Serial Stories மாற்றங்கள் தந்தவள் நீதானே

மாற்றங்கள் தந்தவள் நீதானே -13

அத்தியாயம் -13

அப்போது மோகனாவுக்கு வயது ஒன்பது அல்லது பத்து இருக்கும். தன் பெற்றோருடன் கானாடுகாத்தானில் இருக்கும் அரண்மனையை சுற்றிப் பார்க்கச்சென்றிருந்தாள்.  மோகனாவின் அப்பா ஒரு சிவில் என்ஜீனியர் என்பதால் அந்த அரண்மனையை புதுப்பிக்கும் வேலை ஒன்றை காண்ராக்ட் எடுத்திருந்தார். ஒரு மாதம் தங்கி கட்டிடவேலையை முடிக்க வேண்டும் என்பதற்காக குடும்பத்தோடு அந்த ஊருக்கு சென்றிருந்தனர்.

அது சினிமாவில் வருவது போல பிரமாண்டமான வீடு அதாவது அரண்மனை. பாட்டி, தாத்தா,பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா எனக் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த வீடுகளைப் பல திரைப்படங்களில் கண்டிருப்போம். அந்த வீடு தான் கானாடுகாத்தான் மாளிகை. காரைக்குடி செட்டியார்களின் கலையம்சத்துடன் கோட்டைப்போல் கட்டப்பட்ட வீடு தான் அது.




இந்த மாளிகை சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ளது. கானாடுகாத்தான் மட்டுமல்லாது அருகிலுள்ள கோட்டையூர், காரைக்குடி, செட்டிநாடு ஆகிய ஊர்களிலும் இதே போன்ற பிரம்மாண்டமான வீடுகளைப் பார்க்கலாம். செட்டிநாடு வீடுகளின் கட்டிடக் கலை உலகப் புகழ்பெற்றவை. செட்டியார்கள் தங்கள் வீட்டு விசேஷங்களையும் வீட்டிலேயே நடத்துவதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதனால் வீடே பெரிய மண்டபம்போல் இருக்கும். இந்தக் கட்டிடக் கலை குறித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்கள் ஆய்வுசெய்துள்ளனர்.

இந்த வீடுகளில் குறைந்தது முப்பது அறைகள் வரை இருக்கும். கானாடுகாத்தான் அரண்மனை போன்ற சில வீடுகளில் அதைவிட அதிகமான அறைகள் கொண்டதாக இருக்கும் என்று அப்பா கூறினார். வீடு வசீகரிக்கும் வண்ணத்தால் ஆனவையாக இருக்கும். பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற வண்ணங்களைக் கூடுதலாகப் பயன்படுத்தி வண்ணம் தீட்டியிருப்பார்கள்.

வீட்டின் முன்புறம் அனைவரையும் வரவேற்கும் வகையில் கலையம்சத்துடன் அமைந்திருக்கும். வீட்டின் நுழைவு வாசலின் இருபுறமும் விசாலானமான திண்ணை இருக்கும். அதில் கம்பீரமான மரத் தூண்கள் இருக்கும். முன் வாசல் கதவும் நிலையும் நுட்பமான மர வேலைப்பாடுகள் கொண்டவையாக இருக்கும். இந்த நிலை ஒரு பண்பாட்டு அடையாளமாகவே மாறியுள்ளது. தெய்வச் சிலைகளை நிலையின் மேல்புறத்தில் செதுக்கியிருப்பார்கள். நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் இன்றைய பர்மா, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெற்றிகரமாக வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள்.

அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தெற்காசியாவின் பல பகுதிகளிலும் இவர் வீட்டுக்குத் தேவையான மரங்களையும் பகுதிப் பொருள்களையும் தருவித்தார்கள்.

இந்த வீடுகளில் நடுவில் முற்றங்களை கொண்டு அல்லது வீட்டிற்கு நடுவில் துளசி மாடம் அமைக்கப்பட்டதாக இருக்கும்.

இந்த முற்றத்தில் ஒரு புறம் அலங்கார வளைவுகளுக்கு பின்னால் அமைக்கப்பட்டிருக்கும் பூஜா மண்டபத்தில்  சிலைகள் வைக்கப்படும். இதற்கு அடுத்தது பெண்களின் கூடாரம், அதாவது மாடியின் முகப்பிலிருந்து பெண்கள் வேடிக்கை  பார்க்குமிடம். படுக்கையறைகள் முற்றத்தின் எதிர் பக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும், ஜெநானா அல்லது அந்தப்புரம் மக்கள் புழங்குமிடத்திலிருந்து சற்று தொலைவில் அமைக்கப்படும். வாழுமிடம் அல்லது புழங்குமிடம் , விருந்தினர்களை உபசரிக்கவும், அதிகாரிகள் கூட்டங்கள் போடவும் உபயோகிக்கப்பட்டன. பல்வேறு பிரிவுகளின் மாடிகள் அனைத்துமே வளைந்த தாழ்வாரங்களும், சுழலும் படிக்கட்டுகளோடும்  இணைக்கப்பட்டன.




மோகனா ஒவ்வொன்றாக பார்த்தப்படி நடந்து வந்தவள் தன்னுடன் வந்த எவரையும் காணவில்லை என்ற பதற்றத்திற்கு ஆளானாள். மெல்ல திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வந்த வழியே படிக்கட்டில் அருகில் வந்தபோது மொத்த விளக்கொளியும் அணைந்து இருள் கவ்வியது. கண்ணுக்கு மை பூசி மறைத்தது போல் அந்த காரிருள் அவள் நெஞ்சுக் கூட்டுக்குள் பயத்தை அதிகரிக்க  மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்து மேல் படிக்கட்டின் விளிம்புக்கு வந்தாள். இந்த படிக்கெட்டில் இறங்கினால் வரவேற்பு அறை அதாவது கீழ் தளம் வந்துவிடும். என்று எண்ணிய அடுத்த நிமிடமே உடலின் நடுக்கம் மெல்ல குறைந்தது.

முதல் படியில் காலை எடுத்தவுடன் அவளுடைய மேலாடையை யாரோ பற்றியதுப்போல் தோன்றியது. மிக அருகில் யாரோ இருப்பதை உணர்ந்த அடுத்த நிமிடம் ஒரு அலறலோடு அடுத்த அடுத்த படிகளை கடக்க நினைத்தவள் தடுமாறி உருள தொடங்கினாள். ஒரு சில வினாடிகளில் பந்துக்கோலம் போல உருண்டு தரையை தொட்டிருந்தாள்.

அவள் கீழே விழுந்த அடுத்த நிமிடம் மொத்த விளக்கும் பளிச்சென்று எரிந்தது. மெல்ல கண்களை திறந்து முகத்தில் வழிந்த திரவத்தை தொட்டுப்பார்த்தவள் தன்னையுமறியாமல் அம்மா என்று கூச்சலிட முதல் தளத்தில் நிழலாய் ஒரு உருவம் தெரிந்தது. இவள் தலையை தூக்கி அந்த உருவத்தை பார்த்தாள். அது ஒரு பதினைந்து பதினாறு வயதுடைய பையன். அவனுடைய கையில் இவளுடைய மேலாடை இருந்தது. அதை எடுத்துக்கொண்டு அவன் வேகவேகமாக இவளை நோக்கி இறங்கி வந்தான். மேலாடையை கையில் ஏந்தியப்படி அவள் முகத்தை நோக்கி நெருங்கினான். யார்…யார்…நீ யார்…பேய் உரக்க கத்தியவள் தடுத்து அவளை இரண்டு கைகளாலும் தூக்க முயன்றான். கைகளால் கண்களை முடிக்கொண்டு கத்தியவள் ஒரு சில நிமிடங்களில் மயங்கியும் சரிந்தாள். கடைசியாக அவளை யாரோ பற்றி பிடிப்பது போன்ற ஒரு உணர்வு அதற்குப் பிறகும் ஒன்றும் தெரியவில்லை மீண்டும் ஒளி கண்களை கூசியது. கண் திறந்து பார்த்தவளுக்கு எதிரில் இருந்த அந்த நபரை பார்த்து குழம்பிப்போனாள். பயத்தில் வார்த்தைகள் வராமல் தட்டு தடுமாறினாள். அம்மா அப்பா என்று எதை எதையோ உளறினாள்.

“ப்ளீஸ் எங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க அவங்க கிட்டே என்னை கொண்டுட்டுப்போய் விடுறீங்களா?” ஆனால் அந்த நபர் அதற்கு கொஞ்சம் கூட அசையவில்லை




“எனக்கு அந்த வேலை கிடையாது இந்த அரண்மனையை பார்த்துக்கணும். சிறு கீறல் கூட விடாமல் கண்காணிக்கணும் அதுக்கு தான் எனக்கு சம்பளம் கொடுத்து இருக்கிறார்கள் உன்னை கூட்டிட்டு போய் விடுறத்துக்கெல்லாம் எனக்கு சம்பளம் கொடுக்கல கிளம்பு இப்படியே போனா உன்ன மாதிரி பேந்த பேந்த முழிச்சுக்கிட்டு உங்க அப்பா அம்மா தேடி கிட்டு இருப்பாங்க அவங்க கூட சேர்ந்து இந்த இடத்தை விட்டு போ அவன் குரலில் கடுமை ஏறி இருந்தது. முகத்தில் அனல் பரவியிருந்தது என்ன இவன் கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல் இப்படி நடந்து கொள்கிறானே? மனசுக்குள் வேதனையை சுமந்தபடி படிக்கட்டில் மெல்ல கீழே இறங்கினாள் பாதி தூரத்திலேயே அப்பா அம்மா இருவரும் ஓடி வந்தார்கள்.

மோகனா எங்கம்மா போன உன்னை காணுன்னு வீடு புல்லா தேடிட்டேன் படபடப்பாக பேசிய அவர்களை  வேகமாக ஓடிக் கட்டிகொண்டாள். திரும்பி மேலே  ஏறிக்கொண்டிருந்த அவனைப் பார்த்தாள். அவன் முகம் இன்னமும் அப்படியேதான் இருந்தது அப்பா கீழே இருந்து குரல் கொடுத்தார்.

“ஏம்பா காவல் காக்கிற பையன் நீதானா.. ரொம்ப நன்றிப்பா என் பொண்ணு ரொம்ப பயந்த சுபாவம் நல்லவேளை நீ இருந்ததால கொஞ்சம் தைரியமா வந்திருக்கா இல்லட்டி கத்தி ஊரையே கூட்டி இருப்பா”




What’s your Reaction?
+1
9
+1
15
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!