Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி -9

9

“மகி நான் இந்தப் பெண்ணை காதலிக்கிறேன்” திணறல் குரலில் சொன்னபடி தன் முன் நின்ற அண்ணனை இடுப்பில் கைவைத்து முறைத்தாள் மகிதா.

“என்ன அண்ணா இது? அப்பாவிற்கு தெரிந்தால் என்ன ஆகும்?”

” அதுதான் மா எனக்கும் பயமாக இருக்கிறது.ஆனால் நீ இருக்கும் போது எனக்கு அந்த கவலை இல்லை. அப்பாவின் செல்ல பெண்ணான நீ அவரிடமிருந்து என்னுடைய காதலுக்கு அனுமதி வாங்கி கொடுத்து விடுவாய் தானே?”

” அப்படியெல்லாம் எதுவும் கிடையாது”

” சும்மா சொல்லாதே. என் செல்ல தங்கை அண்ணனுக்காக இதைக் கூட செய்ய மாட்டாயா என்ன? ஏய் சுகந்தி வா நீயும் மகியிடம் கேட்டுக்கொள் .அவள் மனது வைத்தால் தான் நம் திருமணம்”

ஒட்டடைக்குச்சி போன்ற உடம்பில் மங்கிய சுடிதார் போட்டு நின்ற அந்த பெண்ணை அண்ணனுக்கு ஏன் பிடித்தது யோசித்தபடி பார்த்தாள். சுகந்தி அவள் கைகளை பற்றிக் கொண்டாள்.”ப்ளீஸ் அண்ணி எங்களை சேர்த்து வையுங்க”

 ஆணும் பெண்ணுமாக இரு வளர்ந்தவர்கள்… அவளை விட வயதில் பெரியவர்கள்… நீதான் உதவ வேண்டும் என்று கைகளை பற்றியதில் மகிதா கொஞ்சம் தன்னை பெருமையாகவே உணர்ந்தாள்.அவர்களது காதலுக்கு உதவ துவங்கினாள்.

அப்பாவிற்கு தெரியாமல் வெளியே சந்திக்க ,சினிமாவிற்கு போக என்று அவளது உதவி அண்ணனின் காதலுக்கு தொடர்ந்தது. ஒரு நாள் அந்த காதல் சுப்பிரமணி காதிற்கு வர அவர் மகனைத் திட்டி திருமணத்திற்கு மறுக்க மகிதா தான் அந்த யோசனை சொன்னாள்.

“அண்ணா அப்பா சரிப்பட்டு வர மாட்டார் .பேசாமல் நீங்கள் ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கோங்க”

அந்த நேரத்தில் ராஜேந்திரனுக்கும் வேறு வழி தெரியவில்லை. தன் வீட்டில் ஒரு ஆள்… தங்கையே தனக்கு துணை இருக்கும் தைரியத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் முடிக்க ஒத்துக் கொண்டான் . பிறகும் திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்தவர்களை வீட்டை விட்டு விரட்ட நினைத்த தந்தைக்கு இடையில் விழுந்து சமாதானம் செய்து வீட்டிற்குள்ளேயே வர வைத்தாள் மகிதா.

 அன்று மகிதாவின் தைரியத்தில் உதவியில் வீட்டிற்குள் வந்த சுகந்தி இன்று அந்த வீட்டின் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு எல்லோரையும் ஆட்டி படைத்து வருகிறாள்.

“என்னுடைய உடைகள் கொஞ்சம் இங்கே இருக்கிறது. அவற்றை எடுத்துப் போகவே வந்தேன்” அலமாரியைத் திறந்து துணிமணிகளை பேக்கிற்குள் அடுக்கத் துவங்கினாள் மகிதா.

” அங்கேயே தங்கிக் கொள்ள சொல்லி விட்டார்களா?” சுகந்தியிடம் அடுத்த துருவல் கேள்வி.

சுகந்தியால் மகிதாவை தேடி வந்த வசதியான வாழ்வை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ராஜேந்திரனே சுகந்திக்கு வசதியான இடம்தான். அவனை திருமணம் முடித்ததுமே தன் பிறப்பே வசதியான குடும்பத்தில் தான் என்பது போல் மாறிவிட்ட சுகந்தியால் இவர்களை விட வசதி படைத்த ஆதித்யன் மகிதாவிற்கு கிடைப்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.

இவர்கள் பிரிந்த போது வெளிக்காட்டிக் கொள்ளாமல் மனதிற்குள் ரொம்பவே சந்தோஷப்பட்டாள்.

“ஆனாலும் அவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து உன்னை வீட்டை விட்டு விரட்டியவர்கள் மறந்து விடாதே மகி” மகிதாவின் மனதை குழப்பித்தான் அனுப்பி வைத்தாள்.

மகிதா அவளது அலுவலகத்திற்குச் சென்றாள் .ஆதித்யன் அவளுக்கு சரியான முறையில் விடுமுறை சொல்வான் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. ஆதித்யனுக்கு எப்போதுமே சற்குணத்தையோ ரவீந்திரையோ பிடிக்காது. அதனால் தானே விடுமுறை சொல்லிவிட்டுமுதல் நாள் நிறுத்தி வைத்திருந்த ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வந்துவிடலாம் என போனாள்.

அலுவலக வாயிலுக்கு நேராக டேபிள் போட்டு அமர்ந்திருக்கும் ரவீந்தர் அங்கேயேதான் அமர்ந்திருந்தான். அவன் முகம் சுண்ணாம்பாய் வெளுத்துப் போய் கிடந்தது. அலுவலக படிகளில் ஏறி உள்ளே வந்தவளை பார்த்ததும் மேலும் வெளுத்தது.என்ன இவன் பேயறைந்தது போல் உட்கார்ந்து இருக்கிறான்… அவனை பார்த்தபடி நெருங்கியவள் அப்போதுதான் அவன் எதிரே அமர்ந்திருந்த ஆதித்யனை கவனித்தாள். 

“வா மகி.சாருடன் சும்மா பேசிக் கொண்டிருந்தேன்”

” என்ன பேசுகிறீர்கள்?” சந்தேகமாய் கேட்டாள்.

” உன்னுடைய வேலையைப் பற்றி சார் சொல்லிக் கொண்டிருந்தார்.சரிதானே சார்?” ரவீந்தர் தலையை ஆட்டினான்.

” சாருடைய மனைவி வீட்டில் காத்துக் கொண்டு இருப்பார்களாம்.இப்போதுதான் சொல்லிக் கொண்டிருந்தார் “

 ரவீந்தர் பயத்துடன் எச்சில் விழுங்கினான். 

“லீவு தானே? நான் சொல்லிவிட்டேன் மகி. வா போகலாம்” திரும்பியவன் ஏதோ யோசித்து மகிதாவின் தோளில் கை போட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டு  வெளியேறினான்.

” ரவீந்தரை மிரட்டினீர்களாக்கும்?” 

“நான் இல்லை. அவன்தான் உன்னை மிரட்டி கொண்டே இருக்கிறான். அதற்கெல்லாம் ஒரு பதில் கொடுக்க வேண்டாமா?”

” வாழப்போன குடும்பத்தில் விரட்டி விடாமல் இருந்தால் இந்த பேச்சு நான் கேட்க வேண்டியது இருக்காது”

ஆதித்யன் மௌனமாக காரை செலுத்தினான். பிறகு மெல்ல “சாரி “என்றான்.




 

” ஒற்றை சாரியில் மன ரணம் மாறுவதில்லை” ஆதரவாக தோள் தொட்ட அவன் கையை உதறினாள்.

” ஐயோ என் ஸ்கூட்டி. காரை திருப்புங்கள். மறந்து விட்டேன்”

“ஸ்கூட்டியை ஆள் வைத்து பிறகு எடுத்துக் கொள்ளலாம்”

 “எனக்கு ஸ்கூட்டி வேண்டும்”

 “ம்” என்றபடி காரை நிறுத்தாமல் போனவனை வெறுப்பாக பார்த்தாள்.

“அம்மா அப்பாவை போய் பார்க்கலாம் என்று நினைத்தேன்” சொல்லும்போது மகிதாவிற்கு தொண்டை கரகரத்தது.

” பார்க்கலாம்…பார்க்கலாம்” அவனது அலட்சியத்தில் கண்கள் கலங்கியது.

பாட்டியை காரணம் காட்டி வீட்டிற்குள் அடக்க நினைக்கிறானோ? சுகந்தி எச்சரித்தது தான் உண்மையோ? பாட்டிக்காகவே என்றாலும் தவறான முடிவு தான் எடுத்துவிட்டோமோ ?சஞ்சலங்கள் மகிதாவின் மனதில். 

ஏனெனில் பெரிய மனது பண்ணி உன்னை மீண்டும் வீட்டுக்குள் அனுமதித்திருக்கிறோம் என்ற ரீதியிலேயே அந்த வீட்டில் அனைவரும் நடந்து கொண்டனர். இந்த நியாயம் அவளுக்கு மட்டுமே… உண்மையிலேயே தப்பு செய்த திவ்யா சகல மரியாதைகளுடன் அந்த வீட்டிற்குள் வளம் வந்தாள்.

 அந்த வீட்டின் தலைவர் இப்போது வரை சத்யேந்திரன்தான். அவர் வைத்ததுதான் சட்டம் அங்கே. அவரது சம்மதம் இல்லாமல் தானோ, திவ்யாவோ ,கதிரவனோ வீட்டிற்குள் நுழைந்திருக்க முடியாது. தன் அம்மாவுக்காக என்றாலும் சத்யேந்திரன் தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டதில் மகிதாவிற்கு ஆச்சரியமே. யாருக்காகவும் எதையும் விட்டுக் கொடுக்காத மனிதர் அவர்.

இப்போதும் திவ்யாவுடனும் அவள் கணவனுடனும் சத்யேந்திரன் பேசிக் கொள்வது போல் தெரியவில்லை. அவளுடனும் தான். அவ்வளவு பிடிவாதம் பிடித்தவரை தான் திகைத்து தடுமாற வைத்த தினம் நினைவு வர மகிதாவிற்கு புன்னகை தோன்றியது.

“ஊருக்குள் தெரிந்த பெரிய மனிதர்கள் யாராவது இருந்தால் கூட்டிட்டு வாங்கம்மா. அவங்கள பார்த்த பிறகு தான் கல்யாணத்தை முடித்து வைப்பேன்” முருகன் கோவில் ஐயர் சொல்ல மகிதாவிற்கு கோபம் வந்தது.

இந்நேரத்திற்கு எந்த பெரிய மனிதரை தேட முடியும்? விடியாத கங்கிருட்டாக இருந்த பொழுதில் கோவிலை விட்டு வெளியே வந்தவள் யோசனையுடன் சாலையோரம் நின்றாள். சாலையில் போன கார் ஒன்று அவள் அருகே நின்றது.

“இந்த அகால நேரத்தில் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?” அதட்டியபடி இறங்கினார் சத்யேந்திரன். அவரைப் பார்த்ததும் மகிதாவின் முகம் மலர்ந்தது.

 ஆஹா ஒரு பெரிய மனிதர் சிக்கிவிட்டார்.




What’s your Reaction?
+1
63
+1
27
+1
3
+1
2
+1
4
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!