Serial Stories

உறவெனும் வானவில் – 8

8

 

முதல் இரவில் தன் இணையின் கேள்விகளுக்கு பெரும்பாலும் ஆம்,சரி,அப்படித்தான் என்பது போன்ற பதில்களைக் கொடுக்கவே பரஸ்பரம் விரும்புவர்.ஆனால் கணவனின் இந்த முதல் கேள்விக்கு நேர்மறை பதிலை கொடுக்க யவனாவால் முடியவில்லை.

“எங்கள் வீட்டில் சிறுகுழந்தைகள் கிடையாது.நான் பெற்றோருக்கு ஒரே பிள்ளையாதலால் அண்ணன்,அக்கா குழந்தைகள் என எந்த வழியும் இல்லாததால் சிறுகுழந்தைகளை நான் தொட்டு தூக்கியதே கிடையாது”

சக்திவேல் ஒரு “ம்” உடன் மெல்ல அங்குமிங்கும் நடந்தான்.யவனா உட்காரக் கூட இல்லாமல் நின்றபடியே இருந்தாள்.

“பிறகெப்படி நீ ரூபனை கவனித்துக் கொள்ளப் போகிறாய்?”

யவனா திடுக்கிட்டாள்.இவன் அண்ணன் குழந்தையை நான் ஏன் கவனித்துக் கொள்ள வேண்டும்?

“பரவாயில்லை.ஒரு வாரம் வரை அம்மா,நிர்மலா உனக்கு சொல்லிக் கொடுப்பார்கள்.சீக்கிரம் பயின்று கொள்”

யவனாவின் திகைப்பு கூடியது.” அ…அவுங்க…நி…நிர்மலாக்காவே பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே?”

“ஏன்?”

இதென்ன கேள்வி? யவனாவிற்கு உள்ளூர ஒரு நடுக்கம் ஓடியது.சக்திவேலின் முகம் இறுகி விட்டது.உதடுகள் கடுமையை காட்டின.கண்களில் ஒரு பிடிவாதம் வந்தமர்ந்தது.

“ஏன்னு கேட்டேன்.அவரவர் பிள்ளையை அவுங்கதான் பாத்துக்கனும்.மாதவன் அவன் பிள்ளையை பார்த்துக்குவான்.நிர்மலா அவனுக்கு உதவியாய் இருப்பாள்.என் பிள்ளையை பார்த்துக்க உதவுவதற்குத்தான் உன்னை கல்யாணமே செய்தேன்.புரியுதா?”

சக்திவேலின் வார்த்தைகளின் அர்த்தம் முழுதாக புரிய யவனாவிற்கு பத்து நிமிடங்கள் ஆனது.அதற்குள் அவன் ஏதேதோ சொல்லியபடியிருந்தான்.புகைபடலத்தினூடே மங்கலாய் தெரிந்தவனை வெறித்து பார்த்தபடி நின்றிருந்தவளின் காதுகளுக்குள் அவன் வெடித்த முதல் அணுகுண்டின் சத்தமே திரும்ப திரும்ப…




“ரூபன் உங்கள் மகனா?” ஒட்டி உறைந்து கிடந்த உதடுகளை சிரமபட்டு பிரித்து கேட்டாள்.

“ம்.தம்பியின் மகனை விட சிறியவனாய் இருக்கிறானேன்னு பார்க்கிறாயா?மாதுவும்,நிர்மலாவும் கல்யாணம் முடித்த மறுவருடமே குழந்தை பெற்றுக் கொண்டார்கள்.எனக்கும் காவ்யாவிற்கும் ஐந்து வருடம் கழித்துத்தான்… போன வருடம்தான் ரூபன் பிறந்தான்”

அறையப்படும் ஆணி முதல் அடியில் துளையிட்டு உள்ளே நுழையும் போது,கடினமாக இருக்கும்.அடுத்தடுத்து இறக்கப்படும் அடிகளில் பாதை சற்று நெகிழ உற்சாகமாக டம் டம்மென உள்ளிறங்குமே…அப்படி யவனாவின் உள்ளத்துள் சக்திவேலின் ஒவ்வொரு பேச்சும் தோண்டி துளைத்து நுழைந்தது. இதயம் வடித்த ரத்தம் வெளித் தெரியவில்லை.

“காவ்யா?”

“என் மனைவி” சக்திவேலின் முகம் வெற்றுச்சுவரை வெறித்திருந்தது.

“அவள் பெயரை யாரும் சொல்லவில்லையா?”

என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் தலையாட்டி வைத்தாள்.

“மாது?”

“என் தம்பி மாதவனை அப்படித்தான் அழைப்பது.நிர்மலா நிம்மி.சுகந்தி சுகி.தாரா தரு.நான் சக்தி.எல்லோரும் எங்க அப்பா அம்மாவிற்கு செல்லம்தான்” மென்மையாய் ஒலித்தது அவன் குரல்.

“நீ யவி தானே?அப்படித்தான் அந்த சித்தார்த் கூப்பிட்டார்!”

இப்போது அவனது குரலின் இறுக்கத்தை அவள் உணரவில்லை.

படுக்கையில் அமர்ந்தவன்  தனக்கு அருகாமையை தட்டிக் காண்பித்தான்.

“நிறைய பேசி விட்டோம்.இங்கே வந்து உட்கார்”

அவனது அர்த்தம் பொதிந்த கணவன் அழைப்பு யவனாவினுள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

“உங்கள் ம…கா..காவ்யாவிற்கு என்ன ஆயிற்று?”

“ப்ச்.ஆயுள் குறைவு. தலைவிதி.வேறென்ன சொல்ல?வா…” இப்போது அவன் கரம் அவளுக்காக நீண்டது.

“மாதவன் உங்கள் தம்பியா?” கேட்கும் போதே லேசான முன் வழுக்கையும்,முன் தள்ளிய தொந்தியுமாக இருக்கும் மாதவனும், உயரத்திற்கேற்ற பருமனும், அடர்த்தியான கரு கரு தலைமுடியுமாக இருக்கும் சக்திவேலும் மனதிற்குள் வந்து போயினர்.




“ஆமாம்.எனக்கு ஐந்து வருடங்கள் பின் பிறந்தவன்.ஆனால் பார்ப்பவர்கள் என்னை தம்பி,அவனை அண்ணன் என்றே நினைப்பார்கள்.அவன் சோம்பலில் கொஞ்சம் உடம்பை விட்டு விட்டான்”

சக்திவேல் எழுந்து வந்து அவள் கை பிடித்து தன் அருகே அமர வைத்தான்.”குடும்ப விபரங்களெல்லாம் பேசி விட்டோம்.இனி நம் விபரம் மட்டும் பேசலாமே” மெல்ல அவள் தோளை சுற்றி  கை போட்டு தன் பக்கம் இழுத்தான்.

“அ…அவர்கள் எ…எப்படி இறந்தார்கள்?”

“யார் ?” சக்திவேலின் குரலில் அதீத எரிச்சல் இருந்தது.

“காவ்யா”

சட்டென அவள் தோளைத் தள்ளினான்.”வேறு பேச்சு வேண்டாமென்றேன்”

யவனா சாதாரண மனுசிதான்.எத்தனை அதிர்ச்சியைத்தான் அவளால் தாங்க முடியும்?சக்திவேலின் ஒரு தள்ளலில் உடல் ,மனம் எதிலும் பலமில்லாமல் இயந்திரம் இழுத்து சுத்தி துவைத்து பிழிந்த துணியாக படுக்கையில் கிடந்தாள்.தனக்கு என்ன நடந்தது என்பதை கூட அறிந்து கொள்ளாமல் மலங்க மலங்க விழித்துக் கிடந்தவளை சிறு குற்றவுணர்வுடன் பார்த்தவன் கை கொடுத்து எழுப்பி மென்மையாக அணைத்துக் கொண்டான்.

“சாரிம்மா.ஏதோ கோபம்…”

சக்திவேலின் கைகள் அவள் உடல் முழுவதும் அலைந்தன.உதடுகள் கழுத்தடியில் புதைந்து தொடர்ந்தன.யவனாவிடம் எந்த உணர்வுமில்லை.ப்ரோகிராம் செய்து நிற்க வைத்த ரோபோட்டாய் இருந்தாள்.

“எந்த வருடம் காலேஜ் படிப்பை முடித்தீர்கள்?” தன்னிச்சையாய் அசைந்தன அவள் உதடுகள்.

சக்திவேல் சொன்ன பதில் அவனது வயது முப்பத்தியெட்டு என்றது.அதாவது அவளை விட பதினெட்டு வயது மூத்தவன்.அப்பா சித்தியை விட இருபது வயது மூத்தவர் என்பது அவள் மனதில் அந்நேரம் மின்னி மறைந்தது.

படுக்கையில் சரித்து தன் மேல் படர்ந்தவனை விலக்க முயற்சித்தாள்.இவ்வளவு நெருக்கம் அவளுள் கொஞ்சம் சுய உணர்வை கொடுத்திருந்தது.

“விடுங்க ” மென்மையாக போராடியவளை வன்மையாக வலிந்து இழுத்தான்.

“ஏன் ?”

“எ…எனக்கு வே…வேண்டாம்”

“ஏன் ?” மீண்டும் அதே கேள்வி.இம்முறை கொஞ்சம் மூர்க்கமாக.அவனது உதடுகள் அவள் காது மடலை கவ்வி இழுத்து பிரிந்தன.மறுப்பை பற்றிய கவலை அவன் செயல்களில் இல்லை.

“எ…எனக்கு கொ…கொஞ்சம் டைம் வேண்டும் “

” எதற்கு?” நக்கலாக கேட்ட அவன் குரலுக்கு திணறினாள்.

“இ…இதற்கு”

“இந்த திக்குவாய் எப்போது போகும்?” சாதாரணமாக கேட்டு விட்டு மீண்டும் தன் காரியத்தை தொடர்ந்தான்.

“ப்ளீஸ் விடுங்க ” குரலில் அழுத்தம் சேர்த்து உயர்த்தினாள்.

தலையுயர்த்தி அவள் கண்களுக்குள் கூர்ந்தவன்”முதல் போன் பேச்சிலேயே தைரியமாக முத்தம் கொடுத்தவள்,முதல் இரவில் கணவன் தொட்டால்  டைம் கேட்பாயாக்கும்?” நாக்கு சாட்டையை வீசினான்.

யவனா சுருண்டு வீழ்ந்தாள்.என்ன நடக்கிறது அவள் வாழ்வில்? அவளே அறியாத ஏதேதோ சம்பவங்கள்.அறியாமை இருளுக்குள் உருண்டு கொண்டிருக்கும் பேதையா அவள்?

தனையே மறந்து குலைந்து கிடந்த யவனாவை சுலபமாக தன் இசைவிற்கு இழுத்துக் கொண்டான் சக்திவேல்.கணவனின் உரிமையை வெற்றிகரமாக அவன் நிலைநாட்டி விலகிய போது, யவனா தன்னுணர்வு மரத்திருந்தாள்.




What’s your Reaction?
+1
21
+1
12
+1
0
+1
1
+1
3
+1
4
+1
20
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!