Short Stories sirukathai

உன்னை போலே ஒரு தெய்வம் (சிறு கதை)

மதுரைக்கு செல்லும் விமானத்தின் பின் இருக்கையில், தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமர்ந்திருந்தான் “கண்ணன்”.

கண்ணனைப் பற்றி நாம் கூற வேண்டுமேயானால், அவன் “அமெரிக்காவிலுள்ள”, ஏதோ ஒரு பிரபலமான சாப்ட்வேர் கம்பெனியில், பல லகரங்களை சம்பளமாக பெற்றுக் கொண்டு, சவுகரியமாக வாழ்பவன். மதுரையில் இருந்து  தூத்துக்குடி செல்லும்; பாதையில் இருக்கும் அழகிய கிராமம் தான், அவனது சொந்த ஊர்.     அவன் இந்தியாவிற்கு வந்து, 12 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆனால், அவன் இப்பொழுது இந்தியா வந்திருக்கும் இந்த பயணமானது, ஏதோ அவசர அவசரமாக நிகழ்ந்து கொண்டிருப்பதாக தோன்றியது. அப்படி என்ன அவசரம் வந்தது?. சொல்கிறேன்… எல்லாவற்றையும் சொல்கிறேன்… சொல்வதற்காக தான் வந்திருக்கிறேன்…

மூத்தவன் “சாந்தன்”; கண்ணனின் அருகிலும், இளையவள் “சாந்தி”; பிரியாவின் அருகிலும், ஜன்னல்களின் ஓரங்களை  பிடித்துக் கொண்டு, விமானம் மேகக்கூட்டங்கள் உடன் செய்யும் யுத்தத்தை, காண சுவாரஸ்யம் காட்டினர்.

சீட்டின் பின்புறம் சாய்ந்தபடி, தன் கையிலிருந்த மொபைல் போனில் வந்திருந்த, குறுஞ்செய்தியை மீண்டும் ஒருமுறை படிக்கலானான். கண்ணன் இந்த “குறுஞ்செய்தியை”, அவன் படிப்பது எத்தனை நூறு தடவை என்பது தெரியாது.





அந்தக்  குறுஞ்செய்தி, அவனுடைய அண்ணனிடமிருந்து வந்திருந்தது.

அண்ணன், அக்கா அனைவரும் அவனிடம் பேசுவதை நிப்பாட்டி   தான், 12 ஆண்டுகள் ஓடிவிட்டதே! எப்பொழுதாவது இவன், அவர்களுடன் பேச வேண்டும் என்று முயற்சிக்கும் பொழுது, ஒற்றை வார்த்தையில், “என்ன”? என்ற குறுஞ்செய்தி வரும்.

அத்துடன், அவர்களுடன் போனில் பேசும் ஆசை அவனுக்கு அற்று விடும். அம்மாவிற்கு போன் செய்யலாம் தான்.ஆனால், ஏனோ அவன் மனம், அதற்கான தைரியத்தை இன்று வரை பெறவே இல்லை.

ஏன், இப்பொழுது இந்த செய்தி வந்த பிறகும் கூட, பல முறை அவன் போன் மூலமாக அண்ணன் மற்றும் அக்காவிடம் பேசுவதற்கு எவ்வளவோ முயன்றும், அவனுக்கு கிடைத்தது “மெசேஜ்கள்” மட்டுமே.
கண்களை இறுக்க மூடிக் கொண்டான். உள் மனத்திரையில், ஏதேதோ காட்சிகள் திரைப்படங்களாய் விரிய ஆரம்பித்தன.

கண்ணனுக்கு, இரண்டு அண்ணன் மற்றும் இரண்டு அக்கா, கடைக்குட்டியாக அவன் பிறந்திருந்தான். அதுவும், வெகு நாள் கழித்து. கண்ணன் பிறந்த சில நாட்களிலேயே, அவனது தந்தை இறந்து விட்டதால், அவனுக்கு தந்தையை தெரியாது. “தாயின் அரவணைப்பு மட்டுமே”!!.

அந்த ஊரிலேயே அரண்மனை போன்ற வீடு கண்ணன் உடையது. அக்கா பரிமளாவும்,  அண்ணன் ரமேஷும் அவனை தேடிக் கொண்டு வீடு முழுவதும் சுற்றி சுற்றி வருவர். ஐந்து வயது குழந்தையாய் இருந்த கண்ணன்,  ஒவ்வொரு அறைக்குள்ளும், மாறி மாறி போய் ஒளிந்து கொள்வான்.

ஒரு கட்டத்தில், அவன் அவர்களால் கண்டுபிடிக்கப்படும் போது,   “ஓ,……..  …ஓ”..என்று கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்வான்.  அப்பொழுதெல்லாம், தாய் “சாந்திதேவி” அவனை ஆரத் தழுவி, தன் முந்தானையால் அவன் முகத்தை துடைத்து, அவனை அமைதி படுத்துவாள். தாயின் அருகாமையும், அவளின் முந்தானை தந்த அந்த சுகந்தமான வாசமும்  கிடைத்த உடனே, சமாதானமாகி போவான் கண்ணன். மீண்டும் விளையாட்டு ஆரம்பித்து விடும்.

இந்த முறை, வேறு எங்கும் இல்லை. தன் தாயின் முந்தானைக்குள், அவள் அரவணைப்பிலேயே ஒளிந்து கொள்வான்.
ஆனால், விளையாட்டின் முக்கிய விதிமுறை, அவனை யாரும் கண்டுபிடிக்கவே  கூடாது. வெறுமனே அவர்கள் அனைவரும், வீடு முழுவதும் அவனைத் தேடி சுற்றி சுற்றி வரவேண்டும்.

தாயின் முந்தானைக்குள் அமர்ந்து, நிழலாய் தெரியும் அக்காள் அண்ணனின் உருவங்களைப் பார்த்து, குதுகளித்து கொண்டு  இருப்பான் கண்ணன்.

ஏன்? இந்த விமானப் பயணம் முடிந்து தொலைய மாட்டேன் என்கிறது, என்ற சலிப்பு தோன்றவே, அருகில் ஏற்படும் சலசலப்பை விரும்பாமல்,  கண்களை மேலும் இறுக்கிக் கொண்டான்.

அம்மா எப்பொழுதும் சொல்லி குதூகலிக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், கண்ணன் குழந்தையாய், நடைபயிலும்  பொழுது; ஒரு பொழுதும் தாயின் விரல் பிடித்து பழக விரும்புவதில்லையாம்; தாயின் முந்தானை சேலையை பிடித்து கொண்டு, “வீறு நடை போட்டது” போல், சட் சட் என்று அவன் நடந்த அந்த மழலை நடையை சொல்லும் போது, தாயின் கண்கள் பூரிப்பில் விரிவதை கண்டு, பலமுறை மகிழ்ந்திருக்கின்றான் கண்ணன்.விமானம்  மதுரையில் தரை இறங்கி இருந்தது.

தங்களுக்கு உண்டான லக்கேஜை சேகரித்துக் கொண்டு, அருகில் இருந்த கால் டாக்ஸியில் ஏறி அமர்ந்தனர்.

கண்ணனின் கையில் இருந்த மொபைல் போன், “கிணிங்” என்ற சத்தத்துடன் ஒரு குறுஞ்செய்தியை, தருவதற்கு தயாரானது. செய்தி ரமேஷிடம் இருந்து தான்.




“எங்கே இருக்கிறாய்”?
ஒற்றை வரி கேள்வி.ஏனோ, கையில் இருந்த செல்போன், பல மடங்கு கணம் கூடி விட்டதைப் போல் உணர்ந்தான். அழைத்தாலும் யாரும் போனை எடுக்க போவதில்லை. மதுரை வந்துவிட்டேன் ;பதில் மெசேஜ் அனுப்பிவிட்டு, மொபைலை சட்டைப்பையில் வைத்த பொழுது, இதயம் கனக்க ஆரம்பித்தது.

விரும்பத்தகாத இந்தப் பயணத்தை, இன்னும் ஒரு மணி நேரம் பொறுத்துத்தான் ஆக வேண்டும். மீண்டும் இருக்கையில் பின்புறம் சாய்ந்து, கண்களை மூடிக்கொண்டான்.

ஒரு முறை, தாயின் உறவினர் ஒருவர் இறந்து விட, அந்த இறந்த வீட்டிற்கு செல்ல வேண்டிய காரணத்தினால், தாயார் சாந்தி தேவி தான் மட்டும் செல்ல முடிவெடுத்தாள்.

எக்காரணம் கொண்டும், கண்ணனை தனிமையில் விட்டு அவள் எங்கும் சென்றதில்லை. இருந்தும், இறப்பு வீடு என்பதனால் மூத்தவள் அனுவிடம், தம்பியை பத்திரமாக பார்த்துக்கொள்; நான் விரைவில் திரும்பி விடுவேன் என்று கூறிவிட்டு சென்றிருந்தாள்.

போன இடத்தில் சூழ்நிலைகள் மாறிப்போக,  இரவு வீடு திரும்ப முடியாமல் போய்விட்டது. கண்ணன் அப்பொழுது ஒன்றும், மிகவும் சிறிய குழந்தை அல்ல. அவன், அப்பொழுது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.

இருப்பினும், அங்கே இருப்புக் கொள்ளாமல் தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள் சாந்திதேவி.  தம்பியை பத்திரமாக பார்த்துக்கொள் என்று அனுவிடம் ஏறத்தாழ, மூன்று முறை போன் போட்டு பேசியாகிவிட்டது. இருப்பினும், அவள் அங்கலாய்ப்பு நின்றபாடில்லை.

சாந்தி தேவி நினைத்தது படி தான் நடந்தது. இரவு வந்ததும், அம்மாவிடம் தான் படுப்பேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான் கண்ணன். அக்காவும் அண்ணனும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவன் கேட்பதாக இல்லை. அழுது அரற்ற ஆரம்பித்தான்.

அவனை சமாதானப் படுத்தும் வழியை அறியாமல், அவர்கள் அனைவரும் கையறு நிலையில் நிற்க, “தேம்பித் தேம்பி அழுது”, தன்னாலேயே தூங்கிப் போனான் அவன்.

இரவில் தாயின் சேலைத் தலைப்பை, தன்மீது போர்த்திக் கொண்டு தூங்கும் பழக்கம், அவனுக்கு பிறந்த காலம் தொட்டே இருந்தது.

தாயின் சேலைத் தலைப்பு மேலே விழவில்லை என்றால், அவனின் விழி இமை மூடாது.

அதிகாலையில் வீடு திரும்பியதும், அரக்கபரக்க தன் மகனைத் தேடினார் சாந்திதேவி. எங்கு தேடியும் அவனை காணவில்லை. மற்ற பிள்ளைகள் அனைவரையும் எழுப்பினாள். அனு, “எந்திரி தம்பி எங்கே”? என்று கேட்டாள். பதட்டத்துடன் விழித்துக் கொண்ட குழந்தைகள், பறக்க பறக்க விழித்து ஆரம்பித்தனர்.

இங்கே தானம்மா, படுத்திருந்தான். எங்க போனான்? குழப்பத்துடன் திரும்பி பார்த்தனர். சாந்திதேவி வீடு முழுவதும் சுற்றி வரலானார். அடுக்களையில் ஒரு மூலையில்;தாயின் மொத்த சேலைகளையும், குவியல் போல எடுத்து வைத்துக் கொண்டு, அதன் மேல் படுத்து;அதனாலேயே மூடி, அதையே சுற்றிக் கொண்டு; ஆனந்தமாக உறங்கிக் கொண்டிருந்தான் கண்ணன். அவனை தாவி, வாரி அணைத்துக் கொண்டாள். அன்னை உச்சி மோந்த அன்னையைப் பார்த்து, “ஏன் அம்மா, என்னை தூங்க வைக்கவில்லை”? என்று அரைத்தூக்கத்தில் கேட்டுவிட்டு, தாயின் நெஞ்சோடு சாய்ந்து கொண்டான் கண்ணன்.

என்னங்க, பிள்ளைங்க பசிக்குதுன்னு சொல்றாங்க. மெல்ல தோளை தொட்டாள் “பிரியா”. இமைகளை மெல்ல விரித்துப் பார்த்தான் அவன்.

“போகிற இடத்தில சாப்பாடு எப்படியோ”? பிள்ளைகளை மட்டுமாவது, இங்க சாப்பிட வச்சிரலாங்க என்றாள் பிரியா.

“டிரைவர்”, என்ற கண்ணனின் அழைப்பின் அர்த்தத்தை புரிந்த அந்த டிரைவர், அடுத்து வந்த  உணவகத்தில் வண்டியை நிறுத்தினார்.




“நீங்க போய் சாப்பிட்டு வாங்க”! கூறியபடி,  உடலை இன்னும் கொஞ்சம் தளர்த்தி தழைத்து, கால்களை நீட்டி தலையை பின்னால் சாய்த்து, காரின் மேல் கூரையை வெறிக்கலானான்.

இந்த அன்பு, பாசம் எல்லாமே ஒரே நாளில் , ஒரே நிமிடத்தில் ஒரு நாள் மாறிப்போயின.வாழ்க்கையின்  ஒரு சில சம்பவங்களை, ஒரு சில நிகழ்வுகளை,ஒரு சில சந்திப்புக்களை, நாம் தவிர்த்திருந்தால் நம் வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும்.

இன்றைய தேதியில், கண்ணனுக்கு மட்டும் சக்தி இருந்தால் ,பிரியாவை சந்தித்த அந்த முதல் நாளை, ரப்பர் கொண்டு அழித்து விடவே செய்வான்.

ஆனால், அன்றைய தேதியில் அந்த சந்திப்பு தான், “அவனை, என்னவெல்லாம் சித்திரவதை செய்தது”. எப்படி எல்லாம் அவன், “இளமையை சோதித்தது”. என்னவெல்லாம், “பித்து பிடித்து அலைந்தது”.

அன்றும் சரி, இன்றும் சரி பிரியா உடனான அந்த சந்திப்பு, அவனுக்கு கூடாத தாகவோ? வேண்டாத தாகவோ?அவனுக்கு இருக்கவில்லை. ஆனால், அது அவன் தாய்க்கு, “எட்டிக் காயாக அல்லவா மாறி விட்டது”?.அந்த மழை நாள் இரவில், அண்ணனை காணாது; வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் வாசலில் காத்திருக்க;நேரம் கடந்த நிலையில் கண்ணன் வந்தான் “பிரியாவுடன்”.

“யாருடா இந்த பொண்ணு”?
கேட்டது, மூத்த அண்ணன் ரமேஷ்.தோப்பூர் சின்னச்சாமி ஐயா பொண்ணுணே;”அடியாத்தி, அது எதுக்கு இங்க வந்து இருக்கு”?.இது இரண்டாவது அண்ணன் சிவாவின் மனைவி “கிரிஜா”.”சொல்லுடா”? எல்லாரும் கேக்கறாங்க இல்ல.விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த அக்கா அனுவின் குரல் இது.அது வந்து அக்கா,  இந்த பொண்ணு இங்கேயே இருக்கட்டும் சொல்லி தான் கூட்டிட்டு வந்தேன்.”புரியும்படியாக சொல்”? இது அம்மா.

“வந்து….,,”, நான் இந்தப் பெண்ணை காதலிக்கிறேன்.

அடி செருப்பால, வீறுகொண்டு எழுந்தான் அண்ணன் சிவா.நாலு எழுத்து படித்த திமிரு, பெரிய அண்ணி ,”வனஜா”.

போச்சு போச்சு, “நம்ம குடும்ப கவுரவம்” எல்லாமே போச்சு, அக்கா அனு புலம்ப ஆரம்பித்தாள்.

திண்ணையில் அமர்ந்து இருந்தபடி, தன் ஒற்றை கையை உயர்த்தி, அனைவரின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் அம்மா. கண்ணனை, கை செய்கை மூலம் தன் அருகே வரும்படி அழைக்க, கண்ணன் தாயை நெருங்கினான். அவனை இழுத்து, தன் அருகே அமர வைத்தவள்,மழையில் நனைந்து இருந்த, அவன் தலையை தன் சேலை தலைப்பால் துவட்டியபடி, “கண்ணா, இது உன் வயதின் கோளாறு, இந்தப் பெண் என்ன ஜாதி”? நாம் என்ன ஜாதி? அவர்கள், குடும்ப பழக்கம் நம் குடும்பப் பழக்கம், இரண்டும் ஒத்துப் போகுமா? நீ ,விரும்பினால் மட்டுமே இது சாத்தியமாகுமா? உங்கள் இருவரின் இந்த முடிவு, ஊருக்குள் எவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் தெரியுமா?




பரிவாக அவன் தலையை வருடிக் கொண்டே,  நனைந்திருந்த அவன் தலையை துவட்டியபடி,  மிருதுவாக ஆனால்  தெளிவாக பேசினாள் அன்னை.

இல்லை அம்மா, நான் அவளுக்கு வாக்குக் கொடுத்து விட்டேன்.

தலையை துவட்டி கொண்டிருந்த தாயின் கரம், ஒரு வினாடி ஸ்தம்பித்தது. பின், மீண்டும் மேலும் அதே பரிவோடு, தலையை துவட்ட ஆரம்பித்தது.

“இந்தப் பெண்ணை உனக்கு, இரண்டு ஆண்டுகளாக தெரியுமா”? ஆனால், நீ பேச ஆரம்பித்த நாளில் இருந்து, 20 ஆண்டுகளாக “எத்தனையோ வாக்குகளை, எனக்கு தந்து இருக்கிறாயே கண்ணா”?  உன் வாழ்க்கையை, உன் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அற்றவளா நான்?

இல்லை அம்மா, அவளும் என்னை நம்பி ,தன் சொந்த பந்தங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு தனியே வந்து விட்டாள். இனி செய்வதற்கு ஏதுமில்லை.

ஓ!!! அவள் தனியே வந்து விட்டாள். இப்பொழுது, “நீ என்ன செய்யப் போகிறாய்”? தாயின் குரல் இப்பொழுது லேசாக கம்மி கரகரக்க ஆரம்பித்திருந்தது.

தலையை துவட்டி கொண்டிருந்த தாயின் முந்தானையை, மிக மெதுவாக விலக்கினான். தாயின் அணைப்பில் இருந்து, மிருதுவாக தன்னை விடுவித்துக் கொண்டான். தன் மேல் விழுந்திருந்த சேலையை, மெல்ல தள்ளினான்.”என்னை மன்னித்துவிடுங்கள்”, அம்மா என்று கூறிவிட்டு, வீதியில் இறங்கி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.

அவனது தலைக்கு மேலே நனைந்து விடாதிருக்க, பிரியா தனது சேலையை பிடிக்க ஆரம்பித்தாள்.

கார் மீண்டும் கிளம்பி விட்டதை, அதனுடைய சின்ன குலுக்கத்தின் மூலம் உணர்ந்து கொண்டான். ஆனால், கண்களைத் திறக்க மனம் வரவில்லை.

அன்று தான், கடைசியாக வீட்டில் இருந்த நாள். இதோ, இப்பொழுது 12 வருடங்கள் ஓடிவிட்டன. இப்பொழுதுதான் மீண்டும் அந்த ஊருக்குள் செல்கிறான்.

இந்த இடைப்பட்ட காலத்தில், எத்தனையோ ஓட்டங்கள்: எத்தனையோ தேடுதல்கள்: எத்தனையோ தடங்கல்கள்: எத்தனையோ சமாளிப்புகள்: கவலைகள், காயங்கள்: ஏமாற்றங்கள் : அவ்வளவையும் சந்தித்தாயிற்று. அந்த ஒவ்வொரு சந்திப்பின் பொழுது ,அன்னையின் அந்த முந்தானை நறுமணத்தை, மனதளவில் முகர்ந்து கொண்டே அத்தனை தடைகளையும், உடைத்தெறிந்தாகி விட்டது.

கார் , அவர்கள் வீடு இருக்கும் தெருவில் திரும்பியிருந்தது.  பிரியா அவன் தோள் மேல் கை வைத்து, மெல்ல அழுத்தினாள். “என்னங்க, வீட்டுக்கு வந்தாச்சு”.




“கண்களைத் திறக்க வேண்டுமா”?, நிச்சயம் திறந்து தான ஆக வேண்டுமா? திறந்து நான் என்ன செய்யப் போகிறேன்? எதைக் காண போகிறேன்?  இந்த வீட்டின் ஒவ்வொரு செங்கலும், என்னிடம் ஓராயிரம் கேள்வி கேட்குமே.

யாரோ இரண்டு ராட்சதர்கள், இமையின் இரண்டு பக்கங்களையும், இறுக்கிப் பிடித்துக் கொண்டது போல் இருக்க, மிக மிக சிரமப்பட்டு அவைகளை விடுதலை செய்தான்.

வீட்டின் முன்னால் பந்தல் போடப்பட்டிருந்தது. வரிசையாக இருந்த சேர்களில், யார் யாரோ அமர்ந்திருந்தனர். கண்ணனின் வயிற்றிலிருந்து ஏறிய ஒரு பந்து, இருதயத்தின் வழியே, மேலே ஏற ஆரம்பித்தது.

கண்ணன் காரில் இருந்து இறங்க, கடைசி பையன் வந்துட்டான் என்று யாரோ ஒருவர் கத்தினார். மெல்ல மெல்ல நடந்து,  வீட்டின் வாயிலை நெருங்கினான் அவன்.

வீட்டின் வாசலிலேயே, மிகப்பெரிய கட்டிலில்  அம்மா படுத்து இருந்தாள்.  உறங்குவதாக இருந்தால் ,வீட்டிற்குள்ளேயே உறங்கி இருக்கலாமே அம்மா, “ஏன் வீதியில் படித்திருக்கிறாய்”? என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது.

தூங்கும் அம்மாவிற்கு, மலர் மாலையும் ,பூச்சரங்கள் எதற்காக, அனைத்தையும் களைந்து பிடுங்கி எறியும் ஆவல் பிறந்தது. அம்மாவின், தலைமாட்டில் இரண்டு அக்காவும், காலடியில் அண்ணிமார் இருவரும் அமர்ந்திருக்க, அம்மாவைச் சுற்றி ,இன்னும் யார் யாரோ கும்பலாக நிறைந்திருந்தனர்.

“ஏன்பா, பெரியம்மா  மாடு முட்டி, செத்துப் போச்சு”. சின்னப்பையன் வரணும்னு சொல்லி, இப்பயும் ரெண்டு நாளா இழுத்து புட்டிக.  இதுக்கு மேலயும் வச்சிருந்தா, தாங்காது எடுங்கப்பா கூட்டத்தில் எவரோ ஒருவர் குரல் கொடுக்க…

அம்மாவின் தூங்கும் இடம், கட்டிலிலிருந்து, தேருக்கு மாற்றப்பட்டது. அக்கா, அண்ணி மற்றும் சுற்றியிருந்த பெண்கள் கூட்டத்தின் அழுகை உச்சத்தை தொட்டிருந்தது.

அண்ணன்கள் முன்னே நடக்க, ஏதோ முடுக்கி விடப்பட்ட இயந்திரம் போல், மெல்ல பின்னால் நடக்க ஆரம்பித்தான்.
இருதயத்தில் இருந்த அந்த பந்து, மெல்ல மேல் ஏறி தொண்டையை அடைத்தது.

மயானக் கரையில் அனைத்தும் முடிந்து, வீடு திரும்பி இருந்தான்.

அய்யய்யோ! “வீட்டுக்கு போனவுடன் ,அம்மாவின் மடியில் படுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணினோமே!  ஏன்,செய்யவில்லை?”.

அம்மா, வீட்டிற்கு வெளியே அல்லவா படுத்திருந்தாள்?

படுத்திருந்தாலும் தான் என்ன? அவள் மேல் விழுந்து இருக்க வேண்டாமா?. பிறந்தது முதல் என் மேல் சுற்றிக் கிடந்த , அந்த முந்தானையின் வாசத்தை, மீண்டும் முகர வேண்டும் என்று எண்ணி இருந்தேனே, “ஏன் செய்யவில்லை”?

அம்மாவைச் சுற்றி தான், அத்தனை ஜனங்கள் கூட்டமாய் இருந்தார்களே? எப்படி செய்வது சரி, இப்ப என்ன? “நான், வேண்டுமென்றால் திரும்பியும் மயான கரைக்கு போய் பார்க்கலாமா”?. “அங்கே, போய் என்ன செய்வது”?. இப்பொழுது, உன் அம்மா அவிந்து அரைப்பிடி சாம்பலாகி இருப்பாள்.

மனதினுள் நடந்த இந்த போராட்டத்தின் இறுதியில்….உடலில் எங்கேயோ? ஏதோ? அருந்து விழ முழுவதுமாய் உடைந்து போன கண்ணன், விறுவிறுவென்று அம்மாவின் அறையை நோக்கி ஓடி சென்று, அவள் பீரோவில் இருந்த மொத்த சேலைகளையும் எடுத்து தன் மேல் பரப்பிக்கொண்டான்.

தொண்டையை அடைத்து கொண்டிருந்த அந்த பந்து வெடித்து  சிதற, “ஓவென்று கதறி அழ ஆரம்பித்தான் அம்மா, ………… அம்மா.”……….. அவன் அழுத கண்ணீர், ஆறாய் பெருகியது.




What’s your Reaction?
+1
9
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Gagan
1 year ago

Good

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!