Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி -5

5

“அப்பா வந்ததும் வராததுமாக யாரிடமோ வாயை இழுத்து என்ன பேச்சு உங்களுக்கு? இன்றைக்கு ஸ்பெஷல் கிளாஸ் இருக்குன்னு சொன்னீங்க தானே? டிபனை சாப்பிட்டுவிட்டு கிளம்புங்க. அம்மா குட்டி பையனுக்கு சாப்பாடு குடுங்க. சுகந்தி காபி எடுத்துட்டு ரூமுக்கு வா”

 எல்லோரையும் அங்கிருந்து கலைத்தபடி தன் ரூமுக்குள் நுழைய போனவனை “ராஜா” என்றழைத்து நிறுத்தினான் ஆதித்யன்.

” நான் மகிதாவை கூட்டிப் போக வந்திருக்கிறேன்”

” அவள் வரமாட்டாள்”

” அதை அவள் சொல்லட்டும்”

” இதோ சொல்லுவாள்” என்றவன் திரும்பி “மகிதா” என இரைந்தான்.

 மெல்லிய தவிப்புடன் வெளியே வந்த மகிதா “அண்ணா” என்று கெஞ்சுதலாக பார்த்தாள்.

“அன்று கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளியது மறந்து போய்விட்டதா?”

” மறக்கவில்லை அண்ணா. அங்கே பாட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்”

” அது அவனுடைய பாட்டி. உனக்கு அதில் என்ன கவலை?”




 “அண்ணா நான் அங்கே இருந்த நாட்களில் பாட்டி தான் எனக்காக கொஞ்சம் ஆதரவாக பேசியவர்கள்

 அவர்கள் என்னை பார்க்க விரும்புகிறார்கள்”

” ஓஹோ அப்போ போகணுமென்ற முடிவை எடுத்து விட்டாயா?”

கத்தி எடுத்து குத்துவது போல் இருந்தது அவன் பார்வை .

“நன்றாக கேளுங்கள்.நான் எவ்வளவோ சொல்லி விட்டேன். மண்டையில் ஏற மாட்டேன்கிறது”சொன்ன சுகந்தி முடிவுகளை அவளே எடுக்க ஆரம்பித்தாள்.

” இங்கே பாருங்க எங்க மகிதாவுக்கு உங்க கூட வருவதில் விருப்பமில்லை. அதனால் நீங்கள் கிளம்பலாம். பாட்டிக்கு ஏதாவது ஒன்னுனா தகவல் சொல்லி விடுங்க. வந்து சாஸ்திரம் செஞ்சிட்டு வர்றோம்”

ஆதித்யனின் முகம் ஜிவு ஜிவுத்தது.தரை அதிர நான்கு எட்டு எடுத்து வைத்து மகிதா அருகே வந்தவன் அவள் கையை இறுகப்பற்றினான். “ராஜா நான் என் மனைவியை கூட்டிப் போகிறேன். இதனை மறுக்க யாருக்குமே ஏன் அவளுக்குமே கூட உரிமை கிடையாது” சொல்லிவிட்டு கிட்டத்தட்ட மகிதாவை எடுத்துக் கொண்டு போய் காருக்குள் தள்ளி காரை ஸ்டார்ட் செய்து போனான்.

“இந்த முரட்டுத்தனத்தை இன்னமும் நீங்கள் விடவே இல்லையா?” அவன் பிடியில் கன்றி சிவந்து காந்திக்கொண்டிருந்த தனது கை மணிக்கட்டை தேய்த்து விட்டபடி கேட்டாள் மகிதா.

“மூளையே கிடையாதா உனக்கு? அங்கே சுகந்தியும் ராஜாவும் பேசியதை கேட்டாய் தானே?”

” ஏன் அவர்கள் பேசியதில் என்ன தவறு? தங்கையின் வாழ்க்கை மேல் அண்ணனுக்கு அக்கறை இருக்கும் தானே?”

” ஆமாம் உன் அண்ணனின் ஒவ்வொரு வார்த்தையிலும் தங்கைக்கான அக்கறை தெரிந்ததுதான்”

” கிண்டல் செய்யாதீர்கள் சுகந்தி தான் கொஞ்சம் வேறு மாதிரி.அண்ணன் இன்னமும் என் மேல் பாசமாகத்தான் இருக்கிறான”

“இந்த இன்னமும் என்பதன் பொருள் அவனது திருமணத்திற்கு பின்பும் என்பதா?”

“உங்களுக்கு என்ன வேண்டும்? எதற்காக எங்கள் குடும்ப விஷயத்தில் தேவையில்லாமல் தலையிட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?”

“சரிதான் உன் குடும்பம் உன் பிரச்சனை. எனக்கென்ன?” தோள்களை குலுக்கி கொண்டவன்,” ஒன்றை மட்டும் நினைவுறுத்துகிறேன். சுகந்தி அங்கே இப்படி நடுவீட்டில் நின்று குரல் உயர்த்தி பேசிக்கொண்டிருக்கிறாளே அந்த உரிமையை அவளுக்கு வாங்கிக் கொடுத்ததே நீதான். இதனை அந்த வீட்டில் எல்லோரும் மறந்து விட்டாலும் நீயுமா?”

 பொங்கி வந்த அழுகையை அடக்கியபடி மகிதா முகத்தை திருப்பிக் கொண்டாள்.”என் வீட்டு விசயம் பேச வேண்டாம்” உறுதியாக பேச நினைத்தாலும் அவள் குரலில் மன்றாடலே தெரிந்தது. ஆதித்யன் கியரை உச்சத்திற்கு கொண்டு போய் பறக்க விட்டான்.

வீட்டு வாசலில் கார் நின்றதும் இறங்கிய மகிதா கதவை திறந்து கொண்டு வெளியே வந்து நின்ற திவ்யாவை சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஆதித்யனின் அப்பா சத்தியேந்திரனையோ அம்மா திலகவதியையோ வாசலில் எதிர்பார்த்து அவர்களுக்கு ஏற்ற வார்த்தைகளை தன் மனதிற்குள் தயாரித்துக் கொண்டிருந்தவள் முன்னால் வந்து நின்ற அவனது தங்கை திவ்யாவை பரக்க பரக்க பார்த்தாள்.




திவ்யாவோ கரப்பான் பூச்சியை அடித்து விரட்டும் பாவனையை முகத்தில் கொண்டு வந்தாள். அதையே உறுதிப்படுத்துவது போல் வாசல் ஓரமாக இருந்த துடைப்பத்தையும் கையில் எடுத்துக் கொண்டாள்.” அம்மா ராகு காலம் ஆரம்பமாயிடுச்சு”வீட்டிற்குள் பார்த்து கத்தலாய் குரல் கொடுத்தாள்.

 காரை நிறுத்திவிட்டு வந்த ஆதித்யன் “திவ்யா என்ன இது ?”அதட்டினான்.

“இன்றைக்கு இரவு ஏழு டு ஏழரை ராகு காலம் அண்ணா. அதைத்தான் சொன்னேன்”

“நல்ல நேரம் பார்த்தது போதும். வழியை விடு”

” ஆரத்தி எடுக்க வேண்டுமா அண்ணா?” அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு கண்களை சிமிட்டினாள்.

” வாலு” அவள் தலையில் செல்லமாக கொட்டி விட்டு “வா” என மகிதாவை அழைத்துவிட்டு உள்ளே போனான்.

 திமிரெடுத்துப் போய் பேசுகிறாள். இவளுக்கு குறும்புக்காரி பட்டமா? மகிதாவிற்கு கொதித்து வந்தது.ஒருவரையொருவர் கடந்து போகும்போது மின் கம்பிகள் இரண்டு உரசுகையில் பறக்கும் தீப்பொறி போல் இரு பெண்களுக்குமிடையே பொறி பறந்தது. 

“சோற்றுக்கு உப்பு போடுவார்களோ மாட்டார்களோ?” குத்திய திவ்யாவை முறைத்த மகிதா திலகவதி வரவும் தனது பார்வையை மாற்றிக் கொண்டு பவ்யமானாள்.

“எப்படி இருக்கீங்க அத்தை?”

 திலகவதி இவளை ஏற இறங்க பார்த்துவிட்டு “ம்…ம்..”என்றாள்.

” பாட்டி எப்படி இருக்காங்க ?”

“நீயே போய் பார்ப்பது தானே? உனக்கு மெடிக்கல் ஹிஸ்டரி நான் கொடுக்க வேண்டுமா?”

 மகிதா வாயை மூடிக்கொண்டாள்.மகி நீ திமிர் பிடித்தவள்…ஆணவக்காரி.தனக்கு தானே நினைவுறுத்த முயன்று தோற்றபடி, புழக்கடைக்கு போனாள். முன்பு வீட்டின் புழக்கடையில்தான் பாட்டி கட்டில் போட்டு படுத்திருப்பார். தடிமனான விறகு கட்டை ஒன்றை பக்கத்தில் வைத்துக் கொள்வார்.

திருடன் எவனாவது வந்தால் ஒரே அடி மண்டையை பிளந்து விடுவேன் என்பார்.அவ்வளவு தைரியமான பெண்மணி இப்போது… அங்கே பாட்டியை காணாமல் திகைத்து நின்றாள்

” பாட்டி அங்கே இருக்கிறார்கள்”  கை காட்டினான் ஆதித்யன்.




அந்த அறையை முன்பு ஸ்டோர் ரூமாக உபயோகித்துக் கொண்டிருந்தனர்.இப்போது பாட்டியின் உடல்நிலை காரணமாக அவருக்கு ஒதுக்கி இருப்பார்கள் போல. அறையோடு புதிதாக பாத்ரூம் வெஸ்டர்ன் டாய்லெட்டோடு இணைந்திருந்தது. மரக்கட்டில் மேல் மெத்தை போடப்பட்டு அதில் சோர்வாய் படுத்திருந்தார் பாட்டி

“பாட்டி” நரம்புகள் தெறித்து வெளித் தெரிந்த பாட்டியின் கையை மெல்ல வருடினாள் மகிதா. பாட்டி கண்களை திறந்து பார்க்க திகைத்தாள்

 சூரியனாய் மின்னின பாட்டியின் கண்கள்.

 உடல்நலம் சரியில்லாமல் படுக்கையில் கிடக்கும் ஒரு முதிய பெண்மணியின் பார்வை இவ்வளவு வெளிச்சமாக இருக்குமா?

பார்த்துக் கொண்டிருக்கும் போதேபாட்டியின் பார்வை  மங்கியது.பேச முடியாமல் நடுங்கிய உதடுகளுடன் கைகளை மகிதாவின் பக்கம் நீட்டினார்.

 வேகமாக அவர் கையைப் பற்றிக் கொண்ட மகிதாவிற்கு கண்கள் கலங்கியது. தன்னை பார்த்ததுமே பாட்டியின் கண்கள் பிரகாசித்ததை உணர்ந்தாள்” பாட்டி கவலைப்படாதீங்க.நான் வந்துட்டேன். இனிமே நீங்க சீக்கிரமாகவே குணமடைந்து விடுவீங்க” ஆறுதலாக பேசினாள். பாட்டி திருப்தியாக தலையசைத்துக் கொண்டார்.




 

What’s your Reaction?
+1
71
+1
25
+1
5
+1
2
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!