Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-8

8

“பாட்டி நான் இங்கே உங்களுடன் படுத்துக் கொள்ளப் போகிறேன்” கையில் பாயும் தலையணையுமாக அறைக்குள் வந்த மகிதாவை திகைப்பாய் பார்த்தார் பாட்டி.

 மகிதா சத்யேந்திரன் தனது தாயிடம் பேசிவிட்டு வெளியேறும் வரை காத்திருந்தவள் தனது படுக்கையை பாட்டியின் அறையில் அவர் அருகே வைத்துக்கொள்ள முடிவெடுத்து வந்திருந்தாள்.

பாட்டி ஜாடையாக வேண்டாம் நீ போய் மாடியில் படுத்துக்கொள் என்றார். “இல்லை பாட்டி உடம்பு சரியில்லாதவர் நீங்கள். உங்கள் பக்கத்தில் படுத்தால் உங்களை கவனிக்க வசதியாக இருக்கும்”பாயை உதறி பாட்டியின் கட்டில் அருகே இருக்கும் சிறிய இடத்தில் விரித்தவள் விளக்கை அணைத்துவிட்டு தலையணையை போட்டுக்கொண்டு படுத்துவிட்டாள்.

“நைட் பாத்ரூம் போகணும்னா எழுப்புங்க பாட்டி” என்றபடி கண்களை மூடினாள். உடன் ஆதித்யன் அவளை ஆரத்தழுவி முத்தமிட படக்கென திறந்து கொண்டாள் விழிகளை.

என்ன கண்றாவி நினைப்பு இது…தன்னைத் தானே வைதபடி மீண்டும் விழி சொருக தொடங்கியவள், திடுமென எதிரே நின்றவனை கண்டு திக்கிட்டாள்.

இவன் என்ன தூக்கத்திலும் விழிப்பிலும் பின்னாலேயே சுற்றிக்கொண்டு வருவானா?விழி விரித்துப் பார்க்க ஆதித்யன் நிஜமாகவே எதிரே நின்றிருந்தான். தரையில் படுத்திருந்த நிலையில் அவளுக்கு எதிரே இடுப்பில் கைவைத்து நின்றிருந்தவன் விஸ்வரூப சிவனைப் போல் பிரம்மாண்டமாக தெரிய தொண்டை காய திகிலுடன் அவனை பார்த்திருந்தாள்.

“பாட்டி தூங்கிட்டாங்களா?₹ மெல்லிய குரலில் அவன் கேட்க…

“என்னடாப்பா முழிச்சு தான் இருக்கேன்”

 சட்டென தனது விரைப்பை குறைத்து உடலை குழைத்து பாட்டியின் அருகே கட்டிலில் அமர்ந்தான் அவன்.

“உங்களை பார்க்கலாம் என்று தான் வந்தேன் பாட்டி. உடம்பு எப்படி இருக்கிறது?” அக்கறையாய் விசாரித்தான்.




பகலெல்லாம் எங்கே போனாயாம்? பாட்டி கையாட்டி கேட்க,

“பகல் முழுவதும் எனக்கு வேலை இருக்கிறது பாட்டி. நான் பிசினஸ்மேன் தெரியுமா?” காலரை உயர்த்தி விட்டுக் கொண்டவனின் கன்னத்தில் இடித்தார் பாட்டி.

பாட்டி பேரனின் சம்பாசனையில் வெறுத்துப் போனாள் மகிதா. சரியான கழுத்தறுப்புகள்… மறுபக்கம் திரும்பி ஒருக்களித்து படுத்தாள்.  காலில் ஏதோ ஊர்வது போல் தோன்ற எலியோ பல்லியோ என பயந்து எக்கி காலை பார்த்தாள்.

ஆதித்யன்தான். கட்டிலில் உட்கார்ந்து கொண்டு பாட்டியுடன் பேசியபடி தனது காலால் அவள் காலை வருடியபடி இருந்தான்.

வெடுக்கென தன் காலை மடித்துக்கொண்டாள். அவன் விடாது காலை நீட்டி தொடர்ந்தான். வேகமாக எழுந்து அமர்ந்தவள் பட்டென கையால் அவன் காலில் அடித்தாள்.

 பாட்டி தலை தூக்கி பார்க்க  “ஒன்றுமில்லை பாட்டி. திருட்டுப் பூனை ஒன்று என்னை சீண்டிக்கொண்டே இருக்கிறது” என்றாள்.

பூனைக்கு கொஞ்சம் பால் ஊற்றி வை…பாட்டி சான் சொல்ல ஆதித்யன் சிரித்து விட்டான்.

“திருட்டுப் பூனைக்கெல்லாம் பால் வைத்தால் நமக்கு கட்டுபடியாகாது பாட்டி. இதற்கு சூட்டுக்கோளால் சூடு போடணும்”

ஆதித்யன் சட்டென எழுந்து கொண்டான். “காட்டுப் பூனையை வீட்டு பூனையாக்கும் வித்தை எல்லோருக்கும் வருவதில்லை பாட்டி .நான் வர்றேன். நீங்க தூங்குங்க”

 மீண்டும் படுத்துக்கொண்ட மகிதாவிற்குள் அப்பாடி போனானே என்ற விடுபடலை விட கோபித்துக் கொண்டு போகிறானோ? என்ற தவிப்பு தான் அதிகம் இருந்தது.

கண் மூடி தூங்க முயற்சித்தவள் திடீரென்று தான் அதனை உணர்ந்தாள். “பாட்டி “மெல்ல அழைத்தாள்.

பாட்டியிடமிருந்து சத்தம் வரவில்லை.தூங்கிவிட்டார்கள் போலும்…தானும் கண்களை மூடி தூங்க முயற்சித்தாள்.

மறுநாள் காலையும் வீட்டின் சமையல் வேலைகள் தோணாமல் மகிதா பக்கம் தள்ளிவிடப்பட்டன்.”நான் ஆபிஸிற்கு போக வேண்டும் எரிச்சலாய் சொன்னாள்”

” பத்து நாட்களுக்கு லீவு போட்டு விடு” ஆதித்யன் சொல்ல முறைத்தாள்.

” அப்படியெல்லாம் உடனே லீவ் போட முடியாது”

“உன் ஆபீஸில் நான் பேசிக் கொள்கிறேன். உன் லீவ் என் பொறுப்பு”

“பாட்டிக்காகத்தான் வந்தேன். உங்கள் வீட்டினருக்கு சமைத்து போடுவதற்கு வரவில்லை” பின்பக்கம் கை கழுவ வந்தவனிடம் பல்லை கடித்தாள் மகிதா.

“பாட்டிக்காகத்தான் இதையும் செய்யச் சொல்கிறேன். லீவ் போடு” அதிகாரம் காட்டினான்.

“முடியாது” அவனது அதிகாரத்திற்கு பதிலாக கைநீட்டி குரல் உயர்த்தினாள்.

 தன் முன் நீண்ட கையை பற்றி மடக்கினான் “கை நீட்டி பேசாதே”

“அப்படித்தான் பேசுவேன் “மீண்டும் அவன் முன் விரலாட்டினாள்.

” கடிச்சிடுவேன்டி,” தன் முகத்தின் முன் அங்குமிங்கும் அலைந்த விரலை பார்த்தபடி சொன்னான்.




” அது என்ன எப்போதும் டி? வீட்டிற்குள் சமையல் செய்து கொண்டு கிட ,வேலைக்கு போகாதே, இது போன்ற ஆணாதிக்கத்திற்கெல்லாம் நான் அடிபணிய…” உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டே போனவள் அப்படியே நிறுத்தினாள்.

 முன் அலைந்து கொண்டிருந்த விரலை வாயில் கவ்வியிருந்தான் அவன். “இப்போ பேசுடி” வாயில் விரலோடு குழறலாய் சொன்னான்.

“விரலை விடுடா” காரசாரமாய் கோபத்தோடு இதை சொல்ல நினைத்தவளின் குரல் எதற்காகவோ குழைந்து சிணுங்கியது. சிணுக்கமாய் அவள் சொன்ன டாவிற்கு அவனுக்கு கோபம் வரவே இல்லை.

“நான் சொன்னால் காரணம் இருக்கும்.சொல்வதைக் கேள் “மீண்டும் அவன் வலியுறுத்த அவன் வாயிலிருந்து விரலை உருவிக்கொண்டு வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் உள்ளே போனாள் மகிதா.

ஆண்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பிறகும் நடுவீட்டில் உட்கார்ந்து கொண்டு காலாட்டிக் கொண்டிருந்த கதிரவனை பார்த்து பற்றிக் கொண்டு வந்தது மகிதாவிற்கு.

“சமையல் வேலைகளை முடித்து விட்டேன். அம்மா வீடு வரை போய் வருகிறேன்” திலகவதிக்கு தகவல் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள்.

“மாமியாருக்கு கொஞ்சமாவது மரியாதை தருகிறாளா பார்” திலகவதியின் பேச்சு காதில் விழுந்தும் அலட்சியப்படுத்தி தெரு முனைக்கு வந்து ஆட்டோ பிடித்தாள்.

 வாசலில் வந்து நின்ற மகிதாவை பார்த்து முதலில் திகைத்து பின்பு விழி விரித்தாள் சுகந்தி.

“மகி வந்து விட்டாயா வா…வா. இப்போதுதான் குழந்தையிடம் சீக்கிரமே அத்தை வந்து விடுவாள் என்று சொல்லிக் கொண்டிருந்தேன் .நீயும் வந்து நிற்கிறாய். ரொம்பவும் டயர்டாக தெரிகிறாயே !உட்கர் காபி தருகிறேன்”

பிறந்த வீட்டு உபச்சாரம் என்பது இதுதானா? மனதிற்குள் நினைத்தபடி இந்த சுகத்தை இழக்க விரும்பாமல் சோபாவில் அமர்ந்து கொண்டாள் மகிதா. ஐந்தே நிமிடங்களில் காபியுடன் வந்த சுகந்தி அவள் அருகே அமர்ந்து கொண்டு மெல்ல கேட்டாள்.

” திரும்பவும் விரட்டி விட்டுட்டாங்களா?” காபி நுனி நாக்கை சுட்டு விட, ஆவலான விழிகளுடன் அருகில் அமர்ந்திருந்தவளை வெறித்தாள் மகிதா.




What’s your Reaction?
+1
66
+1
27
+1
1
+1
4
+1
1
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!