Serial Stories

உறவெனும் வானவில் – 6

6

 

சித்தார்த் மேடை ஏறி மணமக்கள் இருவர் விரல்களிலும் மோதிரம் போட்டு விட்டான்.”நான் யவனாவின் தாய்மாமா மகன்.” சக்திவேலிடம் அறிமுகம் ஆகிக் கொண்டான்.

சக்திவேல் புன்னகையோடு அவன் கை பற்றிக் குலுக்க,”எம்.பி.ஏ எந்த காலேஜில் படிச்சீங்க சார்? எந்த வருட பாட்ஜ்?” என்று கேட்டான்.

சக்திவேல் காலேஜ் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அடுத்து ஒரு குடும்பம் வர,அவர்களிடம் பேச திரும்பினான்.சித்தார்த் யவனா பக்கம் ஒதுங்கி,” உன்னோடு ஐந்து நிமிடம் தனியாக பேச வேண்டும் யவனா.எப்படியாவது நேரம் ஒதுக்கு” என்று விட்டு கீழே இறங்கிப் போனான்.

சக்திவேல் கடினமான குரலில் கடிந்து கொண்டதிலிருந்து யவனாவிற்கு அவனது குரல் மட்டுமே மண்டைக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.இப்போது சித்தார்த் சொல்வது அவுட் ஆப் போகஸ் போல் மிதவையாய் அவளுள் இறங்க,சரியென தலையசைத்தாள்.

விருத்தாசலத்தில் ரிசப்சனுக்கு ஏற்பாடு செய்திருப்பதால்,அவர்கள் பக்க ஆட்களெல்லாம் அங்கேதான் வருவார்கள் என்பதால் இங்கே இவர்கள் பக்கத்து ஆட்கள் எண்ணிக்கைக்கு ஏற்றபடி மண்டபம் பிடித்துக் கொள்ளுமாறு சக்திவேலின் தந்தை சேர்மராஜ் சொல்லி விட்டிருந்தார்.




நல்லசிவத்திற்கு தெரிந்தவர்களென எப்படி பார்த்தாலும் நூறை தாண்டவில்லையாதலால் அவர்கள் தெருவிலேயே பிள்ளையார் கோவிலுடன் இணைந்திருந்த இந்த சிறு மண்டபத்தை பிடித்து விட்டனர்.அப்போதும் நகருக்குள் பெரிய மண்டபத்திற்கு திட்டமிட்ட அப்பா,சித்தியை யவனாதான் தடுத்து இம் மண்டபமே போதுமென்றிருந்தாள்.

தன் திருமணத்தில் மிச்சம் பிடிக்கும் ஒவ்வொரு காசும் தனது தந்தை,சித்தியின் வெளிநாட்டு பயணத்திற்கு உதவுமென உணர்ந்திருந்தாள்.அப்பா வருவதற்குள் நீங்களே போய் இந்த மண்டபத்திற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு வந்து விடுங்கள் சித்தி என அருந்த்திக்கு யோசனை சொல்லி அனுப்பி வைத்ததே அவள்தான்.

“இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை.உன் முடிவு சரியா என மீண்டுமொரு முறை யோசித்துப் பார் யவி “

பெண் ,மாப்பிள்ளையாக அமர்ந்து உணவு உண்டு முடித்த பின்,கை கழுவும் இடமருகே வந்து நின்று முணுமணுத்தாள் வைஷ்ணவி.சக்திவேல் கை கழுவி விட்டு சென்றிருந்தான்.

தோழி கேட்டதும் யவனா அதிர்ந்தாள்.தாலியே கட்டியாயிற்று …இன்னமுமா இந்த திருமணத்தைப் பற்றி குறை சொல்கிறாள் இவள்? ஆட்சேபமாய் பார்த்த தோழியின் தலையில் வலிக்காமல் கொட்டினாள் வைஷ்ணவி.

“மக்கு.நான் கல்யாணத்தை சொல்லவில்லை.மிஸ்டர்.சக்திவேல் நல்ல ஸ்மார்ட்டாக ,ஹேன்ட்சம்மாக இருக்கிறார்.பெரிய தொழில்.நல்ல சம்பாத்யம்.ஓ.கேதான்.உன் அப்பாவின் அமெரிக்க பயணத்தைதான் நான் யோசிக்க சொன்னேன்”

“ஏய் என்னடி?அது மூன்று வருடங்களாக நான் திட்டமிட்டது.இப்போது எப்படி நிறுத்த முடியும்?”

“அதெல்லாம் முடியும்.இப்போது மட்டும் நேராக உன் அப்பாவிடம் போய் என் கூடவே இருங்கப்பான்னு நீ அழுதுகிட்டே சொல்லிப் பாரேன்.அவர் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு இங்கேயே இருந்து விடுவார்”

“ஏய் நான் ஏன்டி அப்படி சொல்லப் போகிறேன்?”

வைஷ்ணவி யாமினியை உற்றுப் பார்த்தாள்.” யவி நல்லா யோசித்து சொல்லு.கொஞ்ச நேரம் முன் உன் சித்தி மடியில் தலை வைத்து படுத்திருந்தாயே! அது…அந்த ஆதரவு…அன்பு உனக்கு வேண்டாமா? என்னதான் புகுந்தவீடு செல்வமும்,அன்பும், ஆதரவுமாக நம்மைத் தாங்கினாலும் சிறு குடிசை வீடாகவேனும் பெண்களுக்கு பிறந்தவீடென்று ஒன்று வேண்டுமடி.அங்கேதான் அவர்கள் தங்களையே தளர்த்தி தலை சாய்த்து ஆசுவாசப்பட முடியும்.அப்படி சிறு முளையாயேனும் இருக்கும் பிறந்தவீட்டு பலத்தால்தான் ஒரு பெண்ணால் புகுந்தவீட்டை பெரிய ஆலமரமாக்க முடியும்.யோசி…நன்றாக யோசித்து முடிவெடு”

வைஷ்ணவி சொன்ன விநாடியே யவனாவிற்கு புரியத் தொடங்கியது.சற்று முன் சரிந்திருந்தாளே அந்த இதமான தலைசாயல் இனி அவளுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லையா?அவள் கண்களை சுழற்றி தன் புகுந்த வீட்டு பெண்களைப் பார்த்தாள்.




கண்டிப்பும் கறாருமான விழிகளுடன் சண்முகசுந்தரி,இன்னமும் தோளில் கிடந்த பிள்ளையின் அழுகையால் எள்ளும்,கொள்ளும் முகத்தில் வெடிக்க நின்றிருந்த நிர்மலா,இங்கே நடக்கும் திருமணத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது போல் வேறேதோ கதை பேசி சிரித்துக் கொண்டிருந்த சுகந்தியும்,தாராவும்.இவர்களிடம் அவளுக்கான ஆதரவு எங்கேயிருந்து கிடைக்க போகிறது?

இப்போது அவளது பார்வை சக்திவேலிடம் போனது.அப்பாவிடமும்,அண்ணனிடமும் ஏதோ தீவிரமாக பேசியபடி அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான் அவன்.ஆனாலும் அந்த முதுகிலும் அவனுக்கு இரு விழி இருப்பதாய்,அது தன்னையே துளைப்பதாய் உணர்ந்தாள் அவள்.

சற்று முன் அவன் பேசிய கடின வார்த்தைகளின் பின்,அவனது பார்வை எப்போதும் தன்னை பின் தொடர்வதாக உணர்ந்தாள்.இப்படி தளர்வின்றி நிமிர்வாய் இருப்பவனிடம் தனக்கான தலை சாய்த்தலை எப்படி எதிர்பார்க்க முடியும்? யவனாவிற்கு மிக உடனடியாக அப்பாவிடம் பேச வேண்டும் போலிருந்தது.அமெரிக்கால்லாம் வேண்டாம்பா .இங்கேயே இருங்க ,நான் அடிக்கடி உங்களை வந்து பார்க்க வேண்டுமென கேட்க வேண்டும் போலிருந்தது.

மண்டப மேனேஜரிடம் பேசிக் கொண்டிருந்த தந்தையை நோக்கி நடந்தவளை இடையில் மறித்தாள் அருந்ததி.

“யவனாம்மா என்னுடைய ஹேண்ட் பேக்கை எங்கேம்மா?”

“ரூமுக்குள் கட்டிலுக்கடியில் இருக்கும்.சித்தி நான் உங்களுடனும் அப்பாவுடனும் பேச வேண்டுமே!”

“பேசலாம்மா.அப்பாவிற்கு மாத்திரைகள் கொடுக்கும் நேரமாச்சு.அங்கே பார் அந்த நினைவே இல்லாமல் இருக்கிறார்.பிறகு படபடப்பு,மயக்கம்னு வந்தால் நாம்தானே பாடு படவேண்டும்.ஹேன்ட் பேக்கை அதற்குத்தான் தேடினேன்.நான் போய் மருந்து கொடுத்துவிட்டு வருகிறேன்.பிறகு பேசலாம்”

அருந்ததி நகர வைஷ்ணவி பக்கத்தில் வந்தாள்,”என்னடி உன் சித்தி என்ன சொல்கிறார்கள்?இங்கேயே இருக்க சம்மதித்து விட்டார்களா?”

“நான் இன்னமும் பேசலைடி.அப்பாவிற்கு மாத்திரை கொடுக்க போயிருக்கிறார்கள்”

“ஓ.உன் அப்பாவிற்கு மாத்திரை கொடுக்க வேண்டியதாயிற்றா?சரிதான்.நீ உன் அப்பாவிடம் பேசு.ம்…அதோ உன் கணவர் உன்னை திரும்பி பார்க்கிறார்.அவரிடம் போ”

அங்கிருந்தே தன்னை பார்த்தபடி இருந்தவனின் அருகில் போனாள்.” எ…என்ன?”

“என்ன?”

“வ..வந்து எ…எதுவும் வேண்டுமா?”

“இல்லையே”

“அ…அப்படி பா…பார்த்தீர்களே?”

சக்திவேல் நெற்றியோரம் ஒற்றைவிரலால் லேசாக தட்டிக் கொண்டான்.”இந்த திக்குவாய் எப்போது சரியாகும்?”

யவனா கப்பென வாயை மூடிக் கொண்டாள். முகத்தையும் வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.அவளுக்கு ஒரு மாதிரி படபடவென வந்தது. இ…இவன் ஏன் ஒரு மாதிரி பேசுகிறான்.இவன் மட்டுமல்ல இவன் குடும்பமே ஒரு மாதிரி…யவனாவிற்கு எங்கோ எதிலோ நெருடல்  இருந்து கொண்டே இருந்தது. ம்ஹூம் அப்பாவிடம் உடனே பேசியாக வேண்டும்.




அவர்களை கடந்து நடந்த சித்தியை நிறுத்தினாள்”அப்பாவிற்கு மாத்திரை கொடுத்தாயிற்றா சித்தி?நான்…”

“என் கணவர் என் பொறுப்பு யவனாம்மா.நீ உன் கணவரை பார்.ம்…சித்தார்த் அங்கே நவகிரக சந்நிதி பக்கத்தில் நிற்கிறார்.இருக்க சொன்னாயா என்ன?” போகிற போக்கில் பேசிக் கொண்டு அருந்ததி நடக்க,யவனாவிற்கு அப்போதுதான் சித்தார்த் நினைவு வந்தது.

வேகமாக அங்கே போக திரும்பியவள்,தயங்கி நின்று சக்திவேலை ஏறிட்டாள்.

“யார்?”

“சித்தார்த் அத்தான்.மாமா பையன்…”

“ஓ…என்னவாம்?”

“தெரியலை.பே…பேசனும்னு சொன்னார்”

“சரி.வா போய் பார்க்கலாம்” சக்திவேல் முன்னால் நடக்க குறைபட்ட மனதுடன் அவனைப் பின்பற்றினாள்.

கழுத்தில் தாலி கட்டிவிட்டால் என் சொந்தத்துடன் பேசக் கூட இவர் பின்னால் போக வேண்டுமா?

“போ…” சந்நிதி அருகே வரவும் சக்திவேல் ஒதுங்கி அவளை முன்னால் அனுப்ப முதலில் இவளைக் கண்டதும் ” வந்துட்டியா வா…வா.நல்லவேளை தனியாக…” என பேச ஆரம்பித்த சித்தார்த் பின்னால் சக்திவேலை கண்டதும் கொஞ்சம் தயங்கி பின் கிண்டலாக பேச்சை தொடர்ந்தான்.

“என்ன யவி அம்மனும் சாமியும் பத்து நிமிடங்கள் கூட ஒருவரையொருவர் பிரிய மாட்டீர்கள் போல?”

“கொஞ்ச நேரம் முன்பு நிறைய மந்திரங்கள் சொன்னோமே…அவற்றில் முக்கியமானது கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பிரியக் கூடாது என்பது.ம்…சொல்லுங்கள்.என்ன விசயம்?”

சக்திவேல் அமர்த்தலாக கேட்க சித்தார்த் திகைத்து நின்றான்.




What’s your Reaction?
+1
40
+1
18
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!