gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 47 பாபநாசம் விமலை

அம்மனின் சக்தி பீட வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் உலகம்மை சமேத பாபநாசநாதர் கோயில் விமலை பீடமாகப் போற்றப்படுகிறது.

தல வரலாறு

கைலாயத்தில் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்கிறது. அப்போது தேவர்கள், முனிவர்கள் அனைவரும் வடக்குப் பக்கம் குவிந்ததால், அப்பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. இதை உணர்ந்த சிவபெருமான், பூமியை சமன்படுத்தும் நோக்கில், அகத்திய முனிவரை பொதிகை மலைக்கு அனுப்பினார். மேலும், அவருக்கு சித்திரை மாதப் பிறப்பு தினத்தில் தனது திருமணக் கோலத்தை சிவபெருமான் காட்டியருளினார்.

இந்தக் கோயிலில் கருவறைக்குப் பின்புறம் பிரகாரத்தில் சிவபெருமான் கல்யாணசுந்தரராக, உலகநாயகி அம்பாளுடன் ரிஷபத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். அருகிலேயே அகத்திய முனிவரும் அவரது மனைவி லோபாமுத்திரையும் உள்ளனர்.




பாபநாச நாதர்

அசுர குரு சுக்கிராச்சாரியாரின் மகன் துவஷ்டாவை, இந்திரன் தனது குருவாக ஏற்றான். அசுரர்களின் நன்மை கருதி, அவர்களுக்காக, துவஷ்டா யாகம் ஒன்றை நடத்த எண்ணினார். அதற்கு உண்டான ஏற்பாடுகளைச் செய்து, யாகத்தை நடத்தி முடித்தார். தகவல் அறிந்த இந்திரன், குருநாதர் என்றும் பாராமல் அவரைக் கொன்றுவிட்டான்.

இதன் காரணமாக, இந்திரனை பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷத்தில் இருந்து விமோசனம் பெற, இந்திரன் பூலோகத்தில் பல தலங்களுக்கும் சென்று சிவதரிசனம் செய்தான். பாபநாசம் தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டால், தோஷம் நீங்கும் எனறு குரு பகவான் ஆலோசனை வழங்கினார். அதன்படி இந்திரன் இத்தலத்தின் எல்லைப் பகுதிக்கு வரும்போதே தோஷம் நீங்கப்பெற்றான். இந்திரனின் தோஷத்தை நீக்கிய சிவபெருமான் என்பதால், இத்தல ஈசன் ‘பாபநாசநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், இத்தலத்துக்கு ‘இந்திரகீழ ஷேத்திரம்’ என்ற பெயரும் கிட்டியது.




இத்தல லிங்கம் ‘முக்கிளா லிங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. கருவறையில் ருத்திராட்ச வடிவிலும், பிரகாரத்தில் முக்கிளா மரத்தின் கீழும் பாபநாசநாதர் அருள்பாலிக்கிறார். ரிக், யஜுர், சாம வேதங்கள் கிளா மரமாக மாறி ஈசனுக்கு நிழல் தந்தன. அதர்வண வேதம் ஆகாயமாக இருந்து ஈசனை வணங்கி வழிபட்டது. இதனால் ‘முக்கிளா லிங்கம்‘ என்ற பெயரால் இத்தல லிங்கம் அழைக்கப்படுகிறது.

உலகநாயகி அம்பாள் பெருமை

உலகநாயகி, உலகம்மை, விமலை என்று அழைக்கப்படும் இத்தல அம்பாள், மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். அவரது சந்நிதி முன்னர் உள்ள உரலில் பெண்கள் விரளி மஞ்சளை இட்டு அதை இடிப்பது வழக்கம். இந்த மஞ்சளே அம்பாளுக்கு அபிஷேகம் செய்யும்போது பயன்படுத்தப்படும். அபிஷேக மஞ்சள் நீரை உட்கொண்டால், திருமண வரம், புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.




கோயில் அமைப்பும் சிறப்பும்

பாபநாசநாதர் கோயிலின் ராஜ கோபுரம் ஏழு நிலைகள் கொண்டதாக அமைந்துள்ளது. கோயிலில் உள்ள அனைத்து கருவறைகளையும் உள்ளடக்கி கருங்கல்லால் ஆன சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. ஈசன் கருவறையின் வெளிச் சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்கை, நவகிரக விக்கிரகங்கள் உள்ளன.

திருவிழாக்கள்

சித்திரை பிரம்மோற்சவம், சித்திரை வருடப் பிறப்பு (அகத்தியருக்கு திருமணக் காட்சி அருளல்), தைப்பூச தினங்களில் இங்கே சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். குழந்தைகளுக்கு கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ தோஷம் இருந்தால், இத்தலத்தில் தத்து கொடுத்து வாங்கினால் நன்மைகள் நடக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!