதுலே வாயை வைச்சிட்டு சும்மாயிருக்காம நீங்க பண்ற தர்ம காரியங்களுக்கு எல்லாம் நான் பணம் தர முடியாது. குடும்பத்தை கட்டுசெட்டா நடத்தணும், பேசாம இருக்கிற காலத்தை கிருஷ்ணா ராமான்னு படுக்கையைத் தேச்சிட்டு கழிச்சிடுங்க. மருமகளின் இந்த பேச்சுகள் மகனின் காதுக்குப் போன போது கூட

அம்மா உங்களுக்கு வயசாயிடுச்சி இனிமே வீட்டிலேயே விழுந்து கிடக்க வேண்டியதுதானே நித்யா என்ன தப்பா சொல்லிட்டா எங்க எதிர்காலத்திற்கு கொஞ்சம் சேர்த்து வைக்கவேண்டாமா ? இதுவரைக்கும் நாங்க உங்களை பாரமா நினைச்சது இல்லை, இனிமேலும் நினைக்கமாட்டோம் இருந்தாலும் நாளைக்கு எனக்கும் குழந்தைகுட்டின்னு ஒரு குடும்பம் வரும் அதுக்கு நான்சோத்து வைக்கவேண்டாமா ?! என்று சொல்லி அவன் பங்கிற்கு முடித்துவிட்டான்.

கணவனின் ஆதரவு தனக்கிருக்கிறது என்று புரிந்து கொண்ட நித்யா தன் சுயநலத்தை காட்ட ஆரம்பித்துவிட்டாள். ஒரு அறைக்குள்ளே அடைந்து கிடக்கும் வந்தனா தன் மனது விட்டு பேசுவது பார்வதியம்மாளிடம் மட்டும்தான். வந்தனாவிற்காக நித்யாவிடம் பரிந்து பேசிடப்போய் மாமி உங்க வீட்டுலே குடித்தனம் இருக்கிறோங்கிறதுக்காக எங்க வீட்டு விஷயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்காதீங்க, நானென்ன என் மாமியாருக்கு சோறுபோடலையா இல்லை துணிமணி எடுத்து தரலாயா என்னமோ கொடுமை பண்றாமாதிரி உங்கம்மா ஊருபூரா சொல்லிட்டு இருக்காங்க என்று கணவனிடம் வத்தி வைத்தாள். அதற்கும் பலன் வந்தனாவிடம் தான் வந்தது. 




அம்மா நீ பார்த்துதானே கட்டிவைச்சே இப்போ என்ன அவளை உனக்கு பிடிக்கலை, ஊரெல்லாம் புரளி பேசி எங்களை அசிங்கப்படுத்திறே பேசாம உன் முதல் பிள்ளை வீட்டுக்கே போயிடும்மா …….. மகனின் வார்த்தைகளில் மனம் ஒடிந்துபோனவர் தனிமையில் அழுவதை மட்டுமே வாடிக்கையாய் கொண்டார். 

என்னத்த சொல்ல பார்வதி ? எத்தனை நாழி ரூமிலேயே உட்கார்ந்து இருக்கமுடியும் வயசாயிட்டா நமக்கு எந்த ஆசையும் இருக்கக் கூடாதா, இந்த பருவமும் போயிட்டா நினைத்ததை நடத்திக்கிற பருவம் எப்போ வரும். பொம்பிளைக்கு மட்டும் இப்போ நடந்திடும் இப்போ நடந்திடுன்னு எதிர்பார்ப்பிலேயே காலம் போயிடுது. இலேசா இருமினேன் மடியிலே விளையாடிக்கிட்டு இருந்த பிள்ளையை கொத்தா பிடுங்கிட்டுப்போயிட்டா கேட்டா சீக்கு ஒட்டிக்குமாம். 

அவனும் இதையெல்லாம் ஏதும் கேட்பது இல்லை, நைட்டுக்கு சப்பாத்தி என்னால மெல்ல முடியலை இரண்டு இட்லியோ தோசையோ ஊத்தி தாடிம்மான்னு கேட்டேன் அதான் பிரச்சனை, வெறுத்துப்போகுது பார்வதி வயசானா நாக்கைக் கூட கட்டிக்கணும் போலயிருக்கு வந்தனாவின் அழுகையில் அனைவரும் கரைந்தனர். 

அட விடுங்க மாமி இப்போயென்ன உங்களுக்கு இட்லி தோசைதானே வேண்டும் சிவா ஒவ்வொரு பாத்திரமாக திறந்து பாத்துவிட்டு அபிராமியிடம் இருந்த அடைதோசையையும், எள்ளு சட்னியும் எடுத்துவந்து வந்தனாமாமிக்கு ஊட்டிவிட்டான். மாமி குடும்பத்தைத் தாண்டியும் உறவுகள் இருக்கு நீங்க ஏன் உங்க மகனை அண்டியே நிக்குறீங்க பேசாம என்னோட வீடியோ காரேஜ்க்கு வந்திடுங்க ப்ரண்ட் ஆபீஸ் பார்த்துக்கோங்க. 

போடா போக்கிரி….

அட நிஜமா மாமி …. நீங்க மட்டும் இப்போ மார்டனா டிரஸ் பண்ணிகிட்டா இப்போ உள்ள கதாநாயகிகள் எல்லாம் பீல்ட விட்டே ஓடவேண்டியதுதான் அவன் சொல்ல வந்தனா கரண்டியைத் தூக்கிக்கொண்டு அடிக்க வர சிவா பயந்தபடியே ஓடிப்போய் அபிராமியின் பின்னால் ஒளிந்து கொண்டான். பாட்டி உண்மையைச் சொல்லுங்க இன்னைக்கு சமைச்சது நீங்களா இல்லை உங்க பேத்தியா ? அபிராமியின் பாட்டியை வம்பிற்கு இழுத்தான். 

ஏண்டா படிக்கிற பிள்ளைகிட்டே கரண்டியைக் கொடுக்கவா நான்தான் சமைச்சேன்.

ம்…..பரவாயில்லை நல்லாத்தான் இருக்கு, இப்படியே சொல்லிசொல்லி ஏத்திவிடுங்க நாளைக்கு கல்யாணம் பண்ணப்போறவன் இல்லை கஷ்டப்படப்போறான்.

அந்தக் கவலை உனக்கு எதுக்குடா படவா ?

நல்லதை யார் வேணுன்னாலும் சொல்லலாம் மாட்டப்போறது என் இனம்இல்லையா ? அனைவரும் கொல்லென்று சிரிக்க உணவு பரிமாறல்களோடு, நாளைய வீடியோ கேசட் விவரத்தையும் பார்வதியம்மாள் பேசிட அபிராமி தனியே நகர்ந்துவிட்டாள். 

என்னம்மா தனியா வந்திட்டே என்ன நினைப்பு சிவா அவளருகில் மற்றவர்கள் எல்லாம் பேச்சு சுவாரஸ்யத்திலும் விளையாட்டிலும் ஈடுபட்டு இருக்க, இந்த மாதிரி தனியா பேசாதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது சிவா கடுப்புடன் கேட்டவளை,

நானும் அதேதான் கேட்கிறேன் நீ வீட்டுக்குள்ளே என்கிட்டே பேசினா தப்பு ஆனா பார்க்கில் எவன் கூடவோ பேசினது தப்பில்லை அப்படித்தானே ?! அபிராமி நீ சின்ன பொண்ணு, யார் நல்லவங்க யார் கெட்டவங்கன்னு உனக்குத் தெரியலை, நான் விசாரிச்சுப் பார்த்தவரையில் மதன் அத்தனை நல்லவன் இல்லை.காதல் உன் கண்ணை மறைக்குது.

மிஸ்டர் நீங்கள் எல்லை மீறி பேசுறீங்க ? என்னைப்பற்றிய அக்கறை உங்களுக்குத் தேவையில்லை உங்க வேலையைப் பாருங்க..

எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாட நீ ஒண்ணும் நல்லவனை காதலிக்கலை, இத்தனை நாள் மறைச்சி வைச்சிதும் என் தப்புதான் உன் காதலுக்கு உரியவன் மதன் இல்லை இந்த சிவா. 

இன்னொருத்தனை காதலிக்கிற பொண்ணுகிட்டே இப்படி பேச வெட்கமாயில்லை உங்களுக்கு ?!

டீசன்டா என் விருப்பத்தை சொல்றேன் நானென்ன என்ன உன்னை மகாபலிபுரத்திற்கா கூப்பிட்டேன் வெட்கப்படறதுக்கு ?! அபிராமியின் முகத்தில் அப்பட்டமாய் அதிர்ச்சி வழிந்தது, அதை உணராதவன் போல மற்றவர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டான் சிவா.

மதனுடன் பேசிய எல்லாம் இவன் ஒட்டு கேட்டு இருக்கிறான். தேவையில்லாமல் மனதில் ஒரு பயபந்து உருள ஆரம்பித்தது அபிராமிக்கு. மறுநாள் மதனை அதே பார்க்கில் சந்தித்தபோது சிவாவைப் பற்றி சொல்லலாமா என்ற எண்ணத்தை கடைசி நிமிடத்தில் மாற்றிக்கொண்டாள். 

இன்றைய சந்திப்பிலும் மகாபலிபுரத்திற்கு போவதைப் பற்றியே பேசிய மதனிடம் சுவாரஸ்யமின்றியே வருவதாக ஒப்புக் கொண்டாள். பாட்டிக்கு இது தெரிந்தால் என்ன ஆகும் அதிலும் கண்கொத்திப்பாம்பாய் என் நடவடிக்கைகளை கவனிக்கும் சிவா மாட்டிவிட்டுவிட்டால் என்ன செய்வது ? யோசித்தபடியே உறங்கிப்போனாள். 

அந்த கடற்கரையின் மணலுக்குள் கால்கள் புதைந்துபோக அபிராமியால் தன்னைத் துரத்திக்கொண்டு வரும் உருவத்திடம் இருந்து தப்பிப்போக முடியவில்லை, இன்னொரு பக்கம் சிவாவும் அவளை வேகமாகத் துரத்திக்கொண்டு வருகிறான். அந்த உருவம் அவளை சமீபித்து விட்டது அதன் கைகளில் பளபளவென்ற கத்தி, விநாடிக்கும் குறைவான நேரத்தில் அந்த கத்தில் அவள்மேல் வீசப்பட அந்த உருவம் தன் முகமூடியை கழட்டுகிறது அது மதன் வீல்லென்ற அலறலுடன் எழுந்திருக்கிறாள் அபிராமி திண்ணையில் படுத்திருந்த பாட்டி மட்டும் அல்ல அந்த காம்பெளண்டே முழித்துக்கொள்கிறது என்னாச்சு என்னாச்சு ?! அபிராமியின் உடல் நடுங்குகிறது. அந்தக் கூட்டத்தில் சிவாவும் நிற்கிறான் அவளைப்பார்த்து சிரித்துக்கொண்டே, மீண்டும் ஒருமுறை அலறியபடியே நினைவிழக்கிறாள் அபிராமி…..!




What’s your Reaction?
+1
7
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!