Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-3

3

என்னை பற்றிய விஷயம்தான். ஆனால் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏன் என்னுடைய போன் நம்பர் கூட தெரியுமே? ஒருவேளை அவன் போனில் இருந்து நம்பரையே டெலிட் செய்து விட்டானோ ?இருக்கட்டும் அவனுக்கு ஒரு தேவை…அவனே தேடி வரட்டும்,நினைத்தபடி காலை வாசல் தெளித்து கோலமிடும் போதே விஜயா வந்து விட்டாள்.

” என்ன விஷயமாம் மகிதா?”

” எந்த விஷயம்?”

” அதுதான் நேற்று உன் புகுந்த வீட்டிலிருந்து வந்திருந்தார்களே… அந்த விஷயம் “அவளை ஒரு மாதிரி பார்த்தாள்.

” உன் வீட்டில் யாரும் சொல்லவில்லையா?”

 இல்லை தலையசைத்து விட்டு கோலத்தை தொடர்ந்தாள் மகிதா. அழுத்தக்காரி…இனி இவளிடம் பேசி பயனில்லை. விஜயா வீட்டிற்குள் போய்விட்டாள்.

நான்கு வருடங்களாக மாப்பிள்ளை பார்த்தும் விஜயாவிற்கு இன்னமும் இடம் அமையவில்லை.தன் வயதொத்த தோழி திருமணம் முடிந்து மீண்டும் பிறந்த வீட்டிற்கு வந்தது ஒருவகையில் இவளுக்கு திருப்தியோ? என்ற சந்தேகம் மகிதாவிற்கு.என் விஷயம் எதுவும் உனக்கு கிடைக்காது தனக்குள் சொல்லிக் கொண்டாள்.




அன்று ஆஃபீஸிற்குள் நுழையும்போதே அவளை எதிர்பார்த்தது போல் வாசலில் நின்றிருந்தான் ரவீந்தர்.”தலைவலி சரியாகி விட்டதா?” அக்கறையாக கேட்டான்.கண்டுகொள்ளாமல் உள்ளே நடந்தாள் மகிதா.

“மேடத்திற்கு பேசுவதற்கு கூட பணம் கொடுக்க வேண்டுமோ?” குரலில் எள்ளல்.

” என்னுடைய வேலைக்கு சம்பளம் கொடுத்தால் போதும். மற்றபடி இரண்டு எட்டு தள்ளி நின்று கொள்வது நல்லது” எச்சரிக்கை போல் சொன்னாள்.

” அட இன்னமும் அந்த பழைய திமிர்! ஆனால் இன்னமுமா?”வெகுவாக ஆச்சரியப்பட்டான்.

” இந்த திமிர் நான் சாகும் வரையில் என்னுடன் இருக்கும்.அத்தோடு நீங்கள் வழக்கமாக சொல்வீர்களே ராட்சசத்தனம்.அதுவும் என் உடன்பிறந்த்து. இவைகளெல்லாம் இல்லாமல் மகிதா இல்லை”அழுத்தமாக சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்தாள்.

ரவீந்தர் அவளை திமிர் பிடித்த ராட்சசி என்று சொல்வதை கேள்விப்பட்டிருந்தாள்.

“அந்த ராட்சசத்தனம் அங்கே செல்லுபடியாகவில்லையே?” 

மகிதாவின் விழிகள் ஸ்கிரீனை வெறித்தன.உண்மைதான்.அவளது திமிரும் ஆளுமையும் அவள் புகுந்த வீட்டில் செல்லுபடியாகவில்லை. செல்லாக்காசாக திருப்பி அனுப்பப்பட்டு விட்டாள். சாதாரணமாக அவளது அதிரடி குணத்திற்கு அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால்… ஏன் அதனை செய்யாமல் இருக்கிறாள்? அவளுக்கே தெரியவில்லை.

“நேற்று மார்க்கெட்டில் சங்கீதா அக்காவை பார்த்தேன்…” மகிதா சொல்ல ரவீந்திரன் முகம் இருண்டது.வேக நடையுடன் தனது இடத்திற்கு போய் அமர்ந்து கொண்டான்.

கோழை…பொண்டாட்டியை எதிர் கொள்ள முடியாதவனுக்கு அடுத்த பெண்ணை சீண்டும் சிறு இன்பம் எதற்கு?

தனக்கு திருமணமான உடனேயே சங்கீதாவை மணம் முடித்துக் கொண்ட ரவீந்தரை மகிதா வரவேற்கவே செய்தாள்.ஆனால் முந்தைய மறுத்தலுக்கு இப்போது வார்த்தைகளால் பழி வாங்கிக் கொண்டிருப்பவனை இயலாதவன்…கோழை என்ற வட்டத்தின் கீழேதான் வைத்திருந்தாள்.




வேலையில் ஆழ்ந்திருந்த போது அவளை கடந்து சென்ற சிறு சலசலப்பை உணர்ந்தாலும் கம்ப்யூட்டர் திரையில் இருந்து கண்ணை நகர்த்தவில்லை. ஐந்து வினாடிகள் கழித்து அந்த வாசனையை உணர்ந்தாள். இது… இந்த பெர்ஃபியூம்… விழிகளை உயர்த்தி பார்த்தபோது எதிரே யாருமில்லை .

ஏதோ பிரமை !மீண்டும் கணக்குகளுக்குள் நுழைந்த போது சற்குணம் அழைத்தார். “உள்ளே வாம்மா”

 பாதியில் நின்ற கணக்கில் கவனத்தை வைத்தபடி “முக்கியமான இடத்தில் இருக்கிறேன் சார். டென் மினிட்ஸில் வருகிறேன்” 

“உடனே வா” என்றேன்.

 எரிச்சலுடன் எழுந்தாள். இப்படி பாதியில் தொல்லை செய்தால் பிறகு கணக்கீடுகளில் தப்பு வராமல் என்ன செய்யும்? சத்தமாகவே பேசியபடி அவர் அறைக் கதவை திறந்தாள்.

“இன்னமும் இந்த தப்பு செய்யும் பழக்கம் போகவில்லையா?” கேட்டபடி உள்ளே அமர்ந்திருந்தவன் ஆதித்யன்.

ஒரு மாதிரி திக்கித்து நின்றவள் பிறகு அவன் கேட்ட கேள்வியை உணர்ந்து “யார் தப்பு செய்தது ?”எகிறினாள்.

” சந்தேகமே இல்லாமல் நீதான்”

” ஓ நீங்கள் எல்லோரும் சத்திய சந்தர் வம்சமோ?”

“நிச்சயமாக” அலட்டிக் கொள்ளாமல் அவன் பதில் சொல்ல,”சார் இவரை எதற்கு இங்கே உட்கார வைத்திருக்கிறீர்கள்?” சற்குணத்திடம் காய்ந்தாள்.

” என்ன சார் நான் வெளியே போக வேண்டுமா?”




சமீபத்தில் புதிய கிளை ஒன்றை தொடங்கியிருப்பதாக கேள்வி.மிக வேகமாக தொழிலில் முன்னேறி வருபவர்கள் இவன் இவன் தந்தையும்.முன்பு கை விட்டுப் போன இவர்கள் கம்பெனி ஆடிட்டிங்கை மீண்டும் கைப்பற்ற முடிந்தால்…!

இதோ அவரது நண்பரின் மகளால் இந்த கம்பெனி வருமானத்தை இழந்துவிட்டார் .இப்போது அவனை வெளியே அனுப்பு என்று வேறு பேசுகிறாள். சற்குணம் லேசாக டேபிளில் தட்டினார்.” ப்ளீஸ் உங்க இரண்டு பேருடைய சண்டையை ஆபீஸிற்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள்” ஆதித்யனுக்கு வார்த்தைகளில் இறைஞ்சைலயும் மகிதாவிற்கு கண்களில் கடுப்பையும் கொடுத்தார்.

மகிதா முடியாது என்று மறுக்க நினைக்கும் போதே ஆதித்யன் எழுந்து விட்டான். “போகலாம் “அழைப்பு போல் இவள் பக்கம் திரும்பினான்.

 தலைநிமிர்த்தி “முடியாது “என்றாள்.ஆதித்யன்  சற்குணத்தை பார்க்க,அவர் மீண்டும் டேபிளை தட்டினார். “கிளம்பு மகிதா”

 இதழ்களை முணுமுணுத்த படி வெளியே வந்தாள். வெளியில் ஓரமாகக் கிடந்த மேஜையில் அமர்ந்திருந்த ரவீந்தர் கம்ப்யூட்டருக்குள் தன் தலையை நுழைத்துக் கொள்ள முயன்று கொண்டிருந்தான் . அவனது சீண்டல்கள் நினைவு வர ஒரு நிமிடம் நின்று அவனை நன்றாகவே பார்த்தாள் மகிதா.

 பிறகு ஆதித்யன் பின்னால் செல்ல முயன்ற போது முன் சென்று கொண்டிருந்த அவன் திரும்பி ரவீந்தரை நோக்கி போனான். ஐயோ! இவன் இப்போது எதற்கு அங்கே போகிறான்? ஆள்காட்டி விரலை பற்களால் கடித்த படி நின்றாள்.

“ரவீந்தர் எப்படி இருக்கிறீர்கள்?” குலுக்க நீண்ட ஆதித்யாவின் கையை அவஸ்தை சிரிப்புடன் பற்றினான் ரவிந்தர்.

‘ ஹவ் ஆர் யூ சார் ?உங்க ஸ்டாப்ப கொஞ்ச நேரம் வெளியில் கூட்டிட்டு போறேன்” அறிவிப்பாய் சொன்னான் .

“அதுதான் அப்பாவிடம் கேட்டிருப்பீர்களே சார் கூட்டிப் போங்க” இரண்டு கைகளையும் வைத்துக்கொள் என்பது போல் அசைத்தான்.

 அது… என்பது போன்ற பாவனையுடன் திரும்பி வந்த ஆதித்யா “வா” என்று மகிதாவிற்கும் ஒற்றை விரலாட்ட பொங்கிய கோபத்தில் பற்களை நறநறத்தபடி அவன் பின்னால் போனாள். ஆனாலும் ஊதி வெடித்த பலூனாய் சிதைந்து கிடந்த ரவீந்தரின் முகபாவத்தில் பரம திருப்தி அவளுக்கு.




 

What’s your Reaction?
+1
68
+1
31
+1
4
+1
4
+1
2
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!