Serial Stories பாதரஸ பற​வைகள்

பாதரஸ பற​வைகள் – 1

1  

கீச் கீச்சென்று கிளிகளின் சப்தம் எங்கோ மரத்தில் இருந்து கேட்டது பொழுது விடிந்து விட்டதற்கு அடையாளமாய் 8 அடுக்குகள் கொண்ட அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையில் இருந்தும் ஏதோ ஒரு பாத்திரத்தை உருட்டும் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது 1990 களில் இம்மாதிரி காம்பெளண்ட் வீடுகள் வெகு பிரசித்தம் அப்படியொரு சூழ்நிலையில் நிகழும் கதைதான் இந்த நாவல்…..சூழல்கள் எல்லாமே ஒரு காலத்தில் நாம் பார்த்து பழக்கப்பட்டவையாகத்தான் இருக்கும், காலையிலே மணி ஐந்தாகுது சீக்கிரம் எழுந்திருங்க நேத்தே தண்ணிக்கு லைன் போட்டு இருக்கேன் அப்புறம் ஆளுக்கு ஒரு வாளின்னு பிரச்சனை பண்ணுவாங்க லட்சுமியின் குரல் உரக்க ஒலித்தது கணவரை எழுப்பியடியே, 

என்ன லட்சுமி இன்னைக்கு லீவு நாள் தானே மத்த நாள்லதான் வேலை, பசங்களுக்கு ஸ்கூலுன்னு எழுப்பித் தொந்தரவு பண்ணுவே அடிச்சிப் பிடிச்சி சாப்பாடு கட்டும் வேலையும் இல்லை கொஞ்ச நேரம் தூங்கிக்கிரேனே

நாசாமாப்போச்சு நாளுக்கிழமைன்னு நீங்க மட்டும் தூங்கினா போதுமா நான் தூங்க வேண்டாமா? எலிவலைமாதிரி ஒரு எட்டு போர்ஷன் அதுக்கு முள்ளங்கி பத்தையா 600 ரூபா வாடகை வாங்கினாலும் விடிஞ்சதும் தண்ணிக்கும், டாய்லட்டுக்கும் க்யூல நின்னே பாதி ஆயுசு முடிஞ்சிப் போகுது மதியானம் அன்பா கூட்டு பண்ணியிருக்கேன் ரசமிருக்குன்னு பகிர்ந்து கொள்றவங்க கூட காலையிலே இந்த நேரத்திலே மல்லுக்கு நிக்கிறாங்க. 

நிலைமை புரியாம என் பிராணனை வாங்காதீங்க எழுந்து வந்து தண்ணியைப் பிடிச்சி கொடுத்துட்டு அப்பறம் தூங்குங்க லட்சுமி கணவன் ரவியைத் தண்ணீர் தெளிக்காத குறையாய் எழுப்பினாள். முணங்கலுடனே சரி நான் போய் இரண்டு குடம் அடிக்கிறேன் அதுக்குள்ளே சூடா கொஞ்சம் காப்பித் தண்ணியைப் போடு, அவன் தண் வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டே கலங்கிய கண்களை கசக்கியபடி க்யூவில் போய் நிக்கிறான். அங்கே பக்கத்துவீட்டு கணேசன் அவனைப் பார்த்து சிரிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துவிட்டு சிநேகமாய் ஒரு சிரிப்பை சிரித்து வைக்கிறான்.

என்ன உங்க மனைவியும் உங்களை எழுப்பிட்டாங்களா? அடுத்த குடத்தை நகர்த்திவைத்துக்கொண்டபடியே தன் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பிக்கொண்டு பேசுகிறார் கணேசன் நகராட்சிப் பள்ளியில் 5வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர். வெளியில்தான் வெள்ளை வேட்டி சட்டையெல்லாம் வீட்டில் மனைவிக்கு அப்படி பயந்தவர். லட்சுமியைவிடவும் இவரது மனைவி சுதாவிற்கு வாய் கொஞ்சம் நீளம்தான். 

மனுஷர் பொண்டாட்டி கோட்டைத் தாண்டாதே என்றால் தாண்ட மாட்டார் அத்தனை பயபக்தி காலங்காத்தால என்ன வெட்டிப் பேச்சு மத்த போர்ஷன் காரங்க எழுந்திருக்கறதுக்குள்ளே சீக்கிரம் அண்டால தண்ணியை ரொப்புங்கோ கடிந்து கொண்டே நிரம்பிய குடங்களை வீட்டினுள் சுதா எடுத்துச்செல்ல, கணேசனை நகரச் சொல்லிவிட்டு தன் பாத்திரங்களை நிரப்புவதா இல்லை இன்னும் இரண்டோ மூன்றோ அமைதியாய் நிற்பதா என்று யோசனையில் இருந்தான் சுசீந்திரன். 

என்னங்க கல்லுப்பிள்ளையார் மாதிரி நின்னுகிட்டு இருக்கீங்க நான் அங்கே துணிக்கு சோப்பைத் தேய்ச்சிட்டு அலச தண்ணீர் இல்லாம நிக்குறேன் உங்களுக்கு வேடிக்கை கேட்குதா, 

இல்லை லட்சுமி இன்னும் இரண்டு பானைதான் அவங்க முடிச்சிடட்டுமே

அய்யோ என்ன தாராள மனசு இதே மனசு அவருக்கு இருந்தா அடடா நிக்கிறீங்களே நீங்க இரண்டு குடம் அடிச்சிக்கோங்கன்னு வழியில்லை விட்டு இருக்கணும் அதைவிட்டுட்டு என்னமோ இவருக்கும் இவங்க குடும்பத்திற்காகவும் இந்த அடிபம்பைக் கண்டுபிடித்திருப்பதைப்போல கெட்டியா பிடிச்சிக்கிட்டு நிப்பாரா? லட்சுமி பேசிய அடுத்த விநாடி சுதா கத்திட துவங்கினாள்




ஏய் என் புருஷனை வம்புக்கு இழுக்க உனக்கு என்னடி உரிமை, என்ன நீ மட்டும்தான் இந்த காம்பெளண்டில் அரசாணியா நாங்களெல்லாம் மகாராஜாவும் மகாராணியும் வந்திட்டாங்கன்னு வாலைச் சுருட்டிக்கிட்டு தள்ளிப்போக நானும் வாடகை தர்றேன் எனக்கும் உரிமையிருக்கு இந்தா சும்மா கத்தாம நகரு இரண்டு இரண்டு பானை எடுத்துகிட்டுதான் விடுவேன் 

நீங்க என்ன மசமசன்னு என் வாயையே பார்த்திட்டு அடிங்கோ இப்படி ஒரு அசமஞ்சமான புருஷனை வச்சிகிட்டு இன்னும் என்னன்ன வாங்கிக்கட்டிக்கப் போறேனோ சுதாவின் அலட்டல் பேச்சுக்கு லட்சுமியும் பேசியிருப்பாள் ரவிதான் தடுத்துவிட்டான். 

விடு லட்சு இன்னும் ஒரு பானைதானே? அவங்க பிடிக்கட்டும் காலையிலேயே சண்டை போட்டா அந்த நாள் பூரா நம்ம அமைதிதான் கெட்டுப்போகும் அவன் மனைவியிடம் அடக்கமாக சொல்லிவிட்டாலும் இன்றைய பேச்சுக்கு கணவன் இல்லாத ஒருநாளில் பழி தீர்க்க வேண்டும் என்று கங்கணத்தோடு லட்சுமியும் அமைதி காத்தாள். சரியாய் அவர்கள் முறை வந்து தண்ணீர் பிடித்துக்கொண்டு நகரும் போதே இன்னும் நாலைந்து குடும்பங்கள் க்யூவில் வந்து நிற்க ஒரே களேபாரம். 

கொஞ்சம் விட்டால் குழாயடியில் வெட்டுக்குத்தே நடக்கும் போல, சூடாக காப்பியை உள்ளிறக்கிய போதுதான் இதமாய் இருந்தது. எல்லாருக்கும் கொஞ்சம் பொறுமையிருந்தா எவ்வளவோ நல்லாயிருக்கும் பாரு எப்படி அடிச்சிக்கிறாங்க இன்னும் அரைமணியில் இதெல்லாம் நடக்காத போல ஒருத்தருக்கு ஒருத்தர் எப்படி இயல்பாய் பேசிட முடியுது.

எல்லா ஒண்டு குடுத்தனத்திலும் இதெல்லாம் சகஜம்தானே ஆமா நீங்க கொஞ்ச நேரம் படுக்கலாமே துவைத்த துணிகளை மொட்டை மாடியில் உலர்த்திவிட்டு கணவனின் அருகில் தானும் ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள் லட்சுமி. அடுப்பங்கறையும், பெட்ரூமும் கொண்ட இரண்டே அறைகள் கிட்டத்தட்ட எல்லா வீடுகளுமே அப்படித்தான் புறாக்கூண்டைப்போல இருந்தாலும் அதுதான் அவர்களின் மாளிகை பொதுவாய் ஒவ்வொரு வீட்டுக்கு முன்பும் கொஞ்சம் இடம் விடப்பட்டு இருக்கும் அங்கேதான் தண்ணீர்பானைகள் பாத்திரம் தேய்ப்பது என எல்லாமும் காலை மட்டுமல்ல, சிலநேரம் இந்த வீட்டில் பாத்திரம் தேய்த்துக்கும் தண்ணீர் அடுத்த வீட்டு முன்பு போய் நின்றால் கூட சண்டைதான் விடிந்தால் அடைந்தால் சண்டை சச்சரவு என்று களைகட்டும் அந்த காம்பெளண்ட்டை அமைதிப்படுத்துவதும் ஒன்றிணைப்பதும் ஞாயிறு மாலை போடும் ஏதாவது தமிழ்படம் அந்த வீட்டில் முதன் முதலில் கணேசன் வீட்டில் தான் டிவி இருக்கும், வெள்ளிக்கிழமை ஒளிபரப்பாகும் ஒலியும் ஒளியும், 50 பைசா வாங்கிக்கொண்டு வீட்டில் மொத்த காம்பெளண்டையும் உட்கார வைத்து விடுவார். அதுவும் சுதாவின் ஐடியாதான்

ஏன் சுதா இந்த 50 காசு வந்துதான் நமக்கு நிறையப்போகுதா? எதுக்கு அநாவசியமா?




உங்களுக்கு சொல்புத்தியும் கிடையாது சொந்த புத்தியும் கிடையாது சும்மா இருங்க எல்லாம் எனக்குத் தெரியும். இந்த காம்பெளண்ட்டில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் நம்ம வீட்டுலே டீவி இருக்கிறதேன்னு பொறாமை வாரந்தவறாம அவங்க வந்து டிவி பார்க்கட்டுமா அக்கா கேட்கும் போது எனக்கு எத்தனை கெளரவமா இருக்கும் தெரியுமா ஆனா பிள்ளைகள் சும்மா உட்காருவாங்களா எதையாவது நோண்டித் தொலைக்கும், அதுக்குதான் இந்த அம்பது பைசா காசுன்னு வரும்போது கொஞ்சம் பயம் இருக்குமே, மத்தபடி இதெல்லாம் பொம்பிளைங்க சமாச்சாரம், நீங்க வரும்போது உங்களுக்குத் தொந்தரவா இருந்தா மட்டும் சொல்லுங்க மத்தபடி ஏதும் பேச வேண்டாம் என்று கணவரின் வாயை அடைத்துவிடுவாள் சுதா. 

அவளைப் பொறுத்தவரையில் சுதாக்கா கொஞ்சம் புளியிருந்தா கொடேன். அடுப்பிலே கடுகைத் தாளிச்சிட்டு பார்க்கிறேன் வீட்டுலே கொஞ்சம் கூட கருவேப்பிலை இல்லை ஒரு கன்னி தாங்கோ நாளைக்கு மார்கெட்டுக்குப்போய் வாங்கித் தந்திடறேன் என்று இரவல் வாங்குபவர்களின் குரல்கள் நிரம்பப் பிடிக்கும். அதேபோல் கொடுத்ததை மறக்காமல் கொடுத்ததை அதே நேரத்தில் வாங்கிவிடுவாள் அதிலும் கெட்டிக்காரிதான். அப்பப்பா 50 காசைக் கொடுத்துட்டு என்ன அழிச்சாட்டியம்\ பண்ணறதுங்க என்ற பொருமித் தீர்ப்பதில் ஆகட்டும் ஏண்டி உங்கம்மா உனக்கு ஒழுங்கா தலை கூட பின்னிவிடமாட்டாளா என்று சிக்கிட்டு கிடக்கும் சிறுமியிடம் வாஞ்சையுடன் பின்னிவிடுவதிலாகட்டும் 50 பைசா வாங்கி தான் கொஞ்சம் ரப்பசர் என்று காட்டிக்கொண்டாலும் அவள் வீட்டுக்கு வரும் பிள்ளைகளுக்கு தரும் திண்பண்டத்திற்கு அந்த 50 பைசா காணாது இதெல்லாம் சுதாவின் கல்யாண குணங்கள்

திருமணமாகி பதினாறு வருடங்கள் ஆனபோதிலும் பிள்ளையில்லாமல் போனதுதான் அவர்களின் ஒரே குறை, அவருக்கு வரும் வருமானத்தில் இந்த பிக்கல் பிடுங்கல் எல்லாம் இல்லாமல் இன்னுமே நல்ல வீட்டிற்கு வாடகைக்கு போகலாம்தான் ஆனால் அதேபோல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வீட்டில் உள்ள வெறுமையைப் போக்கத்தானே தினம் ஒரு சண்டை என்றாலும் இப்படியொரு காம்பெளண்டை தேர்ந்தெடுத்து இருக்கிறாள் சுதா பலாப்பழத்தைப் போன்றவள் வெளிப்படையாகப் பார்த்தாள் கரடுமுரடாகவும் உள்ளே இனிப்பாகவும் இதைப் போலவே இன்னும் சுவாரஸ்யமான பல மனிதர்களை நம் கதவிலக்கம் எண் 30க் கொண்ட பஞ்சவர்ணக் கூட்டில் சந்திக்கலாம்.




What’s your Reaction?
+1
9
+1
15
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!