Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி -4

4

” நேற்று என்னை தொடர்பு கொள்வாய் என்று எதிர்பார்த்தேன்” காரில் ஏறியதும் ஆதித்யன் சொல்ல…

” எனக்கென்ன தேவை?” அலட்சியமாய் கேட்டாள்.

” உங்கள் வீட்டில் தகவல் சொல்லி இருந்தேன். உன் அப்பாவிடமும் பேசியிருந்தேன் .அதனால் நீயே…”

” ஏன் என் ஆபீஸ் தெரியாதா? இல்லை போன் நம்பர் தெரியாதா?” 

“உன் வீட்டிற்கும் வீட்டு பெரியவர்களுக்கும் முதலில் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன்”

” அதெல்லாம் கிடையாது. என்னை நேரடியாக சந்திக்க ஈகோ…” 

ஆதித்யன் தோள்களை குலுக்கிக் கொண்டான்.”உன் வசதிப்படி நீ எடுத்துக்கொள். என் நிலைமை என் நியாயம் இதுதான். உங்கள் வீட்டில் அப்பா அம்மா என்ன சொல்கிறார்கள்?” 

“எதைப்பற்றி?” 

ஆதித்யன் குழப்பமாக அவள் புறம் திரும்பினான்.”நீ என்ன பேசுகிறாய் என்று இப்போதும் எனக்கு புரியவில்லை”

” தேவை என்று வந்து நிற்பவர் நீங்கள். விளக்கங்களை நீங்கள் தான் கொடுக்க வேண்டும்”

ஆதித்யனின் தாடைகள் இறுகுவதை உணர்ந்தவளுக்கு திருப்தியாக இருந்தது. கோபம் வருகிறதா? வரட்டுமே… உன் கோபம் என்னை என்ன செய்யும்? அலட்சியமாக தலையை நொடித்துக் கொண்டாள்.

“ஆக உனக்கு விஷயம் தெரியாது அல்லது தெரியாதது போல் இருந்து கொள்கிறாயா?”

“கொஞ்சம் காரை நிறுத்துகிறீர்களா ?”என்னவோ என்று காரை நிறுத்தியவன் அவள் கீழே இறங்க முயலவும் கையை பற்றி தடுத்தான் “எங்கே ஓடுகிறாய்?”

“முதலில் கையை விடுங்க” சட்டென கையை எடுத்துக் கொண்டான்.




” எனக்கும் அதுபோல் ஆசையெல்லாம் இல்லை” பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்து அவளை தொட்ட இடத்தை துடைத்துக் கொண்டான்.

மகிதா கொதி நிலைக்கு போனாள். ” நீங்கள் எதற்காக வந்திருந்தாலும் அதனை நிறைவேற்ற போவதில்லை நான் “உயர்ந்த குரலில் அறிவித்தாள்.

” இது நான் எதிர்பார்த்ததுதான் .பாசமோ பரிவோ இல்லாவிட்டாலும் கூட மனிதாபிமானம் என்ற ஒன்று உனக்கோ உன் வீட்டினருக்கோ இருக்குமென்று நினைத்தேன். என் நினைவு தவறென்று எல்லோருமாக காட்டுகிறீர்கள்”

” என் குடும்பத்தை பற்றி பேச வேண்டாம்” சீறினாள்

” இரண்டு நாட்களாக உன் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு விஷயத்தை சொல்லி இருக்கிறேன்.நீயோ ஒன்றும் தெரியாது என்கிறாய். இந்த லட்சணத்தில் நான் யாரை பேச?”

” யாரையும் பேசும் தகுதி உங்களுக்கு கிடையாது” சொன்னவள் எக்கி காரில் சொருகி இருந்த கீயை எடுத்து ரிமோட்டில் கார் கதவை திறந்து கொண்டு வெளியே இறங்கலானாள்.

“உலகை விட்டு விடுபடத் துடிக்கும் ஒரு உயிருக்கான பரிதவிப்பு கூட உன்னிடம் இல்லை என்றால் சீ… சீ என்ன சொல்” ஆதித்யனின் குரல் மிகுந்த வெறுப்புடன் ஒலிக்க திக்கென்ற மனதுடன் திரும்பி அவனை பார்த்தாள்.

 “யாருக்கு ?என்ன?” அவள் குரல் நடுங்கியது.

‘பாட்டி உடம்பு சரியில்லாமல் படுக்கையில் இருக்கிறார்கள்” மகிதாவிற்கு அதிர்ச்சி. பாட்டி ஆதித்யனின் தந்தை சத்யேந்திரனின் அம்மா.செருக்கான நடையும் சீறும் பேச்சுக்களுமாக அந்த வீட்டையே கிடுகிடுக்க செய்து கொண்டிருந்தவர் .அவர் படுக்கையில் விழுந்து விட்டாரா?

“பாட்டி கடைசி காலத்தில் உன்னை பார்க்க விரும்புகிறார்கள்”

” கடைசி காலமா? ஏன் இப்படி சொல்கிறீர்கள்?”

” டாக்டர் பாட்டிக்கு நாள் குறித்து விட்டார்.அதிகபட்சம் ஒரு மாதம். அதற்குள் பாட்டி  விரும்பியதை செய்து கொடுங்கள் என்று சொல்லிவிட்டார்”

 மகிதா பெருமூச்சுடன் பின்னால் சரிந்தாள். ஆதித்யன் சொன்ன தகவல்களை கடினப்பட்டு தன் மனதிற்குள் வாங்கினாள்.

“எனக்கு பாட்டியை பார்க்க வேண்டும்” குரல் தழுதழுக்க கூறினாள்.

“அதற்காகத்தான் மூன்று நாட்களாக உன் தெருப்பக்கம் காவடி எடுத்துக்கொண்டு திரிகிறேன்”

 ஆதித்யனின் பேச்சில் கோபம் வர அடக்கிக் கொண்டு” போனில் ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே? காவடி தூக்க வேண்டிய கட்டாயம் என்ன?”என்றாள்

” உன் போன் நம்பர் என்னிடம் இல்லை” விட்டேத்தியாய் பதில் சொன்னான் அவன்.




தொண்டையில் தைத்த முள்ளை சிரமப்பட்டு விழுங்கி விட்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள்.” நான் வருகிறேன்.போகலாம் “

ஆதித்யன் காரை எடுத்தான்.”உன் வீட்டிலேயே இறக்கி விட்டு விடுகிறேன். எல்லோரிடமும் சொல்லிவிட்டு அழைத்துப் போகிறேன்.பிறகு இதனை ஒரு பிரச்சனையாக கொண்டு வருவார்கள்” 

“அப்படி பிரச்சனை செய்யக்கூடிய ஆட்கள் இல்லை என் வீட்டினர் “பதில் வாதாடலுக்காக சொன்ன போதும் மகிதாவின் குரல் கீழிறங்கி இருந்தது.

“சரிதான்  ஒரு உயிரின் கடைசி நேர ஜீவபோராட்டத்தை உன்னிடம் சொல்லிவிட்டார்கள் தானே?” நக்கல் செய்தான்.

 முதல் நாள் பேச வந்த அப்பாவை சுகந்தி பேச்சை திசை மாற்றி பேச விடாமல் செய்தது நினைவிற்கு வந்தது மகிதாவிற்கு. “அப்பா நேற்று இரவு சொல்லத்தான் ஆரம்பித்தார்… ஆனால் …”மேலே தன் குடும்ப நிலைமையை சொல்ல முடியாமல் நிறுத்திக் கொண்டாள் .

சிறிது நேரம் அவள் தொடர்ந்து பேசுவாள் என காத்திருந்தவன் மௌனமானவளை திரும்பிப் பார்த்து உதட்டை பிதுக்கினான். “பாவம் நாலு வார்த்தை சொல்லும் தெம்பு கூட அவருக்கு இல்லை போலும்”

 அப்பாவின் மீது விழுந்த பழியை ஏற்றுக்கொள்ள முடியாமல் “இங்கே பாருங்க அப்பாவை பற்றி உங்களுக்கு …”வேகமாக ஆரம்பித்தவள் குரல் கரகரக்க பேச்சை நிறுத்திக் கொண்டு வெளிப்புறம் திரும்பி கொண்டாள்.

அதன் பிறகு ஆதித்யனும் எதுவும் பேசவில்லை.காரை அவர்கள் வீட்டு முன்பு நிறுத்தியவன் “ஸ்கூட்டி அங்கே இருக்கிறதே?” என்றான்.

” பயமில்லை நாளை எடுத்துக் கொள்வேன்” என்று விட்டு படி ஏறியவள் தயங்கினாள்.

 இவனை உள்ளே கூப்பிட வேண்டுமா? அதற்கு அவசியம் இல்லை என்பது போல் ஆதித்யனே காரில் இருந்து இறங்கி அவளை முந்தி படிகளில் ஏறி காலிங் பெல்லை அழுத்தினான்.

கதவைத் திறந்த சுகந்தி ஆதித்யனை பார்த்ததும் “வாங்க ,என்ன விஷயம் ?”என்றாள்.

” உள்ளே போய் பேசுவோமா ?” 

“மகிதா சொன்னதை கேட்க மாட்டாள்தான்.திமிரும்,அகம்பாவமும் அதிகம்தான். அதற்காக நீங்கள் டைவர்ஸ் அது இதுன்னு….”சுகந்தி நீட்டி முழக்கிக் கொண்டிருக்க, ஆதித்யனின் பின்னால் மறைக்கப்பட்டிருந்த மகிதா வேகமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டாள்.

 அவளை கண்டதும் சப்பென வாயை மூடிக்கொண்ட சுகந்தி அவர்கள் உள்ளே வருவதற்கு வழி விட்டாள்.ஆதித்யன் சோபாவில் அமர்ந்து தோரணையாய் கால் மேல் கால் போட்டுக்கொள்ள, சுகந்தியின் முகம் கடுத்தது. யார் வீட்டிற்கு வந்து எப்படி உட்கார்ந்து இருக்கிறான் பார்!




 அந்த வீட்டின் மேல் தன்னுடையது என்ற உரிமையை  சிறு இணுக்கில் கூட விட்டுக் கொடுக்க சுகந்தி தயாராக இல்லை.

“என்னம்மா உங்க பாட்டி நல்லா இருக்காங்களா?” ஆதித்யன் கேட்க சுகந்தி விழித்தாள். அவளது ஒரே உறவு பாட்டிதான். திருமணத்திற்கு பிறகு அவளை கவனிக்க தன்னால் முடியாது என்று முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டாள்.

கணவன்,குழந்தைகளை தவிர வேறெந்த பாரத்தையும் ஏற்க தயாராயில்லாதளவு சுயநலம் கொண்டவள் சுகந்தி.

“பாட்டி நல்லா இருக்காங்களே”

“நீ எப்போது அவர்களை போய் பார்த்தாய்?” ஆதித்யன் கூர்மையாக சுகந்தியை பார்த்தான்.

” நேற்று கூட பார்த்தேனே…”

” அப்படியா? போன வாரம் நான் பாட்டியை ஹாஸ்பிடலில் பார்த்தேன். அவர்கள் இல்லத்தில் இருந்து கூட்டி வந்திருந்தனர்”  சட்டென முகம் மாற உள்ளே போய்விட்டாள் சுகந்தி.

” இப்போ இவருக்கு என்ன வேணுமாம்”அடுப்படிக்குள் நின்றிருந்த மகிதாவிடம் வெடுவெடுத்தாள்.

“அவர் பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம்”

“அதற்கு நாம் என்ன செய்ய வேண்டுமாம்?”

” என்னை கூட்டிப் போக வந்திருக்கிறார் “

“என்ன ?”கீச்சிட்டது சுதந்தியின் குரல். இதனை அவள் எதிர்பார்க்கவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாகவே பிரிந்திருக்கும் கணவன் மனைவி. இனி இவர்களது அடுத்த எட்டு விவாகரத்துதான். இப்படித்தான் அவள் மனதில் எண்ணம். இவர்களது விவாகரத்தின் பிறகு மகிதாவை அவள் தாய் தந்தையருக்கு துணையாக்கிவிட்டு தான் கணவனும் குழந்தையுமாக தனியானதொரு வாழ்வு வாழ திட்டமிட்டிருந்தாள்

 இப்போதோ…

 அலறிய அண்ணன் மனைவியை புதிராய் பார்த்தால் மகிதா. “எதற்கு இவ்வளவு அதிர்ச்சி சுகந்தி ?”

“நீ ஒத்துக் கொண்டாயா?”

” அவர் பாட்டிக்காக அழைக்கிறார் “

” இருக்கட்டும் அதற்காக தன்மானம் என்ற ஒன்று உனக்கு கிடையாதா?”

 மகிதா மனம் சோர்ந்து போனாள். இந்த நேரத்தில் இவள் இதனை நினைவுபடுத்தத்தான் வேண்டுமா?

 வெளியே சாவித்திரி ஆதித்யனை பரபரப்புடன் வரவேற்கும் சத்தம் கேட்டது.” வாங்க தம்பி ,எப்ப வந்தீங்க? ஏதாவது சாப்டீங்களா? இருங்க காபி கொண்டு வருகிறேன்”

” இருக்கட்டும் .நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? எங்கே போய்விட்டு வருகிறீர்கள்?” களைத்து நின்றிருந்த சாவித்திரியின் தோற்றத்தை பார்த்தபடி கேட்டான்.

” நான் வேலைக்கு போய்விட்டு வருகிறேன் தம்பி. இருங்க காபி எடுத்துட்டு வரேன்”




” மகிதாவிடம் உட்கார்ந்து பேசக் கூட எனக்கு நேரமில்லை தம்பி. மன்னிச்சுக்கோங்க” என்ற சுப்ரமணியத்தை தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.

” ஒரு அளவோடு வேலையை பார்க்கலாமே?”  யோசனை சொல்லிவிட்டு

வாசல் பக்கம் திரும்பியவனின் கண்கள் கனன்றன.

 வாசலில்  நின்றிருந்த ராஜேந்திரனின் கண்களும் ஜ்வாலையாய் எரிந்து கொண்டிருந்தன. 




 

What’s your Reaction?
+1
67
+1
24
+1
7
+1
5
+1
3
+1
2
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!