Serial Stories

உறவெனும் வானவில் – 12

12

 

மறுநாள் யவனா கண் விழித்த போது,இதமான குளிர்ச்சியோடு மென்மையான நறுமணமும் அறையை சூழ்ந்திருந்தது.அவளுக்கு மிகவும் பிடித்த லாவண்டரின் மணம்.அறைக்கு அந்த ரூம் ஸ்பிரேயர் உபயோகித்திருப்பது தெரிந்தது. மனம் முழுவதும் ஒரு வகை இதம் பரவ மென் புன்னகையோடு கட்டிலில் இருந்து இறங்கினாள்.

சந்தன வாசம் மணத்த பாத்ரூமில் வெது வெது வெந்நீரில் குளித்து உடலை மென்மையாய் உரசும் காட்டன் சுடிதாருடன் அவள் வெளியே வந்த போது, அறைக் கதவு தட்டப்பட்டது.சண்முகசுந்தரி மர டிரே ஒன்றில் மூடப்பட்ட பாத்திரங்களுடன் நின்றிருந்தாள்

“எழுந்தாச்சாம்மா.சாப்பிடலாமா?” அறைக்குள்ளிருந்த சிறு மேசையில் பாத்திரங்களை வைத்து,தட்டு வைத்து பரிமாறினாள்.

“சாப்பிடும்மா”

வேண்டாமென மறுக்க வாய் திறந்தவள்,வெளேரென்ற தட்டின் நடுவே கறுப்பு மிளகு பூக்க நெய்யின்  மினுமினுப்புடன் வீற்றிருந்த பொங்கலைப் பார்த்ததும் மனம் மாறி உண்ண அமர்ந்தாள்.பத்து நாட்களாக யவனாவின் மனதை அரித்துக் கொண்டிருந்த ஏனென்ற கேள்விக்கு அருந்ததி விடையளித்து விட்டதாலோ என்னவோ,இப்போது அவள் சற்று அமைதியாகவே இருந்தாள்.மரத்து விட்ட பசியுணர்வு மாற நன்றாகவே சாப்பிட்டாள்

“ஓய்வெடும்மா” சண்முகசுந்தரி சொல்லி வெளியேற,மதிய உணவு கொண்டு வந்தது நிர்மலா.புன்னகை மாறாமல் பரிவாய் அருகிருந்து பரிமாறிப் போனாளவள்.

இரவு நெருங்க,நெருங்க யவனாவிற்கு திக் திக்கென்றது.அவனை சந்திக்க வேண்டுமே…கணவனை எதிர்கொள்ளும் விருப்பமின்றி அறைக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்தாள்.




இரவு உணவை அவள் அறைக்கு எடுத்து வந்தது சேர்மராஜ்.

“மா…மாமா நீ…நீங்க எதுக்கு?உங்களுக்கு ஏன் சிரமம்?”

“அட இதிலென்னம்மா சிரமம்.சுகந்திக்கும்,தாராவுக்கும் எத்தனையோ தடவை சாப்பாடு எடுத்துட்டு வந்திருக்கேன்.பரீட்சை நேரத்தில் படிச்சிட்டே இருந்தாங்கன்னா வாயில் ஊட்டி கூட விட்டிருக்கேன்.நீயும் எனக்கு அவுங்களை மாதிரிதாம்மா.நீயா சாப்பிடுகிறாயா?இல்லை ஊட்டி விடனுமா?”

அவர் கேட்ட விதத்தில் சிரிப்பு வர சாப்பிட அமர்ந்துவிட்டாள்.பார்த்து பார்த்து அவர் பரிமாற,யவனாவிற்கு நல்லசிவம் நினைவு வந்தார்.துருத்தி வந்த கண்ணீரை அதட்டி அடக்கினாள். ஒன்றை உணர்ந்தாள்.வீட்டினர் அனைவரும் முதலில் அவள் வயிற்றை நிரப்பி,உடலில் திடமேற்ற முயல்கின்றனர்.

ம்…சாப்பிடலாம்.நிறைய போராட வேண்டியிருக்கிறது.உடலில் பலம் வேண்டும்.யவனா ருசித்து சாப்பிட்டு முடித்தாள்.

“யவனாம்மா.ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்.உனக்கு பிடிக்காதது இந்த வீட்டில் என்றுமே நடக்காது.குட்நைட் ” சேர்மராஜ் வாசலில் நின்று சொல்லி விட்டுப் போனதின் அர்த்தம் நேரம் செல்ல செல்ல யவனாவிற்கு விளங்கியது.

சக்திவேல் அன்று இரவு அறைக்கு வரவேயில்லை.இரவு மட்டுமல்ல பகலிலும் அவள் கண்களில் அவன் படவேயில்லை.அந்த வீட்டில்தான் இருக்கிறானா என்ற சந்தேகம் கூட அவளுக்கு உண்டானது.

ஒரு வாரம் இப்படியே செல்ல,யவனா அன்று அறையை விட்டு வெளியே வந்தாள்.மாடியிலிருந்து இறங்கி வந்தவள்,ஹால் தொட்டிலில் படுத்திருந்த குழந்தையை யாரோ ஒரு பெண் குனிந்து தூக்கிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.

அதிர்ச்சியுடன் அங்கே ஓடி,அந்தப் பெண்ணின் தோள் தொட்டு தள்ளி,குழந்தையை தன் தோளில் போட்டுக் கொண்டாள்.

“ஏய் யார் நீ?எதற்காக குழந்தையை தூக்குகிறாய்?”

அந்தப் பெண் பரக்க விழித்தாள்.

“யவிம்மா.அவள் நம் ரூபனை பார்த்துக் கொள்ள வந்தவள்மா” சண்முகசுந்தரி உள்ளிருந்து வந்து சொல்ல,உதட்டை கடித்துக் கொண்டு குழந்தையை திருப்பிக் கொடுத்து விட்டு மாடியேறி அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

சை…யார் எப்படி போனால் எனக்கென்ன?தனது பதட்டத்திற்கு தானே நொந்து கொண்டாள்.அவளது போன் ஒலிக்க பார்த்தவள், எடுக்கலாமா என யோசித்தாள்.வைஷ்ணவி அழைத்துக் கொண்டிருந்தாள்.

வைஷ்ணவி அவளது ஆருயிர் தோழி.சொல்லப் போனால் இவளை விட புத்திசாலிப் பெண்.அதனால்தானே சித்தியை பற்றி முன்பே உணர்ந்திருந்தாள்.அடிக்கடி இவளை எச்சரிக்கவும் செய்தாள்.ஆனால் யவனாதான் கண் மூடித்தனமாக அவளது அறிவுரைகளை புறக்கணித்தாள்.இப்போது என் சித்தி நீ சொன்னது போல் ஏமாற்றுக்காரிதான்டி என்று சொல்ல அவள் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.




வைஷ்ணவியோ,சித்தார்தோ தோழமையோடு யவனாவின் நிலைமையை புரிந்து கொள்வார்கள்.இதிலிருந்து அவள் வெளிவரும் வழிமுறைகளும் சொல்வார்கள்.சங்கரலிங்கம் ஒரு படி மேலே போய் மருமகளை மீட்க ஒரு படையையே திரட்டிக் கொண்டு கூட வருவார்.

ஆனால் இவர்கள் அனைவர் முன்பும் போய் நானும்,என் அப்பாவும் சித்தியிடம் ஏமாந்து விட்டோம் என தலைகுனிந்து நிற்க யவனாவிற்கு பிடிக்கவில்லை.சித்தி சொன்னது போல் ஒரு வேளை தான் செய்தது தவறுதானோ?அந்த தவறுக்கான தண்டனை இதுதானோ?என்றெல்லாம் அவளுக்கு தோணத் தொடங்கியிருந்தது.

எனவே தனது மனக் கலக்கம் குரலில் தெரியாமல் மறைத்தபடி போனை எடுத்து” ஹலோ வைஷூ” என்றாள்

“ஏய் என்னடி புருசனையும்,புகுந்த வீட்டு ஆட்களையும் பார்த்த பிறகு நானெல்லாம் மறந்தே போனேனா?” வைஷ்ணவி சடசடத்தாள்.

“ஆமாம்டி புதுசா கல்யாணம் ஆன பெண்ணிற்கு இப்படி போன் செய்து தொந்தரவு செய்கிறோம்னு உனக்கு கொஞ்சமாவது மண்டையில் இருக்கிறதா?”

“அடியம்மா…என்னா வழிசல்.அடியே நீ புருச ஜெபம் பண்ணும் போது இடையில் வந்துவிட்டேனாக்கும்?”

“ஹப்பா உன் மரமண்டைக்குள்ள என் ப்ரைவசியை புகுத்துறதுக்குள்ள எனக்கு வேர்த்து வடிஞ்சிடுச்சு”

வைஷ்ணவி கலகலவென சிரித்தாள்.”எப்படியடி இருக்கிறாய்?”தோழியின் பரிவான குரலில் தொண்டை அடைக்க,எச்சில் விழுங்கி தன்னை சமாளித்துக் கொண்டாள்.

“ஒரு மாதமாகப் போகிறது.இப்போதுதான் இதைக் கேட்க தோணியதா உனக்கு?”

“நிஜமாகவே உன்னை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னுதான்டி நினைத்தேன்.நீ கொஞ்சம் அங்கே செட்டிலாகிக் கொள்ளட்டும்னு இருந்தேன்.அங்கே உன் லைப் எப்படி போகிறது?உன் ஹஸ்பென்ட் எப்படி இருக்கிறார்?ஹனிமூன் எங்கும் போனீர்களா?”

அதெல்லாம் முதல் திருமணம் செய்தவருக்கு…இவருக்கு எதற்கு?எண்ணமிட்டவள் வெளியில் வெறுமனே “ம்” என்றாள்.

“யவி எதுவும் பிரச்சனையா?”

“ம்ஹூம்.அதெல்லாம் இல்லைடி.இங்கே கொஞ்சம் வீட்டு வேலைகள் அதிகம்.அவ்வளவுதான்”

“வீட்டுவேலைகள் செய்யவா உன்னை மணம் முடித்து கூட்டிப் போனார்கள்?அதெல்லாம் எனக்கு பழக்கமில்லை.வேலைக்கு ஆள் வையுங்களென்று சொல்லடி”

தோழியின் படபடப்பு மனதிற்கு ஆறுதலை தர,யவனா மெல்ல புன்னகைத்தாள்.வைஷ்ணவி தொடர்ந்து அவர்கள் கல்லூரி காலக் கதைகளை பேச ஆரம்பிக்க,ஒரு மணி நேரத்தை தாண்டி ஓடிய தோழிகளின் பேச்சினிடையே யவனா அடிக்கடி சிரித்தாள்.




கண்ணாடியில் பார்த்த போது தன் கண்களில் சோர்வு போய் பளபளப்பு தெரிவதை உணர்ந்தாள்.தன் மனக்கவலை உணர்ந்தே வைஷ்ணவி இப்படி சிரிக்க,சிரிக்க பேசினாளோ! நினைத்தபடி பாத்ரூமுக்குள் நுழைந்து முகத்தை நன்றாக கழுவிக் கொண்டாள்.

எதற்கும் என்ன அழுமூஞ்சித்தனம்.தைரியமாக நிமிர்ந்து நில்…கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்திடம் மானசீகமாக அவள் பேசிக் கொண்டிருந்த போது,வெளியே அறைக்குள் ஏதோ சத்தம் கேட்டது.

வரவழைத்துக் கொண்டிருந்த அமைதி போய் யவனாவினுள் மீண்டும் படபடப்பு வந்தது. அறைக்குள் யாரோ இருக்கிறார்கள்…அதோ திருட்டுத்தனமாக மெல்ல மெல்ல நடக்கிறார்கள்.வியர்த்து விட்ட கழுத்தடியை துடைத்தபடி பாத்ரூம் கதவை இம்மலாக திறந்து எட்டிப் பார்த்தாள்.

அறைக்குள் இவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவன் சக்திவேல்.ஓசையின்றி பீரோ கதவை திறந்து எதையோ தேடிக் கொண்டிருந்தான்.




What’s your Reaction?
+1
40
+1
27
+1
1
+1
1
+1
1
+1
3
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!