Serial Stories

உறவெனும் வானவில் – 10

10

 

அருந்ததி பத்து நாட்கள் கழிந்த பின்தான் யவனாவை அழைத்தாள்.போனில் வந்த வாட்ஸ்அப் காலை பரபரப்பாக ஆன் செய்து காதில் வைத்தவள் ” யவனாம்மா எப்படிடா இருக்கிறாய்?” என்ற தேனொழுகும் குரலைக் கேட்டதும் ஒரு நிமிடம் அதிர்ந்து மௌனமாகி பின் மெல்ல “சித்தி” என்றாள்.

“நான் நல்லாயிருக்கேன்மா.உன் அப்பாவிற்குத்தான் இந்த விமான பயணம்,நேர மாற்றம்,க்ளைமேட் சேஞ்ச் எதுவுமே ஒத்து வரவில்லை.உடம்பு ரொம்பவே சரியில்லை அவருக்கு.கஷ்டப்படுகிறார்…”

“ஏய் பிள்ளைகிட்ட எதையாவது சொல்லி பயமுறுத்தாதே.இங்கே கொடு…யவனாம்மா எப்படிடா இருக்கிறாய்?”

அப்பாவின் பாசமான குரலில் உடல் நடுங்கி கண்கள் கலங்கியது யவனாவிற்கு.

“உ…உடம்பு எப்படி இருக்குதுப்பா?”

“இந்தக் குளிர் ஒத்துக்கலைம்மா.அதுதான் கொஞ்சம் உடம்பை படுத்துது.கொஞ்ச நாட்களில் பழகிடும்.நீ ,மாப்பிள்ளை எப்படிடா இருக்கிறீர்கள்?புகுந்த வீட்டில் எல்லோரும் நலமா? அங்கே உன்னை எப்படி கவனித்துக் கொள்கிறார்கள்?”

” அப்பா வீடியோ கால் வாங்கப்பா.நான் உங்களைப் பார்க்கனும்”யவனா காலை கட் செய்து வீடியோ கால் போட்டாள்

பரவச முகத்தோடு அருந்ததியும் ,சோர்வான முகத்தோடு நல்லசிவமும்பார்வைக்கு கிடைத்தார்கள்.அப்பாவின் சோர்வு பாதிக்க “என்னப்பா ரொம்ப டல்லா தெரியிறீங்க? ” பதறினாள்

“நீதான்டா பார்க்க ஒரு மாதிரி தெரிகிறாய்.முகமே வாடிப் போயிருக்கிறதே.என்னடா எதுவும் பிரச்சனையா?” நல்லசிவம் கவலைப்பட அருந்ததி இடையில் வந்தாள்.




“யவனா ரூமுக்குள் இருந்து பேசுகிறாள். வெளிச்சம் அதிகம் இல்லாமல் இருட்டாக இருக்கிறது.அதுதான் உங்களுக்கு அப்படி தெரிகிறாள்.நீங்கள் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்குங்க.அவளிடம் நான் பேசிக் கொள்கிறேன்”

உடன் தலையாட்டி எழுந்து கொள்ளும் தந்தையை இங்கே செய்வதறியாது பார்த்திருந்தாள் யவனா.சும்மாவா…பத்து வருட டிரைனிங்காயிற்றே! கசப்புடன் நினைத்தாள்.

“ஏன் சித்தி இப்படி செய்தீர்கள்?”

அருந்ததி புருவம் உயர்த்தினாள்.” எப்படி செய்தேனென்கிறாய்?”

“அம்மா..” இடையிட்ட குரலில் எரிச்சலாகி நிமிர்ந்தாள் யவனா.

“கொஞ்சம் வெளியே இருந்தீகன்னா மாடியை கூட்டி தொடச்சுடுவேன்” வேலைக்காரி நின்றிருந்தாள்.

“ஒரு மணி நேரம் கழித்து வா”

“இல்லைங்கம்மா ,அப்புறம் துணி துவைக்கனும் “

யவனா வேகமாக போனை ஆப் செய்தாள்.”சை வீடா இது?சுடுகாடு” கத்திவிட்டு ரூமை விட்டு வெளியே வந்தாள்.

திரும்பவும் அவள் வீடியோ கால் செய்தபோது ,திரையில் வந்த அருந்ததி சாட்டின் இரவு உடையில் விரிந்த கூந்தலுடன் இருந்தாள்.ஸ்டைலாக இவளுக்கு”ஹாய் ” என்றாள்.

அவளுக்கு பின்னால் கட்டில் இருந்தது. அதில் நல்லசிவம் தூங்கிக் கொண்டிருந்தார்.அவரது முகம் கேமெராவில் தெளிவாக தெரிந்தது.அப்படி போனை அமைத்துக் கொண்டிருந்தாள் அருந்ததி.

“அ…அப்பா அப்பாவை என்ன செய்தீர்கள்?” ஏதோ உந்துதலில் கத்தினாள் யவனா.

” உஷ்.ஏன் கத்துகிறாய்,? இதோ இந்த நிமிடம் வரை உன் அப்பனை வேளா வேளைக்கு மருந்து மாத்திரை கொடுத்து நன்றாகத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன் “

“நா…நாளை ?”

“அது உன் கையில்தான் இருக்கிறது” குரூரம் தாண்டவமாடியது அருந்ததியின் முகத்தில்.

“ஏன்…ஏன் சித்தி?நானும்அப்பாவும் உங்களை எவ்வளவு நம்பினோம்?ஏன் இப்படி செய்தீர்கள்?”

“அப்படி என்ன செய்துவிட்டேன்? எனக்கு அமெரிக்கா போக சந்தர்ப்பம் கிடைத்தென்று உன்னை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விட்டா வந்தேன்?ஒழுங்காக முறையாக நல்ல குடும்பமாக பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்து விட்டுத்தானே வந்தேன்.”

அவள் அப்படியும் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் உண்டென உணர்ந்த யவனா கண் கலங்கினாள்.

“எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகம்?” குமுறினாள்

“நீயும் உன் அப்பனும் எனக்கு செய்ததை விடப் பெரியதா?” திருப்பினாள் அருந்ததி.

“நாங்களா …நாங்கள் என்ன செய்தோம்?அடுத்த வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் நின்ற உங்களை அழைத்து வந்து எங்கள் வீட்டிற்கே ராணியாக்கினோம் “

“ஆஹான் உன் வீட்டு ராணி பதவி கொடென்று கையேந்தி நின்றேனா நான்?”




யவனா விதிர்த்து நிற்க இரு விரலால் சொடக்கிட்டு இவளை சுட்டினாள் அருந்ததி. ” நீ…நீதான் என் வீடு தேடி வந்து என் அப்பாவின் மனதை கலைத்து உன் வீட்டுச் சிறைக்குள் என்னைத் தள்ளியவள்.உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன்”

யவனா கோபமாய் பார்த்தாள்” தாவணி கிழிசலை மறைக்க ஒரு மடிப்பு கூடுதலாய் வைத்து கட்டியிருப்பீர்கள்.நீர் ஊற்றி வைத்திருக்கும் பழைய சோற்றை அவக் அவக்கென்று விழுங்குவீர்கள்.உங்கள் வீட்டு ஏழ்மை எனக்குத் தெரியும்.அதனை மாற்ற நினைத்துத்தான் உங்கள் அப்பாவிடம் சென்று பேசினேன்”

“வக்கத்த கழுதை என்ன கேட்டாலும் தலையாட்டுவாள்னுதானே நாற்பது வயது அரைக்கிழத்திற்கு என்னைப் பெண் கேட்டாய்?”

“ஐயோ சித்தி நான் அப்படி நினைக்கவில்லை”

“ஏய் எல்லாம் தெரியும்டி எனக்கு.உன் அப்பனுக்கு பொண்டாட்டி வேணும்னா முப்பந்தியைந்து வயசில ஒரு விதவையையோ,முதிர் கன்னியையோ பார்த்திருக்க வேண்டியதுதானே?இளசா வயசா அழகா தேவைப்படுதாக்கும்? நான் சாப்பாட்டிற்கு வழியில்லாதவள்.சோறு போடுறேன்…துணிமணி கொடுக்கிறேன்னா ஆஹான்னு ஓடியாந்துடுவேன்.அப்படித்தானே உனக்கு நினைப்பு?”

அருந்ததியின் கண்களில் மின்னிய நெருப்பில் யவனா வாயடைத்துப் போனாள்.அந்த சிறு வயதில் அவள் அறிவுக்கு எட்டிய வகையில் செய்த நல்ல காரியத்தின் பின்னால் இவ்வளவு மனச்சங்கடங்கள் இருக்கிறதா?

“நாங்கள் உங்களை நன்றாகத்தானே கவனித்துக் கொண்டோம் சித்தி”

” எது மூணு வேளை சோறும்,வருசம் நாலு புடவையும்தானே? அதை விட பல மடங்கு அதிக வசதியான குடும்பம் உன் புகுந்தவீடாயிற்றே.பிறகு ஏனம்மா உனக்கு இவ்வளவு கவலை?முகம் வீங்க ஏனம்மா அழுது உட்கார்ந்திருக்கிறாய்?”

உச்சந்தலையில் சம்மட்டி இறங்கியது போல் துடித்தாள் யவனா.

“பீரோ நிறைய துணிகள்,பெட்டி நிறைய நகைகள்,பர்ஸ் நிறைய பணம்…ஆனாலும் இந்த வாழ்க்கை உனக்கு பிடிக்கவில்லையே ஏன்மா?”

“சி…சித்தி.அ…அவருக்கு அ…அவர் என்னை விட அதிக வயதாக…” யவனாவால் வார்த்தைகளை முடிக்க முடியவில்லை.

“ஆங்…புரியுதா?பணம் நகை மட்டும் ஒரு பெண்ணின் வாழ்க்கைக்கு போதுமானது கிடையாது.மனதுக்கு பிடித்தவன் வேண்டும்.அப்படி ஒரு வாழ்க்கையை என்னிடமிருந்து தட்டிக் பறித்த உன்னை சும்மா விடுவேனா நான்?”

“இதையெல்லாம் யோசிக்கும் வயது அப்போது எனக்கு இல்லை சித்தி”

“உனக்கில்லை.உன் அப்பனுக்கும் அப்பனை பெற்றவளுக்கும் இந்த விபரங்கள் தெரிந்திருக்கும்தானே?அவர்களும் என்னை பார்த்து ஆனந்தமாக தலையாட்டினார்கள் தானே?இதற்கெல்லாம் நான் பழி வாங்க வேண்டாமா?எனக்கும் ஆசை இருக்கும்தானே…அதனை வேரோடு அழித்தவர்களை…”இவ்வளவு நேரமும் திமிராக தலையுயர்த்தி பேசிக் கொண்டிருந்தவளின் குரல் கரகரக்க யவனா அவளை ஆழ்ந்து பார்த்தாள்.

” சித்தி “

“எனக்கும் காதல் இருந்தது. வயிற்றுக்கு சரியான சாப்பாடில்லாதவர்கள் காதலிக்க கூடாதென்று சட்டமெதுவும் இல்லையே!எனக்கே எனக்காக ஒருவன் இருந்தான்.என்னை கை பிடிக்க சரியான சமயம் பார்த்து காத்திருந்தான்.ஆனால் என் வறுமை அந்தக் காதலை கொன்று குழி தோண்டி புதைத்து விட்டது.மனம் நிறைய வன்மத்துடன்தான் உன் வீட்டிற்குள் வந்தேன்.கூட இருந்தே உன் வாழ்க்கையை எனது போல் மாற்ற வேண்டுமென நினைத்தேன்.இதோ முடித்து விட்டேன்”

யவனாவின் மனம் சரசரவென குற்றவுணர்ச்சியில் நிரம்பியது.

“உன் மேல் ஆதரவான சிறு தலை வருடல் போதுமாயிருந்தது,உன் அப்பனை என் கைப் பொம்மையாக்க.

என்னைப் போன்றே இருபது வயது வித்தியாசத்தில் உனக்கு மணமகன் பார்த்தேன்.தொந்தியும் ,வழுக்கையுமாய் இருந்தவர்களை நிராகரித்தேன்.அப்பனும் மகளும் கண்டுபிடித்து விடுவீர்களே!இறுதியாக இவனை பிடித்தேன்.முடித்தேன்.எனது ஒரே வருத்தம் இவனது பிள்ளைக்கு ரொம்ப சின்ன வயது.பத்து வருட பிள்ளையாவது நான் நினைத்திருந்தேன்.ப்ச் அமையவில்லை”

யவனா பிரமை பிடித்தது போல் அமர்ந்திருந்தாள்.

“இடையில் உன் தாய்மாமன் என் மகனுக்கு பெண் கொடுன்னு வந்து நின்றான்.எனது திட்டங்கள் என்னாவது?இதற்காகவேதான் உன் தாய்மாமன் குடும்பத்தை தள்ளியே வைத்திருந்தேன்.அந்த சித்தார்த்துடன் நீ பேசுவதை தடுத்தேன்.அவனுடன் மட்டுமல்ல வெளியில் எந்த ஆணுடனும் நீ பழகுவதை நான் தீவிரமாக தடுத்திருக்கிறேன்.எவனுடனாவது காதலென்று நீ வந்து நின்றால் என் ஏற்பாடுகளெல்லாம் பாழாகி விடாது? “

விரக்தியான சிரிப்பொன்றை உதிர்த்தாள் யவனா.




“அண்ணனை தம்பியாக்கி,அண்ணன் குழந்தையை தம்பி குழந்தையாக்கி உன் புருசன் குடும்பத்தாரிடம் உன் அப்பாவை அதிகம் பேச விடாமல் செய்து, அவர்களிடம் நீ பொறுப்பான பெண்.இந்த திருமணம் உனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.கணவனின் முதல் குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்வாய் என்று எதையெதையோ பேசி உத்தரவாதம் கொடுத்து…ஹப்பா.இந்தக் கல்யாணம் நடக்கும் வரை முள்ளில் நடப்பது போல் இருந்தேன்”

எத்தனை திட்டமிடல்கள்! இவளை ஜெயிக்க தன்னால் முடியுமா? யவனா மனம் வெறுத்து வெறித்திருந்தாள்.

அருந்ததி கட்டைவிரலால் பின்புற கட்டிலை காட்டினாள்”இங்கே பார்.தன் மகளுக்கு இள வயசு பணக்காரனை கல்யாணம் முடித்து வைத்து விட்டதாய் திருப்தியாக தூங்குகிறார்.நீயாக சொல்லும் வரை அவருக்கு எதுவும் தெரியாது.அந்த நிம்மதியை நீயே கலைக்க போகிறாயா?”

யவனா வாய் திறந்தாள்.”இல்லை”

“குட்.என்னதான் எனக்கு பிடிக்காத வாழ்க்கை என்றாலும் இந்த வசதி வாய்ப்புகள் ,வெளிநாட்டு பயணம் எல்லாம் இவரால் எனக்கு கிடைத்தது.இவரை நான் வெறுக்க போவதில்லை.நன்றாகவே கவனித்துக் கொள்வேன்.ஆனால் இதெல்லாம் உன் கையில்தான் இருக்கிறது”.

யவனாவிற்கு புரிந்தது. தனது தந்தையை பிணையாக வைத்து,இந்த வாழ்வை…சித்தி அவளுக்காக பார்த்து பலி வாங்க ஏற்படுத்தி தந்த வாழ்வை, விட்டு விலகாதே,கடைசி வரை துன்பப்பட்டு வாழ்ந்து முடி என்கிறாள்.

பொம்மையாய் தலையாட்டி போனை கட் செய்தாள்.அப்படியே படுத்தாள்.தரை நெருப்பாக கொதித்தது.வெயில் முகத்தை தாக்கி கருப்படித்தது.யவனா எந்த உணர்வுமின்றி அப்படியே கிடந்தாள்.




What’s your Reaction?
+1
24
+1
19
+1
1
+1
1
+1
0
+1
0
+1
19
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!