Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-6

6

கொஞ்ச நேரம் பாட்டியின் அருகில் இருந்து பேசிக்கொண்டிருந்து விட்டு மகிதா வீட்டிற்குள் வந்தபோது யாரையும் காணவில்லை. ஆதித்யன் கடைக்கு போயிருக்கலாம்…நகரின் மையத்தில் பெரிய பர்னிச்சர் கடை அவர்களுக்கு இருந்தது.

சத்தியேந்திரனின் தந்தை சிறிய அளவில் ஆரம்பித்த தொழிலை சத்தியேந்திரன் ஷோரூமாக வளர்த்து இப்போது ஆதித்யன் உற்பத்தியோடு வேறு சில தொழில் உத்திகளை சேர்த்து இணைக்க தொழில் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டு இருக்கிறது.

“அது எப்படிம்மா இப்படி வந்து நிற்க முடிகிறது?”

” பாட்டிக்காக வந்திருப்பாளாய் இருக்கும்”

” பாட்டிக்காக என்றாலும் திரும்பவும் இங்கேயே வந்து நிற்க… ஐயோ என்னாலெல்லாம் முடியாதுப்பா” 

குசுகுசுப்பான குரல்தான்.ஆனாலும் வீட்டிற்குள் இருந்த அமைதிக்கு தெளிவாகவே மதிதாவிற்கு கேட்டது. திலகவதியும் திவ்யாவும் அவளுடைய தலையை தான் உருட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதோ நீ வந்து நிற்கவில்லை நான் வருவதற்கு என்ன? திவ்யாவை பிடித்தெடுத்து சுடச்சுட இப்படி கேட்கும் எண்ணம் வந்தது.ஆனால்…

சில நேரம் தன்னுள்ளே புதைந்து போய்விடும் அந்த திமிர் பிடித்தவளை தேடியபடி சக் சக்கென்ற நடை ஓசையோடு அடுப்படிக்குள் நுழைந்தாள். அடுப்பருகே நின்று பேசிக் கொண்டிருந்த தாய் மகள் இருவரும் வாயை மூடிக் கொண்டார்கள்.

 பானையிலிருந்து நீர் எடுத்து குடித்தவள் “ஆனாலும் எல்லாவற்றையும் மறந்து நீ இதே வீட்டிற்குள் வந்து நிற்பாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை திவ்யா” என்றாள்.

“இப்போது என்ன சொல்ல வருகிறாய்?” திவ்யா சிடு சிடுத்தாள்.




“உன்னுடைய மன தைரியத்தை பாராட்டினேன் திவ்யா. மனதிற்கு பிடித்ததை தயக்கமின்றி செய்ததோடு தைரியமாக மீண்டும் இங்கே வந்து நிற்கிறாயே…!” மிகுந்த ஆச்சரியம் காட்டி முகவாயில் கை வைத்துக் கொண்டாள்.

” ஏய் இது என் அம்மா வீடு. நீ தான் அப்படி சூடு சொரணை இல்லாமல் இங்கே வந்து நின்று கொண்டிருக்கிறாய்”

” என்ன திவ்யா இது? நான் உன்னை தைரியமானவள் என்று பாராட்டிக் கொண்டிருக்கிறேன். நீ இப்படி என்னை பேசலாமா?”

” யாருக்கு வேண்டும் உன் பாராட்டு ?தூக்கி குப்பையில் போடு. வெட்கமில்லாமல் இங்கே எதற்கு வந்து நிற்கிறாய்? அண்ணனை கைக்குள் போட்டுக் கொண்டு எங்கள் சொத்துக்களையெல்லாம்  உன் வசப்படுத்தலாம் என்று நினைக்கிறாய் தானே?”

திவ்யாவின் அநியாய குற்றச்சாட்டில் மகிதாவிற்கு கொதித்து வந்தது.எங்கள் சொத்துக்கள் …இப்படி சொல்ல இவளுக்கு மட்டும் என்ன உரிமையிருக்கிறதாம்? 

பெண்கள் ஒரு இடத்தில் பிறக்கிறார்கள்…இன்னொரு இடத்திற்கு வாழ வருகிறார்கள்.இரண்டு இடத்திலேயுமே எனக்கு உரமையுண்டு எனச் சொல்லித் திரிந்தாலும் ஆழ்ந்து கவனித்தால் இரு இடங்களிலுமே அவர்களுக்கு உரிமை கொடுக்கப்படுவதில்லை.

உன் அப்பன் வீட்டு சொத்தா? என்றும் ,உன் புருசன் சம்பாதித்து போட்டதென்று நினைத்தாயா ? என்றும் இரு வீடுகளிலுமே பந்தாடப்படுகிறார்கள்.காலம் காலமாக இருந்து வந்த இந்த நடைமுறையை மாற்றி தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளத்தான் இந்தக் கால பெண்கள் சுய சம்பாத்தியத்துடன் தன் காலில் நிற்க ஒரு வகை வெறியுடனேயே நினைக்கிறார்கள்.

மகிதாவின் போராளி மனது பெண்களின் அவலத்தை மனதில் நினைக்க,உணர்வுகள் கொதித்தன. “யாருக்கு வேண்டும் உன் வீடு? எனக்கு இந்த வீடும் தேவையில்லை. உன் அண்ணனும் தேவையில்லை.என் காலில் நிற்க என்னால் முடியும்”

“பிறகு எதற்கம்மா கூப்பிட்டதும் குடுகுடுவென்று அண்ணன் பின்னால் ஓடி வந்தாயாம்?”

” பாட்டிக்காக வந்தேன்.இங்கே வேறு யாரும் எனக்கு தேவையில்லை.”

” நன்றாக யோசித்து பேசும்மா. உன் புருஷன் கூடவா தேவையில்லை?” திலகவதி கிண்டலாக இடையிட்டாள்.

” வேண்டாம். எனக்கு உங்கள் சொத்துக்களும் வேண்டாம். என் புருசனும் வேண்டாம். உங்கள் சொத்துக்களையும் பிடிக்கவில்லை. புருசனையும் பிடிக்கவில்லை. பிடிக்காதவற்றை தேடிப் போகும் பழக்கம் எனக்கு கிடையாது .எனக்கு எதுவும் வேண்டாம். யாரும் வேண்டாம்” கிட்டதட்ட கத்தலாக இதனை சொன்னாள் மகிதா.

 மாமியாரும் நாத்தனார் அமைதியுடன் நிற்க அவர்கள் பார்வை சென்ற பக்கம் பார்த்தவள் திகைத்தாள். அடுப்படி வாசலில் ஆதித்யன் நின்றிருந்தான். இவள் சொன்னவற்றை கை கட்டி வாசல் நிலையில் சாய்ந்து  கேட்டுக் கொண்டு நிதானமாக நின்றிருந்தான்.

இவள் பார்வையை சந்தித்ததும் கையை முன்னே நீட்டினான்.அவன் அப்படி கைநீட்டிய வேகத்திற்கு திடுக்கிட்டாள் மகிதா. அடிப்பானோ ?

” ரொம்ப நன்றி இதே தான் என்னுடைய எண்ணமும். எனக்கு சிரமம் இல்லாமல் செய்ததற்கு நன்றி.வாழ்த்துக்கள்”

 அவள் கையை இழுத்து தானே குலுக்கியவன் அகன்ற சிரிப்புடன் போய்விட்டான்.




 ஏதோ ஒருவகை திருப்தியுடன் திலகவதியும் திவ்யாவும் அகன்று விட தன் உள்ளங்கையில் கதகதத்து கிடந்த அவனது கைச்சூட்டை தடவி பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தாள் மகிதா.

“அவருக்கு மூன்று சப்பாத்தி, எங்களுக்கு இட்லி, பாட்டிக்கு கஞ்சி .தயார் செய்து விடு” திலகவதி எட்டிப் பார்த்து உத்தர விட்டுவிட்டு போனாள்.

நானா? நான் ஏன் செய்ய வேண்டும்? சுறுசுறுவென கோபம் வந்த போதும்,பாட்டியை நினைத்து பல்லை கடித்துக் கொண்டாள் மகிதா. முன்பு அவள் இங்கு இருந்த நாட்களில் கூட சமையல் வேலை அவள் கைகளில் கிடையாது.திருமணம் முடிந்த பின்பும் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள் அவள்.

பாட்டியின் உத்தரவின் கீழ் திலகவதிதான் சமையல் செய்து கொண்டிருந்தாள்.இப்போது பாட்டி படுத்ததும் நிலைமை மாறுகிறது போல.

வெது வெதுவென கஞ்சியை ஆற்றிக்கொண்டு பாட்டியின் அறைக்குள் போனாள். “சாப்பிடுங்க பாட்டி “

பாத்திரத்தை எட்டிப் பார்த்த பாட்டி முகம் சுழித்தார். “எனக்கு இட்லி வேணும்”  சைகையில் காட்டினார்.

” இட்லி கொடுக்கலாமான்னு தெரியலையே பாட்டி.நாளைக்கு டாக்டர் வரும்போது கேட்டுட்டு தரேன். இப்போ இந்த கோதுமை கஞ்சியை குடிங்க” மகிதா ஸ்பூனால் எடுத்த ஊட்ட முகத்தை சுளித்தபடி பாதி சாப்பிட்டவர் பிறகு முகத்தை திருப்பிக் கொண்டார்.

 பாட்டியின் வாயை துடைத்து விட்டு கஞ்சி பாத்திரத்துடன் வெளியேறிய மகிதா டிவி பார்த்தபடியே சுடச்சுட இட்லிகளை உள்ளே தள்ளிக் கொண்டிருந்த அம்மாவையும் மகளையும் எரிச்சலாக பார்த்தபடி அடுப்படிக்குள் போனாள். சமைத்த பாத்திரங்களை ஒதுக்கி கொண்டிருந்தபோது வாசல் அழைப்பு மணி மீண்டும் மீண்டும் ஒலித்தது.

 அங்கே சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்கள் எழப்போவதில்லை என புரிந்து கை வேலையை போட்டுவிட்டு மகிதாவே சென்று கதவை திறந்தாள். மாமனார் சத்தியேந்திரனை எதிர்பார்த்து போனவள், வாசலில் நின்ற கதிரவனை கண்டதும் திகைத்தாள்.

 இவனும் இங்கேதான் இருக்கிறானா? எப்படி இவனை வீட்டிற்குள் அனுமதித்தார்கள்? திகைத்து நின்றவளை ஒருவிதமாக பார்த்தவன் “நல்லா இருக்கீங்களா ?”சம்பிரதாயமாய் விசாரித்தான்.




 

What’s your Reaction?
+1
67
+1
28
+1
2
+1
3
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Amuthavalli M
1 year ago

அடுத்தஅடுத்தஅத்தியாயம்பதிவுபண்ணுங்கள்♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

6
1
1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!