Entertainment Serial Stories யாரோடு யாரோ

யாரோடு யாரோ-15

(15)

“வணக்கம். உள்ள வரலாமா?

குரல் கேட்டு நிமிர்ந்தார் அப்பா. சிதம்பரம் நின்றிருந்தார்.

“வாங்க, வாங்க. உள்ள வாங்க– அப்பா பரபரப்புடன் எழுந்து வரவேற்றார்.

சிதம்பரம், கடை வாசலில் செருப்பைக் கழற்றி விட்டு உள்ளே நுழைந்தார். அப்பா, அவருக்கு ஒரு சேரை இழுத்துப் போட்டு, கடைப் பையனிடம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்.

“காபி, டி. என்ன குடிக்கறீங்க?

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.

“டி குடிக்கலாம். நான் இப்போ டி குடிக்கிற நேரம்

சிதம்பரம் புன்னகையோடு தலையசைத்தார்.

கடை மிகப் பெரியது. கீழ்த்தளம் முழுவதும் டூவீலரின் ஸ்பேர் பார்ட்ஸ் சாமான்கள். இரண்டாவது தளத்தில் காருக்குத் தேவையான பொருட்கள் அனைத்தும் இருக்கிறது. அருகில் ஒரு இடம் பிடித்து அங்கு மரச் சாமான்கள் டி.வி. வாஷிங் மெஷின், ஸ்டேண்டு, பீரோக்கள்,என்று கடை. உக்கடத்தில் மெயின் இடத்தில் மிகப்பெரிய கடை. மூன்று தளங்களிலும் சேர்ந்து நாற்பது ஊழியர்கள் இருந்தார்கள்.

எல்லோரின் பார்வையிலும் யார் இவர் என்ற கேள்வி இருந்தது. டீயும், வடையும் வந்தது. எடுத்துக்குங்க என்று அப்பா அவரிடம் தட்டை நகர்த்தினார். அப்பா இயல்பாகப் பேசுவது சிதம்பரத்திற்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்குள் ஒரு குற்ற உணர்ச்சி இருந்தது. தேவையில்லாமல் தான் குறுக்கே புகுந்து அவருக்கு ஒரு சங்கடத்தைத் தந்து விட்டோமோ என்று வருந்தினார்.

“முதல்ல நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்.

“எதுக்கு?– அப்பா திகைத்தார்.





“எந்தத் தகப்பனுக்குமே தன் பெண்ணை, நல்ல குலம், கோத்திரம் பார்த்துத் தரனும்கற ஆசை இருக்கும். அது புரியாம நான் சிவசுவுக்கு வந்து பெண் கேட்டுட்டேன். அது உங்க மனசுக்கு எவ்வளவு கஷ்டம் கொடுத்திருக்கும்னு புரியுது.– உண்மையான வருத்தத்துடன் பேசினார் சிதம்பரம்.

“பரவாயில்லை விடுங்க. நடந்ததையே நினைச்சிட்டு இருந்தா வேதனைதான் மிஞ்சும்.அப்பா மென்மையாகப் பேசினார். “உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணு மருமகளா வரணும்னு ஆசை இருக்கறது சகஜம்தானே.

“ஆமாம் சார்.– ஆமோதித்தார் சிதம்பரம். “சத்யா நல்ல பொண்ணு. எல்லோர்கிட்டயும் அன்பா பழகும். அதுவும் சமூக சேவைல ரொம்ப ஆர்வமா ஈடுபடும். எங்க இல்லத்துக் குழந்தைகளுக்கு சத்யான்னா ரொம்ப இஷ்டம். நான் வேற எதையும் யோசிக்காம திடீர்னு வந்துட்டேன்.

“பரவாயில்லை விடுங்க.

“சிவசுவும் நல்ல பையன் சார்.

“அவன் உங்க சொந்தக்காரப் பையனா?

“இல்லத்து வாசல்ல, பிறந்த குழந்தையா கிடந்தான் சார். அதுல இருந்த லெட்டரை வச்சுத்தான் அவன் எங்க ரிலேஷன் பொண்ணோட குழந்தைன்னு கண்டு பிடிச்சேன். ஆனா யார் என்னன்னு சொல்லலை நான் யார்கிட்டயும். ஆணவப் படுகொலைல பாதிக்கப் பட்டவ சார். தங்களை மீறிப் போனான்னு ஒதுக்கி வச்சு, அவனையும் கொன்னுட்டாங்க. இவ குழந்தை பொறந்ததும் இங்க வந்து என் இல்லத்து வாசல்ல குழந்தையை விட்டுட்டு போய் ரயில்ல விழுந்துட்டா.

“அடப்பாவமே.

‘அவ செத்த பிறகு அழுது என்ன பிரயோஜனம்? அடுத்தடுத்து அந்தக் குடும்பத்துல எல்லோரும் இறந்துட்டாங்க. நானும் யாருக்கும் எதையும் சொல்லலை. எனக்குக் குழந்தை இல்லைன்னு இவனை நானே தத்து எடுத்துகிட்டேன்.

“அவங்க யாரும் தேடி வரலையா?

“இவ குழந்தைன்னு யாருக்கும் தெரியாது. நானும் யாரும், என்னன்னு சொல்லலை. அவளோட அப்பா, அம்மா இறந்துட்டாங்க. ஒரே அண்ணா. அவன் எங்கேயோ அமெரிக்கால செட்டில் ஆகிட்டான். சொத்துன்னு எதுவும் இல்லை. ஒரு வீடு. அதையும் வித்து எடுத்துகிட்டு போயிட்டான். அங்கேயே செட்டில்டு. சிவசுவுக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாதுன்னு இந்த உண்மையை நான் யார்கிட்டயும் சொல்லலை. உங்க கிட்ட மட்டும்தான் இப்போ சொல்றேன்.

அப்பா திகைப்போடு அமர்ந்திருந்தார்.

“அப்பா அம்மா நமக்கு நல்லது செய்வாங்கன்னு பொண்ணுங்க, யோக்கியமா இருக்கணும் சார். தகுதி இல்லாத ஒருத்தனை படிக்கற காலத்துல லவ், செய்து, ஓடிப்போய் குடும்பத்துக்குத் தீராத அவமானம் தேடித் தரணுமா? அவ படிப்பும் போச்சு. வாழ்க்கையும் போச்சு.

அப்பாவுக்கு சிவகாமியின் நினைவு வந்தது. அந்த நேரம் வீடு கொதிகலனாய் இருந்தது. அவரின் அப்பா நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதார். அம்மா ஒருவாரம் தன்னிலை மறந்து இருந்தவள் தூக்கில் தொங்கி விட்டாள். ஆனால் இந்த மாதிரி ஆணவப் படுகொலை செய்யவில்லை அவரின் அப்பா.

“போய்ட்டா. எங்கயோ நல்லா இருக்கட்டும்– என்று சொத்து கொடுத்தார். ஆனால் மீண்டும், மீண்டும் தேடி வந்து தொந்தரவு தருபவர்களை என்ன செய்வது? ஒதுக்கினால் ஒரேயடியாக ஒதுங்கி விட வேண்டியதுதானே?

அப்பாவின் முகத்தில் விஷயங்களைப் படித்தார் சிதம்பரம். எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“போனவங்க ஒரேயடியா ஒதுங்கிட வேண்டியதுதானே?. வேண்டாம்னுதானே ஓடிப் போறாங்க?– அப்பா.

“போன இடத்துல வாழ்க்கை சக்கையாப் பிழியும் போதுதான் சொந்த பந்தங்களின் நினைவு வருது.

அப்பா மௌனமாக இருந்தார். சிதம்பரம் தன் பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்தார்.

“உங்க பர்மிஷன் வேண்டி வந்திருக்கேன்.





“என்னன்னு சொல்லுங்க.

“கேன்சரால் பதிக்கப் பட்ட ஏழைக் குழந்தைகளின் சிகிச்சைக்கு என்று ஒரு அமைப்பு ஆரம்பிக்கறோம். அதாவது அந்தக் குழந்தைகளின் மருந்து, மாத்திரைகள், ரேடியேஷன் டைம்ல தங்க இடம், சாப்பாடுன்னு தரோம். டாக்டர் திருமலை அந்தக் குழந்தைகளுக்கு இலவசமா கீமோ தரார்.

“அருமை, அருமை– அப்பா மலர்ந்தார்.

“நிறையத் தெருவோர குழந்தைகள், ஏழைக் குழந்தைகள் இந்த வியாதியால பாதிக்கப் பட்டு இறந்து போறாங்க. என் கடைப் பையனோட பெண் குழந்தை ஆறு வயசு. மூளைல கேன்சர். சரியான டிரீட்மெண்ட் தர முடியாம இறந்து போயிடுத்து.– அப்பா மனப்பூர்வமாகப் பேசினார்.

“உண்மை சார். அந்த குழந்தைகளுக்கான அமைப்பு இது. சிவசு கட்டிடம் கட்டிக் கொடுத்திருக்கான். பொள்ளாச்சியில் என் பூமியை வித்து, டிரஸ்ட் ஆரம்பிச்சிருக்கேன்.

“நான் ஏதானும் டொனேஷன் தரலாமா?

“இல்லை சார். நாங்க யார்கிட்டயும் பணம் வாங்கலை. சிவசு, நான், டாக்டர் திருமலை மட்டுமே சேர்ந்து செய்யறோம்.

சிதம்பரம் மெதுவாகத், தயங்கிக் கேட்டார்.

“இதன் திறப்பு விழாவை சத்யா கையால நடத்தணும்னு விரும்பறேன். அவதான் இதற்கு முழு முதல் காரணம். இப்படி ஒரு அமைப்பு ஆரம்பிக்கணும்னு சொல்லிட்டே இருந்தா. அவ கையால இந்தத் திறப்பு விழாவை நடத்த வேணும்னு நாங்க விரும்பறோம். உங்களுக்கு விருப்பமில்லைன்னா வேண்டாம்.

“சேச்சே. அப்படி எல்லாம் இல்லை. கண்டிப்பா சத்யா வருவா. அப்பா குரலில் உறுதி இருந்தது. “நானும் வருவேன்

“ரொம்பச் சந்தோசம்.– சிதம்பரம் உற்சாகமாகப் பேசினார்.

“பத்திரிக்கைல பேர் அடிச்சிடறோம்.

“நிச்சயமா– அப்பா உறுதியாகப் பேசினார்.

சிதம்பரம் நன்றி கூறிக் கிளம்பினார். வாசல் வரை அவரைச் சென்று அனுப்பி விட்டு தன் மேஜைக்கு வந்தார் அப்பா. அவர் பார்வை கௌதமைத் தேடியது. அவன் இதுவரை அவர்கள் பேசியதை நின்று கேட்டான் என்பது வேகமாக அங்கிருந்து அவன் போவதில் தெரிந்தது.

கையில் கட்டு போட்டிருந்தது. டாக்டர் வெந்து போயிருந்த தோலை கட் பண்ணி மருந்து போட்டு கட்டியிருந்தார். அத்துடனே அவன் இரண்டு நாளாக கடைக்கு வந்தான்.

“ரெஸ்ட் எடு கௌதம்– என்ற போதும் “இல்லை மாமா. ஏஜென்சி ஆரம்பிக்கற நேரம். நான் வீட்டுல இருந்தா வேலைகள் நின்னு போயிடும் என்று வந்தான்.

யோசனையுடன் அவனையே பார்த்தபடி இருந்தார்.

அவரின் மொபைல் அடித்தது. வக்கீல்.

“கொஞ்சம் வர முடியுமா வாசுதேவன்?

“என்ன விஷயம் சார்?

“அந்த இடத்து விஷயமா பேசணும்.

“இப்பவே வரணுமா?

“ஆமாம். கொஞ்சம் முக்கியம்

“இதோ வரேன்– அப்பா எழுந்தார். கடை மேனேஜரிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்.




What’s your Reaction?
+1
9
+1
16
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!