Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்- 10

10

அறைக் கதவை திறந்த உடனேயே எதிரே சுவரில் மாட்டி வைத்திருந்த ஹரிஹரனின் தாய் தந்தையின் புகைப்படம், ஜீவிதாவின் மனதில் உணர்வுகளை பொங்க வைத்தது. தம்பதிகளாய் தோள் உரசி நின்று எடுத்துக்கொண்ட போட்டோ. இருவருக்கும் நடுத்தர வயது இருக்கும்.இன்னமும் நிறைய வருடங்கள் வாழப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பு இருவரின் கண்களில் தெரிந்தாற் போலிருந்தது.

ஈசன் கட்டில் மேல் ஏறி ஜங் ஜங் என குதித்துக் கொண்டிருக்க ஜீவிதா போட்டோ அருகே போய் நின்று இருவரையும் பார்த்தாள். அவளின் கண்கள் லேசாக கலங்கியது. பாவம் பாதி வாழ்க்கையில் உலகை விட்டு போகக்கூடிய துர்பாக்கியம் இவர்களுக்கு. மெல்ல போட்டோவை தொட்டுப் பார்க்க அதில் சேர்ந்து இருந்த தூசு தெரிந்தது.

சுற்றும் முற்றும் தேடிப் பார்த்துவிட்டு கிடைக்காமல் அறையை விட்டு வெளியே வந்து கீழே பார்த்து அழைத்தாள் “மல்லிகா பழைய துணி ஒன்று கொண்டு வாருங்கள்”

இரண்டே நிமிடங்களில் கையில் ஒரு துணியுடன் வேகமாக மேலே ஏறி வந்த மல்லிகாவிற்கு மூச்சு வாங்கியது .”இங்கே என்ன செய்கிறீர்கள்?”அவளது குரல் கொஞ்சம் கத்தலாக ஒலித்தது போல் தோன்றியது.

“சும்மாதான் இந்த ரூமை பார்க்கலாம் என்று வந்தேன். அத்தை மாமாவின் போட்டோ தூசாக இருந்தது” என்று விட்டு அவள் கொண்டு வந்த துணியை வாங்கி துடைக்க துவங்கினாள்.

” இந்த ரூமிலெல்லாம் எதையும் தொடக்கூடாது” உத்தரவு போல் ஒலித்த மல்லிகாவின் குரலில் திரும்பி அவளை ஒருவிதமாக பார்த்தாள்.

“ஏன்?”

“அது சாருக்கு பிடிக்காது”

“உங்க சார் தான் ரூம் சாவி கொடுத்து விட்டுப் போனார்”

மல்லிகாவின் முகம் கொஞ்சம் மாறியது. உடனே சமாளித்துக் கொண்டு “ம்…இந்த ரூம் சரி. அந்த ரூம் பக்கம் போகாதீர்கள்” 

“ஏன் அந்த ரூமில் என்ன?”

“இந்த ரூமில் ஏதாவது பண்ணினீர்களானால் ஹரி சார் பொறுத்துக் கொள்வார்.அந்த ரூம் பக்கம் போனாலே கோபப்படுவார்”

“ஏனோ?”

“ஏனென்றால் அந்த ரூம் அவருடைய மனைவியின் ரூம்.அதில் வேறு ஒருவர் உள்ளே போவதை விரும்ப மாட்டார்” கொஞ்சம் இகழ்வாக அவள் சிரித்துப் போனது போல் ஜீவிதாவிற்கு தோன்றியது.

அப்படியே கட்டிலில் அமர்ந்து விட்டாள். பக்கத்து அறை அவள் அக்கா ஸ்வேதாவினுடையது. அதாவது அவர்கள் கணவன் மனைவியாக உபயோகித்துக் கொண்டிருந்த அறை.அங்கே ஏன் யாரையும் அனுமதிக்க மறுக்கிறான்?

 எண்ணங்களின் முடிவில் வேகமாக எழுந்து ஈசனை தூக்கிக்கொண்டு அடுத்த அறைக்கு விரைந்தாள். கையில் இருந்த சாவிக்கொத்தில் இருந்த நான்கு சாவிகளில்  எல்லாவற்றையும் மாற்றி மாற்றி போட்டுப் பார்த்தும் அந்த அறை திறக்கவில்லை.அதாவது அந்த அறைக்குரிய சாவியை ஹரிஹரன் கொடுத்துவிட்டு போகவில்லை.ஏன்? 





 

குழப்பத்தோடு கீழிறங்கி வந்து அமர்ந்து கொண்டவளை அடுப்படிக்குள் இருந்து எட்டிப் பார்த்தாள் மல்லிகா “தொண்டை வறண்டு போச்சா? குடிக்க ஏதாவது கொண்டு வரவா மேடம்?”

அவளது அக்கறையில் கிண்டல்  இருக்க “சமையல் வேலையை கவனியுங்கள்” எரிந்து விழுந்தாள்.

மதிய உணவாக மல்லிகா கொண்டு வந்து வைத்த சாப்பாட்டை “என்ன சாப்பாடு இது?” முகம் சுளித்தாள்.

“சாம்பார் தாங்க மேடம். அவியல் ஒன்னு, பொறியல் ஒன்னு வச்சிருக்கேன்.உங்களுக்கு நான் வெஜ் தான் வேணும்னா ஒரு ஆம்லெட் ஊத்தவா?” பணிவு போல் கேட்ட அவளின் குரலில். நான்வெஜ்ன்னாதான் தொண்டையில இறங்குமோ என்ற குத்தல் தெரிந்தது.

எந்த பதார்த்தமும் உப்பு உரைப்பின்றி சப் என்று இருந்தது. “கொஞ்சம் கேர் எடுத்து சமைங்க மல்லிகா” ஜீவிதா சொல்லி முடித்த மறுகணம் தட் என்ற சத்தத்துடன் அவள் அருகில் தண்ணீர் டம்ளர் வைக்கப்பட்டது.

 “இதற்குமேல் யார் சமைப்பார்கள்? நாக்கை கட்ட தெரியணும்” என்பது போல் தெளிவாகவே அவள் முணுமுணுக்க ஜீவிதா அதிர்ந்தாள். இதென்ன இந்தப் பெண் இப்படி பேசுகிறாள்?

“சாதம் இப்படி இருந்தால், குழந்தைக்கு எப்படி பிசைந்து கொடுக்க முடியும்? கொஞ்சம் குழைவாக வடியுங்கள்”

“இங்க பாருங்கம்மா நான் நன்றாகத்தான் சமைத்து இருக்கிறேன்.இதற்கு மேல் என்றால் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்” வெடுக்கென்று உள்ளே திரும்பி போய் விட்டாள்.

ஹரிஹரன் சாப்பிடும் நேரங்களில் இவள் இப்படி சமைப்பதில்லை. எல்லாம் பக்குவமாக நன்றாக சமைப்பாள்.நிச்சயம் இந்த விஷயத்தை அவன் காதுகளுக்கு கொண்டு போக வேண்டும் தான். ஆனால் வந்த பத்தே நாட்களில் வீட்டில் இருக்கும் வேலைக்காரர்களை குறை சொல்வது என்பது அதுவும் அவனுடைய கண் பார்வையில் மிக திறமையானவர்கள் என பாராட்டப்பட்டவர்களை குறை கூறுவது என்பது ஜீவிதாவிற்கு தவறாக தெரிந்தது.

 முழு மனதுடன் இந்த வாழ்வை ஏற்றுக் கொண்டு வந்திருந்தாளானால் இது போன்ற விஷயங்களில் தலையிட்டு சரி செய்வது அவளுக்கு ஏற்புடையதாக இருந்திருக்குமோ என்னவோ? இப்போது ஹரிஹரனின் வாழ்க்கையில் பொருந்திப் போக முடியாமல் தவித்திருக்கும் நிலையில் இருப்பவளுக்கு சட்டென இது போன்ற விஷயங்களை செய்வதற்கு தயக்கமாக இருந்தது.

ஏனோ இந்த வீடு அவளுக்கு உரிமையற்றது போல் தோன்றி கொண்டிருந்ததில் ஹரிஹரனே அவளுக்கு அனைத்து உரிமைகளையும் கொடுக்காமல் இருந்ததில் மனச்சோர்வுடன் இருந்தவள் மல்லிகாவின் அலட்சிய போக்கில் மேலும் சோர்ந்தாள்.

இங்கு வந்த இரண்டாவது நாள் இரவு “ஜீவி” என்ற ஆசை அழைப்புடன் ஹரிஹரன் அவளை நெருங்க அவசரமாக பின் வாங்கினாள். “குழந்தைக்காகத்தான் நம் திருமணம் என்று சொன்னீர்கள்” நினைவூட்டி குற்றம் சாட்டும் பார்வை பார்த்தாள்.

“குழந்தைக்காகவும் தான், என்றுதான் சொன்ன நினைவு” என்றான் அவன்.

“நான் குழந்தைக்காக மட்டும் தான் இந்த திருமணம் செய்தேன்” அழுத்தி சொன்னாள்.

“நான் குழந்தையின் அம்மாவிற்காகவும் தான் திருமணம் செய்தேன்”அவளை விட வார்த்தைகளை அழுத்தினான் அவன்.

“எனக்கு பிடிக்கவில்லை” வெடுக்கென முகம் திருப்பியவளை வலுக்கட்டாயமாக பற்றி இழுத்து தன் முகம் பார்க்க வைத்தான்.

“என்னடி பிடிக்கலை? என்னையா? எங்கே என் முகம் பார்த்து சொல்லு”

ஜிகு ஜிகு என்று மனதிற்குள் ரயிலொன்று ஓட அரை வினாடிக்கு மேல் அவன் விழிகளை சந்திக்க முடியாமல் இமை தாழ்த்தினாள்.

நிமிர்ந்து அவனை நேராக பார் ஜீவி.இன்னமுமா உன் மனதை அவன் ஆதிக்கத்திற்குள் விடுகிறாய்?அவள் உன் மனக்குரல் மிக பலவீனமாக இருந்தது. 





“ஜீவி” அவள் கன்னம் வருடிய அவனது குரல் குழைந்தது.”இந்த இரவும், குளிரும், இதோ தூங்கிவிட்ட நம் மகனும், பார் இந்த சூழ்நிலையை. இந்த நேரத்தில் நாம் கணவன் மனைவி என்பதை தவிர மற்றவையெல்லாம் எதற்கு? எவ்வளவோ பிரச்சனைகளுக்குப் பிறகு நாம் இருவரும் இணைந்து இருக்கிறோம்.இப்போது நம்மை பற்றி மட்டுமே நினைப்போம். பேசுவோம். வா ஜீவி” சிருங்காரம் கொப்பளித்த அவன் பேச்சுக்களில் ஜீவிதாவும் ஒரு கணம் மயங்கித்தான் போனாள்.

நெற்றி,கண், கன்னங்கள் என வெதுவெதுப்பாக படிந்த அவன் இதழ்கள் கழுத்தில் பதிந்து முன்னேறிய போது ஏதோ ஒரு நொடியில் தன்னை மீட்டுக் கொண்டவள் அவனை உதறி தள்ளினாள். “வேறு யோசனையின்றி இரவையும் இருளையும் குளிரையும் மட்டுமே நினைப்பது மிருகங்களின் குணம். நான் மிருகம் இல்லை”

“என்னை மிருகம் என்கிறாயா?” கர்ஜித்து நின்றவன் அப்போது கோபம் கொண்ட மிருகம் போல்தான் தோன்றினான்.

ஆமாம் என்றோ இல்லை என்றோ அவனுக்கு பதில் அளித்து இருந்தாளானால் அவர்களுக்கு இடையேயான சண்டை ஒரு முடிவிற்கு வந்திருக்கும்.ஆனால் விழி உயர்த்தி எதிரே உறுமி நின்றவனை ஒரு பார்வை பார்த்து இதழ்களை லேசாக சுழித்து என அலட்சிய பாவனை செய்ய அவன் ரௌத்திரன் ஆனான்.

“ஏய்”என்றபடி அவளை அறைவது போல் வந்தவன், சட்டென தன் கோபம் அனைத்தையும் பக்கத்தில் இருந்த சுவரில் காட்டினான். விர்ரென்று அதிர்ந்தது அந்த மரச்சுவர்.

“சீ” அறையை விட்டு வெளியேறினான். அந்த குளிருக்குள் இருளில் அவன் வீட்டைச் சுற்றி நடந்து கொண்டிருப்பதை ஜன்னல் வழியாக பார்க்கையில் உள்ளம் தவிக்கத்தான் செய்தது.ஆனால் ஜீவிதாவிற்குள் பதிந்து கிடந்த அவன் உன் அக்கா கணவன் என்ற கூக்குரலுக்கான சமாதானத்தை அவள் தேடிக் கொண்டிருந்தாள். 

ஹரிஹரன் தன்னை கல்லூரி நாட்களில் காதலித்தானா? அப்படி காதலித்தான் என்றால் ஸ்வேதாவுடன் எப்படி இப்படி அவனால் பழக முடியும்? அவள் பார்வை ஈசன் மேல் படிந்து மீண்டது. எது அவனது உண்மை குணம்? இதற்கு விடை தெரியாமல் அவனுடன் கூடி வாழ அவள் விரும்பவில்லை.

அன்றைய நாளுக்குப் பிறகே ஹரிஹரன் அவளுடன் ஒட்டாத தன்மையுடன் நடந்து கொண்டான். அதிகாலை வேகமாக எழுந்து சென்று இரவு நேரம் கழித்து வீடு வந்தான்.குழந்தையை கொஞ்சுவதோடு வீட்டில் தன் பணி முடிந்தது என்பது போல் கட்டிலில் முதுகு காட்டி திரும்பிக் கொள்வான்.

 கணவன் மனைவி இருவரும் இடையில் குழந்தையை வைத்துக் கொண்டு சுவரைப் பார்த்து இரவை கழித்து வந்தனர். அவளுடன் சமாதானமாக பேச எந்த முயற்சியையும் ஹரிகரன் எடுக்காத நிலையில் தானும் அவனை அணுகாமல் ஒதுங்கியே இருந்தாள் ஜீவிதா. இதே நிலை தொடர அந்த வீட்டில் தனக்கு உரிமையற்ற நிலை இருப்பதாக எண்ணத் துவங்கினாள்.




What’s your Reaction?
+1
53
+1
44
+1
3
+1
1
+1
3
+1
0
+1
5
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!