Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி -7

7

தன் திகைப்பிலிருந்து மீண்டு நன்றாக இருப்பதாக அவள் சொன்னபோது அதை கேட்க கதிரவன் அங்கே இல்லை. உள்ளே போயிருந்தான். குழப்பத்துடனே உள்ளே வந்தாள்.

கதிரவன் திவ்யா அருகே சோபாவில் அமர்ந்து கொண்டு “இட்லியா?” என கேட்டுக் கொண்டிருந்தான்.

“சாப்பிடுறீங்களா?” கணவன் மீது காதல் பார்வை எறிந்து கொண்டிருந்தாள் திவ்யா.

“சாப்பாடு எடுத்து வை” திலகவதி சொல்ல, உள்ளே போய் இட்லி சட்னி சாம்பாரை டேபிளில் எடுத்து வைத்தாள் மகிதா.

மூவரும் உண்டு முடித்ததும் இட்லி காலியாகி விட மீண்டும் ஒருமுறை மாவு ஊற்றி அவித்து எடுத்து வைத்தாள். மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க இப்போது சத்யேந்திரன்தான். மாமனாரை எதிர்கொள்ள பயந்து வேகமாக மாடி ஏறினாள்.

 மாடியில் இரண்டு அறைகள் போக மொட்டை மாடியாகத் தான் இருக்கும். அங்கே தங்கிக் கொள்ள தீர்மானித்து அறைக் கதவை தள்ளியவள் திகைத்தாள். அறைக்குள் தரையில் போடப்பட்டிருந்த மெத்தையில் அமர்ந்து லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்யன்.




 இவன் என்ன எங்கு இருக்கிறான்? யோசித்தபடி நின்றவளை நிமிர்ந்து பார்த்தவனின் விழிகள் பளிச்சிட்டது .

“கொஞ்ச நேரம் முன்பு கிச்சனில் சொன்ன உறுதி மறந்து விட்டதோ?”

” என்ன சொன்னேன்?” மசமசத்த மூளையை தேய்த்து மகிதா யோசித்தபோது, “சரி வா” என இரண்டு கைகளையும் விரித்தான் ஆதித்யன்.

“என்னது?” தன் காதிலேயே கேட்ட பிறகு தான் கொஞ்சம் அதிகம் தான் என குரலின் அளவை உணர்ந்தாள் மகிதா.

“ஏய் எதுக்குடி இப்படி கத்துற? உன்னை கற்பழிக்கவா போகிறேன். நீயாகததானே தேடி வந்தாய்?” ஆதித்யன் இன்னமும் கைகளை மடித்துக்கொள்ளவில்லை.

“இங்கே பாருங்க தப்புத் தப்பாக பேசாதீங்க” என்றவளின் பார்வை மூங்கில் கம்பாய் அவள் புறம் நீண்டிருந்த அவன் கைகளை தொட்டு தொட்டு நழுவியது.

“என்னத்தடி தப்பாக பேசினேன்? ராத்திரி நேரம் தனது அறை தேடி வரும் பெண்ணிடம் ஒரு ஆண் என்ன பேசுவானோ… அதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன்”

 மகிதாவின் மனம் வேதனையில் துடித்தது.

“எவ்வளவு மோசமாக என்னை நினைத்திருக்கிறீர்கள்?”

“கணவனை பிடிக்காது. வேண்டாம் என்று சொல்பவளை பற்றி இதற்கு மேல் நான் வேறென்ன நினைக்க முடியும்?” கேட்டபடி சுவரில் அவளுக்கு இருபுறமும் தனது நீட்டிய கைகளை பதித்துக் கொண்டான்.

” கணவன் என்பதையே மறந்து போய்விட்டவள் மறக்க வைத்துவிட்டவனை வேறு எப்படி பேச முடியும்?”

“ஆமாமாம் இப்போது நாமிருவரும் கணவன் மனைவி இல்லைதானே?” ஒற்றை விரலால் அவள் கழுத்தை வருடினான்.”பச்சையாய் இந்த நரம்பு.அப்படியே கடிக்க வேண்டும் போலுள்ளது”

மனைவியல்லாத பெண்ணிடம் இப்படித்தான் பேசுவானாமா?அவன் நுனி விரல் திண்டலில் தீ உருகி ஓடிய தன் மேனியை வெறுத்தபடி வார்த்தைகளை கத்தியாக்கினாள்.

“யாரோ ஒருத்தி இருந்தால் போதும்தானே உங்களுக்கு ?”மகிதாவின் குரல் கம்ம, ஆதித்யனின் முகம் இறுகியது.

” ஆமாம் நான் அப்படித்தான்.இப்போது நீ ஒரு பெண் அவ்வளவுதான்” என்றவன் குனிந்து அவள் கன்னத்தில் முரட்டுத்தனமாக இதழ் பதித்தான்.

“பிடித்தமற்றவளை தொடுபவன்…ஆண் மகன்?” தனலாக தகிக்கும் உணர்வுகளை அடக்க போராடினாள்.

“அட…பிடிக்கவில்லையா?நிஐமாகவா ?” அவனது அதீத ஆச்சரியத்தில் அவளுள் அவமானம்.




“உங்களுக்குத்தான் என்னை பிடிக்காமல் போனது…” கம்மிய குரலை அதட்டி உயர்த்தினாள்.

” ஆ…அது அப்போது. என் மனைவியாக இருந்த போது…”அவனது இதழ்கள் அவள் முகத்தில் ஒவ்வொரு இடமாக உட்கார்ந்து அழுந்தி எழுந்தது.

“இ…இப்போது..”

“இப்போது நீ தான் என் மனைவி இல்லையே. நானும் உன் கணவன் இல்லை. அதனால் நாம் நம் விருப்பப்படி…” மேலே தொடர்ந்த அவன் விவரித்தலில் கூசி அவசரமாக அவன் வாயை பொத்தினாள்.

” கொஞ்சம் டீசன்டாக பேசுங்கள்…”

“இந்த இரவில்…தனிமையில்… தனி அறையில் என்ன டீசன்ட் வேண்டி இருக்கிறது ?”அவளை இழுத்து ஆரத் தழுவிக் கொண்டான்.

இவன் அடாது பேசுகிறான்..தகாது செய்கிறான்…மகிதாவின் மனம் அவளுக்கு உணர்த்தியபடி இருக்க,அப்பாவை எச்சரிக்க வந்தேன் என்ற ஆதித்யனும்,நாம் காதலிக்கிறோம்தானே என்ற ஆதித்யனும்,பண்பாய் பட்டுப் போல் அவளை அணுகியவனும் அவளை தட்டாமலை சுற்றி வர,கழுத்தடியில் புதைந்த அவனிதழ்களில் தத்தளித்து கிடந்தவளுக்கு அபயம் அளிப்பது போல் கீழிருந்து திவ்யாவின் குரல்.

“அண்ணா சாப்பிட வாங்க”

ஆதித்யனின் பிடி தளர, மகிதா நழுவி வந்து விட்டாள். தபதவென படிகளில் இறங்கி வந்தவளை கீழிருந்து முறைத்துப் பார்த்தாள் திவ்யா.”மாடியில் உனக்கென்ன வேலை?”

 மகிதா திரு திருத்து நின்றபோது “என்னை சாப்பிட கூப்பிட வந்தாள்” என்றபடி வந்தான் ஆதித்யன்.

 இருவரையும் ஒரு மாதிரி பார்த்தபடி நகர்ந்தாள் திவ்யா. அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை ஒதுக்கி போட்டு விட்டு அடுப்படியை துடைத்து முடித்தவளுக்கு உடம்பெல்லாம் வலிப்பது போல் இருந்தது .அக்கடா என்று படுக்கலாமென்றால் எங்கே படுப்பது?

ஹாலில் டிவி ஓடிக் கொண்டிருக்க, மகிதாவை பார்த்ததும் திவ்யா “நான் படுக்கப் போகிறேன்” என்று வேகமாக எழுந்தாள். ஒருவித வெற்றி குறியுடன் மகிதாவை பார்த்தபடி தன் கணவனுடன் பெட்ரூமிற்குள் போனாள்.

 அந்த அறை தான் முன்பு மகிதாவும் ஆதித்யனும் உபயோகித்த அறை.ஆக தங்கைக்கும் தங்கை கணவருக்கும் தியாகச் செம்மல் அண்ணன் தனது அறையை விட்டுக் கொடுத்துவிட்டு மாடியில் தரையில் படுத்து கிடக்கிறாராக்கும்!

மாடிக்குத்தானே வரப்போகிறாய் கண்களால் கிண்டலாக கேட்டபடி அமர்ந்திருந்த ஆதித்யனின் பார்வையிலிருந்து தப்பிக்க மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்து கொண்டாள்.

கீழே இருக்கும் இரண்டு படுக்கை அறைகளில் மாமியார் ஒன்றும் நாத்தனார் ஒன்றும் எடுத்துக் கொண்டு விட மற்றொரு அறையில் பாட்டி படுத்திருக்கிறார்.இப்போது இவள் படுக்க வேண்டுமென்றால் ஹால் ஷோபாவில் தான் படுத்துக்கொள்ள வேண்டும்.

 அது எப்படி முடியும்? யோசனையோடு அடுப்பை துடைத்தபடி இருந்தவள் பின்னால் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்து விழித்தாள். சத்தியேந்திரன் நின்றிருந்தார்.திவ்யா வாய் விட்டு கேட்டதை இவர் வாய்க்குள்ளாகவே கேட்பதாக உணர்ந்தாள்.என் வீட்டிற்குள் உனக்கென்ன வேலை?

ஒரு வேகத்தில் தலையை உயர்த்திக் கொண்டு் நேரடியாக அவர் கண்களை சந்தித்தாள்.  சத்யேந்திரனுக்கு அவள் முதன்முதலில் தனது அலுவலக அறைக்குள் வந்து கெஞ்சுதலாக நின்றது நினைவு வந்தது .

ஜிஎஸ்டி ஃபைல் பண்ணும் போது தப்பும் தவறுமாக கணக்குகளை போட்டுவிட்டு அதற்கு மன்னிப்பு கேட்கவென வந்து நின்றாள்.

“என் நண்பன் சொன்னதால்தான் வழக்கமாக பார்க்கும் ஆடிட்டரை விட்டு உங்களுக்கு வேலை கொடுத்தேன்.இப்படி செய்தீர்களென்றால் எப்படி? நான் மீண்டும் பழைய ஆடிட்டரிடமே போய்விடப் போகிறேன் “மிரட்டினார்.

“ஐயோ சார் அப்படி எதுவும் செய்து விடாதீர்கள் .எங்க ஆடிட்டர் என்னை ஒரு வழி செய்து விடுவார். தப்பெல்லாம் என்மேல்தான். என்னை நம்பி வேலையை கொடுத்தார். நான்தான் சொதப்பிவிட்டேன். இனி ஒருமுறை இப்படி தவறு நேராது .மன்னித்துக் கொள்ளுங்கள்”

கருவண்டாய் விழிகள் அங்கும் இங்கும் அலைபாய செப்பு வாய் திறந்து மன்னிப்பு வேண்டிக் கொண்டிருந்த அச்சிறு பெண்ணை அதற்கு மேலும் திட்டுவதற்கு அன்று சத்தியேந்திரனுக்கு மனம் வரவில்லை. 

“சரி சரி போ… இனியொரு முறை இந்த தவறு நடக்கக்கூடாது”

உடனே கலக்கம் போய் புத்தொளி வீசின அந்த கண்கள்” ரொம்ப நன்றி சார்” 

உற்சாகத்தோடு திரும்பியவளை “இந்த ஜூசை குடித்துவிட்டு போங்க” என்றான் அதே அறையில் ஓரமாக வேறு ஒரு மேஜையில் அமர்ந்திருந்த ஆதித்யன்.

“தேங்க்ஸ் சார் பேசிப் பேசி தொண்டை காய்ந்து விட்டது” மடமடவென்று குடித்தவள் மீண்டும் நன்றி கூறி வெளியேறினாள்.

“ரொம்ப வெகுளி பெண் போல் இருக்கிறாள்பா. எங்கே இவள் ஆடிட்டரை விட்டு விடுவீர்களோ என்று நினைத்தேன்”

“ம் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். ஆனால் இந்த பெண்ணுக்காக அந்த நினைப்பை மாற்றிக் கொண்டேன்” ரொம்ப வெள்ளந்தியான பெண்ணாக இருக்கிறாள்.இந்த சூது நிறைந்த உலகத்தில் எப்படித்தான் பிழைக்கப் போகிறாளோ?” 

அன்று மகிதாவைப் பற்றிய தந்தை மகனின் கணிப்பு இப்படித்தான் இருந்தது. அவளுக்காகத்தான் அந்த ஆடிட்டரையே தொடர்வதாக சொன்னவர்கள் ஒன்றை உணரவில்லை ஆடிட்டரை வேலையிருந்து நீக்க எண்ணுமளவு தவறு செய்தவள் அவள் தான் என்பதை.

வெகுளி என்ற அவர்களது கணிப்பை அடுத்த வாரமே பொய்யாக்கினாள் மகிதா. இருவரும் மரங்கள் வாங்குவது தொடர்பாக கேரளா போய்விட்டு அதிகாலை திரும்பிக் கொண்டிருந்தபோது மீண்டும் மகிதாவை பார்த்தனர்.

 ஒரு மாதிரி விழித்தபடி சாலையோரம் நின்றிருந்தாள் அவள்.

“என்னங்க அத்தை உங்களை கூப்பிடுறாங்க” சாவித்திரி அடுப்படிக்குள் வர சத்யேந்திரனின் எண்ண ஓட்டம் தடையுற்றது. அவர் தாயைப் பார்க்க போனார்.

தனது இரவு படுக்கை பிரச்சனைக்கு ஒரு முடிவு கண்டுபிடித்த மகிதா நிம்மதி பெருமூச்சு விட்டாள்.




 

What’s your Reaction?
+1
59
+1
28
+1
2
+1
1
+1
1
+1
2
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!