Serial Stories நெஞ்சம் மறக்கவில்லை

நெஞ்சம் மறக்கவில்லை -5

5

நிலா தன் சகோதரிகளான நட்சத்திரப் பட்டாளத்தோடு வான வீதியில் நகர்வலம் நடத்திக் கொண்டிருந்தாள். பௌர்ணமி நிலா பொன்னிறமும் வெள்ளையும் கலந்த வட்டமான அதனை ஜன்னலின் வழியே, ஆழ்ந்து நோக்கினாள் மலர்.

அன்றைய நிகழ்வுகள் அனைத்துமே மலர்க்கு பெரும் அயர்ச்சியாய் இருந்தது. ச்சே… கண்களின் வன்மமான எண்ணம் !

பெண் என்பவள் வெறும் போகப் பொருளாய் நினைக்கும் இந்த ஆண் வர்க்கம் என்று தான் மாறுமோ…
நிச்சயம் என் நிலையை உனக்குப் புரிய வைப்பேன் என்றானே, அப்படியானால், திரும்பவும் வந்து தொந்தரவு செய்வானோ ?

மனம் முழுக்க ஆனந்தனைப் பற்றிய நினைவுகள் சந்தோஷச் சிறகுகளை முளைக்கச் செய்தன.
எத்தனை உயிருக்குயிராய் நேசித்தாள் அத்தனையும் மறக்கும்படி செய்து விட்டானே,

ஆனால் இன்னும் மனம் ஆனந்தனை முழுமையாய் வெறுத்து விடவில்லை,

அவன் நினைவுகளிலேயே எத்தனை இரவுகளை உறக்கமில்லாமல் கழித்து இருக்கிறாள்.

இத்தனை கவலைக்களையும் மீறி இன்று ஆனந்தனை அருகில் கண்டதும் மனம் ஒருமுறை துள்ளிக் குதித்ததே. சே! எத்தனை கேடு கெட்ட மனது.

என்னை ஒரு போகப் பொருளாய் எண்ணும் அவனிடம் போய் இன்னும் பற்றுதல் கொண்டு இருக்கிறதே என்று மனதைக் கடிந்தாள்.உள்ளே அனலாய்க் கொதித்தது.

பேருக்கு ஒரு டம்ளர் பாலையும்,இரண்டு பிஸ்கட்டுகளையும் விழுங்கிய பின் வயிறு கொஞ்சம் அடங்கியது.

யாரையும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு படுக்கையில் சரிந்தவளின் கண்களில் இருந்து தாரை தரையாய் நீர் வழிய போர்வையாய் மந்தப் போற்றியது பழைய நினைவுகள்…

மலர் அப்போது ப்ளஸ் 2 முடித்து தேர்வு முடிவிற்காக காத்திருக்கும் பள்ளி மாணவி!

தம்பியும் அவளும் விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு சென்ற போது தான் முதன் முறையாக ஆனந்தனைச் சந்தித்தாள்.

ஒரு நாள் மாலை நேரம் மலரும்,தம்பியும் பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.பெரிய காண்டசா கார் ஒன்று அவர்களைக் கடந்து பக்கத்துக்கு வீட்டு காம்பௌண்டில் நுழைந்தது.

அதிலிருந்து ஆனந்தன் இறங்கவும் அவன் மேல் பந்து விழவும் சரியாய் இருந்தது.
ஆனந்தன் பந்தை எடுத்து கையில் வைத்தபடி சுற்றும் முற்றும் பார்த்தான்.

மலரும் அந்தப்பக்கம் போய் பந்து விழும் என்று எதிர்பார்க்கவேயில்லை,:டேய் செல்லமில்லை போய் பந்தை எடுதிட்டு வாடா,”என்று தம்பியை விரட்டினாள். ஆனந்தனின் கண்கள் தேனாய் பாய்ந்து வந்த குரலை நோக்கிச் சென்றன.

சற்றைக்கெல்லாம், டவுசரை ஏற்றிப் பிடித்தபடியே ஓடிவந்தான்.அந்தப் பொடியன்.சார் அந்த பந்தைத் தாங்களேன்!
“பந்தை என் மேல் அடித்தது யார்?”

“நானும் எங்க அக்காவும்.”

“அப்பா நீ மட்டும் வந்து கேட்டா எப்படி? போட்டவங்கலையே வரச் சொல்லு அப்பத்தான் தருவேன்,” பொடியன் மறுபடியும் அந்தப்பக்கம் ஓடினான்.

“அக்கா அவர் நீ வந்தாதான் பந்தைத் தருவாராம்.”

“யாருடா அது ? சரி வா போய் பார்ப்போம்.”, தாவணியை வரிந்து கட்டிக் கொண்டு படியிறங்கி அந்தப்பக்கம் சென்றாள்.
இனிமையான அந்தக் குயில் குரலுக்கு சொந்தக்காரி யாரென்று நினைப்பில் காத்திருந்தவனுக்கு மானெனத் துள்ளிக் கொண்டு குழந்தையாய் வந்த அப்பெண்ணைக் கண்டதும் தன்னையே மறந்துதான் போனான் ஆனந்தன்.
லிப்ஸ்டிக் போடாமலே அவள் உதடுகள் சிவந்து இருந்தது.மெலிதாய் மை தீட்டியது விழிகளை எடுப்பாய் காட்டியது. இரட்டை ஜடை மார்பில் புரள பாவாடை தாவணியில் வந்த அவளை கண்கள் முழுக்க வாங்கினான்.

“ஏன் சார் ? பந்தைத் தரச் சொன்ன தர வேண்டியதுதானே?”
அவளிடம் பேச்சை வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் தோன்ற,
ஒரு தவறை செய்தவர்கள் தானே அதை திருத்த முயல வேண்டும்.”

“தவறா நான் என்ன தவறு செய்தேன்?”

“என் மேல் பந்து எறிந்தது தவறு இல்லையா ? இதோ பார் என் தோளில் பட்டு கன்றி விட்டது.”

“அச்சச்சோ.. வலிக்குதா?” விகல்பமில்லாத அவள் தன் பூக்கரங்களில் அவன் தோளைத் தொட்டாள்.
சிலிர்ப்போடு ஏதோவொரு உணர்வு உள்ளே ஓடியது அவனுக்கு,மனதில் மூலையில் ஏதோவொரு குரல் இவள் தான் உன் இணை என்றது. அப்போதே அவளை தன்னுடன் சேர்த்து அனைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றிய எண்ணத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

“வலி இருந்தது இப்போ இல்லே.”

“எப்படி?”

“சொல்றேன்,என் பெயர் ஆனந்த் உங்க பேர் என்ன?”

“மலர்செல்வி” என்றாள்.




“இரண்டு பேரும் நான் இருக்கிறதையே மறந்திடீன்களே ?”

“சரி பெரிய மனுஷா! உன் பெயர் என்ன?”

“சொல்ல மாட்டேன்” அவன் ஓடி மறைந்தான் , அதன் பிறகு மலரும் கிளம்ப எத்தனிக்க கையைப் பற்றி நிறுத்தினான்.

“எங்கே ஓடற? நீ மலர்செல்வின்னு தானே பேர் சொன்னே பெயருக்கும்,ஆளுக்கும் வெகு பொருத்தம்.”

” மலர் நீ படிக்கிறீயா ?””

“பிளஸ் 2 முடிச்சிட்டேன்… நீங்க ?”

“இப்போதான் டிகிரி முடிச்சிட்டு பிசினஸ் பண்ணலான்னு இருக்கேன்.இது எங்க சித்தியோட வீடு.”
“பார்வதி ஆண்ட்டி உங்க சித்தியா ?”

“ஆமாம். உங்க வீடு அதுதானா ?”

“இல்லை இது எங்க பாட்டி வீடு லீவுக்கு வந்திருக்கேன்.”

“மலர்…”

“ம்…நான் இன்னும் 15 நாள் இங்கே வந்து போவேன். நீ தினமும் என்னை வந்து பாக்குறீயா?”

“எதுக்கு?”

“சும்மா பேசிகிட்டு இருக்கத்தான் நாம்தான் இப்போ பிரண்ட்ஸ் ஆயிட்டோமே ?”

“எப்போ?”

“இப்போ தான் உன் கையை கொடு! அவள் நீட்டினாள். பூவை போல் மெத்தென்று இருந்த அந்த கையை பற்றினான்.தன் கரங்களுக்குள் அதை சிறைபடுத்தி மெல்லத் தடவிக் கொடுத்தான்.
என்னதான் அறியாப் பெண்ணாய் வளர்ந்திருந்தாலும்,முதன் முதலாய் ஒரு ஆணின் ஸ்பரிசம் படும்போது சிலிர்ப்பு ஏற்படுவது இயல்புதானே!

அது ஒரு இன்ப அவஸ்தையாய் இருந்தது.அவன் கரங்களிலிருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள முயன்றாலும்,அந்த வலுவான கரத்தில் இருந்து விடுவிக்க முடியவில்லை,”விடுங்களேன்” கெஞ்சினாள்.

“ஏன் பிடிக்கலையா ?மலர்”

“ம்..”

“என்னைப் பிடிக்கலையான்னு கேட்பேன்.எங்கே என் கண்ணைப் பார்த்துச் சொல்லேன்.
நிமிர்ந்து அவன் கண்ணைப் பார்த்தவள் அந்த விழிகளில் சிறைப்பட்டாள்.அதிலிருந்து மீள முடியாமல் தவித்தாள்.

“யாரது ஆனந்தனா ?ஏம்பா வெளியேலேயே நிக்குறே ? அதாரு பக்கத்திலே?”மேலே பால்கனியில் இருந்து சித்தியின் குரல் கேட்கவும் சட்டென மலரின் கைகளை விட்டான்.

“இதோ உள்ளே வர்றேன் சித்தி இவங்க பந்து விழுந்ததுன்னு கேட்டாங்க அதை கொடுத்திட்டு வந்திடறேன்.

“மலர் வாம்மா உள்ளே வந்திட்டு போ .”

“வேண்டாம் ஆன்ட்டி ! பாட்டி தேடுவாங்க ,”என்று திரும்பி நடந்தவள் அந்த கேட்டை தாண்டுவதற்குள் நாலைந்து முறையேனும் திரும்பி திரும்பிப் பார்த்துப் போனாள்.அவளின் கூடவே மனமும் போவதை போல் உணர்ந்தான் ஆனந்தன்.




What’s your Reaction?
+1
16
+1
19
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!