Serial Stories

உறவெனும் வானவில் – 7

7

 

“இப்படி உடனே கிளம்ப வேண்டி வருமென்று நினைக்கவில்லை.தப்பாக நினைக்காதீர்கள்” அருந்ததி குரல் தழுதழுக்க இறைஞ்சலாய் கேட்டபடி நின்றிருந்தாள்.

சுற்றிலும் சக்திவேல் வீட்டினர் அமர்ந்திருக்க,வீட்டின் நடுக்கூடத்தில் சித்தி அப்படி தலைகுனிந்து நின்றிருந்தது,தனது எதிர்கால வாழ்வை பற்றிய கலக்கத்திலிருந்த அந்த நேரத்திலும் யவனாவிற்கு ஒப்பக் கூடியதாக இல்லை.எதிர்பாராமல் நடந்த விசயத்திற்கு சித்தி ஏன் இப்படி தலை குனிய வேண்டும்?

“எதற்கு சித்தி இந்த அழுகை?எப்படியும் நீங்கள் இரண்டு நாட்கள் கழித்து கிளம்புவதாக இருந்தீர்கள்தானே? டிராவல் ஏஜென்ட் தேதியை மாற்றி சொன்னதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?” சித்திக்கு பரிந்தாள்.

“ஆமாம்மா.இரண்டு நாட்கள். பொண்ணு,மாப்பிள்ளையை உங்கள் வீட்டில் வைத்து அனுப்புவதாக முன்பு பேசினோம்.இப்போது இன்றே நீங்கள் கிளம்ப வேண்டி வந்ததால் நாங்களும் எங்கள் மருமகளை அழைத்துக் கொண்டு இப்போதே கிளம்புகிறோம்.” சேர்மராஜ் புன்னகையோடு சொல்ல யவனாவிற்கு அப்பாடி என்றானது.

திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் பெண்ணையும்,மாப்பிள்ளையும் தன் வீட்டில் வைத்திருந்து விருந்து சீராட்டி பின்னேயே தாங்கள் வெளிநாடு கிளம்புவதாகவே முதலில் ஏற்பாடு.ஆனால் இப்போது திடீரென்று அமெரிக்க விமானம் ஏற திருவனந்தபுரம் செல்லும் நாளை தவறுதலாக சொல்லி விட்டதாகவும்,உடனே கிளம்பி வரும்படியும் ப்ளைட் டிக்கெட் எடுத்துக் கொடுத்த டிராவல்சிலிருந்து போன் வர நல்லசிவமும்,அருந்ததியும் உடனே கிளம்ப வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

அவர்கள் வீட்டுப்படி இறங்கிய உடனேயே உள்ளே நுழைந்த கூலியாட்கள் பர்னிச்சர்களை தூக்கிக் கொண்டு வெளியேறுவதை இயலாமையாக பார்த்து நின்றாள் யவனா.

“நாளை பிள்ளைபேறெல்லாம் கவனிப்பது யாரோ?” பின்னிருந்து முணுமுணுத்தது சண்முகசுந்தரி.




“நீங்கதாம்மா.மருமகளை கவனிக்கவே அவதாரம் எடுத்து வந்த அபூர்வ பிறவியாயிற்றே நீங்க” சுகந்தியின் பதில் கிசுகிசுப்பு.

யவனாவின் கால்கள் நடுங்கின.பின்னால் கேட்ட பேச்சுக்களில் மட்டுமல்ல,பிறந்து வளர்ந்த இந்த வீட்டை விட்டு போகப் போவதற்கும்.இது சாதாரணமாக திருமணம் முடிந்த பின் வரும் பிரிவல்ல.இனி இந்த வீட்டுப் பக்கமே வர முடியாது.ஏக்கத்துடன் வீட்டை நிமிர்ந்து பார்த்து கண்ணீர் மல்க நின்றாள்

“உன்னை பார்த்தால் பாவமாக இருக்கிறது யவி.உன் தோழி ஒருத்தி இங்கே இருக்கிறேன் என்பதனை ஞாபகம் வைத்துக் கொள்.இந்த நிலைமையில் நான் வேறு என்ன சொல்ல?” வைஷ்ணவியின் கண்களும்

கலங்க சிறு விம்மலுடன் தோழியை அணைத்துக் கொண்டாள்.

“எல்லோரும் காரில் உட்கார்ந்து விட்டார்கள்.போகலாமா?”

சக்திவேல் பின்னால் வந்து நின்றான்,தோழிகள் பிரிந்தனர்.அப்பாவை சித்தியை பார்த்து பேச எண்ணி திரும்பியவள் அவர்கள் கிளம்புவதில் பரபரப்பாக இருக்க கண்டு தயங்கி அப்படியே நின்றாள்.

“யவனாம்மா திருவனந்தபுரம் போகவும் போன் செய்கிறோம்.நீ போயிட்டு வாடாம்மா” வீட்டிற்குள் நின்றே அருந்ததி பேச,நல்லசிவம் அவளைப் பார்த்தபடி மெல்ல வெளியே வந்தார்.

“அப்பா வர்றார்.போகாதீங்கப்பான்னு சொல்லு” முணுமுணுத்து விட்டு தள்ளி நின்றாள் வைஷ்ணவி.

“மாப்பிள்ளை.என் மகளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.எனக்கு உடம்பு அவ்வளவு சரி கிடையாது.அமெரிக்காவில் இதற்கு நல்ல வைத்தியம் இருக்கிறதுன்னு அருந்ததி சொல்கிறாள்.நான் அங்கே கொஞ்ச நாட்கள்  போக நினைப்பதே என் வைத்தியத்திற்காகத்தான்.ரொம்ப சீக்கிரமாகவே உடம்பை சரி செய்து கொண்டு என் மகளை பார்க்க ஓடி வந்துவிடுவேன்.அது வரை அவளை நீங்கள்தான் பார்த்துக் கொள்ளவேண்டும்”

யவனா “அப்பா ” என அழுகையோடு அவர் தோள் சாய்ந்தாள்.”சீக்கிரமே வந்துடுங்கப்பா” சிறு குழந்தையாய் கேவினாள்

சக்திவேல் எதுவும் பேசவில்லை.ஆறுதலாக நல்லசிவத்தின் தோள் தட்டி கையை பற்றிக் கொண்டான்.”நல்லநேரம் முடியப் போகிறது” என்றான் பொதுவாக.

நல்லசிவம் தன்னை தேற்றிக் கொண்டு மகளின் கை பிடித்து அழைத்துப் போய் காரில் ஏற்றினார்.அருந்ததி வீட்டிற்குள்ளிருந்தே கையசைக்க,கார் நகர்ந்தது.

தெருமுனை தாண்டியதுமே அவள் அருகில் அமர்ந்திருந்த நிர்மலா தன் மடியில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை யவனா மடியில் வைத்தாள்.”காலெல்லாம் மரத்தாற் போலிருக்கிறது.கொஞ்ச நேரம் நீங்க வச்சுக்கோங்க”

குழந்தைக்கு ஒரு வயது இருக்கலாம்.தூக்கத்தில் சரிந்து கொண்டே போன குழந்தையை அணைத்து மடியிருத்தும் பக்குவம் வராது தடுமாறினாள் யவனா.

“குழந்தையின் பெயர் என்ன?”

“ரூபன்” பதில் சொன்னது அவளருகில் அமர்ந்திருந்த சக்திவேல்.கூடவே அவளது வலது கரத்தை அணைவாக இழுத்து வைத்து,இடது கரத்தை குழந்தையை சுற்றி படர விட்டு பிள்ளையை தூக்கும் முறையை செய்து காட்டினான்.




இயல்பான அவனது தொடுகையில் மனது படபடக்க தலை குனிந்து கொண்டு ஓரக் கண்ணால் நிர்மலாவை பார்க்க,அவள் கண்களை மூடி தூங்கிப் போயிருந்தாள்.

சுகந்தியும்,நிர்மலாவும் சேர்ந்து ஆரத்தி எடுத்து கொட்டி,மணமக்களை உள்ளே அழைத்துக் கொண்டனர்.யவனா விழிகளை சுழற்றி வீட்டைப் பார்த்தாள்.பெரிய வீடுதான்.ஆனால் பழைய காலத்து வீடு.கட்டைக்குத்தும்,பூக்கல் தரையுமாக பழமை மணத்தது.யவனாவின் ரசிக உள்ளம் இந்த பாரம்பரியத்தை ரசித்தது.உடனே அந்த வீடு முழுவதும் சுற்றிப் பார்க்கும் ஆவல் கொண்டாள்.

சிட் அவுட், ஹால்,கிச்சன்,டைனிங்ரூம்,பெட்ரூம் என்று தனித்தனியாக திட்டமிட்டு கட்டாமல் ரூம் ரூமாக கட்டி வைத்திருந்ததை அவரவர் வசதிக்கேற்ற இடமாக மாற்றிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

விறகடுப்பிற்கான இடம் மூடி மறைக்கப்பட்டு,புகைபோக்கியும் இடித்து மாற்றப்பட்ட தடம் அடுப்படியில் தெரிந்தது. இப்போது எக்ஸ்சாஸ்டிக் பேன் ஓடிக் கொண்டிருந்தது.

“இந்த காபியை கொண்டு போய் வெளியில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கொடுங்க” நிர்மலா கையில் கொடுத்த டிரேயை திணறலாய் வாங்கிக் கொண்டாள்.

“அவுங்கெல்லாம்…” ஹாலை நிறைத்து அமர்ந்திருந்தவர்களை தயக்கமாய் பார்த்தபடி கேட்டாள்.

“எல்லாம் நம்ம சொந்த பந்தம்தான்.இந்த ஊர் ஆளுங்க.புதுப்பொண்ணை பார்க்கனும்னா வந்திருக்காங்க.அதனால் நீதான் போய் கொடுக்கனும்.”சண்முகசுந்தரியின் குரலில் மாமியார்தனம் இருந்தது.

கசகசவென்ற பேச்சோடு இருந்த ஹாலுக்குள் நுழைந்து துருவி துருவி பார்த்தவர்களுக்கு பதிலாக புன்னகைத்து, கேள்விகளுக்கு விடையளித்து காபி டிரேயை காலி செய்து மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்த போது அவளுக்கு மூச்சிரைத்தது.

வீர் வீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்க,” குழந்தை அழுறான்.போய் பாருங்களேன்” நிர்மலாவின் குரலில் டன் டன்னாய் எரிச்சல்.

யவனா திகைத்தாள்.அதென்ன இவள் பிள்ளையின் பொறுப்பை என் தலையில் கட்டப் பார்க்கிறாள்.தோளில் பிள்ளையோடு ஆரத்திக்கு நின்ற முதல் மணப்பெண் யவனாவாகத்தான் இருப்பாள்.அப்போது கூட குழந்தையை இவளிடமிருந்து வாங்க யாரும் முன்வரவில்லை.

ஹாலுக்குள் நுழைந்து தோளில் பிள்ளையோடு பரக்க பரக்க நின்று கொண்டிருந்த போது,மாதவன் அடுத்த கட்டில் இருந்த ஒரு அறையைக் காட்டி”அங்கே படுக்க வைங்க” என்க,வேகமாக அந்த படுக்கையறையின் கட்டிலில் பிள்ளையை விட்டு வந்தாள்.இப்போது மீண்டும் அவளேவா?

“நிம்மி நீயே போய் பாரு” சண்முகசுந்தரி அதட்டலாக சொல்ல,ஏதோ முணுமுணுத்தபடி போனாள் நிர்மலா.

அன்று இரவு சக்திவேல் அவளிடம் கேட்ட முதல் கேள்வி “உனக்கு சிறு பிள்ளைகளை கவனித்து பழக்கமில்லையா?”




What’s your Reaction?
+1
44
+1
18
+1
1
+1
2
+1
0
+1
1
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!