Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் – 3

 3

அபிராமி புத்தகங்களை நெஞ்சோடு பதித்தபடியே சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு அருகில் இருந்த பார்க்கில் நுழைந்தாள் அவளுக்கு முன்பாகவே மதன் காத்திருந்தான் ம்.. வாங்க மகாராணியாரைப் பார்க்க எத்தனை நாழிகைக் காத்திருப்பது. ஏம்மா வர்றது வர்ற கொஞ்சம் சீக்கிரம் வரக்கூடாதா?! 

ஸாரி மதன் காலேஜ்லே முக்கியமான வகுப்பு அதை மிஸ் பண்ண முடியாதே அதனாலதான்…

அப்ப என்னைவிடவும் உனக்குப் படிப்புதான் முக்கியம் இல்லையா? இது மார்ச் மாதம் தள்ளுபடி போட்டிருக்கோம் கடையிலே நான் வியாபாரத்தை விட்டுட்டு இன்னும் சாப்பிடக் கூட இல்லாமல் உன்னைப் பார்க்க வந்து தேவுடு காக்கவில்லையா? அவனின் முகத்திருப்பலைக் கண்டு அபிராமி சிரித்தாள்

இதென்ன சின்னப்பிள்ளை மாதிரி எனக்கும் உங்களைப் பார்க்கணுமின்னு ஆர்வம் இருக்கு மதன் ஆனா படிப்பு என்னோட ஒரே தகுதி அதுதானே நாளைக்கு உங்கவீட்டுலே நம்மைப்பற்றி நீங்க பேசும்போது பொண்ணுக்கு பேங்கில கொஞ்சம் பணமிருக்கு டிகிரி முடிச்சிருக்கா எடுத்துக்கட்டி செய்யத்தான் ஆளில்லைன்னு சொல்லலாம் இல்லையா?

அதெல்லாம் என்பேச்சுக்கு எங்க வீட்டில் எந்த எதிர்ப்பும் இருக்காது…!




எதிர்ப்பு இல்லை ஆனா நீங்க நகரத்தின் முக்கிய துணிக்கடை அதிபரின் ஒரே மகன் உங்க வசதிக்கு ஆயிரம் பொண்ணு பார்ப்பாங்க என்னை மாதிரி ஒரு அநாதை பொண்ணு மருமகளா ஏற்றுக்கொள்ள ஒப்புக்கணுமே எடுத்துச் சொல்லிப்பேச ஒருதகுதியாவது உயர்ந்ததா இருக்கவேண்டாமா?! அதனாலதான் இந்த படிப்பை கெட்டியா பிடிச்சிட்டு இருக்கேன், உங்களுக்கே தெரியும் நான் என் அப்பாவும் அம்மாவும் கூட காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டவங்கதான் கடைசிவரை ஒண்ணா வாழப்போறோங்கிற நம்பிக்கையில்தானே வீட்டை எதிர்த்துகிட்டாங்க ஆனா என்னாச்சு ஆசையா என்னையும் பெத்து இப்போ அநியாயமா செத்தும்போயி நிர்கதியா நிக்க வைச்சிட்டாங்களே அதுமாதிரி நாளைக்கு எனக்கும் ஏதாவது? நான் படிச்சி நல்ல வேலைக்கு போகணும் என் சொந்த சம்பாத்தியம் இருந்தாத்தான் எனக்கும் ஒரு மரியாதை இருக்கும் தன்னம்பிக்கையும் வளரும்

அப்போ என் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? கல்யாணம் ஆகி நீ வேலைக்கு போனா என்னோட மரியாதை என்னாகுறது? இனியொரு முறை இப்படியெல்லாம் பேசாதே அபிராமி உன்னோட நம்பிக்கைக்கு என்றைக்கும் குந்தகம் வராம நான் இருப்பேன் சரியா தைரியமா இரு. நீ படிக்கிறது வேண்டுமானால் ஏதோ வகையிலே நான் ஒப்புக்கொள்வேன் ஆனா வேலைக்கு போறதைப் பற்றியெல்லாம் அப்பறம் பேசிக்கலாம் நல்லா மூடோட வந்தேன் எல்லாத்தையும் கெடுத்துட்டே வர்ற புதன்கிழமை எனக்குப் பிறந்தநாள் நீஅன்னைக்கு முழுக்க என்கூடத்தான் இருக்கணும் சரியா 

அய்யய்யோ பாட்டிக்கிட்டே என்ன சொல்றது? இப்பவே உங்களை பார்த்துட்டு போறது லேட்டாயிடுது திட்டு வேற வாங்குறேன் 

எப்ப பார்த்தாலும் பாட்டி பாட்டின்னு அவங்க என்ன உன்னை பெத்தவங்களா?

மதன் தயவு செய்து பாட்டியைப் பத்தி தப்பா பேசாதீங்க? அநாதையா நின்னப்ப எனக்கு ஆதரவு அவங்கதான்

அதுக்கு காரணம் உங்க அப்பா அம்மா உன்மேல போட்டு வைச்ச பணம்

தோல் சுருங்கிப்போய் நடக்கக்கூட முடியாம ஒரு மூலையிலே முடங்கிப்போய் இருக்கிற பாட்டிக்கு அந்தப் பணம் எதுக்கு 5வருஷமா என்னோட நலனைத் தவிர அவங்க வேறெதையும் நினைச்சது இல்லை தயவு செய்து அவங்களைப் பத்தி தப்பா பேசாதீங்க 

சரி பேசலை நீ புதன்கிழமை என்கூட வர்றேன்னு சொல்லு நாள் முழுக்க கூட வேண்டாம் அரை நாள் ஒரு சினிமா அப்புறம் மகாபலிபுரத்தில உள்ள எங்க வீடு அவன் சொல்ல பயத்தோடு கூடிய தலையாட்டலுடன் கிளம்பிறேன் மதன் என்று அவள் கிளம்பினாள்

மதன் வழியை விட்டான் அவன் மனம் பூராவும் வரும் அபிராமியுடன் செலவிடப்போகும் புதன்கிழமைக்காக ஏங்கிட ஆரம்பித்தது. 

ஏண்டி வயசுப்பொண்ணு இவ்வளவு நேரம் கழிச்சா வர்றது காலேஜ் விட்டு போ போய் சோத்தைபோட்டுத் திண்ணு பாட்டியின் பேச்சு ஏதும் பதில் பேசாமல் புழக்கடைப்பக்கம் நழுவினாள் அபிராமி 8 வீட்டு குடித்தனங்களும் வாசம் செய்யும் இடம் இரண்டே குளியலறைதான் முகம் அலம்பிவிட்டு வெளியே துவாலையுடன் வந்தவளை சட்டென்று எதிர்கொண்டான் சிவா அதே வீட்டில் 6வது போர்ஷனில் வசிக்கும் அவன். துறுதுறு இளைஞன் என்றாலும் அபிராமிக்கு அவன் மேல் அத்தனை ஈடுபாடு இல்லை. அதனால் ஏதும் பேசாமல் நகரப்பார்த்தாள்

உன்னைத்தானே கேட்கிறேன் கேட்கும் கேள்விக்கு பதில் கூட சொல்லும்… 

நீங்க யாரு உங்களுக்கு ஏன் நான் பதில் சொல்லணும் வழியை விடுங்க….இது வீட்டுக்காரம்மாவோ இல்லை குடித்தனக்காரங்களோ யாராவது பார்த்தா எனக்குத்தான் அசிங்கம் அதுவும் எங்க பாட்டிக்கு தெரிஞ்சா…

அப்போ வீட்டுக்குள்ளே பேசினாத்தான் பிரச்சனை? பார்க்கிலே பார்த்தா இல்லை அப்படித்தானே…




என்ன உளறுகிறீர்கள் என்று பயத்தையும் அதிர்ச்சியினையும் மறைத்துக்கொண்டே கேட்டாள். 

ம்.. ஒண்ணுமில்லை நீ போ…. அவள் ஒரு முறைப்புடன் உள்ளே சென்ற அபிராமியை ஒருவித ரசிப்புடன் பார்த்தான் சிவா அபிராமியிடம் வெகு விரைவில் தன்னோட காதலை சொல்லிட வேண்டும் என்று யோசனையுடனே வீட்டுக்கார பெரியம்மாவிடம் போய் நின்றான்.

வா சிவா…. காப்பி சாப்பிடறீயா? 

வேண்டாம் ஆச்சி… நாளைக்கு சனிக்கிழமை நைட்டு டெக் எடுக்கணும் கேசட் நம்ம கடையிலேயே எடுத்துக்கலாம் நீங்கதான் எல்லார்கிட்டேயும் பேசணும். 

இன்னைக்கு நைட்டு பெளர்ணமி நிலாச்சோறு சாப்பிட எல்லாரும் மொட்டைமாடியிலேதானே சாப்பிடுவோம் அப்போ பேசிடலாம் உனக்கு எவ்வளவுதரணும் டெக்கு வாடகைக்கு எடுக்க?

400 ரூவா இரண்டு நாளைக்கு? சனிக்கிழமை மதியம் கொண்டுவந்திடறேன் ஆறுமணிக்கு ஆரம்பிச்சிடலாம் திங்கட்கிழமை நான் ரிட்டன் தந்திடுவேன், ஆனா இந்த தடவை யார்கிட்டேயும் காசு கேட்கவேண்டாம் ஆச்சி நானே தந்திடறேன். 

அதெல்லாம் வேண்டாம் தம்பி நாலுபேர் வீட்டுலே இருக்கும்போது பகிர்ந்து கொள்வதுதான் நல்லது. ஆச்சி பேசியதோடு நிற்காமல் வீட்டு கூடத்தில் வந்து நின்றுகொண்டு ஏம்மா நைட்டு பெளர்ணமிக்கு சாப்பாடெல்லாம் ஆச்சா?

ம்.. ஆச்சு ! எங்கவீட்டுலே புளிச்சோறும் புதினா துவையலும், நான் கருவாட்டுக்குழம்பு வச்சிருக்கேன் ஆச்சி, நான் இட்லியும் சாம்பாரும் என்று ஆளுக்கொரு ஐயிட்டம் சொல்ல சிவா சிரிப்புடன் சொன்னான் நாளைக்கு நல்லநல்ல ஐயிட்டமெல்லாம் இருக்கு ஒருபிடி பிடிச்சிடவேண்டியதுதான். ஒன்பது மணிக்கு ஆச்சி சொன்னதைப் போல எல்லாரும் தயாராய் வந்திருந்தனர் கதம்ப சாதத்தின் வாசனை அற்புதமாய் நாசியைத் தாக்கியது. 

கிட்டத்தட்ட எல்லாக் குடும்பங்களும் வந்துவிட, அபிராமி வெறும் பாவடைதாவணியில் கூட அற்புதமாய் இருந்தாள் தெய்வீகமான அழகு அவளை தேவதையாய் காட்டியது மாதத்திற்கு ஒருமுறை வரும் இந்த பெளர்ணமி நாளை அபிராமி ஆர்வத்தோடு எதிர்பார்ப்பாள் சாப்பாடோடு பேச்சு பாட்டு சிறு சிறு விளையாட்டுகள் என்று களை கட்டும் ஆனால் இன்று எதிலும் லயிப்பு இல்லாமல், சிவா தன்னை பார்க்கில் பார்த்ததை பாட்டியிடம் சொல்லிவிடுவானோ என்ற பதட்டத்திலேயே அமர்ந்திருந்தாள். சொல்லட்டுமா என்ற பாவனையில் குறுஞ்சிரிப்பில் கண்களைச் சிமிட்டினான் சிவா.




 

What’s your Reaction?
+1
10
+1
13
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!